Published:Updated:

மெட்ராஸை மிரட்டிய தாவூத்! - சென்னை பிறந்த கதை பகுதி -7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மெட்ராஸை மிரட்டிய தாவூத்! - சென்னை பிறந்த கதை பகுதி -7
மெட்ராஸை மிரட்டிய தாவூத்! - சென்னை பிறந்த கதை பகுதி -7

மெட்ராஸை மிரட்டிய தாவூத்! - சென்னை பிறந்த கதை பகுதி -7

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். இதேபோல ஒரு தாவூத் அந்தக் காலத்தில் மெட்ராஸ் ஆட்சியாளர்களைப் படாதபாடு படுத்தியிருக்கிறார். வணிக நிறுவனம் என்ற பெயரில் காலடி எடுத்துவைத்து, பின்னர் ஒட்டுமொத்த இந்தியாவையே அடிமைப்படுத்திச் சூறையாடிய கிழக்கிந்திய கம்பெனியிடமே மிரட்டிமிரட்டிச் சுரண்டியவர் இந்த தாவூத். 

முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப், தனது ஆட்சிக்குட்பட்ட கர்நாடகப் பகுதிகளைக் கவனித்துக்கொள்ள நவாப் என்ற பதவியைப் புதிதாக உருவாக்கினார். அப்படி நியமிக்கப்பட்ட முதல் நவாப் ஜூல்பிகர் அலி கான். இந்த ஜூல்பிகரின் படைத் தளபதிதான் தாவூத் கான். தளபதி என்ற முறையில் நவாப்பின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்து அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் தாவூத் கான்.

ஒருமுறை தாவூத் கான் மெட்ராஸைச் சுற்றிப் பார்க்க வரப் போவதாக ஜூல்பிகர் அலி கான், அப்போதைய கவர்னரான தாமஸ் பிட்டுக்குக் கடிதம் எழுதினார். ஒளரங்கசீப் படையின் முக்கியத் தளபதி வருகிறார் என்றால், பின்னணியில் ஏதேனும் சதி இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட பிட், ஒருபுறம் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டே, மறுபுறம் நகரின் பாதுகாப்பை அதிகரித்தார். இத்தகைய பதற்றமானச் சூழலில், 1699-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி மெட்ராஸ் வந்தார் தாவூத். அவரை உரிய முறையில் வரவேற்று திருவல்லிக்கேணியில் ஸ்டைல்மேட் என்ற தோட்ட மாளிகையில் தங்கவைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் சாந்தோமிலும் ஒருவாரம் தங்கியிருந்தார். அந்த 7 நாள்களில் சாந்தோம் அவரது மனதைக் கொள்ளை அடித்துவிட்டது. எனவே, சாந்தோமை ஒரு பெரிய நகரமாக மாற்ற வேண்டும் என்று தாவூத் நினைத்தார். ஆனால், அவரது கனவை ஆங்கிலேயர்கள் பலிக்கவிடவில்லை. 

இதனிடையே 1700-ஆம் ஆண்டு கர்நாடக நவாப் ஜூல்பிகர் அலி கான், 'தட்சிண தேசத்து சுபேதாராக' தன்னைத்தானே நியமித்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கர்நாடகச் செஞ்சி நாடுகளின் நவாப்பாக பதவி உயர்வு பெற்றார் தாவூத் கான். புதிதாக நவாப்பான தாவூத் கான், ஆங்கிலேயர்களிடம் மீண்டும் கெத்துக் காட்ட ஆரம்பித்தார். ஆற்காட்டிற்கு வந்த நவாப், ''நல்ல சரக்கா அனுப்பி வைங்கப்பா’' என்று கேட்டு கோட்டைக்கு ஆள் அனுப்பினார். இந்தச் சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், அவரைச் சந்திப்பதற்காக நிக்காலோ மானுச் என்ற வெனிஸ் நகரத்து வணிகரை நிறைய பரிசுப் பொருள்களுடன் அனுப்பினர். நிக்காலோ மானுச் அதற்கு பல ஆண்டுகள் முன்பே மெட்ராஸில் வந்து தங்கிவிட்டவர். அவருக்குப் பாரசீக மொழி நன்றாகத் தெரியும் என்பதாலும், முகலாயப் பேரரசுடன் தொடர்புடையவர் என்பதாலும் அவரைத் தூதராக அனுப்பினர்.

நிக்காலோ மானுச் இரண்டு பித்தளைத் துப்பாக்கிகள், கண்ணாடிகள், 50 பாட்டில் ஃபிரெஞ்சு பிராந்தி, உயர் ரக துணிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை எடுத்துக்கொண்டு தாவூத்தைச் சந்திக்கப் போனார். ஆனால், பிக் அப் பண்ண ஆடி கார் வரும் என்று எதிர்பார்த்தவருக்கு மாருதி ஆம்னி அனுப்பியதைப்போல ஆகிவிட்டது இந்தப் பரிசு. இதெல்லாம் ஒரு பரிசா என அலட்சியமாக வாங்கி வைத்துக்கொண்ட தாவூத், மெட்ராஸுக்குப் புதிய கவர்னரை நியமிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி ஆங்கிலேயர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். கூடவே மெட்ராஸுக்குப் பதிலாகச் சாந்தோமைப் பெரிய நகரமாக மாற்றியமைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதை எல்லாம் கேள்விப்பட்ட ஆளுநர் பிட், நம்ம விஜயகாந்த் பாணியில் 'ஆத்திரங்கள் வருது மக்களே’ என்று கொதித்துக் கொந்தளித்திருக்கிறார்.

ஆளுநர் பிட்டின் ஆத்திரத்தை அதிகரிக்கும் வகையில், சில மாதங்கள் கழித்து சுமார் 10,000 பேர் கொண்ட படையோடு சாந்தோமுக்கு மீண்டும் வந்தார் தாவூத். இந்த முறை எல்லிஸ், டெவன்போர்ட் ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் சில பரிசுகளை எடுத்துச்சென்று  தாவூத்தைத் தாஜா செய்ய முயற்சி செய்தனர். ஆனால், தாவூத் இதனை நிராகரித்துவிட்டார். இதனால் கடுப்பாகிப்போன ஆளுநர் பிட், போருக்குத் தயார் என்ற ரீதியில் கானுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். மிரட்டிப்  பணிய வைக்கலாம் என்று நினைத்த கானுக்கு இது சற்றே ஆச்சர்யத்தைக் கொடுத்தது. எனவே, கம்பெனியின் பரிசுகளை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதாகவும் சொல்லி சமரசத்துக்கு முன்வந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு தடபுடல் விருந்து தயாரானது. 

சாந்தோமிலிருந்து ஜார்ஜ் கோட்டை வரை கிழக்கிந்தியப் படை வீரர்கள் வரிசைகட்டி நின்று கானுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க, 21 குண்டு மரியாதையும் அளிக்கப்பட்டது. கோட்டைக்குள் நுழைந்த கானை ஆளுநர் பிட் ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் விருந்து நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு 600 வகை பதார்த்தங்கள் கானுக்காகக் காத்திருந்தன. இந்த விருந்தை வெகுவாக ரசித்த கான், மாலை 6 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்தநாள் ஒரு கப்பலைச் சுற்றிப்பார்க்க தாவூத் விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கான் ஃபுல்லா தண்ணி அடித்துவிட்டுத் தானே ஒரு ‘சரக்கு’ கப்பல்போல தள்ளாடிக் கொண்டிருந்ததால், அவரைக் கிளப்பி அழைத்துவர முடியவில்லை. இப்படி எல்லாம் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் தாவூத் கானை சீராட்டி, பாராட்டி, ’தண்ணீரில்’ குளிப்பாட்டி வழிக்குக் கொண்டுவர படாதபாடுபட்டனர்.

ஆனால் குடிகாரன் பேச்சு, விடிந்தால் போச்சு என்பதை நிரூபித்தார் கான். எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு படையோடு கோட்டை நோக்கி வந்துவிட்டார். இந்த முறை சில பரிசுப் பொருள்களைக் கேட்டார் கான். இந்தக் குடிகாரன்கூட இனி குடித்தனம் நடத்த முடியாது என முடிவுக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனி, கான் கேட்டதை கொடுக்க மறுத்துவிட்டது. ஆத்திரமடைந்த கான் கோட்டையை முற்றுகையிட்டார். மதராசபட்டினத்துக்கான கடல்வழிப் பொருள் வருகையைத் தடுத்து நிறுத்தினார். இந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்கள் அதிகமாகிவிட்டதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்ததாக அரசாங்க ஆணை ஒன்றையும் பிறப்பித்தார். 1702, பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியான இந்த ஆணையால் மதராசபட்டினத்தின் வணிகம் முடங்கிப்போனது.

ஆணை வெளியான அடுத்த நாளே எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கானின் ஆள்கள் கொள்ளையடிப்பதாக ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவி பீதியை அதிகரித்தது. மக்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிய ஆரம்பித்தனர். கறுப்பர் நகரத்தையும், தங்கசாலையையும் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் கான் அதிரடியாக அறிவித்தார். இதுபோன்ற அதிரடிகளால் நிலைகுலைந்துபோன கிழக்கிந்திய கம்பெனி, கானுடன் சமரசமாகப்போக முடிவெடுத்தது. இந்தச் சமரசத்துக்கு கான் கேட்ட விலை ரூ.30 ஆயிரம். அப்புறம் ஒருவழியாகப் பேரம் பேசி ரூ.25 ஆயிரத்தைக் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஆனால், அது முற்றுப்புள்ளி அல்ல... கான் கமாதான் போட்டார் என்பது சில ஆண்டுகளில் நிரூபணமாகிவிட்டது.

1703-ஆம் ஆண்டு தாவூத், இலங்கையின் கண்டி அரசர் இரண்டாம் விமலதர்மசூர்யாவிடமிருந்து சுமார் 50 போர் யானைகளை விலைக்கு வாங்கினார். இந்தத் தகவல்களெல்லாம் ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து அச்சத்திலேயே வைத்திருந்தது. இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பேராசை பிடித்த கான், 1706-இல் மீண்டும் சாந்தோமுக்கு வந்து தேவையானவற்றைக் கேட்டு வாங்கிக் கொண்டார். இப்படி ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து மிரட்டி வைத்திருந்த தாவூத், 1708-ஆம் ஆண்டு திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கத்திவாக்கம், சாத்தங்காடு ஆகிய 5 கிராமங்களை ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார். இது ஒன்றுதான் கானால் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த நன்மை. பின்னர் 1710-ஆம் ஆண்டு முகலாயப் பேரரசு, ‘உங்கள் சேவை எங்களுக்குத் தேவை’ என்று சொல்லி, கூடுதல் பொறுப்புகள் கொடுத்து கானை டெல்லிக்கு அழைத்துக்கொண்டது. பின்னர் மராட்டியர்களுக்கு எதிரான ஒரு போரில் தாவூத் இறந்து, அவரது உடலை ஒரு யானையின் வாலில் கட்டி நகர் முழுவதும் இழுத்துச் சென்றார்கள் என்ற தகவலை கேட்டதும்தான் ஆங்கிலேயர்கள் நிம்மதியாகத் தூங்கினர்.

மனிதர்களை இப்படிப் பாடாய்படுத்திய கான், மிருகங்களிடம் அன்பு காட்டியிருக்கிறார். தாவூத் கான் இரண்டு நாய்களைச் செல்லமாக வளர்த்துவந்தார். குற்றவாளிகள் மீது இந்த நாய்களை ஏவி கொடூரத் தண்டனை கொடுப்பார் என நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்புடன் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல தாவூத் ஒரு குரங்கையும் பாசத்துடன் வளர்த்தார். அது இறந்துபோனதைத் தாங்க முடியாமல், அதன் பாதுகாவலர்களாக இருந்த இரண்டு பேருக்கு மரண தண்டனை வழங்கியதாகக் குறிப்புகள் உள்ளன. அதுமட்டுமன்றி அந்தக் குரங்கின் நினைவாக ஒரு படமும் வரையச் செய்தாராம் நம்ம பாசக்கார தாவூத். மொத்தத்தில் வரலாற்றில் ஒரு வித்தியாசமான மனிதராக வாழ்ந்து மறைந்தார் தாவூத் கான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு