Published:Updated:

“கூடங்குளம் அணு உலையில் ரூ.2,000 கோடி ஊழல்!” சி.ஏ.ஜி அறிக்கையை விவரிக்கும் சுப.உதயகுமார்

“கூடங்குளம் அணு உலையில் ரூ.2,000 கோடி ஊழல்!” சி.ஏ.ஜி அறிக்கையை விவரிக்கும் சுப.உதயகுமார்
“கூடங்குளம் அணு உலையில் ரூ.2,000 கோடி ஊழல்!” சி.ஏ.ஜி அறிக்கையை விவரிக்கும் சுப.உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையம், இந்திய அணுசக்தி கழகத்தின் 'மைல்ஸ்டோன்' என 1988-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டி 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த 'மைல்ஸ்டோன்' என்று சொல்லக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையம் தற்போது ஊழல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் ஆரம்பிக்க வேலை நடைபெற்றபோதே அப்பகுதி மக்கள், அணுமின் நிலையத்துக்கு எதிராகக் குரல்கள் எழுப்பிய சமூக ஆர்வலர்கள் "இந்த கூடங்குளம் மிகவும் ஆபத்தானது, தமிழ்நாட்டுக்கு உதவாது, தரமான உதிரிப் பாகங்கள் உபயோகப்படுத்தவில்லை" என சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் சில கோரிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

தொடர்ந்து போராடியதன் காரணமாகப் போராட்டக்காரர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்றளவும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 1 மற்றும் 2-ம் அலகுகளின் செயல்பாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது, சி.ஏ.ஜி. இந்த ஆய்வில் கூடங்குளம் அணு உலையில் 1 மற்றும் 2-ம் அலகுகள் நிறுவப்பட்டது குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவ்வறிக்கையில் கடன் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை, சரியான மேற்பார்வை இல்லை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. 

சி.ஏ.ஜி அறிக்கையைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடி வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய சுப. உதயகுமார், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏராளமான குளறுபடிகள், கோளாறுகளும் இருக்கின்றன. இந்திய கணக்குத் தணிக்கையாளர் குழு (சி.ஏ.ஜி) ஆய்வில், தவிர்த்திருக்க வேண்டிய வட்டித் தொகைகளைக் காட்டியிருக்கிறார்கள். கடன்கள் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை, மின்சாரக் கட்டணம் நிர்ணயித்ததில் பல பிரச்னைகள், ரஷ்ய நிறுவனங்களுக்குத் தேவையில்லாத சலுகைகள் காட்டியிருக்கிறார்கள். 2001-ம் ஆண்டு ரூ.13,171 கோடி செலவாகும் என சொல்லப்பட்டத் திட்டத்துக்கு 2013-ம் ஆண்டு ரூ.17,270 கோடி செலவு எனவும், 2014-ம் ஆண்டு ரூ.22,462 கோடி செலவாயிற்று என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. 

முதலாவது அலகில் எரிபொருள் நிரப்ப 60 நாள்கள்தான் உலையை மூட வேண்டும். ஆனால், இதற்காக 2015 ஜூன் 24 முதல் 2016 ஜனவரி 31 வரை உலை மூடப்பட்டதில் ரூ.947.99 கோடி இழப்பு ஏற்பட்டது. அணுசக்தி நீராவி சப்ளை எந்திரம், டர்போ ஜெனரேட்டர் பணிகளை ரஷ்ய நிறுவனம் செய்வதற்குப் பதிலாக, இந்தியப் பணியாளர்களே செய்துகொள்வார்கள் என்று மாற்றப்பட்டதில் ரூ.706.87 கோடி கூடுதல் செலவானது. முதல் அலகில் பயன்படுத்தப்பட்ட டர்பைன் எந்திரத்தில் தயாரிப்புக் கோளாறால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய ரூ.12.76 கோடி அதிகம் செலவானது. இதை ரஷ்யாவின் ஆட்டம்ஸ்ட்ரோய் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க இந்திய அணுமின் கழகம் முயற்சிக்கவேயில்லை. இந்த எந்திரம் நின்றதால், மின் உற்பத்தி முடங்கி, கூடுதலாக ரூ.53.73 கோடி இழப்பு ஏற்பட்டது.

ஆட்டம்ஸ்ட்ரோய் எக்ஸ்போர்ட் அணு உலை கட்டுமானத்துக்கான பொருள்கள், வரைபடங்கள், ஆவணங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் கட்டுமானச் செலவு அதிகரித்து ரூ.264.79 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனை அந்த நிறுவனத்திடமிருந்து இந்திய அணுமின் கழகம் வசூலிக்கவில்லை என சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்” என்றவர், “இந்திய அணுசக்தித் துறையானது ரஷ்ய கம்பெனிகளைக் காப்பாற்றுவது ஏன் எனத் தெரியவில்லை. இதில் காங்கிரஸ் கட்சியினர், மூத்த அணுசக்தி அதிகாரிகள் பயனடைந்தார்களா என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

கூடங்குளம் திட்டத்துக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு டீசல் வாங்கியது பற்றி அறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை. கூடங்குளம் அணு உலைகளில் விபத்து நடந்தால் இழப்பீடு தருவது பற்றியும் அறிக்கைகளில் சொல்லவில்லை. மேற்கண்ட ஆய்வுகள் பணப் பிரச்னையை மட்டுமே பேசுகின்றன. தொழில்நுட்ப பிரச்னைகளை பற்றி ஆய்வு செய்தால் பல பகீர் உண்மைகள் வெளிவரும். கூடங்குளம் ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவாறு இருக்கின்றன. இன்று சி.ஏ.ஜி சொல்வதைத்தான் நாங்கள் அன்று சொன்னோம். கூடங்குளம் உலகத் தரமற்றவை, அவை ஆபத்தானவை என்று கூடங்குளம் ஆரம்பிக்கப்பட்ட அன்றே சொன்னோம். அதுவும் விரைவில் நிரூபிக்கப்படும். ஆனால் இதையெல்லாம் பேசவேண்டிய பிரதமர் மோடி எதுவும் பேச மறுக்கிறார். தமிழக முதல்வரும் இதுபற்றி பேச பயப்படுகிறார். 

இதுகுறித்து தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடமும் இதுபற்றிய எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். இதுதவிர நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடமும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பும்படி கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். ஆர்.கே நகர் எம்.எல்.ஏ, டி.டி.வி தினகரனும் இப்போது கூடங்குளம் அணு உலையைப் பற்றி ஊடகங்கள் வாயிலாகக் கேள்வியெழுப்பி வருகிறார். ஆனால், தமிழகத்தில் ஆளும் அரசும், மத்திய அரசும் இதைப்பற்றி வாய்திறக்க மறுக்கிறது. கூடங்குளத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தென் தமிழகத்தில் எட்டு மாவட்டங்கள் முற்றிலும் காலியாகிவிடும். ஒகி புயலுக்கே இரண்டு வாரம் கழித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட வருகிறார். பிரதமர் மூன்று வாரங்கள் கழித்து வருகிறார், ஆய்வுக்குழு ஒரு மாதம் கழித்து வருகிறது. ஒரு புயலுக்கே இவ்வளவு சுணக்கமாக செயல்படுகிறார்கள். கூடங்குளம் அணு உலை விபத்து நிகழ்ந்தால் பார்வையிட நிச்சயமாக யாரும் வரமாட்டார்கள்" என்றார். 

இறுதியாக “இதுபற்றி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க ஆள் இல்லை. கூடங்குளம் உலை அலகு 1 மற்றும் 2 பற்றி முழு ஆய்வு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், அலகுகள் அமைக்கும் விரிவாக்கத் திட்டம் உடனே நிறுத்தப்பட வேண்டும். மக்கள்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்றார்.