Published:Updated:

“நம் மண்ணோட மக்கள் கொண்டாடுறது மகிழ்ச்சியா இருக்கு” - இஸ்ரோவின் தலைவர் சிவன் பெருமிதம்!

“நம் மண்ணோட மக்கள் கொண்டாடுறது மகிழ்ச்சியா இருக்கு” - இஸ்ரோவின் தலைவர் சிவன் பெருமிதம்!
“நம் மண்ணோட மக்கள் கொண்டாடுறது மகிழ்ச்சியா இருக்கு” - இஸ்ரோவின் தலைவர் சிவன் பெருமிதம்!

ந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி எனப் பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லமுடியும். இந்தப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது நேற்று மாலை வெளியான அந்த அறிவிப்பு. இஸ்ரோவின் 9-வது தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் நியமிக்கப்படவிருக்கிறார் என்பதே அது. இந்தப் பொறுப்பை வகிக்கவிருக்கும் முதல் தமிழர் இவர். 2015-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றவர் தற்போது அடுத்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

நாகர்கோவில் அருகே உள்ள வல்லங்குமாரவிளை என்னும் சிறிய கிராமம்தான் இவரின் பூர்வீகம். சிறிய கிராமத்திலிருந்துவந்து இன்று இஸ்ரோவின் தலைவராக இருக்கும் சிவனின் பயணம் அசாத்தியமானது. சில ஆண்டுகளுக்கு முன்னர் விகடன் நேர்காணலில் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இதோ...

“ ‘எனக்கு சொந்த ஊர், நாகர்கோவில் பக்கம் வல்லங்குமாரவிளை கிராமம். எங்க அப்பா கைலாச வடிவுக்கு, மாங்காய் வியாபாரம். 'எவ்வளவு வேணும்னாலும் படி. ஆனா, உன் படிப்புக்கு உண்டான செலவை நீயே வேலை செஞ்சு சம்பாதிச்சுக்க’ - இதுதான் அவர் எனக்குச் சொன்னது. அதனால் வேலை செஞ்சுட்டே படிச்சேன். காலேஜ்ல பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்ல ஃபர்ஸ்ட் வந்தேன். என் ஆசிரியர், 'நீ நல்லா படிக்கிற. எம்.ஐ.டி-யில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படி’னு சொன்னார். அந்த வார்த்தையையே அப்பதான் நான் கேள்விப்படுறேன். இருந்தாலும் நம்பிக்கையோடு தேர்வு எழுதி, எம்.ஐ.டி-யில் சேர்ந்தேன். அதே துறையில் எம்.இ படிச்சு, விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் ஒரு பொறியாளர் ஆனேன்.

சின்ன வயசுல என்னோட அதிகபட்சக் கனவு, எங்க கிராமத்துக்கு மேல பறக்கிற விமானத்துல என்னைக்காவது ஒருநாள் போகணும்கிறதுதான். 'இந்த ஏரோபிளேன் எப்படிப் பறக்குது? நாமளும் இதுபோல ஒண்ணு செஞ்சு பறக்கவிடணும்’னு நினைப்பேன். சின்ன வயசுல இருந்தே நான் நினைச்சது எதுவுமே நடக்கலை. ஒவ்வொரு முறையும் நான் ஆசைப்படுறது நிராகரிக்கப்படும். இருந்தாலும் கிடைச்சதை மகிழ்ச்சியுடன் ஏத்துப்பேன். ஆனால், 'எல்லாம் நன்மைக்கே’னு சொல்றதுபோல, க்ளைமாக்ஸ்ல எனக்கு எல்லாமே சுபமாத்தான் முடியும். அப்படித்தான் நான் விஞ்ஞானி ஆனதும்.

1983-ம் வருஷம், முதன்முதலில் பி.எஸ்.எல்.வி (Polar Satellite Launch Vehicle) புராஜெக்ட் தொடங்க, அரசாங்கம் அனுமதி வழங்கியது. அதுக்கு ஒரு வருஷம் முன்னால்தான் நான் வேலையில் சேர்ந்தேன். விண்வெளி ஆராய்ச்சியில் ஆனா ஆவன்னாகூடத் தெரியாது. மற்ற விஞ்ஞானிகளுக்கும் அந்த புராஜெக்ட் புதுசுதான். ஒரு குழந்தைபோல எல்லாரும் தத்தித் தத்தி கத்துக்கிட்டோம்.

ஒரு ராக்கெட்டில் என்ன மாதிரி சாஃப்ட்வேர் பயன்படுத்தணும், ராக்கெட்டின் டிசைன் எப்படி இருக்கணும், எவ்வளவு உயரம், எவ்வளவு அகலம், எந்தப் பாதையில் போகணும்... இவற்றை முடிவுசெய்வது என் வேலை. ஹார்டுவேர் பகுதியைத் தவிர்த்த மற்ற வேலைகள் எல்லாத்தையும் கவனிக்கணும். அப்போ நான் இரவு-பகலா முயற்சி செஞ்சு, ஒரு அப்ளிகேஷனை உருவாக்கினேன். அதுக்குப் பெயர் 'சித்தாரா’.  (SITARA - Software for Integrated Trajectory Analysis with Real time Application).  இது, ராக்கெட் பற்றிய முழு விவரங்களையும் டிஜிட்டலா சேகரிக்கும். அதைப் பயன்படுத்தி, ராக்கெட்டின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம். சிம்பிளா சொல்லணும்னா, ஒரு கல்லைத் தூக்கி வீசும்போது, அந்தக் கல் எந்தத் திசையில், எவ்வளவு டிகிரியில், எவ்வளவு நேரத்தில், எந்த இடத்தில், எவ்வளவு அழுத்தத்தில் விழும்னு சொல்வதுதான் 'சித்தாரா’. ஏதாவது தவறு நடந்திருந்தால், உடனே கண்டுபிடிச்சு, சரி செஞ்சுடலாம். இதைப் பயன்படுத்திதான் பி.எஸ்.எல்.வி அனுப்பினாங்க. இப்போ வரை நம்ப நாட்டிலிருந்து ஏவப்படும் எல்லா செயற்கைக்கோள் ராக்கெட்களும் 'சித்தாரா’ அப்ளிக்கேஷனைப் பயன்படுத்திதான் அனுப்பப்படுது. இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு என் பங்களிப்பில் முக்கியமானது இது."

“உங்க ரோல்மாடல் யார்?”

''ரோல்மாடல்னு வெச்சுக்க, எனக்குச் சின்ன வயசிலிருந்தே பிடிக்காது. ரோல்மாடல்னு இல்லாம, என் அனுபவத்துல நான் பார்த்த சிறந்த மனிதர்னா, அது அப்துல் கலாம். தன்னுடன் வேலை செய்றவங்களுக்கு, தன்னால முடிஞ்ச உதவிகளைச் செய்வார். கலாம், எனக்கு ரொம்ப சீனியர்; ரொம்ப அமைதியானவர்; யாராவது சின்னதா சாதித்தாலே, பெருசா பாராட்டுவார். நான் 'சித்தாரா’ போன்ற ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு மென்பொருள் உருவாக்கியதால், என்னை எப்பவும் 'சாப்ட்வேர் இன்ஜினீயர்’னுதான் கூப்பிடுவார். அவரது மரணம், நம் நாட்டுக்கும் விண்வெளித் துறைக்கும் பெரிய இழப்பு.''

 இது கடந்த 2015-ம் ஆண்டு ஆனந்த விகடன் பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள். தற்போது இஸ்ரோவின் புதிய தலைவராக பதவியேற்க உள்ள நிலையில் சிவன் என்ன சொல்கிறார்? 

"மிகவும் பெருமையாக உணர்கிறேன். எனக்கு முன்னர் எத்தனையோ மேதைகளும், ஆளுமைகளும் வகித்த பதவி இது. அவர்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவேன். தற்போது என்னுடைய கவனம் முழுக்கவும் நாளை இஸ்ரோ செலுத்தவிருக்கும் 31 செயற்கைக்கோள்கள் பற்றித்தான் இருக்கிறது. மற்றவை பற்றியெல்லாம் பிறகுதான் யோசிக்க வேண்டும்." 

“இந்தச் செய்தியை உங்கள் ஊர் மக்கள் இனிப்பெல்லாம் கொடுத்து கொண்டாடுகிறார்களே... கேள்விப்பட்டீங்களா?"

“இன்னும் இல்ல. நேற்றிலிருந்தே எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாழ்த்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இன்னும் செய்திகளையே கவனிக்கவில்லை. எத்தனை வாழ்த்துகள் இருந்தாலும், நம் மண்ணோட மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள் என்பதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுக்கு என் நன்றி.

இஸ்ரோவிற்காக நான் செய்த பணிகள் அனைத்துமே எங்களின் கூட்டுமுயற்சிதான். எல்லா வெற்றிகளுக்கும் என்னுடைய அணிதான் காரணம். எல்லாப் பெருமைகளும் அவர்களைத்தான் சாரும். இதேபோல வருங்காலத்திலும் ஒரு அணியாக வெற்றிகரமாகச் செயல்படுவோம்” 

சாதனைப் பயணம் தொடரட்டும்!