Published:Updated:

எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு! - லக லக லக லக... லதா! பகுதி-2

எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு! -  லக லக லக லக... லதா! பகுதி-2
எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு! - லக லக லக லக... லதா! பகுதி-2

எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு! - லக லக லக லக... லதா! பகுதி-2

ழு சகோதரர்களோடு பிறந்த லதா முதல் வரிசை மாணவியாக இருந்தபோதும் அவருக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரது பெரியம்மா கமலா தெலுங்கு நடிகையாக இருந்து பின்பு இந்தியிலும் நடித்தார். மராட்டியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பதை விட்டுவிட்டார். நடிகர் தேவ் ஆனந்தின் முதல் ஹீரோயின் அவர்தான். இவருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, இவர் தங்கை மகள் லதாவை தன் சொந்தப் பெண் போல கவனித்துக்கொண்டார். ‘‘தான் திரையுலகில் ஜொலிக்க அவரது பெரியம்மாவே இன்ஸ்பிரேஷனாக இருந்தார்’’ என்கிறார் லதா. கமலா தன் செல்லப் பெண்ணாகக் கருதிய லதாவுக்குத் தன் வீட்டில் கிருஷ்ண குமார் என்ற ஆசிரியரை வைத்து கதக் நாட்டியத்தைக் கற்றுக்கொடுத்தார்.

தனக்கு சினிமா சான்ஸ் கிடைத்ததே ஒரு சினிமா கதைப் போலத்தான் என்பதை விவரித்தார் லதா. ‘‘என் பள்ளிக்கூடத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன். பள்ளி விழாவைப் படம் எடுத்த புகைப்படக்காரர் அடுத்து நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் நடித்த மேடை நாடகத்தையும் படம் எடுத்தார். தான் எடுத்த படங்களை மனோகரிடம் காட்டினார். அப்போது இந்தப் பள்ளிவிழா படங்களும் அவற்றோடு கலந்திருந்தன. அவற்றையும் பார்த்த மனோகர் ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்துவிட்டு ‘எம்.ஜி.ஆர் வெளிநாடுகளில் எடுக்கப்போகும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு ஒரு புதுமுகம் தேடி வருகிறார். இந்தப் பெண்ணின் படத்தை அவரிடம் காட்டுவோம்’ எனச் சொல்லியிருக்கிறார். சரியென்று புகைப்படக்காரரும் ஒப்புக்கொண்டார்.

எம்.ஜி.ஆரிடம் பள்ளிவிழாவில் எடுக்கப்பட்ட படங்களை மனோகர் காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ‘இந்தப் பெண்ணின் முகம் சினிமாவுக்கு ஏற்றதாக உள்ளது. அவள் அம்மாவிடம் அனுமதி கேட்டு வாருங்கள்’ என்றார். இன்னொரு விஷயம் அப்போது என் பெயர் நளினி. சினிமாவுக்கு வந்த பின்தான் லதா ஆனேன். பள்ளியில் நளினி யார் என விசாரித்து வீட்டுக்கே வந்துவிட்டனர். மனோகர், என் அம்மாவைப் பார்த்து எம்.ஜி.ஆர் தன் படத்தில் நளினியை நடிக்க வைக்க விரும்புவதாகச் சொன்னதும் அந்த அம்மா, ‘வேண்டாம் சார். ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறாள். ஸ்கூல்கூட முடிக்கவில்லை. அவள் அப்பா ராமநாதபுரத்து ராஜா. அவளை சினிமாவில்விட எனக்கு விருப்பமில்லை’’ என்றார். 

அருகில் நின்ற என்னைப் பார்த்து, ‘என்னம்மா உனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமா’ என்று மனோகர் கேட்டதும் ‘ஓ சரி’ என்று சொன்னேன். பெரியம்மாவின் செல்லப்பெண் என்பதால் எனக்குக் கலையார்வம் இருந்தது. மனோகர் அம்மாவிடம் ‘சரி அம்மா... நீங்களே எம்.ஜி.ஆரிடம் வந்து உங்கள் எண்ணத்தை சொல்லிவிடுங்கள்’ என்றார்.

மறுநாள் நானும் அம்மாவும் மதியம் எம்.ஜி.ஆர் ஆஃபீஸுக்கு வந்தோம். அப்போது எம்.ஜி.ஆரும் இயக்குநர் ப.நீலகண்டனும் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ‘வாங்க, உட்காருங்கள்.. சாப்பிடுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர். ‘இல்லை... நாங்கள் சாப்பிட்டுத்தான் வந்தோம்’ என்றோம். ‘சரி. பாயசம் சாப்பிடுங்கள்’ என்றார் எம் ஜி ஆர். கீழே அமரப் போனதும் ‘வேண்டாம் சாப்பாடுதான் சாப்பிடவில்லையே; கீழே உட்காரவேண்டாம். சோஃபாவில் உட்காருங்கள்’ என்றார். 

எம்.ஜி.ஆர் சாப்பிட்டு முடித்ததும் ‘உங்கள் மகளை நான் கவனமாகப் பார்த்துக்கொள்வேன். உங்கள் ராஜ குடும்பத்தின் பாரம்பர்யத்துக்கு எந்தவோர் இழுக்கும் வராமல் பார்த்துக்கொள்கிறேன். நடிக்க அனுமதியுங்கள்’ என்றார். நளினி என்ற பெயரில் அப்போது ஒரு நடிகை இருந்ததால் எம்.ஜி.ஆர் என் பெயரை மாற்ற விரும்பினார். என்னை வீட்டில் லல்லி என்றே அழைத்தனர். எம்.ஜி.ஆர் லல்லியை லதா ஆக்கினார்.’’ சுவாரஸ்யமாக விவரித்தார் லதா.

எம்.ஜி.ஆர் லதாவின் அம்மாவிடம் ‘‘லதாவுடன் ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம்’’ என்றார். எதற்கு இந்த ஒப்பந்தம்? என்று நளினியின் அம்மா கேட்டார். ‘‘நாங்கள் ஒரு கதாநாயகியை கஷ்டப்பட்டு பல்வேறு பயிற்சிகளை அளித்து உருவாக்குகிறோம். பிறகு அவர்களின் கால்ஷீட்டுக்கு நாங்கள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் செய்கிறோம். அவர் எங்கள் கம்பெனி படங்களில் மட்டும் நடிக்க வேண்டும். பிறகு ஒப்பந்த காலம் முடிந்ததும் வெளி கம்பெனி படங்களில் நடிக்கலாம்’’ என்றார். ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினமும் பள்ளிக்கூடத்துக்கு வருவது போல லதா காலை ஒன்பது மணிக்குப் பயிற்சிக்கு வந்துவிடுவார். அங்கு வசனப் பயிற்சி அளிக்க பழம்பெரும் நடிகை ஜி.சகுந்தலா இருப்பார். டி.சம்பந்தம் இருப்பார். அவரும் நாடக அனுபவம் உடையவர். பரத நாட்டியப்பயிற்சி அளிக்க தண்டாயுதபாணி பிள்ளை வந்தார். சினிமாவுக்கான டான்ஸ் பயிற்சி அளிக்க புலியூர் சரோஜா இருந்தார். இன்னும் பல டான்ஸ் மாஸ்டர்கள் பயிற்சியளித்தனர். இது போன்ற பயிற்சிதான் முன்பு மஞ்சுளாவுக்கும் அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தை நட்சத்திரமாக இருந்து எம்.ஜி.ஆரின் படக் கம்பெனியில் தன் பதினாறு வயதில் ஒப்பந்தமான மஞ்சுளா பதினெட்டு வயது ஆனதும் தன்னை எந்த ஒப்பந்தமும் கட்டுப்படுத்தாது என்று சொல்லி வேறு கம்பெனி படங்களில் நடிக்கப் போய்விட்டார். இது எம்.ஜி.ஆருக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. ஆனால் லதா விஷயத்தில் அப்படியிருக்கவில்லை. லதா கடைசி வரை அவரது சொல்படி கேட்கும் பள்ளி மாணவி போலவே நடந்துகொண்டார். இன்றும் ‘எம்.ஜி.ஆரால்தான் எனக்கு இந்தப் புகழும் பேரும் செல்வமும் கிடைத்திருக்கிறது’ என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்.

வசனப் பயிற்சி அளித்த ஜி சகுந்தலா பற்றி இங்கு விரிவாகச் சொல்ல வேண்டும். ஏனென்றால் எப்படிப்பட்ட பயிற்சியாளரை எம்.ஜி.ஆர் லதாவுக்கு நியமித்தார் என்பது தெரிய வேண்டும் அல்லவா. ஜி.சகுந்தலா எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்தில் இடிந்த கோபுரம் [இன்பக்கனவு] நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தவர். பின்பு மந்திரிகுமாரி படம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் கலைஞர் வசனத்திலும் எடுக்கப்பட்ட போது வசனம் நன்றாகப் பேச தெரிந்தவர் என்பதால் ஜி.சகுந்தலா சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 

தன் கடைசிப் படமான இதயவீணையில் எம்.ஜி.ஆருக்குத் தாயாக நடித்தார்.

ஜி.சகுந்தலா பழைய படங்களில் தான் பேசிய வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் லதாவிடம் பேசிக் காட்டி அதைப் போல லதாவும் பேசுவதற்குப் பயிற்சி அளிப்பார். லதாவுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும்; பள்ளியிலும் அவருக்கு செகண்ட் லாங்குவேஜ் தமிழ்தான்; வீட்டிலும் அவர் பேசுவது தமிழே; என்றாலும் இவையெல்லாம் சினிமாவில் பேசுவதற்குரிய தகுதிகள் ஆகாது. சினிமாவில் ஒரு சொல் உதிர்த்தாலும் அதில் ஓர் உணர்ச்சி பொதிந்திருக்க வேண்டும். எனவே அவருக்கு ஜி சகுந்தலா தமிழ் பேசப் பயிற்சியளித்தார்.

லதாவுக்கு நடிப்பும் சொல்லித் தரப்பட்டது. வசனம் பேசும்போதும் அவர் தன் கை கால்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் வசனம் பேசும்போது எப்படி அதற்கு ரெஸ்பாண்ட் செய்ய வேண்டும். முகபாவம் எப்படி இருக்க வேண்டும் என்றும் டி சம்பந்தமும் ஜி சகுந்தலாவும் லதாவுக்குச் சொல்லிக் கொடுத்தனர். கேமராவுக்கு முன் நிற்பது நகர்வது அடுத்தவர் நடிக்கும்போது அவருக்கு இடையூறு இல்லாமல் இருப்பது லைட்டை முகத்தில் வாங்கி நடிப்பது நிழல் விழாமல் நடிப்பது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பு நடந்தபோது அதனை லதா வந்து பார்க்கும்படி எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் லதாவுக்கு ‘ஆன் த ஸ்பாட் ஸ்டடி’ அனுபவமும் கிடைத்தது.

லதா பார்க்கச் சிறிய பெண்ணாக இருந்ததால் அவரது எடையை அதிகரிக்க வேண்டி அவருக்கு தினமும் ஐஸ் கிரீம், பாசந்தி, அல்வா என்று சிறப்பு உணவு அடிக்கடி வழங்கப்பட்டது. பின்பு அவர் சற்று உடல் எடை கூடினார். ‘‘எனக்கு மேட்சாக நீ தெரிய வேண்டும் இப்படி  ஒல்லியாக இருக்கக் கூடாது’’ என்று அறிவுறித்திய எம்.ஜி.ஆர் அவரை நன்கு சாப்பிட வைத்தார். இதனால் லதாவுக்கு மெள்ள மெள்ள  சினிமா நடிகைக்குரிய உடல் வனப்பும் அழகும் கவர்ச்சியும் தோற்றப்பொலிவும் உண்டாயிற்று. பராசக்தி படம் எடுத்தபோது கூட சிவாஜி கணேசன் எடை குறைந்து கன்னத்தில் சதை இல்லாமல் வற்றலாக இருக்கிறார் என்று ஏ.வி.எம் கருதியதால் அவருக்கு மூன்று மாதம் கம்பெனியில் நல்ல சாப்பாடு கொடுத்து உடம்பைத் தேற்றி எடையை அதிகரித்து தோற்றப்பொலிவை கூட்டினர். 

தண்டாயுதபாணி பிள்ளை பரத நாட்டியம் கற்றுக்கொடுத்து அரங்கேற்றமும் நடைபெற்றது. அதிமுக கட்சி தொடங்கியபோது எம்.ஜி.ஆர் லதாவிடம், ‘‘நீ கட்சிக்கு என்ன செய்ய போகிறாய்’’ என்று கேட்டார் பிறகு ‘‘நீ நாட்டிய நாடகம் நடத்து’’ என்றார். சகுந்தலை நாடகத்தை லதா நாட்டியமாக மேடையில் அரங்கேற்றினார். திருச்சி கோவை பவானி மதுரை ஆகிய ஊர்களில் இந்த நாட்டிய நாடகத்தை  நடத்தி அதிமுக கட்சிக்காக முப்பத்தைந்து லட்சம் ரூபாய் நிதி திரட்டிக்கொடுத்தார். எம்.ஜி.ஆரால் ஒரு நடிகையாக வார்த்து எடுக்கப்பட்ட லதா தொடர்ந்து அ.தி.மு.க கட்சிக்கும் தொண்டாற்றும் வகையில் அந்தப் பயிற்சிகள் அவருக்கு உறுதியான அஸ்திவாரத்தை அமைத்துத் தந்தன.

அடுத்த கட்டுரைக்கு