Published:Updated:

‘திண்டுக்கல்லும் 100 குண்டாசும்...’ தெறித்து ஓடும் ரவுடிகள்!

‘திண்டுக்கல்லும் 100 குண்டாசும்...’ தெறித்து ஓடும் ரவுடிகள்!
‘திண்டுக்கல்லும் 100 குண்டாசும்...’ தெறித்து ஓடும் ரவுடிகள்!

‘திண்டுக்கல்லும் 100 குண்டாசும்...’ தெறித்து ஓடும் ரவுடிகள்!

தமிழக அளவில் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் திண்டுக்கல்லுக்கு முக்கிய இடம் உண்டு. அதேபோல் அதிக விபத்துகள் நடக்கும் மாவட்டமாகவும் திண்டுக்கல் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் குற்றங்கள், விபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்திவேல். இதனால் 2017-ம் ஆண்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச்செயல்கள், வழக்குகள் மற்றும் விபத்துகள் வெகுவாகக் குறைந்துள்ளன.

தொழில்முறை ரவுடிகள் பலரும் அடைக்கலமாகும் இடமாகத் திண்டுக்கல் திகழ்ந்து வருகிறது. திண்டுக்கல் பாண்டி, கரடி மணி என்ற இரண்டு குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் நடந்த தொடர் கொலைகளை அப்பகுதி மக்களால் மறக்கமுடியாது. கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் எனப் பட்டப்பகலில் கொலை செய்துவிட்டு, சர்வ சாதாரணமாகக் குற்றவாளிகள் நடந்துசெல்லும் காட்சிகளையெல்லாம் பார்த்து சலித்துப்போனார்கள் பொதுமக்கள். ரவுடிகளுக்கு இடையேயான பழிவாங்கல், கொலைகள், முன்விரோதக் கொலைகள் மட்டுமல்லாமல் 'மதுகுடிக்கும் போது, 'சைடிஷ்' முழுவதையும் காலி செய்துவிட்டதற்காக நண்பனையே கொலை செய்வது', 'இட்லிக்குச் சட்னி தரவில்லையென கடைக்காரரைக் கொலைசெய்வது' போன்ற எமோஷனல் கொலைகளும் திண்டுக்கல்லில் அடிக்கடி நடக்கும். இதைத் தவிர, விழித்துக்கொண்டு இருக்கும்போதே விழியைத் தோண்டும் 'பிக் பாக்கெட் கில்லாடிகள் அட்டகாசம் ஒருபக்கம்' எனக் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், திண்டுக்கல் எஸ்.பி.யாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சக்திவேல், சூர்யா நடித்த 'சிங்கம்' பட பாணியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் விளைவாக, மாவட்டத்தில் குற்றச்செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள் அதிகம்கூடும் இடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைவீதி என திண்டுக்கல் நகரில் மட்டும் 570 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த ஏற்பாடு செய்தார் இவர். இதன்காரணமாக, செயின் பறிப்பில் ஈடுபடும் திருடர்கள், பிக் பாக்கெட் ஆசாமிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டனர். 2017-ம் ஆண்டு பதிவான 509 திருட்டு தொடர்பான

குற்றவழக்குகளில், 365 வழக்குகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, 2 கோடியே 30 லட்சத்து 50 ஆயிரத்து 779 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பழைய குற்றவாளிகள், தற்போது ஜாமீனில் இருப்பவர்கள், ரவுடிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் எனப் பலரும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இதனால் பல ரவுடிகள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார்கள். பலர் ஊரைக் காலி செய்துவிட்டு வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

‘இரவு நேரங்களில் தனியாக ரோந்துசெல்வது, காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வது' போன்ற எஸ்.பி-யின் அதிரடி ஆக்‌ஷன்களால் போலீஸாரும் எப்போதும் ‘அலர்ட்டாகவே’ இருக்கிறார்கள். இத்தனை அதிரடிகளுக்கு மத்தியிலும் சில இடங்களில் ஓரிரு குற்றச்செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அண்மைக்காலமாக குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சற்றே ஆறுதலான செய்தியாகும். ஐ.ஐ.டி. தொழில்நுட்பக் குழுவினரின் உதவியுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 22 இடங்களை கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2016-ம் ஆண்டு இந்த மாவட்டத்தில் 57 கொலைவழக்குகள் பதிவான நிலையில், 2017-ம் ஆண்டில் அது 31 வழக்குகளாகக் குறைந்துள்ளது. குண்டர் சட்டத்தின்கீழ் 2016-ல் 58 பேர் கைதான சூழலில், 2017-ம் ஆண்டில் அந்தச் சட்டத்தின் கீழ், 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால், திண்டுக்கல்லில் குற்றச்செயல்கள் குறைவதற்கு வழிவகுத்துள்ளார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். அவரின் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு