Published:Updated:

உலகின் முதல் எய்ட்ஸ் பரவல் எப்படி நிகழ்ந்திருக்கும்?

உலகின் முதல் எய்ட்ஸ் பரவல் எப்படி நிகழ்ந்திருக்கும்?
உலகின் முதல் எய்ட்ஸ் பரவல் எப்படி நிகழ்ந்திருக்கும்?

இதை 100-வது முறையாகப் பொதுவெளியில் சொல்கிறார். அந்த வீல்சேரில் மிகுந்த சோர்வுடன் உட்கார்ந்திருந்த அவரை மெதுவாகத் தள்ளிவருகின்றனர். கொஞ்சம் வேகமாக அசைந்தாலும் அவருக்குப் பெரும் வலி ஏற்படும். 

"நான் இதுவரை யாருடனும் உடலுறவு வைத்தது கிடையாது; சத்தியம். நம்புங்கள். எந்தவொரு போதை மருந்தையும் நான் எடுத்ததில்லை. நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. இருந்தும் நான் தாங்கமுடியாத வலியைச் சுமக்கிறேன். 

என் வாழ்க்கை என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. எனக்குக் கல்யாணம்செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு வாழ வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. ஆனால், என் வாழ்வு பெரும் நரகமாகிவிட்டது..." என்று மெதுவாக நிறுத்தி, நிதானமாகப் பேசினார். இடையே பல தடவை இருமல் வந்தது. மொத்தக் கூட்டமும் அமைதியாக அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இனம்புரியா அமைதி, அவரின் வலியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். 

"என் வாழ்க்கை சீரழிந்ததற்கு டாக்டர்.ஆக்கர் (Dr. Acer) தான் முக்கியக் காரணம். அவர் மட்டுமல்ல இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் கூடத்தான். அவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பது தெரிந்தும், அதை வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்த ஒவ்வொருவருமே குற்றவாளிகள்தான். என் வாழ்க்கையையும் என் குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லோரும் சேர்ந்து சீரழித்துவிட்டீர்கள்.

நான் பெரும் வலியில் இருக்கிறேன். நான் இறந்தும் போய்விடுவேன். ஆனால், சட்டங்கள் கடுமையாக்கப்படாவிட்டால், நான் பட்ட அத்தனை கஷ்டங்களும், இழப்புகளும் வீணாகிவிடும். நான் செத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் செத்துவிடுவேன். எதையெல்லாமோ சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விடைபெறுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல எனக்கு நேரமில்லை." அவர் வெடித்துச் சிதறினார். ஆனால், அந்த வெடிப்பு அவர் குரலை உயர்த்தவில்லை. குரலை உயர்த்தி, வெடித்துக் கத்த அவர் உடலில் தெம்பு இல்லை. அழவும் அவருக்கு அவ்வளவு பிடிக்காது. 

இவரையும், இவர் கதையையும் தெரிந்துகொள்வதற்கு முன்னர் ஒரு நிமிடம்... உங்களுக்கு நெருக்கமான ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தெரியவந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று தெரிந்த பின்னர், அவர் உங்கள் வீட்டுக்கு வருகிறார். சில மணி நேரம் உங்களிடம் பேச விரும்புகிறார். நீங்கள் அவருக்கு நெருக்கமானவர் என்றால், உங்கள் மடியில் சற்று நேரம் சாய்ந்து படுக்க நினைக்கிறார். இந்தச் சூழல்களை எல்லாம் நீங்கள் உண்மையில்... உண்மையில் எப்படிக் கையாள்வீர்கள் என்று ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சிந்தனை கிம்பர்லியின் கதையை, வாழ்வை, வலியை உணரவைக்க உதவும்.

கிம்பர்லி பெர்கலிஸ் (Kimberly Bergalis). ஒரு பழைய ஹாலிவுட் ஹீரோயின் போன்ற தோற்றம் அவருக்கு. (இந்தக் கதை நடப்பது 1980-களின் இறுதி). அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் தமக்குவா (Tamaqua) எனும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். 10-வது வயதில் ஃப்ளோரிடா மாகாணத்துக்குக் குடிபெயர்கிறது கிம்பர்லியின் குடும்பம். அப்பாவுக்குக் கணக்குத்துறையில் வேலை. அம்மாவுக்கு எய்ட்ஸ் நோயாளி பிரிவில் மருத்துவ வேலை. எய்ட்ஸ் என்பது பெரிதாக வெளியே தெரியாத காலம் அது. எந்த மருந்தும் கிடையாது. எய்ட்ஸ் என்பதைக் கொடூர அரக்கனாக, எய்ட்ஸ் வந்தவர்களைக் கேவலமான புழுக்களாகப் பெரும்பான்மையான சமூகம் பார்த்த ஒரு காலகட்டம். 

பள்ளிப்படிப்பை முடிக்கிறார். பெரும் குதூகலத்துடன் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிறார் கிம்பர்லி. அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனங்களோடு இருக்கிறார். 21 வயதில் அவருக்கு வளர்ந்த ஞானப் பல்லில் (Wisdom Teeth) சில பிரச்னை ஏற்பட்டது. அதனால், தன் பகுதியிலிருந்த பல் மருத்துவரான டாக்டர் டேவிட் ஆக்கரை (Dr. David Acer) சந்திக்கிறார். முழுக்கை சட்டை, நீளமான கோட், கழுத்தை மறைக்கும் ஸ்கார்ஃப் என இருந்த டாக்டர் ஆக்கர், கிம்பர்லிக்கு இரண்டு ஞானப்பற்களையும் பிடுங்குகிறார். கிம்பர்லிக்கு அது வலித்தது. ஆனால், ஓரிரு நாள்களில் சரியாகிவிட்டது.

பற்கள் பிடுங்கப்பட்டு ஓராண்டு காலமாகியிருந்தது. ஒரு நாள் கல்லூரியிலிருந்து மிகுந்த சோர்வுடன் வீட்டுக்கு வந்தார் கிம்பர்லி. சற்று காய்ச்சல் அடித்தது. மூச்சுத் திணறல், தொண்டை எரிச்சலும்கூட இருந்தது. சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு வாரத்துக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்றே நினைத்தனர். ஆனால், நாளாக நாளாக உடல் மிகவும் மோசமாகத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் துணிந்து கேன்சராக இருக்குமோ என்று நினைத்து, அதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், கேன்சர் இல்லை.

டாக்டர்களுக்கு ஒரே குழப்பம். ஆனால், கிம்பர்லியின் அம்மா ஆன்னாவுக்கு (Anna) மட்டும் ஒரு சின்ன சந்தேகம் மனத்தின் ஓரம் இருந்து கொண்டேயிருந்தது. அதுவாக இருக்கக் கூடாது என்று வேண்டியபடியே, அந்தப் பரிசோதனையைக் கிம்பர்லிக்குச் செய்துபார்த்தார். ஆம், கிம்பர்லிக்கு ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ். எய்ட்ஸ். துடி துடித்துப்போனார் ஆன்னா.

காரணங்களைத் தேடி அலையத் தொடங்கினர்.

மொத்தப் பேரும், கிம்பர்லி யாருடனோ உடலுறவு வைத்துக்கொண்டதில்தான் இது ஏற்பட்டுள்ளது என்று பேசத் தொடங்கிவிட்டனர். பேசுவது என்றால் சும்மா இல்லை. கதைக்கு கண், காது, மூக்கு, வாய், புருவம், கன்னம், கருவிழி என எல்லாம் வைத்துப் பேச ஆரம்பித்தார்கள். அதுவரை யாருக்கும் எந்தப் பதிலையும் கிம்பர்லி சொல்லிவிடவில்லைதான். ஆனால் ஒரு கட்டத்தில், என்ன செய்வதெனத் தெரியாமல்... ஆன்னாவே கிம்பர்லியிடம் கேட்டுவிட்டார்...

"என்னதாண்டி பண்ணித் தொலைச்சே...சொல்லித் தொலையேன். யாருகூடன்னு சொல்லிடுடி!"

உடைந்து நொறுங்கி, உதிர்ந்துபோனார் கிம்பர்லி. ஆனால், உறுதியாகச் சொன்னார்.

"நான் யாருடனும் உடலுறவுகொள்ளவில்லை. எந்த போதை ஊசியையும் போடவில்லை." ஒரு முறை அல்ல. ஓராயிரம் முறை அல்ல. ஒரு லட்சம் முறைகளுக்கும் அதிகமாக இதை உறுதியாகச் சொன்னார் கிம்பர்லி. கிம்பர்லிக்கு துணையாக ஆன்னா உறுதியாக நின்றார். சில பேரன்புகொண்ட நண்பர்களிடமும் காரணங்கள் ஆராயப்பட்டன. ஒரு மிகப்பெரும் உண்மை வெளிப்பட்டது. 

கிம்பர்லிக்குப் பல் சிகிச்சை அளித்த டாக்டர். ஆக்கருக்கு எய்ட்ஸ். 1987-லேயே அது கண்டறியப்பட்டால், அதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார் ஆக்கர். தன் உடலில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து மறைத்துவந்துள்ளார். அன்று கிம்பர்லியின் பற்களைப் பிடுங்கும்போது போட்டிருந்தாரே அந்த முழுக்கை சட்டையும், நீளக் கோட்டும், ஸ்கார்ஃபும்கூட தன் உடலில் இருந்த புண்களை மறைக்கத்தான் அவர் போட்டிருந்தார். 

கிம்பர்லி தன் நோயோடு போராடுவதோடல்லாமல், தனக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மிக வீரியமாகக் குரல்கொடுத்தார். உலகிலேயே எய்ட்ஸ் நோய் அடுத்தவருக்குப் பரவியதாக அறியப்பட்ட முதல் நபர் கிம்பர்லி. அவருக்கு அந்த நோயைக் கொடுத்தவர், டாக்டர்.ஆக்கர்.

இதிலும் கிம்பர்லியின் மானத்தைக் கூறுபோட்டது ஒரு கூட்டம். டாக்டருக்கு எய்ட்ஸ் என்றால், கிம்பர்லிக்கு எப்படி? கிம்பர்லிக்கும் டாக்டருக்கும்? அந்தப் பேச்செல்லாம் கிம்பர்லிக்கு அருவருப்பாக இருந்தது. கிம்பர்லியைப் பார்த்து ஒரு பெரும் மந்தைக் கூட்டம் அருவருப்படைந்தது. தொடர்ந்து போராடி, டாக்டர்.ஆக்கர் செய்த குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார் கிம்பர்லி. அவரிடம் சிகிச்சை மேற்கொண்ட பல நூறு பேரை பரிசோதித்தார்கள். அதில் கிம்பர்லி தவிர இன்னும் 5 பேருக்கு நோய் பரவியிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். என்ன செய்வதென யாருக்கும் தெரியவில்லை?!

டாக்டர் ஆக்கரின் உதவியாளர்களை விசாரித்தபோது, ஒருவர் சொன்னார்...

"அவர் மருத்துவ கவுன்சிலின் எந்தவொரு சட்டதிட்டங்களையும் பின்பற்றவில்லை. எந்தக் கருவியையும் சரியாகக் கழுவி (Sterilize) உபயோகப்படுத்தவில்லை." என்று வாக்குமூலம் கொடுத்தார். இதிலிருந்து கிம்பர்லி மற்றும் அந்த ஐவருக்கும் நோய் எப்படி பரவியிருக்கும் என்பது தெரிந்தது. 

இன்னும், இன்னும் விசாரணை நடந்தது. டாக்டர். ஆக்கர் இருபால் உணர்வு கொண்டவர் (Bisexual) கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமானோருடன் உடலுறவுகொண்டிருக்கிறார். அதன்மூலம் அவருக்கு எய்ட்ஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும்,ஒரு கூட்டம் கிம்பர்லிக்கு எதிராகவே செயல்பட்டுவந்தது. கிம்பர்லி டாக்டருடன் உறவுகொண்டார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எய்ட்ஸ் நோயின் வலியிலிருந்த கிம்பர்லிக்குப் பல தடவை கன்னித்தன்மை (Virginity) சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் கிம்பர்லி அப்பழுக்கற்றவர் என்பது நிரூபணம் ஆனது.

இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எய்ட்ஸ்குறித்து அனைவரையும் பேசவைத்தது. டாக்டர். ஆக்கரால் பாதிக்கப்பட்ட மற்ற 5 பேரும் அவர்மீது வழக்குத் தொடர்ந்தார்கள். அவரின் சொத்துகளை முடக்கி, தங்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று அவர்கள் வழக்குப் போட்டார்கள். ஆனால், கிம்பர்லியோ ஒரு புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டுவர வேண்டுமென்று வழக்குத் தொடர்ந்து போராடினார். 

தொடர்ந்து போராடிக்கொண்டேயிருந்தார் கிம்பர்லி. தன் 23-வது வயதில், டிசம்பர் 8-ம் தேதி 1991-ம் ஆண்டு, உடல் உருகி உருக்குலைந்த நிலையில், அவர் மரணத்தைத் தழுவும் நொடி வரை போராடினார். அந்தப் போராட்டம் இறுதியில் வெற்றிகண்டது. எய்ட்ஸ்குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தியதோடு அல்லாமல், மருத்துவ உபகரணங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும், அப்படித் தவறினால் மிகக் கடுமையான தண்டனைகள் என அமெரிக்க அரசின் சட்டங்களில் புதிய திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. 

கிம்பர்லிக்குத் தன் வாழ்க்கை பறிக்கப்பட்டது பெரும் வலியைக் கொடுத்தது. தாங்கமுடியாத அந்த மன வலி, அவரின் இறுதி மூச்சு வரை இருக்கவே செய்தது. ஆனால், அதைத் தாண்டி ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கைக்காக அவர் போராடினார். 

"எய்ட்ஸ் என்பது சாவுகுறித்தது அல்ல. அது வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் போராடுவது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இருந்தும் என் வாழ்க்கை என்னிடமிருந்து பறிக்கப்பட்டது..." என்று கடைசியாக கிம்பர்லி இதைச் சொன்னபோது, அவரின் உடல்... அந்தத் தோல்... எலும்போடு உருகி ஒட்டிப்போயிருந்தது. கிம்பர்லி வலியில் அலறியபடியே இறந்துபோனார்.