Published:Updated:

புத்தகச் சந்தையில் அம்பேத்கர், பெரியாரின் புரட்சி!

புத்தகச் சந்தையில் அம்பேத்கர், பெரியாரின் புரட்சி!
புத்தகச் சந்தையில் அம்பேத்கர், பெரியாரின் புரட்சி!

சென்னைப் புத்தகக்காட்சியில் புதிய வாசகர்களும் அவர்களின் விருப்பங்களும் மாறிவருகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. புதுப்புது புத்தகங்களை வரவேற்கும்வகையில் வாசகர்களின் தன்மையும் மாறிவருகிறது. 

கடந்த 10ஆம் தேதி முதல் ஏழு நாள்களாக நடந்துவரும் சென்னைப் புத்தகக்காட்சியில் ஒவ்வோர் ஆண்டையும்போல இந்த ஆண்டும் புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கவிதை, சிறுகதை, நாவல்களுக்குக் குறைவில்லாமல் முன்னணி வணிகப் பதிப்பகங்கள் வெளியிட்டுத் தள்ளியுள்ளன. புத்தகக்கடைகள் இருக்கும் காட்சி அரங்கத்துக்கு உள்ளேயும் நிகழ்ச்சி நடக்கும் வெளி மைதானத்திலும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. சத்தமில்லாமல் இலக்கிய பாவனைகளுடன் நடந்துமுடியும் வெளியீடுகளுக்கு நேரெதிராக, அரசியல் கட்சிகள் தொடர்புடையவர்களின் புத்தக வெளியீடுகளில் யுத்தசத்தம் போல காரசார உரையாடல்களும் சவால்களுமாக, புத்தகக்கடைகள் பக்கம் இருப்பவர்களையும் காதுகொடுத்து கேட்கவைப்பதாக இருக்கின்றன. 

திமுகவின் ஊடகப் பேச்சாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா எழுதிய ‘இவன் கருப்பு சிவப்புக்காரன்’ புத்தக வெளியீட்டில் நேற்று எழுத்தாளர் வே.மதிமாறன் பேசியது, மதிய வெயிலுக்குப் போட்டியாக மிகவும் சூடாக இருந்தது. புத்தகக்காட்சியின் மகாகவி பாரதி அரங்கத்தில், தினமும் மாலை 6 மணிக்கு நடந்துவரும் வாசகர்- எழுத்தாளர் சந்திப்பும் வாசகர்களுக்கு அருமையான அனுபவத்தைத் தருகிறது. ரித்விக் கட்டக்கின் பெயரில் அமைக்கப்பட்ட இன்னோர் அரங்கில் குறும்படங்களும் ஆவணப்படங்களுமாக திரைப்பட நேயர்களுக்குத் தனிச்சுவையைத் தருகின்றன. இந்த நிகழ்வையொட்டி திரைத்துறையுடன் தொடர்புடைய எழுத்தாளர் ஒருவர் தினமும் இங்கு பேசுவதும் கூடுதல் அம்சம்!

ஒரு வாரத்தில் மூன்று நாள்களாக ஓரளவுக்கு வாசகர்கள், புத்தகங்களை வாங்கிச்செல்கின்றனர். நேற்று ஞாயிறன்று காலையிலும் பிற்பகல் தொடங்கி இரவுவரையிலும் வாசகர்கள் கணிசமான அளவில் வந்திருந்தனர். இன்று காணும்பொங்கல் என்பதால் சென்னை மாநகரமே காலைமுதல் கடற்கரையில் திரண்டிருக்கும் எனும் நிலையில், முந்தைய நாள்களைவிட புத்தகக்காட்சிக்குக் கணிசமான வாசகர்கள் கூடுதலாக வருவார்கள் என்பது பதிப்பாளர், விற்பனையாளர்களின் மனக் கணக்கு! பிற்பகல் நிலவரப்படி இனிமேல்தான் அதிகமான மக்கள் வருவார்கள் என நம்மிடம் கூறினார்கள், அரங்கிலுள்ள விற்பனையாளர்கள். 

குழந்தைகளையும் சிறுபிள்ளைகளையும் அழைத்துவரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், முந்தைய ஆண்டுகளைப் போல இல்லாமல், கணிசமான பெற்றோர் புத்தகம் வாங்க யோசிக்கவும்செய்கின்றனர். காரணம், குழந்தைகளுக்கான புத்தகங்களின் விலை. குறிப்பாக, ஆங்கிலப் புத்தகங்களின் விலை அதிகரித்துள்ளதைப் பார்த்துவிட்டு, பல புத்தகங்களை வாங்க விரும்பினாலும் வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுகின்றனர். ஒப்பீட்டளவில், ஆங்கிலத்தைவிட தமிழில் குறைவான விலையில் பல பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன என்பது சற்றே ஆறுதலானது!

மிகவும் தீவிரமான, ஆழமான உள்ளடக்கத்தைக் கொண்ட புத்தகங்களுக்கு எப்போதும்போலவே வரவேற்பு இருக்கிறது. இடது, வலது, இந்துத்துவ, இசுலாமிய அரசியல் அரங்குகளில் எப்போதுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாசகர்கள் மொய்த்தபடி இருக்கின்றனர். இதைப்போலவே சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை, மரபு வாழ்வியல் தொடர்பான கடைகளிலும் கூட்டம் நிரம்பிவழிகிறது. பகுத்தறிவு, சமூக நீதி, மானுடவியல், தொல்லியல், பண்பாட்டியல் குறித்த நூல்களையும் அதிகம் பேர் தேடிவருகின்றனர். 

நடப்புவிவகாரங்களைப் பற்றிய புத்தகங்களைப் பார்த்தும் கேட்டுவந்தும் வாங்கிச்செல்பவர்களின் எண்ணிக்கை, கணிசமாக உள்ளது. குறிப்பாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மத்திய அரசின் கொள்கைமுடிவுகளைப் பற்றிய விமர்சன நூல்களுக்கு அதிக வரவேற்பைப் பார்க்கமுடிகிறது. கடந்த ஆண்டு கடுமையான பிரச்னையாக இருந்த ஜல்லிக்கட்டு விவகாரம் பற்றி பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வந்துள்ளன. இவற்றுக்கும் கணிசமான வாசகர்கள் இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது. 

காந்தியடிகளின் ‘சத்தியசோதனை’, நேரு எழுதிய புத்தகங்களுக்கு தேடிவந்து வாங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கைவரை’ புத்தகத்துக்கும் புதிய வாசகர்கள் வந்தபடி உள்ளனர். ஜான் பெர்க்கின்சின் ’ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகம் தமிழில் வெளியாகி எத்தனையோ ஆண்டுகள் ஆகியும், இவ்வளவு வாசகர்களா என்கிறபடி அதிக அளவில் விற்பனை ஆகிறது. 

கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பார்வை கொண்டவர்களில் தீவிர  வாசகர்களாக இருக்கிறார்கள்; ஆங்காங்கே புத்தகங்களை வாங்கியபடி அவர்கள் சூடான விவாதங்களில் இறங்குவது இதைக் காட்டுகிறது. தமிழகத்தில் நிலவிவரும் சமூக, அரசியல் எழுச்சியான கட்டத்தில், தமிழகம் சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்த புத்தகங்களை புதிய வாசகர்கள் குறிப்பாக இளைஞர்கள் கேட்டு வாங்கிச்செல்கின்றனர். 

அம்பேத்கர், பெரியாரின் கருத்துகள் ஏற்கெனவே பெரும் பெரும் தொகுப்புநூல்களாக வந்துள்ளபோதும், புதிதாக குறிப்பிட்ட தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள பெரிய அளவு புத்தகங்கள், பல கடைகளில் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. அதிக விற்பனையான நூல்கள் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன; இவற்றுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இத்தகைய நூல்களை வெளியிட்டு, இளைய வாசகர்களை ஈர்த்து வாசிக்க வைக்கும் புரட்சியை உண்டாக்குகிறார்கள். 

மாலையில் தொடங்கி இரவு காட்சிமுடிந்து அரங்குகள் மூடப்படும்வரை, எழுத்தாளர்கள், எழுத்தாள-வாசகர்கள், வாசக எழுத்தாளர்கள் என குழுக்குழுவாய் அந்தந்த இடங்களை அதிரவைக்கும் உரையும் உரையாடல்களுமாக இன்னொரு பக்கம் களைகட்டுகிறது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திடீரெனச் சந்தித்துக்கொள்ளும் அரிய காட்சிகளையும் புத்தகக்காட்சியில் அடிக்கடி பார்க்கமுடிகிறது.