Published:Updated:

நாய்கள் குரைப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் AI... இன்னும் என்னலாம் வருமோ?

நாய்கள் குரைப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் AI... இன்னும் என்னலாம் வருமோ?
நாய்கள் குரைப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் AI... இன்னும் என்னலாம் வருமோ?

செல்லப்பிராணி என்றாலே பலருக்கும் முதலில் ஞாபகம் வருவது நாய்கள்தான். மனிதனின் நண்பன் என்று அழைக்கப்படுவதும் நாய்தான். ஓநாயில் இருந்து பிரிந்த இனமாக கருதப்படும் இவைதான் மனிதன் முதன் முதலில் பழக்கப்படுத்திய மிருகம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. தொடக்கக் காலத்தில் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டன. பின்பு படிப்படியாக மனிதன் செய்த பல வேலைகளிலும் உதவியாக இருந்தன. இன்று பலரது வீடுகளில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டன நாய்கள்.

நாய்களின் உணர்வுகளைப் பற்றி அவற்றோடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு நன்றாக தெரியும். பாசம், கோபம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் அவை வெளிப்படுத்தும். அவை எந்த உணர்வை வெளிப்படுத்துகின்றன என்பதை அவற்றின் முக பாவனையும், அதன் குரலுமே காட்டிக்கொடுத்துவிடும். மொழிகள் புரியாவிட்டாலும் கூட உணர்வுகள் ஒன்றுதான் என்பதால் ஒரு சிலர் நாய்களோடு பேசுவார்கள். அவையும் பதிலுக்கு ஏதாவது குரல் எழுப்பும். ஆனால், இனிமேல் நாய்கள் என்ன சொல்ல வருகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தால் மொழிபெயர்க்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

நாய்களின் குரைப்பை மொழிபெயர்க்கலாம்

சமீப காலமாக அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்தான் இதிலும் பயன்படப் போகிறது. விலங்குகள் என்ன சொல்ல வருகின்றன என்பதை மொழிபெயர்க்க கருவிகள் நடைமுறைக்கு வந்து பல வருடங்களாகிவிட்டன. இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கருவிகளில் பிரபலமானது Bow Lingual எனப்படும் கருவி. ஜப்பானைச் சேர்ந்த டக்ரா என்ற நிறுவனம் இந்தக் கருவியை 2002-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. நாய் குரைப்பதை வைத்து அது என்ன சொல்ல வருகிறது என்பதை இந்தக் கருவி மொழிப்பெயர்த்து திரையில் காட்டும். ஆனால், இந்தக் கருவி ஒலியை மட்டுமே பயன்படுத்துவதால் அவ்வளவு துல்லியமாக மொழிபெயர்க்கவில்லை. ஆனால், வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கான் ஸ்லோபோட்சிச்காஃப் (Con Slobodchikoff) என்ற பேராசிரியர் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம் தற்பொழுது இருக்கும் கருவிகளைவிட பல மடங்கு துல்லியமாக மொழி பெயர்க்கக் கூடியது.

இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிய சுமார் 30 ஆண்டுகளாக தரை நாய்களை இவர் ஆராய்ந்திருக்கிறார். தரை நாய்கள் என்பது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு விலங்கினம். பெரும் கூட்டங்களாக சேர்ந்து வாழக்கூடிய இவை, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் முறை சற்று வித்தியாசமானது. ஆபத்துக் காலத்தில் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து நின்று எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.

“நான் இந்த ஆராய்ச்சியை முதலில் தரை நாய்களில் இருந்து தொடங்கலாம் என்று எண்ணினேன், இதில் வெற்றி பெற்றுவிட்டால் சாதாரண நாய்களுக்கும், பூனைகளுக்கும் இதைப் பயன்படுத்த முடியும்” என்கிறார் பேராசிரியர் கான் ஸ்லோபோட்சிச்காஃப்.

தொடர்ச்சியாக பதிவு செய்த ஒலிகளை வைத்து ஒரு கணினிக்கு புரியும்படி ஒரு அல்காரிதத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த அல்காரிதம் ஒலிகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்தைப் பற்றி இவருக்குத் தெரியவந்தது. அவர்களோடு இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளார். இந்தக் கருவி செயற்கை நுண்ணறிவுத் திறனைக் கொண்டுள்ளதால் நாயின் குரலை மட்டுமின்றி முகபாவனையையும் சேர்த்தே ஆராயும். எனவே,  நாய்கள் குரைப்பதை பல மடங்கு துல்லியமாக இந்தக் கருவி மொழிபெயர்க்கும். இது வெற்றி பெற்றால் மற்ற விலங்குகளுக்கும் இதைப் பயன்படுத்த முடியும். நாய்களுக்கும் மனிதனுக்கும் நட்பு இன்னும் பலமாகும். மேலும், ஆபத்துக் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் நாய்களிடம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.