Published:Updated:

ஆயிரம் யானைகளைக் கொன்ற கோனி... 6 ஆண்டுகள் தேடியும் தோல்வியுடன் திரும்பிய அமெரிக்கா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆயிரம் யானைகளைக் கொன்ற கோனி... 6 ஆண்டுகள் தேடியும் தோல்வியுடன் திரும்பிய அமெரிக்கா!
ஆயிரம் யானைகளைக் கொன்ற கோனி... 6 ஆண்டுகள் தேடியும் தோல்வியுடன் திரும்பிய அமெரிக்கா!

ஆயிரம் யானைகளைக் கொன்ற கோனி... 6 ஆண்டுகள் தேடியும் தோல்வியுடன் திரும்பிய அமெரிக்கா!

அநீதி கதைகளின் ஒவ்வோர் அத்தியாயமும் இப்படித்தான் தொடங்கும் "நாம வாழணும்னா எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம்". கோனி கதையும் அப்படித்தான். ஆப்பிரிக்க காடுகளில் இருந்த 80 சதவிகித யானைகள் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம்  ஜோசப் கோனி! 

காங்கோவின் பிரம்மாண்டமான ஆனால் மோசமாக பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்கா கரம்பா. ஆப்பிரிக்க யானைகளில் அதிகமான யானைகள் இருந்த இடம். 1970 ஆம் ஆண்டு 20000 என்கிற எண்ணிக்கையில் இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது 1500 மட்டுமே. ஒவ்வொரு நாளும் நான்கு முனை தாக்குதல்களுக்கு உட்பட்டிருக்கிறது இந்தத் தேசிய பூங்கா. பல்வேறு சமூக விரோதிகள், கடத்தல்காரர்கள், வேட்டையாடுபவர்கள் என இழப்பின் உச்சத்தில் இருந்த கரம்பா தேசியப் பூங்காவிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதன் பெயர்தான் ஜோசப் கோனி.

20000த்திலிருந்து 1500 ஆனது எப்படி? எங்கிருந்து யானைகளின்  வீழ்ச்சி தொடங்கியது என்பதை அறிய முதலில் கோனியை  பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.  LRA (Lord’s Resistance Army) “இறைவனுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கும் இராணுவம்” என்ற பெயர் கொண்ட உகன்டா நாட்டுக் கொரில்லா அமைப்பின் தலைவர் ஜோசப் கோனி. வடக்கு உகன்டாவில் 1961ம் ஆண்டு பிறந்த கோனி, அச்சோலி (Acholi) இனக்குழுவைச் சேர்ந்தவர். தங்கள் இனத்திற்குத் தனிநாடு கோரி 1987ம் ஆண்டு எல்ஆர்ஏ  அமைப்பைத் தோற்றுவித்தார்.  அதே வருடம் அச்சோலி இனத்தவரான உகன்டா ஜனாதிபதி ஒககெலா இப்போதைய உகன்டா ஜனாதிபதி யொவேனி முசவேனியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது எழுந்த அச்சோலி மக்களின் தேசிய எழுச்சியைச் சாதகமாகப் பயன்படுத்திய ஜோசப் கோனிக்கு மிகப் பெரிய மக்கள் ஆதரவு கிடைத்தது. அச்சோலி மக்கள் எழுச்சியை மிகக் கொடூரமாக நசுக்கிய முசவேனிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட எல்ஆர்ஏ அமைப்பு வரவேற்பையும்  பெற்றது. ஆனால் நாளடைவில் அதன் பாதை வேறு பக்கமாக திரும்ப ஆரம்பித்தது. ஆயுத குழுவை பராமரிக்கவும் பாதுகாக்கவும் கோனி சென்ற எல்லை வரையறுக்க முடியாதது.

முழுக்க முழுக்க குழந்தைகளை படை வீரர்களாகக் கொண்ட அமைப்பு  எல்ஆர்ஏ. படைச் சிறுவர்களின்  எண்ணிக்கை மட்டும்  66,000 என்று கணக்கிடப்பட்டது.  எல்ஆர்ஏ அமைப்பின் தளபதிகள் “இறைவனை மதிக்காமல் மக்கள் பாவம்  செய்கிறார்கள்” எனச் சொந்த இன மக்களான அச்சோலி மக்களையே கொடுமைப்படுத்தினர். தண்டனைகள் குரூரமாக அரங்கேறின. மனிதர்களின் உதடுகள், மூக்கு, காது ஆகியவற்றை வெட்டினார்கள். தண்டனையின் உச்சமாக வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கடத்தி  இராணுவ முகாம்களுக்குக் கொண்டு வந்தார்கள். கடத்திவரப்பட்ட குழந்தைகளும் சிறுவர்களும்தான் அமைப்பின் ராணுவ வீரர்களாக மாற்றப்பட்டார்கள்.  கடத்திவரப்படுகிற பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டனர். சுமார் 10000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். சுமார் 1.6 மில்லியன் மக்கள் கோனியால் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

பல்வேறு அரசியல் காரணங்களால் உகாண்டாவுக்குள் முடக்கப்பட்ட எல்ஆர்ஏ அமைப்பு பொருளாதாரத்தில் பின் தங்க ஆரம்பித்தது. ஆயுதங்கள் வாங்கவும் அமைப்பின் செயல்பாடுகளுக்கும் பணத்தேவை முக்கியமானதாக இருந்தது. கோனிக்கு  எப்படி பணத் தேவையோ அப்படியே சில கடத்தல்காரர்களுக்கு யானைத் தந்தம் தேவையாய் இருந்தது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட கோனி எல்ஆர்ஏ அமைப்பில் யானைகளின் தந்தத்தை  வேட்டையாடத்  தனியாக ஒரு குழுவை ஆரம்பித்தார். குழுவிலிருந்த எல்லோரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள். தோள்களில் ஒரு துப்பாக்கியை வைத்துக்  கொண்டு அந்தச் சிறுவர்கள் புகைப்படத்திற்குக் காட்சியளிப்பது குரூரத்தின் இன்னொரு முகத்தை உலகிற்குக்  காட்டியது.

PC : POLARIS/NEWSCOM

கரம்பா தேசிய பூங்காவில் தந்தங்களுக்காக கொல்லப்பட்ட யானைகளைக் கொன்றதில் கோனியின் அமைப்புக்கு முக்கிய தொடர்பிருப்பதாக சர்வதேச வன விலங்குகள் அமைப்பு குற்றம் சுமத்தியது. முழுவதும் சிறுவர்களை கொண்டே யானைகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன. மயக்க ஊசியின் மூலமாகவும் துப்பாக்கியால் சுட்டும் தந்தங்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள். 2009 ஆண்டு கரம்பாவின் தலைமை இடத்தைத் தாக்கிய கோனியின் எல்ஆர்ஏ  அங்கிருந்த 16 பேரைச் சரமாரியாக சுட்டுக் கொன்றது. தந்தங்களைக் கடத்துவதற்கு முக்கிய வழிகளாக ஆப்பிரிக்க நாடுகளான சூடான், காங்கோ, உகாண்டா, மத்திய ஆப்பிரிக்கா போன்ற தரைப்பகுதிகளையும் தெற்கு சூடானின் கடலோரப் பகுதிகளையும்  பயன்படுத்தினார்கள். கொல்லப்படும் யானைகளோடு இருக்கும் யானைகளின் குட்டிகளையும் கருணைக் கொலை செய்தார்கள்.

கொரில்லா தாக்குதல்களுக்கு பழக்கப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிற யானைகளின் தந்தங்களை வெட்டவும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மனிதர்களின் கை, காது, மூக்கு என வெட்டிப் பழகியவர்களுக்கு தந்தங்களை வெட்டுவது சர்வசாதாரண நிகழ்வாக இருந்தது. ஓபோண்டோ ஒகால்டின் என்கிற எல்ஆர்ஏ வீரர் ஒருவர் 27 ஆண்டுகள் கழித்து அங்கிருந்து தப்பி வந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக எல்ஆர்ஏவின் யானைத் தந்தம் வெட்டும் குழுவில் உறுப்பினராக இருந்தவர். ராணுவத் தேவைகளுக்காக யானைகளை வேட்டையாடியதாகவும் வாரத்திற்கு இரண்டு யானைகளைக் கொல்வோம் எனச் சொல்லி உலகை அதிர வைத்திருக்கிறார். கரம்பா தேசியப் பூங்காவில் கொல்லப்பட்ட யானைகளில் 50 சதவிகிதம் கோனியின் எல்ஆர்ஏ அமைப்பால் நிகழ்ந்தது என்பதைச் சரணடைந்த எல்ஆர்ஏ அமைப்பின் வீரர்கள்  தெரிவித்திருக்கிறார்கள். யானை கொல்லப்படுவதும் தந்தங்கள் கடத்தப்படுவதும் தொடர்ந்ததால் சர்வதேச நாடுகளின் கண்டனங்களும் எச்சரிக்கைகளுக்கும் எல்ஆர்ஏ உள்ளானது.2005 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோனியை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது.

2011 ஆம் ஆண்டு  அமெரிக்க அரசு 100  இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஆயுதங்களை உகாண்டா அரசுக்கு வழங்கியது. உகாண்டா ராணுவத்திற்குத் தேவையான புலனாய்வு தகவல்களையும் ஆயுதங்களையும் இந்தக் குழு வழங்கும். இதற்கு ஆப்ரேஷன் ”லைட்டிங் தண்டர்” எனப் பெயரிட்டார்கள். அமெரிக்க வீரர்கள் வருகைக்குப் பிறகு கோனி தன்னுடைய இருப்பிடத்தை மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் காஃபியா கிங்கி நாடுகளிலுள்ள காடுகளுக்குள் மறைந்தார். கோனியைப் பிடிக்க அனைத்து படைகளையும் உகாண்டா அரசு பயன்படுத்தியது, ஆனால் யார் கண்ணிலும் சிக்காமல் இப்போது வரை பதுங்கியே இருக்கிறார் இந்தச் சர்வதேச குற்றவாளி.

எல்லாவற்றிற்கும் மேலாக கோனியை உயிருடனோ பிணமாகவோ பிடிப்போம் எனக் களமிறங்கிய அமெரிக்கப் படையை சார்ந்த 100 பேர் ஆறு ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டு பிடிக்க முடியாது என அறிக்கை கொடுத்து நாடு திரும்பியிருக்கிறார்கள். இப்போதும் தன்னுடன் 100 வீரர்கள் வரை வைத்திருக்கும் கோனி  எப்போது வேண்டுமானாலும் யானை வேட்டையில் இறங்கலாம் எனக் கணித்து ஆயுதத்தோடு காத்திருக்கிறது உகாண்டா அரசு.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் யானைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணம். தந்தங்களுக்காக, தோலுக்காக, பற்களுக்காக, மயிர்களுக்காக, நகங்களுக்காக எனப் பல காரணங்களுக்காக வேட்டையாடப்படும் இந்த யானைகளைக் காக்க பலரும் போராடி வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் வைன்  லாட்டர். தென் அமெரிக்காவைச் சார்ந்தவர். யானைகள் வேட்டை தொடர்பாக தீவிரமாக இயங்கியவர்.  சர்வதேசப் பாதுகாப்பு சமுதாயத்தில் ஒரு பெரிய நபராக இருந்தார், சர்வதேச ரேஞ்சர் கூட்டமைப்பு துணைத் தலைவராக இருந்தார். அவரும் அவரது நண்பர்  க்ரிஸ்ஸி க்ளார்க்கும் பல ஆண்டுகளாக வன உயிரினங்களுக்காகப் பணியாற்றியவர்கள். ஆப்ரிக்கா முழுவ்வதும் வேட்டையாடப்படுகிற விலங்குகள் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தனர். 2009 க்கும் 2014 க்கும் இடையில், தான்சானியா அதன் யானைகளில் 60% இழந்தது. அதிர்ச்சியுற்ற இருவரும் யானைகள்  வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்காக பாம்ஸ் Protected Area Management Solutions (PAMS) என்கிற சிறிய அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் வனம் சார்ந்த விழிப்புஉணர்வையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்கள். பல இடங்களில் காடுகளைப் பாதுகாக்கும் ரேஞ்சர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தனர். குறிப்பாக யானைகளைப் பாதுகாக்கும் ரேஞ்சர்களை மிக அதிகமாக  உருவாக்கினார்கள். அதன் மூலம் வேட்டையாடுவதைத் தவிர்க்க முடியும் என நம்பினார்கள். காவல்துறை மற்றும் ஒரு சிறப்பு படையினருடன் இணைந்து வேட்டையாடுதல்கள் மற்றும் கடத்தல் நெட்வொர்க்குகளை அடையாளம் கண்டனர். கண்டறியப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.  

தான்சானியாவில் நடை பெரும் யானை வேட்டையைத் தடுத்து நிறுத்த லாட்டர் அதிக முயற்சிகளையும் சிரமங்களையும் எதிர் கொண்டார். பல தரப்புகளில் இருந்தும் எச்சரிக்கைகளும் கொலை மிரட்டல்களும் வந்து கொண்டிருந்தன. ஆனால் லாட்டரி எவற்றையும் கவனத்தில் கொள்ளாது யானைகளுக்காகவும் அவற்றின் பாதுகாப்பிற்காகவும் பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 புதன்கிழமை டார் எஸ் -  சலாம் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு  காரில் பயணம் செய்கிறார். இரவு 11:50 மணிக்கு கார் மாசாக்கி பகுதியில் உள்ள செலாசி சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது  இன்னொரு காரால் மறித்து நிறுத்தப்படுகிறார்.  அந்த காரில் இருந்து இறங்கி வருகிற ஒருவன் வைத்திருந்த துப்பாக்கியால் இரண்டு முறை  லாட்டரை  நோக்கிச் சுடுகிறான். லாட்டர்  சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார். உலகின் மிக முக்கிய நடிகரான லியாண்ரோ  டிகாப்ரியோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "ஆப்ரிக்க  யானைகளைப் பாதுகாப்பதற்காக மிகவும் கடினமாக போராடிய உண்மையான பாதுகாப்புப் படையை நாங்கள் இழந்தோம்" என பதிவிட்டிருந்தார். ஆப்ரிக்க காடுகளில் 2013 வருடம் மட்டும் 20000 யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. 200 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எஞ்சி இருக்கும் யானைகளை எப்படி பாதுகாப்பதென தெரியாமல் குழம்பி இருக்கிற நாடுகள் பட்டியல் நீள்கிறது.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் இரண்டு மனிதர்களும் தந்தங்கள் குறித்து நடக்கும் கறுப்புச் சந்தையில் மிகவும் முக்கியமானவர்கள். தந்தங்களை வேட்டையாடத்  துப்பாக்கி தூக்கிக் கொண்டு ஓடுகிற ஒருவரை நோக்கி  குறைந்தது ஐந்து துப்பாக்கிகள் நீளும். தந்தங்களைப் பாதுகாக்க ஓடுகிற ஒருவரை நோக்கி  குறைந்தது முப்பது துப்பாக்கிகள் நீளும். யானை தந்தத்தைத் தரும். தந்தம் பணத்தைத் தரும். அந்தப் பணத்திற்காக எங்கே வேண்டுமானாலும் பாயலாம் என்கிறவர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்தே இருக்கிறார்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு