Published:Updated:

ரெடி... ஸ்டார்ட் அப்... ஆக்‌ஷன்!

கார்க்கிபவா

ரெடி... ஸ்டார்ட் அப்... ஆக்‌ஷன்!

கார்க்கிபவா

Published:Updated:

`‘ஸ்டார்ட்அப்’ என்பது, என் மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயம். தேர்தலில் வென்று நான் இந்தியாவின் பிரதமர் ஆனபோது, எனது தலைமையிலான அரசை ஒரு ஸ்டார்ட்அப் என்றே நினைத்தேன். உங்களைப்போலவே பல தடைகளைக் கடந்தே நானும் வந்திருக்கிறேன்' - கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கே ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சு இது. செய்திகளிலும் நம் அன்றாட வாழ்க்கையிலும் கடந்த சில வருடங்களாக அதிகமாகக் கேட்கப்படும் வார்த்தை `ஸ்டார்ட்அப்’.
 
2015-ம் ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. அது என்ன ஸ்டார்ட்அப்?
ஒரு தொழில் உத்தியை மார்க்கெட்டுக்குக் கொண்டுசென்று, பிசினஸ் மாடலாக மாற்றுவதற்கு உதவும் ஒரு தற்காலிக நிறுவனம்தான் ஸ்டார்ட்அப். ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் அவரது பிசினஸ் ஐடியா என்பது குழந்தைபோல. அதைச் சரியாக உருவாக்கி, நுகர்வோரிடம் கொண்டுசென்று ஒரு முழுமையான வியாபாரம் ஆக்கும் வரை பிரசவ வேதனைதான். அந்த வகையில் பிசினஸ் மாடல் என்பது பிறந்த குழந்தை என்றால்... ஸ்டார்ட்அப் என்பது வயிற்றில் சுமக்கும் சிசு.

ரெடி... ஸ்டார்ட் அப்... ஆக்‌ஷன்!

சென்னையைச் சேர்ந்த கோகுல்,  பல வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றியவர். தொழில்முனைவோர் ஆகும் ஆசையில் ஐந்து இலக்க சம்பள வேலையை விட்டுவிட்டார். கைவசம் இருந்த ஐடியா, ஆரக்கிள் மென்பொருள் ஒன்றை பெரிய நிறுவனங்களுக்கு இன்ஸ்டால் செய்துதருவது. நண்பருடன் சேர்ந்து அதற்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

எதிர்பார்த்ததுபோல அது நடக்கவில்லை. டெக்னாலஜி துறையில் மேலும் சில முயற்சிகளைச் செய்தார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. சேமிப்புப் பணமும் தீர்ந்தது. ஆனால், அப்போதுதான் அவர்களுக்கு சந்தை நிலவரம் பிடிபடத் தொடங்கியது. ஆண்ட்ராய்டு மொபைல்கள் பிரபலமாகத் தொடங்கியிருந்த நேரம் அது. அதற்கான செயலிகளை (Apps) உருவாக்க நிறையப் பேர் தேவைப்படுவார்கள் என கணித்த கோகுல், முடிவாக `NFL Labs’ என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது 37 பேருடன், மாதம் பல லட்சங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் நிறுவனமாக NFL Labs வளர்ச்சி அடைந்திருக்கிறது.

ரெடி... ஸ்டார்ட் அப்... ஆக்‌ஷன்!

`` `ஸ்டார்ட்அப் என்பது ஒரு மனநிலை. கையில் சில கதைகளோடு, சினிமா கனவில் கோடம்பாக்கத்தில் சுற்றும் உதவி இயக்குநர்கள்போல. சிலருக்கு சீக்கிரம் வெற்றி. பலருக்கு தாமதம் ஆகும். ஆனால், முயற்சியை மட்டும் விடக் கூடாது என்பதுதான் சூத்திரம்.

`என்ன பண்ணணும்னு தெரியாம சென்னைக்கு வந்தவன்தான் ஏதாவது பண்ணியிருக்கான். பிளானோடு வந்தவன் எல்லாம் திரும்பப் போயிட்டான்' என்ற `சூது கவ்வும்' வசனம் இங்கும் பொருந்திப்போகும். கப்பல் விட வந்தவர் பழைய காகிதம் வாங்கலாம். ஐ.டி கம்பெனி ஆசையில் வந்தவர் ஜட்டி கம்பெனி தொடங்கலாம்” - கலகலப் பாகப் பேசுகிறார் கோகுல்.

ஸ்டார்ட்அப் அமைப்பில் முக்கிய மானவர் இருவர். ஒருவர் தொழில் ஐடியா வைத்திருப் பவர்; இன்னொருவர் முதலீடு செய்பவர். இவரை `வென்ச்சர் கேப்பிடலிஸ்ட்' என்பார்கள். அவருக்கு பிசினஸ் ஐடியா பிடித்து விட்டால், தேவையான தொகையை முதலீடு செய்வார். இன்று வெற்றி கரமாக இயங்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் முதல் நம்ம ஊர் ஃப்ளிப்கார்ட் வரை பல நிறுவனங்கள் இப்படி ஸ்டார்ட்அப்பாக இருந்து உருவானவைதான்.

ரெடி... ஸ்டார்ட் அப்... ஆக்‌ஷன்!

ஸ்டார்ட்அப் என்றாலே டெக்னாலஜி சார்ந்த தொழில்கள் மட்டுமே என ஒரு கருத்து நிலவுகிறது. இந்தியாவில் உற்பத்தித் துறையிலும் அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுவாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஆர்-டி, உற்பத்திசெய்யத் தேவையான கருவிகள், மெஷின்கள் என ஆரம்ப முதலீடே பல லட்சங்கள் ஆகும். அதனால் இந்தத் துறையில் ஒப்பீட்டு அளவில் குறைவு. இணையம் சார்ந்த தொழில்கள் கடந்த 15 ஆண்டுகளில் உருவானவை என்பதால், அங்கே புதுப்புது ஐடியாக்கள் அதிகமாக வருகின்றன.

அரசு அனுமதி, போட்டியாளர்கள், முதலீடு போன்ற காரணங்களால் இந்தியாவில் தொழில் தொடங்குவதே பெரிய விஷயமாக இருந்து வந்தது. அதை உடைத்து எறிகிறது ஸ்டார்ட்அப். நல்ல ஐடியா இருந்தால் உலகின் எந்த மூலையில் இருந்தும் பண உதவி கிடைக்கலாம்.

பெங்களூரைச் சேர்ந்த பலராமன் தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந் தவர். அவர் எடுக்கும் வீடியோக்கள் செல்போனில் அதிக மெமரியைத் தின்றன. `இதைக் குறைக்க முடிந்தால் நன்றாக இருக்குமே' என யோசித்து, ஒரு மென்பொருளை உருவாக்கினார். அதன் மூலம் 100 எம்.பி வீடியோவைத் தரம் இழக்காமல், 10 எம்.பி-க்கு மாற்ற முடிந்தது. தனது மென்பொருளை நம்பி வேலையை விட்டுவிட்டு, அதற்காகவே நேரத்தைச் செலவழித்தார். இணையத்தில் தேடியதில் சிலி நாட்டில் இதுபோன்ற புதுப்புது ஐடியாக்களுக்கு ‘ஸ்டார்ட்அப் சிலி' என ஒரு நிகழ்வு நடப்பது தெரியவந்தது. அதில் அனுமதிவேண்டி மெயில் அனுப்ப, தேர்வானது `கிறிஸ்பிஃபை.’ அதுதான் தன் மென்பொருளுக்கு பலராமன் சூட்டிய பெயர். விமானச் செலவு முதல் தங்கும் இடம், உணவு எல்லாமே அவர்கள் செலவு. ஐடியா தேர்வானால், அதை மேலும் மெருகேற்ற பண உதவியும் உண்டு. கடைசிச் சுற்றில் தேர்வான 100 ஐடியாக்களில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு பேர் இருந்தார்கள். அதில் பலராமனும் ஒருவர்.

ரெடி... ஸ்டார்ட் அப்... ஆக்‌ஷன்!

“ `கிறிஸ்பிஃபை' ஒரு பிசினஸா எனக்கு இன்னும் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கலை. ஆனால், அதை யு.எஸ் பேடன்ட்டுக்கு விண்ணப்பிச்சுட்டேன். இந்தியாவில் வீடியோ மார்க்கெட் இன்னும் பெருசா வளரலை. அது நடக்கிறப்பதான் `கிறிஸ்பிஃபை'க்கு மவுசு வரும். இதையும் மீறி சில முதலீட்டாளர்கள் என்னைத் தொடர்புகொண்டார்கள். சீக்கிரமே நல்லது நடக்கும்’' என நம்பிக்கையுடன் பேசுகிறார் பலராமன்.

சிலி அரசு உலகின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும், தன் நாட்டு இளைஞர்களுக்கு உலகளாவிய திறமைசாலிகளின் பார்வை  கிடைக்கவும் இவ்வளவு செலவுசெய்கிறது. சிலியைத் தொடர்ந்து பல நாடுகள் ஸ்டார்ட்அப் மீது கூடுதல் கவனம் குவித்துவருகின்றன. கனடா போன்ற நாடுகள் கல்வி விசா போன்று ஸ்டார்ட்அப் விசா தர முன்வர, அதை பல நாடுகள் இப்போது பின்பற்றுகின்றன. `ஆனால், இந்தியா இன்னும் ஸ்டார்ட்அப் விஷயத்தில் போதுமான வேகம் காட்ட வில்லை’ என்கிறார்கள் தொழில் முனைவோர்கள்.

``மத்திய அரசு ஸ்டார்ட்அப்-க்கு என நிதி ஒதுக்கினாலும் அதை கார்ப்பரேட் பக்கம் திசைதிருப்பவே பலர் விரும்புகிறார்கள். இந்தியா ஒரு பெரிய நாடு என்பதால், மற்ற நாடுகளைப் போன்ற துரித முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், தொடக்கத் திலேயே சரி செய்வது எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது” என்கிறார் கோகுல்.

“நான் தனி ஆளாகத்தான் `கிறிஸ்பிஃபை'யைத் தொடங்கி நடத்திட்டுவர்றேன். என் ஐடியா மேல இருந்த நம்பிக்கை மட்டுமே இத்தனை வருஷமா என்னை இயக்கிட்டு வருது. பல நாட்கள் `திரும்ப வேலைக்கே போயிடலாமா?’னு தோணியிருக்கு. இனி வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும் உதவவும் அரசு ஸ்டார்ட்அப்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கணும். NASSCOM, CII போன்ற தொழில் அமைப்புகள், மெட்ரோ நகரங்களைத் தாண்டி இரண்டாம்கட்ட நகரங்களிலும் ஸ்டார்ப் அப்க்காக சில நிகழ்வுகளை நடத்துவது உண்மைதான். ஆனால், அது இளைஞர்களிடம் சரியாகப் போய்ச் சேர்வது இல்லை. கூடுதல் செய்திகளும் விளம்பரங் களும் தேவை” - இது பலராமனின் கோரிக்கை.

அடுத்த தலைமுறை கூடுதல் திறமையோடு வளர்கிறது. பழகிய சாலையில் செல்வதைவிட தனக்கு என ஒரு பாதையை, அடையாளத்தை உருவாக்கவே விரும்புகிறார்கள். உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, சீனாவை முந்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இந்தச் சூழலில் ஒட்டுமொத்த உலகுக்கும் தேவையான பல்வேறு சேவைகளையும், அதன் தேவைகளையும் இந்தியா அளிக்கக்கூடிய சூழல் உருவாகக்கூடும். அதை மனதில்வைத்து அரசு பிரத்யேகத் திட்டங்களை வகுப்பது அவசியம்.

ரெடி... ஸ்டார்ட் அப்... ஆக்‌ஷன்!

பொதுவாக மேலைநாடுகளில் வெற்றிபெற்ற பிசினஸ் ஐடியாக்களை க்ளோன் (Clone) செய்து வெற்றிபெறுவதுதான் ஸ்டார்ட்அப்கள் என பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், மாறுபட்ட கலாசாரம், வேறுபடும் நுகர்வோர் ரசனை முதலியவற்றைக் கண்டறிந்து நம் நாட்டுக்கு ஏற்ப மாற்றுவதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. அமேசான்.காமில் இருந்து வெளிவந்து இரண்டு பேர் ஃப்ளிப்கார்ட் தொடங்கியபோது அது பெரிய ஹிட் கிடையாது. `கேஷ் ஆன் டெலிவரி' என இந்தியாவுக்கு பிரத்யேக ஐடியாவைக் கொண்டுவந்ததுதான் அதன் சக்சஸ் சீக்ரெட். இந்தத் தனித்தன்மையே ஸ்டார்ட்அப்க்கான ஆக்ஸிஜன்.

வேலைவாய்ப்பு

ஸ்டார்ட்அப்பில் வேலைசெய்வது அலாதியான விஷயம். மற்ற கார்ப்பரேட்கள்போல நிறையக் கட்டுப்பாடுகள் இருக்காது. கல்வித்தகுதி ஒரு விஷயமே அல்ல.

ரெடி... ஸ்டார்ட் அப்... ஆக்‌ஷன்!

“எங்க நிறுவனத்துல வேலைசெய்ற பாதிப் பேரு அராத்து. `உங்களுக்கு நல்ல ஆப்பிள் வேணும்னா மார்க்கெட்டுக்குப் போகாதீங்க; மரத்துக்குப் போங்க'னு ஒரு ஆங்கில பழமொழி உண்டு. அப்படித்தான் நாங்க ஆள் எடுப்போம். இங்க உள்ள வர்றது கஷ்டம். ஆனா, வந்தவங்க அவ்ளோ சீக்கிரம் வேலை மாற மாட்டாங்க. ஊழியர்கள் வேலையை விட்டுட்டுப் போறதை Atrrition rate-னு சொல்வோம். அது இங்க ரொம்பக் கம்மி. காரணம், ஸ்டார்ட்அப்பில் கிரியேட்டிவா வேலை செய்றவங்கதான் பிழைக்க முடியும். அவங்களைத்தான் நாங்களும் சேர்த்துப்போம்” என்கிறார் கோகுல்!