Published:Updated:

`ஜெ.ஜெயலலிதா எனும் நான்...’ - புத்தகக்காட்சியிலும் விரவியிருக்கும் பெயர்!

`ஜெ.ஜெயலலிதா எனும் நான்...’ - புத்தகக்காட்சியிலும் விரவியிருக்கும் பெயர்!
`ஜெ.ஜெயலலிதா எனும் நான்...’ - புத்தகக்காட்சியிலும் விரவியிருக்கும் பெயர்!

சென்னைப் புத்தகக்காட்சி முடிவடைய சில நாள்களே இருக்கும்நிலையில், ஆர்வம்கொண்ட வாசகர்களின் புத்தகத்தேர்வும் விதம்விதமாக இருக்கிறது. 

அகில இந்திய அளவில் மத்திய அரசின் செயல்பாடுகள்குறித்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வந்துள்ள புத்தகங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. பணமதிப்பிழப்பு தொடர்பாக பா.ஜ.க அரசுக்கு ஆதரவான கோணத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி எழுதிய ’ரூபாய் நோட்டுக்கள் தடை’ புத்தகம் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பை விமர்சித்து ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய ‘கறுப்புப்பணமும் செல்லாத நோட்டும்’, நரேன் ராஜகோபாலனின் கறுப்புக்குதிரை உட்பட பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. 

இதைப்போலவே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் புதிய கொள்கைகளை விமர்சித்தும் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, நாடு முழுவதும் பா.ஜ.க ஆதரவு இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பல தலைவர்களின் பேச்சுகள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகிவரும் நிலையில், இடதுசாரிகள் மற்றும் சமூகநீதி இயக்கத்தினர் தரப்பில் பதில் விளக்கங்களும் தரப்படுகின்றன. சி.பி.எம் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுதியுள்ள ‘மோடி அரசாங்கம் வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற புத்தகமும் யெச்சூரி உட்பட எட்டு பேர் எழுதியுள்ள `மோடி ஆட்சியின் கொண்டாட்டம் மக்களுக்குத் திண்டாட்டம்’ என்ற புத்தகமும் மைய அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கின்றன. 

மாநிலங்களின் உரிமைகளை பா.ஜ.க அரசு படிப்படியாகப் பறிப்பதாக வைக்கப்படும் கருத்துகள் அடங்கிய, கி.வீரமணியின் `மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’, `புதிய கல்விக்கொள்கையா? நவீன குலக்கல்வித் திட்டமா?’ ஆகிய புத்தகங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. மும்பையைச் சேர்ந்த ரூபே எனும் பொருளாதார அமைப்பின் ‘புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள்’ எனும் கட்டுரைத் தொகுப்பை தமிழில் கீழைக்காற்று வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. 

மனுஷ்யபுத்திரனின் `சொல்கிறேன் அதனால் இருக்கிறேன்’, `திராவிடத்தால் வாழ்ந்தோம்’, ராமச்சந்திர குகா, லீலாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயணன், வெங்கடேஷ் இராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதிய `இந்தியா எதை நோக்கி?’,  உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் எழுதிய `அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்’, மதவாதிகளால் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக எழுத்தாளர் கௌரி லங்கேஷ் பற்றி சந்தன் எழுதிய `மரணத்துள் வாழ்பவர்’,  ஜெயரஞ்சனின் `இந்தியப் பொருளாதாரம் கட்டுக்கதைகள்’, பகடி எழுத்தாளர் பாமரனின் `டுபாக்கூர் பக்கங்கள்’ ஆகிய புத்தகங்களையும் வாசகர்களின் பெற்ற பட்டியலில் உறுதியாகச் சேர்க்கமுடியும். 

இன்னும் முடிச்சு அவிழ்க்கப்படாத மர்மங்கள் வந்துகொண்டே இருக்கும் ராஜீவ் கொலை தொடர்பான புதிய புத்தகங்களுக்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதில், ஆயுள்சிறைவாசம் அனுபவித்துவரும் நளினியின் `ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் நளினி பிரியங்கா சந்திப்பும்’, தடா ரவி எனும் இரா.பொ. இரவிச்சந்திரனின் `ராஜீவ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ புத்தகமும் பரபரப்பான விற்பனையில் இருக்கின்றன. புத்தகக்காட்சியின் பல கடைகளிலும் இந்தப் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதே இதன் முக்கியத்துவத்தை பளிச்செனக் காட்டுகிறது. 

கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான புத்தகங்களை சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் விசாரித்து, வாங்குவதைப் பார்க்கமுடிந்தது. எஸ்.கிருபாகரனின் `ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... அம்மாவின் கதை’, மு.நியாஸ் அகமதுவின்  `மைசூரு முதல் போயஸ்கார்டன்வரை ’, வாஸந்தி எழுதிய `ஜெயலலிதா மனமும் மாயையும்’, வழக்குரைஞர் அருண் வைத்தியலிங்கம் எழுதிய `ஜெயலலிதா - வாழ்க்கையும் வழக்குகளும்’ ஆகியவை உட்பட பல புத்தகங்கள் எல்லா வாசகர்களையும் வாங்கவைக்காவிட்டாலும், ஒரு முறை புரட்டிப்பார்க்க வைத்ததை நேரில் பார்த்தோம்.