Published:Updated:

பேருந்துக் கட்டண உயர்வுக்கும் அப்போதே அச்சாரம் போட்ட அரசு!

பேருந்துக் கட்டண உயர்வுக்கும் அப்போதே அச்சாரம் போட்ட அரசு!
பேருந்துக் கட்டண உயர்வுக்கும் அப்போதே அச்சாரம் போட்ட அரசு!

பேருந்துக் கட்டண உயர்வுக்கும் அப்போதே அச்சாரம் போட்ட அரசு!

மோசமான நிர்வாகத்தால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்காக, ஊழியர்களின் பிரச்னையை ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. 

இந்திய அளவில் டீசல் சிக்கனம், விபத்தில்லாமல் வண்டியை ஓட்டுவது போன்ற பல பிரிவுகளில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ச்சியாகப் பரிசுகளை வாங்கிவருகின்றன. ஆனாலும், கடந்த 15 ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமை மோசமாக இருந்துவருகிறது. டீசல் விலை உயர்வு, டீசல் மீதான சுங்கவரி உயர்வு, விபத்து இழப்பீடு தருவது போன்ற தவிர்க்கக்கூடிய காரணங்களாலும் மோசமான நிர்வாகத்தாலுமே இந்த அளவுக்கு நலிவடையும் நிலை ஏற்பட்டது. 

ஆனால், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம்தோறும் பிடிக்கப்படும் அவர்களுக்கான ஓய்வுகாலப் பணப்பலன், ஓய்வூதியம் ஆகியவற்றைத் தரமுடியாத அளவுக்கு, அந்தத் தொகையையும் எடுத்து நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்திவருகின்றனர். ஏழு ஆண்டுகளாக தங்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும், ஓய்வூதியத்தையும் காலம்கடத்தாமல் வழங்குமாறு கேட்டு, ஊழியர்கள் பல முறை போராட்டம் நடத்தினர். அதை அரசு கண்டுகொள்ளாதநிலையில் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. 

உயர் நீதிமன்றக் கிளையில் நடந்த இவ்வழக்கின் விசாரணையில், அரசுத் தரப்பில் போக்குவரத்துத் துறைச் செயலாளர் டேவிதார் ஒரு விளக்கத்தைத் தாக்கல்செய்தார். அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித்தவிப்பதாகக் கூறி, பல்வேறு புள்ளிவிவரங்களையும் சமர்ப்பித்திருந்தார். கடந்த செப்டம்பர் 8-ம் தேதியன்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மோட்டார் வாகன இழப்பீட்டுத் தீர்ப்பாயம் ரூ.485.23 கோடி இழப்பீட்டைத் தரவேண்டும் என உத்தரவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணம் ரூ.1138.66 கோடியை வழங்கமுடியவில்லை என்று குறிப்பிட்டாலும், அதற்குக் காரணம் அரசு இல்லை என்றும் தொழில் அமைதியைக் காக்கவும் ஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டுமே அத்தொகையை வழங்க அரசு ஒப்புக்கொண்டது என்றும் கூறியிருந்தார். 

அத்துடன், தமிழ்நாட்டில் கடைசியாக 2011 நவம்பர் 11-ம் தேதியன்று கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு, 2017 வரை பக்கத்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வசூலிக்கப்படும் அதிகக் கட்டணத்தையும் ஒப்பிட்டு விவரங்களையும் தமிழக அரசு தாக்கல்செய்திருந்தது. கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் பயணிகளின் கட்டணத்துடன் சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் சேர்த்து வசூலிப்பதையும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் பெரிய கண்காட்சிகள், பண்டிகைகளின்போது இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் முறையே இரண்டு மடங்கும் ஒன்றரை மடங்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் அப்படியான வாய்ப்பு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இல்லை என்றும் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வாதங்களை அடுக்கியிருந்தது. 

மோட்டார்வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீட்டைத் தராததால், பேருந்துகள் உட்பட அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சொத்துகளை நீதிமன்றம் பிணையாக எடுத்துக்கொள்வது சர்வசாதாரணமாகி பல ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பிரச்னையாலும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கடந்த அக்டோபர் 30 நிலவரப்படி 383 பேருந்துகள் இப்படிப் பிணையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்துத் துறைச் செயலாளர் தெரிவித்திருந்தார். 

இப்படியான நிலையில், பேருந்துகள் இயக்குவதற்கான செலவைச் சமாளிக்குமளவுக்கு (முந்தைய) கட்டணம் போதுமானதாக இல்லை எனக் கடைசியில் எல்லாவற்றுக்கும் முடிச்சுப்போட்டு, கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக, நீதிமன்றத்தில் முன்கூட்டியே அழுகாச்சி கதையை அரசுத் தரப்பு கூறியிருந்தது. 

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு, “ இப்போதுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிலைமையில், வசதிப்படாது என்றாலும் பேருந்துக் கட்டணத்தை மாற்றியமைப்பதன் தேவை தவிர்க்கமுடியாது” என்று குறிப்பிட்டனர். 

எதை எதிர்பார்த்துக் காத்திருந்ததோ அப்படியான நீதிமன்றத்தின் இந்தக் கருத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டு, நீதிமன்றமே இப்படிச் சொல்லியிருக்கிறது பாருங்கள் எனக் கட்டண உயர்வை நியாயப்படுத்தியுள்ளது, தமிழக அரசாங்கம். 

அடுத்த கட்டுரைக்கு