Published:Updated:

நடுங்க வைத்த விசாரணைக் காட்சிகள்... சினிமா தியேட்டரில் மூன்றாவது குற்றவாளி...! வேட்டையாடு, விளையாடு! பகுதி - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடுங்க வைத்த விசாரணைக் காட்சிகள்... சினிமா தியேட்டரில் மூன்றாவது குற்றவாளி...! வேட்டையாடு, விளையாடு! பகுதி - 13
நடுங்க வைத்த விசாரணைக் காட்சிகள்... சினிமா தியேட்டரில் மூன்றாவது குற்றவாளி...! வேட்டையாடு, விளையாடு! பகுதி - 13

நடுங்க வைத்த விசாரணைக் காட்சிகள்... சினிமா தியேட்டரில் மூன்றாவது குற்றவாளி...! வேட்டையாடு, விளையாடு! பகுதி - 13


                      

நாங்கள் அக்யூஸ்ட்டுகளை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்ததும், அவர்களுக்கு மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. இன்ஸ்பெக்டர் நவீன் சார், ‘அவங்களை விடுங்கப்பா' என்று  எங்களை பக்கத்தில் அழைத்தார். 'அடுத்த மெசேஜில் ஜே.சி. சைலேந்தர் சாரும், டி.சி. மௌர்யா சாரும்  வந்து விடுவார்கள். அதுவரை  காத்திருப்போம். மாரேடிபூடி நாகபூஷணம் இப்போது ஆந்திர சென்ட்ரல் ஜெயிலில் இருக்கிறான் என்ற சந்தேகத் தகவல் மட்டும்தான்  மெசேஜ் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. அதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு நாகபூஷணம் தேவைப்படுவதை ரெகார்டில் கொண்டுவந்து விட்டால், அதையே கோர்ட்டில் காட்டி ஆளை கஸ்டடியில் கொண்டு வந்து விடலாம்.

முண்டேல்பாஜூவும், தோட்டா கிருஷ்ணமூர்த்தியும் பேசாமல் இருப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. மாரேடிபூடி நாகபூஷணம் ஜெயிலில் இருப்பது இவர்களுக்குத் தெரியும் என்றால், கண்டிப்பாக நமக்கு அவனும் தேவை. அவனை விசாரித்தே ஆகவேண்டும். அவன் ஜெயிலில் இருப்பது  இவர்களுக்குத் தெரியாது என்றால், நமக்கு இவர்கள்  இரண்டுபேர் மட்டுமே போதும்’ என்றார். இன்ஸ்பெக்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அடுத்த மெசேஜூம் வந்தது. மெசேஜைப் படித்த இன்ஸ்பெக்டர், 'மாரேடிபூடி நாகபூஷணம் ஜெயிலில்தான் இருக்கிறான். கடந்தவாரம் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா வந்த கையோடு வேறொரு வழக்கில்  சிக்கியிருக்கிறான். இவர்களுக்கு அவன், ஜெயிலில் இருப்பது தெரியாதாம். இவர்களை லேசாக மிரட்டினாலே போதும், வந்த வேலை முடிந்துவிடும். பயந்து போய்தான் கிடக்கிறார்கள்' என்றார்.

இன்ஸ்பெக்டரின் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் நம்பிக்கை தந்தது. இன்றிரவு வேலையை முடித்துக் கொண்டு நாளை சென்னைக்குத் திரும்பி விடலாம் என்று கணக்குப் போட்டோம். பேசிக்கொண்டே அக்யூஸ்ட்டுகளையும் அந்த பில்டிங் பக்கத்தில் இருந்த தனியறைக்குத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டோம். கும்மிருட்டு மறைய சின்னதாக ஒரு பல்பு மட்டும் வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது. அவர்களை தனித்தனியாக அங்கிருக்கும் மேஜை போன்ற உயரமான சிமெண்ட் தரைமேடையில் குப்புறப் படுக்க வைத்தோம். பின்னர், அக்யூஸ்ட்டுகளின் கண்களைக் கட்டி விட்டோம். கால்களையும் ஒன்றாகப் பிணைத்துக் கட்டினோம். முன்னரே பேசி வைத்தபடி எஸ்.ஐ. ராஜ்குமார்  எங்கள் அருகில் வந்து நின்றார்.

‘சார், எல்லோரும் வெளியே போய் விடுங்கள், நானும் எஸ்.ஐ.பால்ராஜூம் வெளியில் வந்து உங்களுக்குத் தகவலைச் சொல்கிறோம், அதுவரையில் வரவேண்டாம். சைரன் இல்லாத ஆம்புலன்ஸை உடனே வரச் சொல்லி விடுங்கள். சொன்னபடி  அவர்களும் இங்கே வந்துவிட்டால், பத்து நிமிடத்தில் எல்லாம் முடிந்து விடும்' என்றதும் நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டோம். நாங்கள் வெளியில் வந்த ஐந்தாவது நிமிடமே உள்ளேயிருந்து அலறல் சத்தம் கேட்டது. பெரிதாய் வெடிக்கும் சத்தமும் கேட்டது. 'இரண்டு எஸ்.ஐ.களும் பக்காவாக முடித்துவிட்டிருக்கிறார்கள், வாங்க உள்ளே போவோம்' என்று எங்களை இன்ஸ்பெக்டர் உள்ளே கூப்பிட, 'இது என்னடா புது ட்விஸ்ட்டாக இருக்கிறதே?' என்ற உதறலுடன் உள்ளே போனோம். எங்களைவிட ஆந்திர போலீஸார் ஆடிப்போய்க் கிடந்தனர். உள்ளே வரவே யோசித்தனர்.

உள்ளே போனதும் அக்யூஸ்ட்டுகள் சிமெண்ட் தரை மேடையிலிருந்து கீழே விழுந்து  கிடந்தார்கள். தரையில் உருண்டு, புரண்டு

எங்கெங்கோ முட்டிக் கொண்டிருந்தார்கள். உடம்பெல்லாம் சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. 'என்ன பாய்ஸ்?' என்றார் இன்ஸ்பெக்டர். அப்போது எஸ்.ஐ.கள், 'சார், இரண்டு பேருமே நாம் எதிர்பார்த்த தகவலைச் சொல்லிவிட்டார்கள். லோக்கல் நகை வியாபாரிகளிடம்தான்  நகைகளை விற்றார்களாம். நகைகளை வாங்கிய வியாபாரிகளைக் காட்டுகிறோம் என்றும் சொல்கிறார்கள். மாரேடிபூடி நாகபூஷணம் சினிமா பைத்தியமாம். சிரஞ்சீவி படம் ஓடும் தியேட்டருக்குப் போனால் அவனைப் பிடித்துவிடலாமாம்... நாங்க என்ன சார் செய்யட்டும்? பிரியாணிக்கு ஆர்டர் பண்ணிடலாமா ? நம்ம டீமோடு சேர்த்து ஆந்திரா டீமும் மணிக்கணக்கில் காய்கிறார்கள், அக்யூஸ்ட்டுகளுக்கும் அப்படியே சேர்த்து பிரியாணியை வாங்கிடறோம் சார்?'  என்றனர்.

இன்ஸ்பெக்டர் தலையை ஆட்ட, வெளிவட்டச் சாலையில் நிறுத்தியிருந்த ஜீப்பை நோக்கி எஸ்.ஐ.கள் போனார்கள். 'வெளியூருக்கு எப்போது வந்தாலும் உணவு, குடிநீர், உறக்கம் போன்றவைகளில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், போலீஸ் வேலைக்கே நீங்கள் அன் -பிட்' என்று அடிக்கடி பயிற்சிக் காலங்களில் ட்ரெய்னர்கள் சொல்லிக் கொடுத்ததை எங்களுக்கு நினைவூட்டவே ஒரு ட்ரெய்னர் இருந்தார் என்றால் அது நவீன் சார்தான். அதனால்தான், ஆந்திராவில் இத்தனை போலீஸ் துணைக்கு இருந்தாலும், பிரியாணியைத் தேடி எங்கள் டீம் எஸ்.ஐ.கள் போகிறார்கள்... எஸ்.ஐ.கள் அங்கிருந்து கிளம்பியதும், அக்யூஸ்ட்டுகளின் கண் கட்டை அவிழ்த்துவிட்டு அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம்.

அப்போது ஆந்திரா ஸ்பெஷல் டீமில் இருந்த சீனியர் எஸ்.ஐ. ஒருவர், 'சார், நகைகளை இங்கிருந்து ரெக்கவரி செய்துகொண்டு நீங்கள் ஊருக்குப் போவது அத்தனை சுலபமானது அல்ல. இங்கே வியாபாரிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். சாலைமறியலை ஒருநாள் முழுவதும் நடத்துவார்கள். ஆந்திரா வி.ஐ.பி.களின் வீடுகளில் கொள்ளை போய்விட்டால் நாங்களே, எங்கள்சொந்தப் பணத்தில்தான் நகைகளை வாங்கி அவர்களிடம் ஒப்படைப்போம்' என்றார். 'நாளைக்கு நடக்கப் போவதைப் பாருங்கள், இனி அதையே நீங்களும் செய்யுங்கள்'  என்று அவர்களுக்குப் பதில் சொன்ன இன்ஸ்பெக்டர், 'பிரியாணி வருவதற்குள், அக்யூஸ்ட்டுகளிடம் வாக்குமூலத்தை முழுமையாக வாங்க வேண்டும், போய், அதைக் கொண்டு வாருங்கள் என்றார்.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு