Published:Updated:

நித்தியானந்தா பக்தைகளின் உளவியல்... மருத்துவ ஆராய்ச்சி சொல்லும் காரணம்!

நித்தியானந்தா பக்தைகளின் உளவியல்...  மருத்துவ ஆராய்ச்சி சொல்லும் காரணம்!
நித்தியானந்தா பக்தைகளின் உளவியல்... மருத்துவ ஆராய்ச்சி சொல்லும் காரணம்!

நித்தியானந்தம்.

வணக்கம்.

"மாணவர் சரத்பிரபு மர்ம மரணம்."

"போக்குவரத்து ஊழியர் போராட்டம்."

"பேருந்துக் கட்டணம் 40% உயர்வு. அதாவது, கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் சென்று வர ஒரு நாளைக்கு 66 ரூபாய் ஆனது."

"பா. வளர்மதிக்கு பெரியார் விருது."

"போராளி வளர்மதிக்கு விகடன் விருது"

"ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மீண்டவர்களுக்கான நிவாரணம் இன்னும் சென்றடையவில்லை."

"பியூஷ் மானுஷ் மீது ஈஷா வழக்குப் பதிவு. ஜக்கியே நேரடியாக மனுதாரர்களில் ஒருவராக இருக்கிறார்." 

இந்தச் செய்திகள் எதுவும் இன்று சமூகத்தில் பெரிய தாக்கத்தையோ, விவாதத்தையோ ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தெருமுக்கு டீக்கடை தொடங்கி, சேட்டன் ஜூஸ் பார்லர் வழிப் பயணித்து, 5 ஸ்டார் ஹோட்டல் பார் வரை இன்று விவாதமாகியிருக்கும் இந்த ஒரு விஷயம் உண்மையில் பெரும் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

16 வயதுப் பெண் பேசும் அந்த வீடியோ முதலில் விளையாட்டாகத் தான் பார்க்கப்பட்டது, பகிரப்பட்டது. ஆனால், அதைக் கொஞ்சம் உற்று கவனித்தால் கூட அது எத்தனைப் பெரிய விபரீதம் என்பது புரியும். நித்தியானந்தாவின் இளவரசிகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அந்தச் சிறுமிகள் பேசிய வார்த்தைகளை பொது வெளியில் எழுதிட முடியாது. இந்தக் கொடுமையின் உச்சகட்டம், தமிழ் மொழியின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவராக இருக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக இந்தக் கொடுஞ்சொற்களை அவர்கள் பயன்படுத்துவது. மதன் கார்க்கி வரை அவர்களின் பேச்சு நீண்டது. கனிமொழி கூறிய கருத்துக்கும் அவர் இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பிவிடவில்லை. 

``இந்து மதத்துக்கு எதிராக இதுபோன்று பேசுபவர்களை வீட்டுக்கு வந்து வெட்டுவோம்..." என்று சொல்லும் அந்தப் பையனுக்கு நிச்சயம் 12 வயதுகூட இருக்காது. மணிக்கணக்கில் கெட்ட வார்த்தை அர்ச்சனை நடத்திய அந்தப் பெண்ணுக்கு வயது 16. இன்னும் பல சிறுவர், சிறுமிகள். கண்டிப்பாக சிவனின் பாதங்களைத் தொட்டு பூஜிக்கும் இவர்களில் எத்தனைப் பேர் ஆண்டாளை முழுமையாகப் படித்திருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. குறைந்தபட்சம் இதில் ஒருவராவது வைரமுத்துவின் அந்தப் பேச்சையோ, கட்டுரையையோ படித்திருப்பார்களா என்றால், அதுவும் நிச்சயம் கிடையாது. வைரமுத்துவுக்குப் போன் செய்து பேசிய பி.ஜே.பி-யைச் சேர்ந்த கல்யாண்ராமன் ஆடியோவில் கூட அவரே சொல்கிறார், தான் அந்தக் கட்டுரையையோ, பேச்சையோ கேட்கவில்லை என்று. ஆனால், சகட்டுமேனிக்குப் பேசுகிறார்கள். வாய்க்கு வரும் வசைகளை எல்லாம் பேசித் தள்ளுகிறார்கள். வயது வித்தியாசம் பாராமல் பேசுகிறார்கள். 

"உயிர் மலர்ச்சி... உணர்வு மலர்ச்சி. இது இரண்டையும் பரமஹம்ச ஶ்ரீநித்தியானந்த சுவாமிகள் எங்களுக்கு அளித்திருக்கிறார்'' என்று ஒரு வீடியோ பதிவில் பேசியிருக்கும் அவர்களுக்கு அந்த வார்த்தை மலர்ச்சி மற்றும் ஞான மலர்ச்சியையும் அவர்தான் கொடுத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பெரும்பாலான வீடியோக்களில் பேசுபவர்களின் பின்னணியில், சிரித்த முகத்தோடு அவர்களை ஆசீர்வதித்தபடி அமர்ந்திருக்கிறார் நித்தியானந்தா. இதுவரை, இந்தச் சிறுவர்கள் இப்படி பேசியதற்கு எதிராக  நித்தியானந்தாவோ அவர் நடத்தும் அமைப்பிடமிருந்தோ ஒரு சிறு அறிக்கை கூட வரவில்லை. என்றால்... ஒன்று அவர்கள்தான் இவர்களைப் பேசவே சொல்லியிருக்க வேண்டும். அல்லது, அவர்கள் பேசுவதை முழுமனதோடு ஆதரிக்கிறார்கள்.

சிறுவர், சிறுமிகள் இப்படி பேசுவது, அவர்களை இப்படி பேச அனுமதிப்பது, அவர்கள் இப்படி பேசுவதை ஆதரிப்பது எல்லாமே பெருங் குற்றம் என்றும் அந்தக் குழந்தைகளை அவர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் கர்நாடக டி.ஜி.பி, தேசிய மற்றும் மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் மனு அனுப்பியுள்ளார் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ். போஸ்கோ (Posco - Protection of Children against Sexual Offences) சட்டத்தின் கீழ் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால், நித்தியானந்தாவின் இளவரசிகளும் அதே சட்டத்தைக் காண்பித்து தங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். நித்தியானந்தாவிடமிருந்து அந்தச் சிறுவர், சிறுமிகளை அந்தச் சட்டம் கொண்டு மீட்க வேண்டும் என்று ஒரு பக்கம், பொதுமக்களிடமிருந்து எங்களைக் காத்து தங்களின் குருவிடமே தாங்கள் பத்திரமாக இருக்க வழி செய்ய வேண்டுமென்று அதே சட்டத்தை அவர்கள் கோரியிருப்பது நகை முரண் தான். 

இந்தப் பிரச்னை ஆண்டாள் குறித்தோ, நித்தியானந்தோ குறித்தோ, வைரமுத்து குறித்தோ ஆனது அல்ல. இந்தப் பிரச்னையின் ஆழத்தில் நாம் பார்க்க வேண்டியது இந்தக் குழந்தைகளின் உளவியலை. இந்தக் குழந்தைகளை இப்படியான ஓர் இடத்தில் கொண்டு போய் சேர்த்திருக்கும் பெற்றோர்களின் உளவியலை; இப்படியான குழந்தைகள் கூட்டத்தைப் பக்தி என்ற பெயரில் ஈர்த்து தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் நபர்களின் உளவியலைத்தான். பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவர் தவறான வார்த்தைப் பேசிவிட்டால்... அந்த மாணவர் பயப்படுவார். குற்ற உணர்வு ஏற்படும். ஆசிரியருக்குத் தெரிந்துவிட்டால் ஏதும் தண்டனைக் கிடைக்குமே என்ற பயம் ஏற்படும். ஆனால், நித்தியானந்தாவின் இந்த மாணவர்களுக்கு அப்படியான எந்த பயமும், குற்றவுணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் குழந்தைகள் அப்படி பேசுவதை எல்லாம் கேட்டால், அவர்கள்மீது எந்தக் கோபமும் ஏற்படவில்லை. மாறாக அவர்களைக் கண்டு பரிதாபமாகத்தான் இருக்கிறது. 

இதுமாதிரியான ஆன்மிகத் தலைவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? அவர்கள் பின் எப்படி இப்படியொரு பெருங்கூட்டம் திரள்கிறது? அவர்களை இந்தத் தலைவர்கள் எப்படி மயக்குகிறார்கள்... ஏமாற்றுகிறார்கள்...தங்களின் கைப்பாவைகளாக மாற்றுகிறார்கள்? குறிப்பாக, இதுபோன்று வரும் பெண்களை எப்படி தங்களின் காம இச்சைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதுகுறித்த ஓர் ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர். ஜஞ்ஜா லலிச் (Dr. Janja Lalich). 

The PsychoSexual Exploitation of Women in Cults' என்ற தலைப்பின் கீழ் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் சமர்ப்பித்துள்ளார். வரலாற்றிலிருந்து பல தகவல்களைத் திரட்டி, அதை நிகழ்கால நிகழ்வுகளோடு இணைத்து பல ஆதாரங்களோடு இந்தக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

"படிப்பறிவில்லாத, நிலைத்தன்மையற்ற, மாறுபட்ட மனிதர்கள் அல்ல இதுபோன்ற தலைவர்களை நம்பிப் போவது. உலகளவில் இது போன்ற தலைவர்களைப் பின்பற்றிப் போகும் கூட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலும் நல்ல அறிவுள்ள, நிலையான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் மிகச் சாதாரண மக்கள்தான் அதிகம் இருக்கின்றனர்" என்று இந்தக் கட்டுரையின் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார், மார்கரேட் தேலர் சிங்கர் (Margaret Thaler Singer) எனும் மனோதத்துவ டாக்டர்.

ஒரு மனிதன், பிற மனிதன்மீது தன் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்த வேண்டுமென்று முடிவுசெய்கிறான். அதற்கான முக்கிய வழி அவனுடைய/ அவளுடைய நம்பிக்கையை முழுமையாகப் பெறுவது. அது உடல்ரீதியான நெருக்கத்தின் மூலம்தான் கிடைக்கும். அதனால்தான், இந்தத் தலைவர்கள் பெண்களை உடல்ரீதியில் கவர்கிறார்கள். உடல்ரீதியில் ஒருவரை உட்படுத்திவிட்டால், அந்த நிர்வாணம் அவர்களுக்கு இடையேயான தடைகளை உடைத்து, அவர் மீதான் முழு ஆதிக்கத்தைச் செலுத்த வழிவகைசெய்கிறது. கூடவே, இதுபோன்ற தலைவர்கள் பேச்சில் வல்லவர்கள் என்பதால், இந்த விஷயங்களை மிக எளிதாக அரங்கேற்றுகிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆராய்ச்சியாளர் ராபர் ஹரே (Robert Hare) இதில் சில விஷயங்களை முன்வைக்கிறார். 

"இந்த ஆன்மிகத் தலைவர்கள் அனைவருமே சைக்கோபாத் (Psychopath) கிடையாது. ஆனால், இதில் பெரும்பாலானவர்களுக்கு இந்த பெர்சனாலிட்டி டிஸ்-ஆர்டர் (Personality Dis-order) இருக்கிறது. ஆம்...அவர்களில் பெரும்பாலானவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான்." என்று சொல்கிறார் ராபர்ட்.. 

இந்த ஆன்மிகத் தலைவர்கள், பெண்களை தங்கள் காம இச்சைகளுக்கு ஏன் உபயோகப்படுத்துகிறார்கள்? அவர்களுக்குள் இருக்கும் இந்த "சைக்கோபாத் பண்புக் கூறுகள்" (Psychopath Traits) தான் காரணம் என்கிறார்:

1. காமக் கிளர்ச்சிக்கான தூண்டுதல் (Need for Stimulation)

2. இரக்கமற்ற குணம் மற்றும் பிறர் நிலை உணராதது (Callousness & Lack of Empathy)

3. வரைமுறையற்ற காம நடத்தைகள் மற்றும்  துணைக்குச் செய்யும் துரோகம். (Prmiscuous Sexual Behaviour & Infidelity)

4. வழவழப்பான, வசீகர பேச்சு மற்றும் ஈர்ப்பு. (Glibness & Superficial Charm)

5. தன்னைப் பற்றி தானே பெரிதாக நினைத்துக்கொள்வது. (Grandiose Sense of Self)

6. பொய் சொல்வதையே வாழ்நாள் வழக்கமாகக்கொண்டிருப்பது (Pathological Lying)

7. குற்ற உணர்வோ, கழிவிரக்கமோ, வெட்கமோ இல்லாமல் இருப்பது. (Lack of Remorse,Shame or Guilt)

இப்படியாக, அவர்களின் உளவியலை மிக விரிவாக ஆராய்ச்சிக்குட்படுத்தியிருக்கிறது இந்தக் கட்டுரை. இது இந்து மதத்துக்கோ, கிறித்துவ மதத்துக்கோ, இஸ்லாம் மதத்துக்கானதோ மட்டுமான ஆராய்ச்சி அல்ல. இது, பொதுவான அனைத்து மதத்துக்குமானதுதான். சொல்லப்போனால், மதங்களுக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கட்டுரை பிரச்னையை மட்டும் பேசவில்லை; அதற்கானத் தீர்வுகளையும் பேசியிருக்கிறது. குறிப்பாக, இதிலிருந்து மீட்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, எந்த மாதிரியான மனோதத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், இதற்கெல்லாம் காரணகர்த்தாக்களாக இருக்கும் போதகர்களுக்கு/சாமியார்களுக்கு என்னமாதிரியான மனோதத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுகுறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இது போன்ற மதத்தலைவர்கள், அவர்கள் செய்யும் தவறுகள், பாதிக்கப்படும் மக்கள் எனப் பேசும்போது ஒரு வரலாற்று துயர சம்பவத்தைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

                     

1950களில் அமெரிக்காவில் ரெவரெண்ட் ஜிம் ஜோன்ஸ் (Rev. Jim Jones) என்ற கிறித்துவ மதத் தலைவர் "பீப்பில்ஸ் டெம்பிள்" (People's Temple) என்றொரு மத நிறுவனத்தைத் தொடங்கினார். தன்னுடைய வசீகரப் பேச்சால் பல ஆயிரம் பக்தர்களைத் தன் பக்கம் ஈர்த்தார். அவர் ஒரு கட்டத்தில் தென் அமெரிக்க நாடான கயானாவில் ""ஜோன்ஸ் டவுன்" (Jones Town) எனும் பெரும் ஆசிரமத்தை நிறுவினார். அங்கு தன்னைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானவர்களையும் கொண்டு சென்று ஒரு சமூகமாக வாழத் தொடங்குகிறார். ஆனால், சில மாதங்களிலேயே அங்கு மிகப் பெரிய வன்முறை நடக்கிறது, மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்ற என சில செய்தி நிறுவனங்கள் ஆதரங்களோடு செய்திகளை வெளியிட்டன. அந்த விஷயங்களை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் ஜிம் ஜோன்ஸ்... தன் பக்தர்களோடு ஓர் இறுதி உரை நிகழ்த்திவிட்டு அத்தனைப் பேரும் விஷமருந்தி கூட்டாகத் தற்கொலை செய்து கொண்டனர். மொத்தமா 909! பேர். அதில் 300க்கும் அதிகமானோர் சிறு குழந்தைகள்! 

ஈழப்போராட்டம் உச்சத்திலிருந்தபோது அதற்கு ஆதரவாகப் பேசிய பல்லாயிரம் பேர்மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இயற்கை வளங்களைச் சுரண்டும் திட்டங்களுக்கு எதிராக பேசும் சூழலியலாளர்கள் மீது தேசிய பாதுகப்புச் சட்டம் பாய்ந்தது. இதோ, 125 நாள்களைக் கடந்தும் சூழலியல் போராளி முகிலன் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கூடங்குளம் போராட்டத்தின் வழக்கு அது. தேசியப் பாதுகாப்புச் சட்டம்தான். ஆனால், இங்கு எச்.ராஜா பேசிய பேச்சுக்கு எந்தச் சட்டமும் பாயவில்லை. மேடையில் வைத்து நயினார் நாகேந்திரன் "வைரமுத்து போன்றவர்களை கொலைசெய்யலாமா, கூடாதா?" என்று கேட்கிறார். அவர்மீது எந்தப் பாதுகாப்புச் சட்டமும் பாயவில்லை. பாதுகாப்புச் சட்டங்கள் பாயாவிட்டாலும் பரவாயில்லை, என்ன பேசுகிறோம், ஏது பேசுகிறோம் என்பதே தெரியாமல் முழுமையான மூளைச் சலவை செய்யப்பட்டுக்கிடக்கும் அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளைப் பாதுகாக்கவாவது நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். முடிந்தால், நித்தியானந்தா போன்றவர்களையும் மீட்டு, மனோ தத்துவ சிகிச்சைகளைக் கொடுத்து அவரையும் காப்பாற்றி, அவர் அடக்கிவைத்திருக்கும் பெருங்கூட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அறிவியல் சொல்லும் தீர்வாக இருக்கிறது. 

நன்றி.

நித்தியானந்தம். 

Nithyananda Pictures Courtesy : nithyananda.org