Published:Updated:

கழுத்தை நெரிக்கும் நீட்! - என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள் ?

கழுத்தை நெரிக்கும் நீட்! - என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள் ?
கழுத்தை நெரிக்கும் நீட்! - என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள் ?

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரண வலியில் இருந்து இன்னும் நாம் மீளவில்லை. அப்படியான உயிரிழப்புகள் நடக்கிறபோது மட்டுமே நாம் துடிக்கிறோம்... சத்தம் போடுகிறோம்... கூட்டத்தைக் கூட்டிப் போராட்டம் நடத்துகிறோம்... சமூக வலைதளங்களில் பதிவுகள் போட்டுவிட்டுக் கலைந்துவிடுகிறோம். இவைதான் ஒவ்வோர் இழப்பின்போதும் நாம் எடுக்கும் நடவடிக்கை. இப்படியான நிலையில்தான் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த நிலையில், தற்போது மாணவர்கள் தயாராகிறார்களோ.. இல்லையோ அதைவைத்து கல்லா கட்ட தனியார் பயற்சி நிறுவனங்கள் கலர்ஃபுல் விளம்பரங்களை வாரி இறைத்துவருகின்றன. 

இதில் வசதியான குடும்பத்து மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.சி. போன்ற அடிப்படைக் கல்வியில் வலிமையாக உள்ள மாணவர்களுக்கும் பிரச்னை இல்லை. ஆனால், கிராமப்புற மாணவர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் நீட் தேர்வை அனுமதித்தால், இனி கிராமப்புற மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்... இதில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசினோம்.

இதுகுறித்து பேசிய கல்வியாளர் வசந்திதேவி, ``நமது கல்வி முறையில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே, நீட் தேர்வு அவசியம் எதிர்க்கப்பட வேண்டும். இதில், புதிய அநீதியுடன் பழைய அநீதிகளையும் சேர்த்து

எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி முறையை எதிர்க்க வேண்டியுள்ளது. ஒரு கூட்டாட்சி அமைப்பில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றிவிட்டு அனைத்தையும் மத்திய அரசு அபகரித்துக்கொள்ளலாமா? இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதே மறந்துபோய், மத்திய அரசின் ஆக்கிரமிப்புகளை நாம் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம். இந்த நீட் தேர்வு எதிர்ப்பின் மூலம் மாநில சுயாட்சி என்ற தாரக மந்திரம் ஒலித்ததைக் கேட்க முடிந்தது. அந்த முழக்கத்தைத் தற்போது போராடும் அனைவரும் அப்படியே தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இதற்கிடையில், மற்றொரு கருத்தை இங்கே பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. நாடு முழுவதும் ஒற்றைத் தேர்வை ஒரே அளவுகோலாக வைத்து மாணவர் சேர்க்கை நடைபெறலாமா? அப்படித் தேர்வை நடத்துவதன் மூலம் மத்திய அரசின் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கொள்கை என்ற கோட்பாடாகத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழக அரசு, மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதோடு, தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளில் இடம்பெற்று வந்த தமிழக மாணவர்கள் தற்போது தேசிய அளவிலான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் உள்ளவர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாடுவாழ் இந்தியர் எனப் பலரும் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் வகையில் வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழக மாணவர்கள் சர்வதேச அளவில் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இங்குவந்து மருத்துவம் பார்க்கப் போவதில்லை. எனவே, வேறு

மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களால் இங்குள்ள மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து போகக்கூடியச்  சூழல் உருவாகியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை  தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வை  நிறுத்திவைக்க நடவடிக்கை எடுத்துவிட்டு அதன் பின்னர் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால் மட்டுமே தமிழகக் கல்வி, வளர்ச்சிப் பாதையில் செல்லும். குறிப்பாக  நீட் தேர்வினால் கிராமப்புறத்தில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அப்படி இந்த நீட் தேர்வை ஒழிக்கவில்லை என்றால், இதைவைத்து பயிற்சி நிலையங்கள் அதிகரிக்கத் தொடங்கும். இதனால் பாதிக்கப்படப்போவது ஊரகப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களும் பெற்றோருமே'' என்றார் மிகத் தெளிவாக. 

கல்வியாளரும், அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தருமான அனந்த கிருஷ்ணன், ``நீட் தேர்வை மாணவர்கள் ஒதுக்கிவிட முடியாது. ஆனால், அடிப்படைக் கல்வியை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படைக் கல்வியை மேம்படுத்தினால் மட்டுமே நீட் தேர்வில் மாணவர்களுக்கு உள்ள  பிரச்னையைத் தீர்வுக்குக் கொண்டுவர முடியும்'' என்றார்.

 கல்வியாளர் ரத்னசபாபதி, ''ஜல்லிக்கட்டு என்ற பாரம்பர்ய கலாசாரத்துக்கு எழுந்த எதிர்ப்பு அலைபோல், இதற்கும் போராட்டம் எழுச்சிபெற வேண்டும். ஆனால், அப்படியான எதிர்ப்பு இந்தப் பிரச்னைக்கு இல்லாமல் இருப்பதே தற்போது மீண்டும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக  வேண்டிய  அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள்  மிகப்பெரிய அளவில் புறக்கணிப்பை எதிர்கொள்வார்கள். அப்படிப் புறக்கணிக்கப்படும் மாணவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நீட் தேர்வு ஒரு பகுதியினருக்கு மட்டும்தானே என்று எண்ணாமல், இது தமிழக மக்களின் பிரச்னை  என்பதை உணர்ந்து போராட வேண்டும்'' என்றார்.

மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது....