Published:Updated:

போலீஸ் டி.ஐ.ஜி. அனுப்பி வைத்த கடிதம்... திசைமாறிய விசாரணை..! வேட்டையாடு, விளையாடு பகுதி - 15

போலீஸ் டி.ஐ.ஜி. அனுப்பி வைத்த கடிதம்...  திசைமாறிய விசாரணை..! வேட்டையாடு,  விளையாடு பகுதி - 15
போலீஸ் டி.ஐ.ஜி. அனுப்பி வைத்த கடிதம்... திசைமாறிய விசாரணை..! வேட்டையாடு, விளையாடு பகுதி - 15

 முண்டேல்பாஜூ சொன்ன பதிலை வைத்தே, அவன் எவ்வளவு அழுத்தமானவன் என்பதை  அனைவரும் உணர்ந்தோம். எஸ்.ஐ. பால்ராஜ் சார் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் நவீன் சார், முண்டேல்பாஜூவைப் பார்த்துக்கொண்டே அடுத்த கேள்விக்குப் போனார். 'நீ சொன்னதில் கொஞ்சம்தான் உண்மை இருக்கிறது, அது எங்களுக்குத் தெரியும் என்பது உனக்கும் தெரியும். தோட்டா கிருஷ்ணமூர்த்திக்கு துப்பாக்கியைத் தவிர வேறு நுணுக்கம் தெரியாது.  கொள்ளையடிப்பதிலும் பொருளை விற்பதிலும் அதைப் பாதுகாப்பதிலும் அவன் எக்ஸ்பர்ட் இல்லை. ஏ- ஒன் அக்யூஸ்ட்டே நீதான், ஏ- டூ அக்யூஸ்ட் இப்போது ஜெயிலில் இருக்கும் மாரேடிபூடி நாகபூஷணம்தான். தோட்டா கிருஷ்ணமூர்த்தியும் நீயும் சேர்ந்துகொண்டு அந்த நாகபூஷணத்தைக் காப்பாற்ற நினைக்கிறீர்கள். இவ்வளவு நேரம் உங்களை உட்கார வைத்து விசாரித்ததே என் தவறுதான். பப்ளிக்கைக் காப்பாற்ற, உங்களை என்ன செய்தாலும் எங்களுக்குப் பழிபாவமே வராது' என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்துவிட்டார்.
எஸ்.ஐ. பால்ராஜ் சார், இன்ஸ்பெக்டரின் முகம் பார்த்து அவர் காட்டும் சிக்னலுக்குக்கூட காத்திருக்கவில்லை. முண்டேல் பாஜூவை புரட்டியெடுத்துவிட்டார். சில சமயங்களில் இருக்கும் இடத்தின் சூழ்நிலையே ஒரு புரிதலை உருவாக்கிக் கொடுத்துவிடும். போலீஸில் அந்தப் புரிதல் பற்றிய புரிதல் இல்லாமல் போனால் உத்தியோகமும் காலி, ஆளும் காலிதான். எஸ்.ஐ.யின் கோபமும், வேகமும் எங்களுக்கும் சூழலை உணர்த்த நாங்களும் களத்தில் இறங்கிவிட்டோம்.  சில நிமிடங்களில் நாங்கள் களைத்துப் போயிருந்தாலும், முண்டேல்பாஜூவிடம் அவ்வளவு பாதிப்பு இல்லை. எதையும் தாங்கும் இதயம் போலிருக்கிறது. சில நிமிடங்கள் வரையில் அந்த இடத்தில் எந்தப் பேச்சு சத்தமும் இல்லை, அமைதி மட்டுமே நிலவியது. அந்தச் சூழலை மாற்றும் விதமாக, சர்வீஸ் சாலையை அரைத்தபடி வந்து ஜீப் நிற்கும் சத்தம், வேகமாகக் கேட்டது. 


 

விசாரணையின் சூடு குறைவதற்குள், பிரியாணியை வாங்கிக்கொண்டு எஸ்.ஐ. ராஜ்குமார் சார்தான்,  அந்த ஜீப்பில் வந்திருந்தார். அவர் பிரியாணி வாங்கப்போனது மட்டுமே எங்களுக்குத் தெரிந்த காரணம், தெரியாத பல காரணங்களும் இருந்தது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது. ஜீப்பிலிருந்து  அவர் இறங்கியதும், நாங்கள் போய் பிரியாணிகளை வாங்கிக்கொண்டோம். எஸ்.ஐ. ராஜ்குமார் சாரை தனியாக அழைத்துக்கொண்டுபோய் இன்ஸ்பெக்டர் ஏதோ பேசினார். என்ன பேசினார் என்று தெரியவில்லை. பிரியாணியைப் பிரித்துவைத்து அனைவரும் சாப்பிட்டோம். இன்ஸ்பெக்டரும், இரண்டு எஸ்.ஐ.களும், பிரியாணியைத் தவிர்த்துவிட்டு சாப்பாடு மட்டும் எடுத்துக்கொண்டனர். அக்யூஸ்ட்டுகளுக்கு பிரியாணியோடு எக்ஸ்ட்ராவாக 'கறி' பார்சலும் வந்திருந்தது. தயங்கித் தயங்கி  அதைக் கையில் வாங்கிக்கொண்டனர். சில நிமிட யோசனைக்குப் பின் பார்சலைப் பிரித்துச் சாப்பிட்டனர். பிரியாணி சாப்பிட்டு முடித்து கழுவிய கைகூட காய்ந்திருக்காது. 'ஆல்ரைட் ராஜ்குமார், அவனைக் கொண்டுவந்து விட்டீர்களா?' என்று இன்ஸ்பெக்டர் கேட்க, 'புல் மீல்ஸ் சாப்பிட வைத்துத்தான் சார் அவனைக் கூட்டி வந்திருக்கிறேன். இந்த ரூமுக்கு அவனைத் தள்ளிக் கொண்டு வந்திடலாமா?' என்று எஸ்.ஐ. ராஜ்குமார் கேட்டார். எங்களுக்கே இந்த 'சீன்' புதிதாக இருக்கும்போது ஆந்திர போலீஸின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது,  புரியாமல் நெளிந்தார்கள். எஸ்.ஐ. ராஜ்குமார் வந்த  ஜீப்பில் இருப்பது யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களுக்கு இன்னும் அதிகமானது. டீமில் கூடவே இருந்தாலும் சில நேரங்களில் இதுபோன்ற 'த்ரில்'  காட்சிகள் அமைந்துவிடும், அது டீமில் இருக்கும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக மறைக்கப்படுவது அல்ல, கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு ரூட்டில் விசாரணையின் போக்கு திசை மாறிப் போய் விடும். இரண்டு நாளில் சென்னைக்குப் போகலாம் என்ற போலீஸாரின் கனவுகள் இருபதாவது நாளில் நிறைவேறுவதைப் போன்ற திசைமாறல் அது...  எஸ்.ஐ. ராஜ்குமார், ஜீப்பில் இருந்து  கீழே இறக்கி விடப்போகும் ஆள் யாரென்று பார்க்க அனைவருமே ஆர்வத்துடன் இருந்தோம்.

ஜீப்பிலிருந்து தளர்ந்த நிலையில் இறக்கப்பட்டவன், மாரேடிபூடி நாகபூஷணம். 'வேறு வழக்கில் சிக்கி இவன் ஜெயிலில் இருப்பதாகத்தானே இன்ஸ்பெக்டர் சொன்னார்?' என்ற குழப்பம் அனைவருக்கும் வந்து விட்டது. மாரேடிபூடி நாகபூஷணத்தைப் பார்த்ததும் தோட்டா கிருஷ்ணமூர்த்தியும், முண்டேல் பாஜூவும்  அலறிவிட்டார்கள். இப்போது அந்த அறையில், அக்யூஸ்ட்டுகள் மூன்று பேரும் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். அப்போது ஸ்பெஷல் போலீஸ் கமாண்டோ ஒருவர், ஒரு தபாலைக் கொண்டுவந்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். அதில், 'விஜயவாடா டவுன் போலீஸ் ஸ்டேஷன் T-9-ல் தோட்டா கிருஷ்ணமூர்த்தி மீது நிறைய சிறு, சிறு வழக்குகள் இருக்கிறது, அவனை விஜயவாடா போலீஸிடமே கொடுத்துவிடுங்கள்,  நமக்கு அவசியம் தேவையென்றால் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். சென்னை போலீஸ் குடியிருப்புகளில் கொள்ளை நடந்த விவகாரத்தில் நகைகள் இருக்கும் இடம், நகைகளை வாங்கியவர்கள் விவரம் அத்தனையும் முண்டேல்பாஜூக்குத் தெரியும். அடுத்தடுத்து எங்கு கொள்ளை அடிக்கலாம் என்று போட்ட திட்டங்கள் அனைத்தும் மாரேடிபூடி நாகபூஷணத்துக்குத் தெரியும், அவன்தான் மெயின் ஆபரேட்டர். இவர்களை மட்டும் நீங்கள் சென்னைக்கு அழைத்துக்கொண்டுப் போய் விடுங்கள், ஏதாவது அவசரம் என்றால் விஜயவாடா சரக போலீஸ் டி.ஐ.ஜி. சுரேந்திரபாபு சாருக்கே பேஜரில்

தகவலைக் கொடுங்கள், பேசுங்கள். உங்களைப் பற்றி  நான் அவரிடம் சொல்லி இருக்கிறேன்' என்றது அந்தக் கடிதம். பேஜரில் இவ்வளவு நீளமாக மெசேஜ் அனுப்ப முடியாது போலிருக்கிறது என்று எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம். ஜே.சி. சைலேந்தர்பாபு சார்தான் எங்களை வழி நடத்தும் அந்தக் கடிதத்தை விஜயவாடா டி.ஐ.ஜி.க்கு அனுப்பி வைத்திருந்தார்.

கடிதத்தைப் படித்த இன்ஸ்பெக்டர், 'அக்யூஸ்ட்டுகளை தூரத்தில் நாம் கண்காணித்தபோது நம்ம டீமில் இருந்த யாரோ ஒருவர், 'முண்டேல் பாஜூ ஒல்லியாக இருக்கிறான்' என்று சொன்னார். அதேபோல், 'விஜயவாடா டி.ஐ.ஜி.யின் பெயர் சுரேந்திரநாத்'  என்று கூறினார். இப்போது நமக்கு வந்துள்ள தபாலில், டி.ஐ.ஜி.யின் பெயர் சுரேந்திரபாபு என்றிருக்கிறது. சென்னைக்குப் போனதும் டீம் ஆட்களை மொத்தமாகக் கொண்டு போய் 'ஐ' செக்கப்பில் தள்ளிவிட்ட பிறகுதான் ஸ்டேஷனுக்குள்ளேயே விடணும்' என்று நவீன் சார், லேசாகக் கோபித்துக்கொண்டார். மீண்டும் சில நிமிடங்கள் மௌன இடைவெளியில் நகர்ந்தது. அப்போது.... யாருமே அதை எதிர்பார்க்கவில்லை...

(தொடரும்)