Published:Updated:

காஸ்ட் அக்கவுன்ட்ஸ்... பகுதி நேரப் படிப்பு... கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு!

காஸ்ட் அக்கவுன்ட்ஸ்... பகுதி நேரப் படிப்பு... கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு!
காஸ்ட் அக்கவுன்ட்ஸ்... பகுதி நேரப் படிப்பு... கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு!

`ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர்களே பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது கூடுதலாக தொழில்சார்ந்த கல்விப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்' என்கிறது, இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆண்டுக் கல்வி அறிக்கை. கல்லூரியில் படிக்கும்போதே குறைந்த கட்டணத்தில் பகுதி நேரமாகப் படிக்க ஏராளமான படிப்புகள் உள்ளன. இதில் முதன்மையாக இருப்பது `காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்பு'.

தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வழியே அதிகம் தேடுவது சி.ஏ., காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படித்தவர்களைத்தான். இளைஞர்கள் பலரும் சி.ஏ படிப்பு குறித்து அறிந்திருப்பர். ஆனால், காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்பு குறித்து பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. இந்தப் படிப்பின் சிறப்பம்சம், பட்டப்படிப்பைப் படித்துக்கொண்டே காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிக்கலாம் என்பதுதான். இந்தப் படிப்பில் சேர, ஜனவரி 31-ம் தேதிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும். 

இன்ஸ்டிட்யூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தென்மண்டல அமைப்பின் தலைவர் மயில்முருகன், ``காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்புக்கு, மற்ற படிப்புகளைவிட கட்டணம் குறைவு. முழு படிப்பையும் 50,000 ரூபாய்க்குள் முடித்துவிடலாம். இந்தப் படிப்பில் சேர, ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். 

ப்ளஸ் டூ படித்து முடித்தவர்கள், ஃபவுண்டேஷன் கோர்ஸிலும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக இன்டர்மீடியட் கோர்ஸிலும் சேரலாம். காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்பவர்கள் வேலைவாய்ப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. ஃபவுண்டேஷன் கோர்ஸ் முடிப்பவர்கள் ஆரம்பகட்ட வேலையிலும், இன்டர்மீடியட் முடிப்பவர்கள் இடைநிலை பதவியிலும், இறுதிநிலை படிப்பை முடித்தவர்கள் நிறுவனத்தின் உயர் பதவியிலும் அமர முடியும். 

`ஐந்து கோடி ரூபாய்க்குமேல் மதிப்புகொண்ட நிறுவனங்கள், காஸ்ட் ஆடிட்டரை நியமிக்க வேண்டும்' என, நிறுவனச் சட்டம் வலியுறுத்துகிறது. உள்தணிக்கை, பொருள்களின் உற்பத்தி தணிக்கை, ஆற்றல் தணிக்கை எனப் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. நிதி ஆலோசகராகவும், விலை நிர்ணய அதிகாரி, திட்ட ஆலோசகர் என இதரப் பிரிவுகளில் வேலைவாய்ப்பைப் பெறலாம்.

மாநில அரசில் வேலைசெய்ய விரும்புபவர்களுக்கு, மாவட்டக் கருவூலம், மின்சாரத் துறை, வேளாண் துறை போன்றவற்றிலும், மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-க்கு இணையாக இண்டியன் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் வேலையும் இருக்கிறது" என்றார். 

இன்ஸ்டிட்யூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தென்மண்டல அமைப்பின் டீன் பொன்னுசாமி, ``ஃபவுண்டேஷன் கோர்ஸில் நான்கு பாடங்கள் உள்ளன. இன்டர்மீடியட் மற்றும் ஃபைனல் நிலைகளில் எட்டுப் பாடங்கள் இருக்கின்றன. மூன்றே வருடங்களில் படித்து முடித்துவிட முடியும். ஃபவுண்டேஷன் கோர்ஸுக்குக் கட்டணம் 4,000 ரூபாய் மட்டுமே. இன்டர்மீடியட் படிப்புக்கு 20,000 ரூபாயும், இறுதிநிலை படிப்புக்கு 17,000 ரூபாயும் கட்டணமாகச் செலுத்தவேண்டியிருக்கும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு, கட்டணமும் இல்லை; இந்தப் படிப்பில் சேர, வயது வரம்பும் இல்லை.

உற்பத்தி நிறுவனங்களில் பொருள்களின் விலை நிர்ணயம் செய்வதில் காஸ்ட் அக்கவுன்டன்ட்களின் பணி முதன்மையானது. இவர்களால் 500 ரூபாய் பொருளை மதிப்பு கூட்டி 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யவும் முடியும். உற்பத்திச் செலவைக் குறைத்து ஐம்பது ரூபாய்க்கும் தர முடியும். 

இந்தியாவில் பெரு, நடுத்தர மற்றும் குறு நிறுவனங்கள் என, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. தற்போது 80,000 காஸ்ட் அக்கவுன்ட்கள்தாம்  உள்ளனர். வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் நிறுவனங்கள் பெருகிவருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு காஸ்ட் அக்கவுன்ட்களின் சேவை அதிகம் தேவைப்படுகிறது. அதனால், காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்பில் தைரியமாகச் சேரலாம்.  இந்தப் படிப்புக்கு ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் பதிவுசெய்பவர்கள், ஜூலை மாதம் தேர்வு எழுதலாம். ஜூன் மாதம் பதிவுசெய்பவர்கள் டிசம்பர் மாதத்தில் தேர்வு எழுதலாம். தற்போது ப்ளஸ் டூ படிப்பவர்கள்கூட தங்களது பெயரைப் பதிவுசெய்துகொள்ளலாம்" என்றார். 

பட்டப்படிப்பு படிக்கும்போதே காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படித்து, பன்னாட்டு நிறுவனத்தில் நிதி ஆலோசகராகப் பணியாற்றிவரும் மதுரையைச் சேர்ந்த செல்வி. ஆரா கானிடம் பேசினோம்... 

``நான் ப்ளஸ் டூ முடித்தவுடன் பி.காம் படிப்பில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்தவுடன் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஃபவுன்டேஷன் கோர்ஸில் சேர்ந்துவிட்டேன். பி.காம் முடிக்கும் முன்னரே காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். இதனால், பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னரே பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது.  இங்கு, ஆரம்பத்தில் ஆண்டுச் சம்பளமாக 5.5 லட்சம் வழங்கினர். மூன்று ஆண்டுகளில் சம்பளம் உயர்ந்து, தற்போது எட்டு லட்சம் ரூபாய்க்கும்மேல் வாங்குகிறேன். 

என்னுடன் பட்டப்படிப்பு படித்தவர்கள் இன்னமும் சரியான வேலை கிடைக்காமல் தடுமாறும்போது, நான் கூடுதலாக படித்த காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்பு என்னைப் பெரிய அளவில் உயர்த்தியிருக்கிறது. பட்டப்படிப்பு படிக்கும் வரை வெளியூருக்குக்கூடப் போனதில்லை. இப்போது பணி தொடர்பாக ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மெக்ஸிகோ உள்பட பல வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருகிறேன்" என்றார்.

``பட்டப்படிப்பு படிப்பவர்கள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் தொழில்சார் கல்வியான  காஸ்ட் அக்கவுன்ட்ஸ் படிப்பைப் படித்தால், படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைப்பது நிச்சயம்" என்று உறுதியாகச் சொல்கிறார் மயில்முருகன்.