Published:Updated:

திருமணத்துக்குத் தயாராகும்போது இதையெல்லாம் கவனிங்க மக்களே!

திருமணத்துக்குத் தயாராகும்போது இதையெல்லாம் கவனிங்க மக்களே!
திருமணத்துக்குத் தயாராகும்போது இதையெல்லாம் கவனிங்க மக்களே!

தையும் மாசியும் மனங்கள் இணைந்து மணம் பரப்பும் கல்யாணத் திருவிழா மாதங்கள். இந்தச் சமயத்தில் ஒரு திருமணத்தை பிக்ஸ் செய்வதற்கு முன்னால், தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண் பற்றி ஒரு பெண் என்னென்ன விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்? ஓர் ஆண், திருமணம் செய்துகொள்ளும் பெண் பற்றி என்னென்ன விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்? இதுகுறித்து, 'கீதம் மேட்ரிமோனியல்' என்கிற திருமணத் தகவல் மையத்தை வெற்றிகரமாக நடத்திவரும் கீதா தெய்வசிகாமணி சொல்கிறார். இவை, காதலில் விழப்போகும் ஆண் மற்றும் பெண்ணுக்கும் யூஸ்ஃபுல்லாக இருக்கும். 

பெண்களுக்கு... 

அவர் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டவரோ, உங்களிடம் தன் காதலைத் தெரிவித்தவரோ... அவர் படித்த கல்லூரி, அதற்கான

பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதா என்பதை அவரிடமிருந்து தெரிந்துகொள்வது அவசியம். இதைப் படித்ததும், இவ்வளவு பிராக்டிகளாக யோசித்தால் மனதுக்கு இடமிருக்குமா என்று தோன்றலாம். ஆனால், இதுதான் யதார்த்தம். ஒரு சிலர் தபால் வழியில் எம்.பி.ஏ. படித்துவிடுகிறார்கள். அவர்கள் வேலை தேடும்போதும், புது வேலைக்கு மாறும்போதும் முன்னுரிமை கிடைக்காமல் பின்தங்கிவிடுவர். இந்த விஷயம் திருமணத்துக்குப் பிறகு தெரிந்தால், வீணான மன உளைச்சல் உண்டாகும். எனவே, இப்படிப்பட்ட வரனைத் தவிர்த்துவிடலாம். அதேநேரம், அவரை மனதுக்குப் பிடித்துவிட்டால், பிரச்னையை இருவரும் சேர்ந்து சமாளிப்போம் என முடிவெடுங்கள். 

உங்கள் ஜாப் நேச்சரைப் புரிந்துகொள்பவராக இருப்பது நல்லது. 'நைட் ஷிஃப்டுக்குப் பொண்ணுங்களை அனுப்பறதாவது' என்கிற மனநிலைகொண்ட ஆண், பன்னாட்டு நிறுவனத்தில் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், அது காதல் திருமணமாகவே இருந்தாலும் பின்னாளில் பிரச்னைகள் வரலாம். உங்கள் புகுந்த வீட்டினருக்கும், உங்கள் வேலையின் தன்மையைப் புரிந்துகொள்வர் என்றால், தாராளமாக புரொசீட் பண்ணலாம். 

உங்கள் வருங்காலத் துணைக்கு, எதிர்காலத்தில் வெளிநாட்டில் செட்டிலாகும் ஆசை இருந்தால், அதற்கு நீங்களும் மனதளவில் தயாரா என்று ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்து முடிவெடுங்கள். திருமணம் முடித்த கையோடு வெளிநாட்டில் செட்டிலாகப் போகிறவர் என்றால், சொந்த நாட்டில் அவருடைய குணநலனைத் தெரிந்துகொள்வதைவிட, ஃபாரினில் அவருடைய முகம் என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். 

அவர் சொந்த பிசினஸ் செய்கிறவராக இருந்தால், அது அவரின் அப்பாவுடைய பிசினஸா, அதில் பங்குதாரர்கள் யாராவது இருக்கிறார்களா, லாபம் என்ன, அந்தத் தொழிலின் எதிர்காலம் என்ன என்பதையெல்லாம் சரியாகத் தெரிந்துகொள்ளுங்கள். மனதும் மனதும் இணைகிற பவித்ரமான உறவில் இவ்வளவு கணக்குகள் போடவேண்டுமா என்று தோன்றலாம். திருமணம் நடந்து சில வருடங்களுக்குப் பிறகு, இந்தக் கேள்விகளால் வரும் பிரச்னைகளைவிட, முன்கூட்டியே கேட்டுவிடுவது சிறந்தது அல்லவா? 

சொந்தக்காரர்கள், அறிந்தவர், தெரிந்தவர் வழியாக மாப்பிள்ளை பற்றி தெரிந்துகொண்டது அந்தக் காலம். இன்றைக்கு ஒரு பையனைப் பற்றி தெரிந்துகொள்ளச் சமூக வலைதளத்தில் வலையை வீசினாலே போதும். நல்லது, கெட்டது அத்தனையும் பிரின்ட் அவுட்டாக வந்துவிடும். 

இன்றைய காலகட்டத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் படிப்பு, பணம், வேலை என எல்லாவற்றிலும் ஈக்குவல் ஸ்டேட்டஸ் இருப்பதே நல்லது. ஈகோவும் தாழ்வுமனப்பான்மையும் திருமண பந்தத்தை உடைக்காமல் இருக்க, சமமான ஸ்டேட்டஸ் அவசியம். 

இப்போதெல்லாம் 30 வயதிலேயே டயபடீஸ் வந்துவிடுகிறது. என் அனுபவத்தில் இதைச் சம்பந்தப்பட்ட ஆண்களே, பெண்ணிடம் தனியாகப் பேசும்போது ஓப்பனாக சொல்லிவிடுகிறார்கள். அப்படிச் சொல்லாதபட்சத்தில், நடிகர் ஆர்யா படத்தில் மணப்பெண்ணின் தங்கை கேட்பதுபோல கேட்டுவிடுங்கள். 

திருமணத்துக்குப் பிறகு மனம் ஒத்துப்போவதெல்லாம் சரிதான். அதற்குமுன், பரஸ்பரம் ஒருவரையொருவர் பிடித்துப்போவதாவது அவசியம். இந்தப் பசைதான் அவர்களைத் திருமணம் வரை அழைத்துச்செல்லும். 

ஆண்களுக்கு... 

நீங்கள் பெற்றோர் பார்க்கிற பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என்றால், வேலைக்குப் போகும் பெண் வேண்டுமா, எந்த ஃபீல்டில் வேலை செய்ய வேண்டும் என்பது வரை தெளிவாகச் சொல்லிவிடுங்கள். 

வருங்கால மனைவி பற்றி எல்லா ஆண்களுக்குமே மனதுக்குள் ஒரு பிம்பம் இருக்கும். அந்தப் பிம்பத்தை உங்கள் பெற்றோரிடம் சொல்லி பெண் தேடுங்கள். 

நீங்கள் வெளிநாட்டில் செட்டிலாக விரும்புகிறீர்கள் என்றால், பெண் பார்க்கும்போதோ அல்லது புரப்போஸ் பண்ணும்போதோ சொல்லிவிடுங்கள். 

நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணுக்கு முந்தைய காதல் இருந்தது தெரியவந்தால், அதை ஏன் மறைத்தாள் என்று குழம்பாதீர்கள். பெண்களிடம் காலம் காலமாக இருக்கும் பாதுகாப்பு மனப்பான்மையின் வெளிப்பாடு அது. அந்தக் காதல் பிரேக் ஆனதில் நியாயமான காரணம் இருக்கிறதா என்பதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் எதிர்காலத்தில் மனைவியின் எக்ஸ் லவ் உங்கள் மனதைத் தொல்லைப்படுத்தாது.