Published:Updated:

7 மீட்டர் உயர அலைகளைச் சமாளித்து, உலகைச் சுற்றும் கடல் ராணிகள்! #IndianNavy

7 மீட்டர் உயர அலைகளைச் சமாளித்து, உலகைச் சுற்றும் கடல் ராணிகள்! #IndianNavy
7 மீட்டர் உயர அலைகளைச் சமாளித்து, உலகைச் சுற்றும் கடல் ராணிகள்! #IndianNavy

கோடியக்கரையிலிருந்து சென்னை வரை பாய்மரப் படகைச் செலுத்தும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. பல மாதங்கள் பயிற்சி எடுத்திருந்தாலும் கடற்காய்ச்சலிலிருந்து தப்பிக்க முடியவில்லை. கரை ஒதுங்கினால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற சூழலில், பரங்கிப்பேட்டை (port nova) அருகே ஆற்றுக் கழிமுகத்தில் படகைச் செலுத்த முடியாமல் இடுப்பு வரை புதையும் மணலுக்குள் இறங்கி இழுத்துக்கொண்டு வந்த த்ரில் நிறைந்த பயணம் அது.  வெறும் 15 நாள்கள் sailing expedition-னிலேயே இத்தனை சவால்கள் இருந்தால், உலகம் முழுக்க பாய்மரப் படகில் சுற்றுபவர்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், `அப்படிப்பட்ட சவால்களைச் சமாளித்து உலகின் ஆபத்தான கேப்ஹார்ன் முனையைக் கடந்து சாதித்துள்ளனர் இந்தியக் கடற்படை வீராங்னைகள்' என்ற தகவல் அறிந்தேன்!

இந்தியக் கடற்படையிடம், ஐ.என்.எஸ்.வி மான்டோவி, தாரிணி என இரு பாய்மரப் படகுகள் (Indian Navy sailing vessel) உள்ளன. கடந்த ஆண்டுதான் தாரிணி, கடற்படையில் இணைக்கப்பட்டது. 56 மீட்டர் நீளம்கொண்ட  ஒற்றை அடுக்குப் படகான இது, ஃபைபர் கிளாஸால் தயாரிக்கப்பட்டது.  ஆறு பாய்மரங்கள்  25 மீட்டர் உயரமான மரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். பெரிய பெரிய கப்பல்களையே புரட்டிப்போடும் அலைகளை பாய்மரப் படகுகள் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளவைப்பதுதான், செயிலர்களுக்கு உள்ள சவால் நிறைந்த பணி.

இதுபோன்ற சிறிய படகில்  உலகைச் சுற்றுவது சாதாரண விஷயமா... சுமார் 21 ஆயிரம் நாட்டிகல் மைல் பயணம் செய்ய வேண்டும். ஒரு நாட்டிகல் மைல் என்பது, 1.852 கிலோமீட்டர். அப்படியென்றால், 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்வதற்குச் சமம். அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், ஆழமும் ஆபத்தும் நிறைந்த பசிபிக் கடல், சுறாக்கள் நிறைந்த அட்லான்டிக் கடல் வழியாக உலகைச் சுற்றி வர, சுமார் எட்டு மாதங்கள் பிடிக்கும். கோவாவிலிருந்து புறப்படும் படகு, ஐந்து துறைமுகங்களில்தான் நிற்கலாம். மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள ஃபெர்மான்டில் துறைமுகம்தான் முதல் ஸ்டாப்.  நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமான ஃபாக்லேண்ட் தீவு, கேப்டவுன் நகரங்கள் அடுத்தடுத்த நிறுத்தங்கள். 

கோவாவிலிருந்து புறப்பட்டால் முதல் இலக்கான ஃபெர்மான்டில் நகரை அடைய 45 நாள்கள் ஆகும். உணவுப் பொருள்களிலிருந்து மருந்து மாத்திரைகள் வரை  படகில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறைமுகத்திலும் 10 நாள் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அப்போது, தேவையான பொருள்களை வாங்கி மீண்டும் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். ஃபெர்மான்டில் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நோக்கிய பயணத்துக்கு 25 நாள்கள் பிடிக்கும். அங்கிருந்து ஃபாக்லாந்துக்கு 30 நாள்கள். பிறகு, கேப்டவுன் நோக்கிய பயணத்துக்கு 30 நாள்கள். கேப்டவுனிலிருந்து கோவாவை அடைய 30 முதல் 40 நாள்கள் ஆகும். இதுதான், இந்தியாவிலிருந்து உலகைச் சுற்றி வரும் கடல்பாதை. நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட நாள்களுக்குள் எந்த இலக்கையும் நாம் எட்டிவிட முடியாது!

சவால் நிறைந்த கடற்பயணத்தைப் ஃலெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையில் பிரதீபா ஜாம்வால், ஸ்வாதி, விஜயாதேவி, ஐஸ்வர்யா, பாயல் குப்தா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதத்தில் கோவாவிலிருந்து தாரிணி படகில் தொடங்கினர். ஷிப்ட் முறையில் படகைச் செலுத்த வேண்டும்.  நான்கு மணி நேரத்துக்கு இருவர் படகுக்குப் பொறுப்பு. இரவு நேரத்தில் படகைச் செலுத்துவது சவால் நிறைந்தது. பாய்மரத்தைப் பராமரிப்பது, உணவுத் தயாரிப்பு, நேவிகேஷன் என்கிற தகவல் தொடர்புகொள்வது என ஒவ்வொரு பணியையும் கப்பல் கேப்டன் பிரித்தளிப்பார். தாரிணியில்  சிறிய கிச்சன் உள்ளது. சமையலுக்கு, பாயல் குப்தா பொறுப்பு. ஒவ்வோர் இலக்கை படகு எட்டும்போதும், `அல்வா' தயாரித்து தன் தோழிகளை சந்தோஷத்தில் ஆழ்த்திவிடுகிறார். உணவுக்கும் ரேஷன்தான். துறைமுகம் சென்றடைந்தால்தான் வயிறார சாப்பிட முடியும். 

இந்தப் பயணித்தின்போது, ஆபத்து நிறைந்த பசிபிக் கடலில் மட்டும் 41 நாள்கள் தாரிணி பயணித்தது. உலகிலேயே ஆபத்து நிறைந்த கடல் தென் அமெரிக்காவின் கேப்ஹார்ன் பகுதி. உலகின் மற்றொரு முடிவாக இது கருதப்படுகிறது. சுமார் 7 மீட்டர் உயரத்துக்கு இங்கு அலை எழும். ஜனவரி 18-ம் தேதி கேப்ஹார்ன் பகுதியை தாரிணி கடந்ததும், குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்திருந்தார் பிரதமர் மோடி. தற்போது ஃபாக்லாந்தில் உள்ள ஸ்டான்லி துறைமுகத்தில் தாரிணி ஓய்வெடுத்துவருகிறது. கூடவே கடற்படை வீராங்கனைகளும். அடுத்ததாக கேப்டவுன் வழியாக தாய்நாட்டை நோக்கிப் பயணிப்பார்கள். வரும் ஏப்ரல் மாதத்தில் தாரிணி கோவாவை வந்தடையும்.

பாய்மரப் படகைப் பொறுத்தவரை, கயிற்றையும் பாய்மரத்தையும் இணைத்துப்போடும் தவறான சிறிய முடிச்சு (knot)கூட படகைப் புரட்டிப்போட்டுவிடக்கூடும். கடலுக்குள் தவறு இழைத்தால் மன்னிப்பு இல்லை என்பதற்கு, டைட்டானிக் கப்பல் ஓர் உதாரணம். சவால்களை முறியடித்து, தாய்மண்ணுக்கு தாரிணி பத்திரமாகத் திரும்பட்டும்!