Published:Updated:

"இது நம்ம நாடுய்யா... போகப்போக சரியாகி விடும் !" - நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்த காந்தி யார்?

"இது நம்ம நாடுய்யா... போகப்போக சரியாகி விடும் !" - நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்த காந்தி யார்?
"இது நம்ம நாடுய்யா... போகப்போக சரியாகி விடும் !" - நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்த காந்தி யார்?

"இது நம்ம நாடுய்யா... போகப்போக சரியாகி விடும் !" - நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்த காந்தி யார்?                              

இந்தியாவைக் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்த நாள் நேற்று. நாம் குடியரசு நாட்டில்தான் வாழ்கிறோம் என்ற உணர்வோடு சென்னை ஐகோர்ட்டை விட்டு  வியாழக்கிழமை மாலை வெளியே வருகிறார் சுதந்திரப் போராட்டத் தியாகி காந்தி. 'நீங்கள் தியாகிதான்.. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை மீட்கப் போராடிய உங்களுக்கு பிடிவாத அதிகாரிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதற்காக இந்த நீதிமன்றம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது' என்று தியாகி காந்தியைப் பார்த்து நீதியரசர் கே.ரவிச்சந்திர பாபு சொன்ன வார்த்தை, சுதந்திர இந்தியாவின் நிஜமுகத்தை வெளிச்சம் போட்டுக்  காட்டியிருக்கிறது.யார் இந்த காந்தி? ஏன் இவர் கோர்ட்டுக்கு வந்தார் ?வருத்தமும், மன்னிப்புமாக நீதிபதி  தீர்ப்பளித்தது ஏன்? அனைத்துக்கும் ஒரே பதில்தான்... 'சிஸ்டம் சரியில்லை' ! பெரியவர்  காந்தியின் குரலிலேயே இந்த தீர்ப்பையும், அதற்குப் பின்னால் இருக்கும் தகவலையும் பதிவு செய்ய விரும்பினேன்.  இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால், தியாகி காந்தியின் வீட்டை மட்டும் பார்த்து விட்டு காலையில்  நேர்காணல் செய்யலாம் என்று தீர்மானித்தேன். சென்னை வியாசர்பாடி பி.வி.காலனிக்குள் நுழைந்து இரண்டாவது தெருவில் அவர் வீட்டைத் தேடியபோது அங்கே விளையாடிக் கொண்டிருந்த வாண்டுகள்,  'கொம்பு வெச்சுக்கிட்டு, மீசையைத் தடவிட்டிருக்கிற மிலிட்டரி தாத்தா வீடுதானே? அதோ அந்த கடைசி வீடுதான்...' என்று வழிகாட்டினர்.


வாண்டுகள் சொன்ன வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருந்தார் தியாகி காந்தி. ' அய்யா மன்னிக்கணும், நெடுநேரம் ஆகிவிட்டது. வெளியில் பனியும் கொட்டுகிறது. நீங்கள் ஓய்வில் இருப்பீர்கள் என்று நினைத்தேன். வீட்டை மட்டும் பார்த்து விட்டு காலையில் வரலாம் என்று நினைத்தேன்...' என்றதும் "ஹூம் இதெல்லாம் ஒரு பனியா? ரங்கூனில் (பர்மா) நாங்கள் அடைபட்டிருந்த சிறையில் கொட்டிய பனியை விட இது பெரிய பனி கிடையாது... இது என் தலைவன் நேதாஜி வளர்த்த உடம்புய்யா... வாங்க, வீட்டுக்குள்ளே போகலாம்" என்று உள்ளே அழைத்துக் கொண்டு போனார்.சென்னையில் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் இப்படி 'தலை தட்டுமா' என்று தெரியவில்லை. அந்தளவுக்குக் கூரை கீழே இறங்கிப் போயிருந்தது. தொண்ணூறு சதவீதம் நொறுங்கிப் போன சிமெண்ட் கூரையால் மூடப்பட்டிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான்,  வீட்டின் உள்புறம் அதைவிட நொறுங்கிக் கிடந்ததைக் காணமுடிந்தது.  பெயரளவில் கூட அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான  பாத்திரங்கள் இல்லை. வீடுமுழுவதும் அழுக்கு மண்டிக் கிடந்தது. குடிநீர்ப்பானை மட்டும் பாதுகாப்பான ஒரு மூலையில் இருந்தது.  வறுமையிலும் எளிமை, நேர்மை, பண்பு அந்த வீட்டில் நிறைந்து காணப்பட்டது.'தாத்தாவைப் பார்க்க பத்திரிகையில் இருந்து வந்திருக்காங்க' என்று வீட்டின் தலைப்பிள்ளை கொடுத்த குரலுக்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பேரன், பேத்திகள் உள்பட அனைத்து உறவுகளும் அந்த இடுக்கமான வீட்டுக்குள் சூழ்ந்து கொண்டனர்.  தியாகித் தாத்தா காந்தியின் முகம் முழுவதும் ஆனந்தம்...அந்த சந்தோஷ தருணத்தில் அவர்களோடு கலந்து கொண்டு பேச ஆரம்பித்தேன். 


                           

பெயரில் காந்தி வந்தது எப்படி ? மீசையின் கனம் இன்னும் அப்படியே இருக்கிறதே... யாரை மிரட்ட மீசையை இப்படி வைத்தீர்களோ அவர்கள்தான் இப்போது இல்லையே, மீசையின் அளவைக் குறைக்கக் கூடாதா?
 " எங்கள் குடும்பத்தில் அனைவர் மீசையும் இப்படித்தான் இருக்கும். அதேபோல் அனைவர் பெயரும் காந்தி என்றுதான் முடியும். மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. என் தம்பி மோகன் தாஸ்காந்தி அப்புறம்  ரமேஷ்காந்தி, கிருஷ்ணன் காந்தி பேரப்பிள்ளைகள் பாலாஜிகாந்தி, பிரசாந்த்காந்தி அப்படியே தீபக், பிரசன்னா, சக்திவேல், கிஷோர் என்று அனைவர் பெயரும் காந்தியாகத்தான் முடியும். பள்ளிக்கூடத்தில்தான் 'காந்தி' யைச் சேர்க்க மாட்டோம் என்று நீக்கி விட்டார்கள். அவர்கள் நீக்கினால் என்ன, நாங்கள் வீட்டில் காந்தியைச் சேர்க்காமல் யாரையும் கூப்பிடுவதே இல்லை." 

 'சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு சுதந்திர இந்தியாவில் பென்ஷனைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன காரணம் காட்டி அதை தட்டிக் கழித்தார்கள்? நீங்கள் ஏன் கோர்ட்டுக்குப் போனீர்கள் ?'  
மழை வெள்ளம் வரும் போது இந்த வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் மூழ்கி விடும். வெள்ளம் வடிந்ததும் மிஞ்சியதைக் கரையான் அரித்துவிடும். எதையும் பாதுகாக்க முடியாது.ரேசன் கார்டிலும், சில ஆவணங்களிலும் என் வயதைக் குறைத்துப் போட்டு பதிவு செய்து விட்டார்கள். நான் பென்ஷன் கேட்டுப் போனபோது இவைகளைக் காட்டி அதை நிராகரிப்பு செய்து விட்டனர்.  1926 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நான் பிறந்தேன். இப்போது 92 வயதாகிறது.  1945, ஜூன் மாதம், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ரங்கூன் சிறையில் அடைக்கப் பட்டிருந்தேன். அந்த சிறைக் காலங்களை எங்கள் படைத் தலைவரான லெட்சுமிஷெகல் நன்றாக நினைவில் வைத்திருந்தார். பிற்காலத்தில் நான் கான்பூருக்குப் போய் அவரைச் சந்தித்தபோது  எங்கள் படைத் தலைவரான  லெட்சுமிஷெகல் என்னைப் பாராட்டி கடிதமும் கொடுத்தார். அதேபோல் என்னோடு சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் இருந்த இருவர், என்னுடைய போராட்ட கால பணிகுறித்து பரிந்துரை போல் கொடுத்திருந்த கடிதமும் என்னிடம் இருந்தது. அதையெல்லாம்தன் மீண்டும் நான் கொண்டு போய் அதிகாரிகளிடம் கொடுத்தேன். இந்தத் தொடர் முயற்சியை கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து மேற் கொண்டு வந்தேன். எந்தப்பலனும் கிடைக்க வில்லை, அதிகாரிகள் அதைப் பரிசீலிக்கவே இல்லை. கடைசியாகக் சென்னை ஐகோர்ட்டுக்குப் போனேன். நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு,  என்னுடைய மனுவைப் பரிசீலித்து விட்டு, 'தியாகி காந்திக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய பாக்கியை கணக்கிட்டு அதை நான்கு வாரங்களில் வழங்க வேண்டும்' என்று அரசுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்.


 சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த நடைமுறைச் சிக்கலை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
 இது நம்ம நாடுய்யா... இதை நாம் விமர்சிக்கக் கூடாது. எல்லாம் போகப் போக சரியாகி விடும்.

ரங்கூன் சிறையில் கழித்த அந்தநாள்களை பேரப் பிள்ளைகளிடம் எப்போதாவது விவரிப்பீர்களா ?
சொல்லச் சொல்லி என்னிடம் நிறையக் கேட்பார்கள், நானும் சொல்வேன். அதில் ஒரு நிகழ்வை உங்களுக்கும் சொல்கிறேன், சிறையில் இருக்கும் போது காலையில் சீக்கிரம் எழுந்து விட வேண்டும், அப்போதுதான் சாப்பிட  ஏதாவது கிடைக்கும்.  அதேபோல் கைதிகள் மலம் கழித்தால், அது வெளியில் போகும் வசதி, அப்போது இல்லை.  அதுவும் சிறையில் இன்னும் மோசம். காலையில்  கடைசி ஆளாக யார்  எழுந்திருக்கிறாரோ அவர்தான் மொத்த பேர் இறக்கி வைத்த மலத்தையும் அள்ளிக் கொண்டு போய் வெளியில் கொட்ட வேண்டும். இந்தத் தண்டனைக்கு பயந்தே  குறித்த நேரத்தை விட நாங்கள் சீக்கிரம் எழுந்து கொள்வோம்,  இது ஒரு சம்பவம். 
இன்னொரு  சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்றால், 'நாட்டை மீட்க நீங்கள் எதையெல்லாம் கொடுக்க விரும்புகிறீர்கள்?' என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்  எங்களிடம் கேட்ட போது அவருடைய எடைக்கு எடையாக நாங்கள் மூன்று பொருள்களைக் கொடுத்தோம். பணக்கட்டுகள், காய்கறிகள், தங்கக் கட்டிகள் இதுதான் அந்த மூன்று பொருள்கள். எதிரிகளை நோக்கி முன்னேறுவது எப்படி, பதுங்கிப் பாய்வது எப்படி என்றெல்லாம் இளைஞர்களான எங்களுக்குப் பயிற்சியைக் கொடுத்தவர் நேதாஜி.


உங்களின் 'கலகக்குரல்' பற்றிச் சொல்லுங்கள் !
அதுவும் பர்மாவில்தான் நடந்தது. ஆங்கிலேய அரசுக்கு எதிராக அடிக்கடி கலகம் விளைவித்தும், இந்திய சுதந்திரக் கொடியை ஆங்காங்கே ஏற்றி வைத்தும்  தொடர்ந்து கிளர்ச்சி செய்ததால், லீக் தலைவர் சி.எஸ்.நாயுடு, கர்னல் லட்சுமிபாய்  ஆகியோருடன் என்னையும் கொண்டு போய்த்தான் 1942-ல் ரங்கூன் சிறையில் அடைத்தார்கள். கங்காபாய், ஜேம்ஸ் ஆகிய எங்கள் படைப் பிரிவின் ஹவில்தார் ரேங்க் அதிகாரிகள் பலரும் அப்போதுதான் கைது ஆனார்கள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்தியாவில் வாழ்கிறோம் என்ற திருப்தியில் மற்ற வலிகள் எல்லாம் அடிபட்டுப் போய்விட்டது.
 

தேசத்தின் முக்கியத் தலைவர்களில் யார், யாரையெல்லாம் பார்த்து இருக்கிறீர்கள் ?
மகாத்மா காந்தி, நேரு என்று பலரைப் பார்த்திருக்கிறேன். நேருவுடன் குட்டை கவுன் போட்டு நடந்து வந்த இந்திரா காந்தியைப் பார்த்திருக்கிறேன்...
 

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்.

இதோ இந்தம்மாதான் என் மனைவி, பெயர் பாப்பாத்தி. எங்களுக்கு நடந்தது காதல் திருமணம். (வெட்கத்தில் பாப்பாத்தி முகத்தைப் பொத்திக் கொள்கிறார்). ஐந்து பிள்ளைகள், நான்கு பெண்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் என்று எல்லோரும் இந்த ஒரே வீட்டில்தான் மொத்தமாக வசிக்கிறோம்.
 

வியாசர்பாடி பகுதியில் நீங்கள் குடியேற்றமாகி எவ்வளவு ஆண்டுகள் ஆகிறது? இந்த வீட்டை சீரமைக்க  யாரும் முன்வர வில்லையா ? 

எனக்குப் பூர்வீகம் ராமநாதபுர மாவட்டம், முதுகுளத்தூர். சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்காக ரங்கூனில் இருந்து வந்த பலர் சேர்ந்து அந்தக் காலத்தில் உருவாக்கியதுதான் இந்த பி.வி.காலனி பகுதி.  நாட்டுக்காக வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடி விட்டு, இங்கே நம்முடைய சொந்த நாட்டில் யாரிடமும் போய் உதவி கேட்கிற எண்ணம்  வரவில்லை. பேரன், பேத்திகள் என்று பலர் திருமண வயதில் இருக்கிறார்கள், அனைவரும் பட்டதாரிகள்தான்.  யாருக்கும் அரசாங்க உத்தியோகமோ, பெரிய நிறுவன உத்தியோகமோ இல்லை. அனைவரும் இந்த ஒரே வீட்டில்தான் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் நிறைந்து இருப்பது அன்பும், மகிழ்ச்சியும் மட்டும்தான். அதுமட்டும் தான் இப்போது இருக்கிற ஒரே  சொத்து.

அடுத்த கட்டுரைக்கு