Election bannerElection banner
Published:Updated:

`ரொம்ப அநியாயங்க!’ - உயர்ந்த பஸ் கட்டணம், அதைவிட உயர்ந்த சாமான்யர்களின் உளவியல் குரல்!

`ரொம்ப அநியாயங்க!’ - உயர்ந்த பஸ் கட்டணம், அதைவிட உயர்ந்த சாமான்யர்களின் உளவியல் குரல்!
`ரொம்ப அநியாயங்க!’ - உயர்ந்த பஸ் கட்டணம், அதைவிட உயர்ந்த சாமான்யர்களின் உளவியல் குரல்!

`ரொம்ப அநியாயங்க!’ - உயர்ந்த பஸ் கட்டணம், அதைவிட உயர்ந்த சாமான்யர்களின் உளவியல் குரல்!

லகிலேயே மிகவும் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது பயணம்தான். நாம் இழந்துவிட்ட குழந்தைத்தனத்தை மீட்டெடுக்க பயணம் உதவியாக இருக்குமென்று நம்பலாம். பயணத்தை யார் யாரெல்லாம் ரசிக்கிறார்களோ, அவர்களெல்லாம் இன்னும் தங்கள் குழந்தைத்தனத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.  இப்போதும்,  `போகலாமா?’ என்ற ஒரு வார்த்தை போதும்.  சிலர் முகங்களில் திடீரென ஒரு வெளிச்சத்தைப் பார்க்கலாம். `ம்…போகலாமே’ என்று புறப்பட்டுவிடுவார்கள். அதிலும் பேருந்துப் பயணம் அலாதியானது.  ஒரு பேருந்தில் நாம் போகிறபோது வெவ்வேறு மனிதர்களைப் பார்க்கிறோம்.  ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு பயணக்களையைத் தரிசிக்கிறோம்.  பக்கத்தில் இருப்பவருடன் பேச்சுக் கொடுத்தால் போதும், அவருடைய வார்த்தைகள் நாம் இதுவரைப் பார்த்தே இருக்காத ஒரு புதிய பிரதேசத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். இந்தக் குட்டி சந்தோஷத்திலும் மண்ணைப் போட்டிருக்கிறது அண்மையில் உயர்ந்திருக்கும் பஸ் கட்டணம்!

ரொம்ப அநியாயங்க!

பயணம் சுவாரஸ்யம்தான் என்றாலும், நகரத்தில் அன்றாடப் பேருந்துப் பயணம் பெரும் அவஸ்தை. பட்டணத்தில் அரக்கப் பரக்க ஒரு பஸ்ஸைப் பிடித்து, இடிபட்டு, மிதிபட்டு `யோவ் எருமைமாடு...’ `தள்ளி நிக்க மாட்டியா?’, `கால மெறிக்கிறயே கண்ணு தெரியலை’, `உள்ளே போய்யா... நந்தி மாதிரி நடுவுல நின்னுக்குனு உயிரை எடுக்கிறியே...’, `நான் வேணும்னேவா மேல உழுறேன்... அந்தாளு தள்ளிட்டான்யா’, `யோவ்... கம்முனு கெட... அவ்ளோ சொகுசு வேணும்னா கார்ல போயேன்’… என நீள்கிற அர்ச்சனைகளைப் பேருந்துகளில் கேட்பது வழக்கம். ஒவ்வொருவர் அனுபவமும் வெவ்வேறு மாதிரி இருக்கலாம்.  ஆனால் சமீபத்தில், சென்னை முழுக்கப் பேருந்துகளில் எல்லோரும் கேட்ட இரட்டை வார்த்தைகள்  ரொம்ப அநியாயங்க...’

ஆறேழு ஆண்டுகளாக டிக்கெட் விலையில் மாற்றம் இல்லாமலிருந்தது குறிப்பிடத்தக்கது.  ஆனால், அத்தனை வருடங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அறுபது சதவிகிதத்திலிருந்து நூறு சதவிகிதம் வரை பஸ் பயணக் கட்டணத்தை உயர்த்தியது என்பது பொதுமக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

***

சொந்த அனுபவம்

பஸ் கட்டணத்தை உயர்த்திய ஓரிரு நாளிலேயே நானும் என் துணைவியாரும் சைதாப்பேட்டையிலிருந்து பட்டாபிராம் போக நேர்ந்தது. அசோக் நகர் வரை ஆட்டோவிலும் அங்கிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை பேருந்திலும் சென்று, அங்கிருந்து பட்டாபிராம் வரை செல்ல இன்னொரு பேருந்தைப் பிடித்தோம். பட்டாபிராம் பேருந்து நிலையத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் போகும்போது எதேச்சையாக பக்கத்திலிருந்தவர்கள் பேசியது காதில் விழுந்தது.

“டிக்கெட் விலையை இப்படி ஏத்திட்டா, நாம எப்படிப் பொழைக்கிறது?’’

“நம்மைப் பத்தி யாரு கவலைப்படுவாங்க? அததுல அடிச்ச கொள்ளை போதாதுன்னு இப்போ பஸ் டிக்கெட்டுலயும் கையைவெச்சிட்டானுங்க...”

“தெனமும் போய் வர்றதே பெரிய பாடா போச்சுன்னா, பூ வித்து எப்படிப் பொழப்பை நடத்துறது?”

“இனிமே லக்கேஜ்ஜுலயும் போட்டுத் தீட்டிடுவானுங்க...”

சீசன் டிக்கெட் எடுத்து, தினமும் மின்தொடர் வண்டியில் அலுவலகம் போய் வருகிற ஒருவனின் மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது அவர்களின் உரையாடல்.

“ஏம்மா... அங்கங்க பேருந்தை நிறுத்திப் போராடறாங்களே...”  என்றார் இன்னொருவர்.

“எங்கங்க… போலீஸு தடி எடுத்துக் கலைச்சிடுறாங்களே…”

``இதுக்கெல்லாம் நார்த் சைடுதான் லாயக்கு.  பஸ்ஸை ஒடைச்சிடுவானுங்க… பயப்பட மாட்டானுங்க… நம்ம ஊர்ல அதெல்லாம் நடக்காது...’’

அம்பத்தூரிலிருந்து பட்டாபிராம் போகும் வெள்ளை போர்டு (சாதாரணக் கட்டணம்) பேருந்தில் கூட்டம் இருமடங்காகியிருப்பதைச் சுட்டிக்காட்டி, விரைவு வண்டிகளில் கட்டணம் இன்னும் எவ்வளவு ஏறி இருக்கும் என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்தோம்.  புதுவை வரை, கன்னியாகுமரி வரை, பெங்களூர் வரை, மார்த்தாண்டம் வரை, நாகர்கோவில் வரை என்று அவரவரும் கணக்குச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஒரு மத்தியதர வர்க்கத்து ஆளுக்கு இருக்கிற மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, அந்தப் புறநகர் வாசிகளின் அன்றாடம் வேலை தேடி பக்கத்திலிருக்கும் பெரிய ஊருக்குச் சென்று பிழைப்பு நடத்துபவர்களின் மனநிலை. அவர்களின் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் தீச்சட்டியிலிருந்து தெறித்து விழுகிற நெருப்புக் கங்குகளாக இருந்தன. ஒரு வாரம், முடிந்தபோதெல்லாம் சென்னையைச் சுற்றிவருவது என்று முடிவெடுத்து மாநகராட்சிப் பேருந்துகளில் வலம் வர ஆரம்பித்தேன்.

***

இரண்டாம் நூற்றாண்டின் எந்திரம் பொருத்தப்பட்ட பெரிய இரும்புப் பெட்டி

வெவ்வேறு பேருந்துகளில், வெவ்வேறு பயணிகள் பேசிய வசனங்கள் சில...

“என்ன வண்டிங்க இதெல்லாம்..?  `மத்த மாநிலத்துல டிக்கெட் விலை எவ்வளவோ, அதே அளவுக்குத்தான் ஏத்தி இருக்கோம்’னு சொல்றாங்களே...  மத்த மாநிலத்துல இவ்வளவு மோசமான கண்டிஷன்லயா இருக்குங்க வண்டிங்க? எம்.எல். ஏ சம்பளத்தை ஏத்துற மாதிரி டிக்கெட் வெலையையும் ஏத்திடுவாங்களா...  கேப்பாரு இல்லியா?”

“ரெண்டாம் நூற்றாண்டுல கண்டுபிடிச்ச பெரிய தகர டப்பாவுல ஒரு சவர்லெட் இன்ஜினை இணைச்சுவெச்சாப்புல இருக்குங்க..இதுக்குப் பேரா பஸ்ஸு?”

“ஒரு தடவை ஒரு பஸ்ஸுல இருந்த ஓட்டையில கொழைந்தையே விழுந்திடுச்சேங்க...”

“பஸ் ஓடுறபோது பிரேக் அடிச்சா மாதிரி சத்தம்...  பிரேக் போட்டா நிக்காம ஓடுறது...”

“உண்மையிலேயே இதை ஓட்டுறவங்க மந்திரவாதிங்கதாங்க...”

``அட... அந்த மந்திரவாதிங்க சம்பளத்தை விடுங்க. அவங்களுக்குச் சேரவேண்டிய பென்ஷன்லேயே கையைவெச்சிடுதே இந்த அரசாங்கம்...  அப்புறம் ஸ்டிரைக் பண்ண மாட்டாங்களா?’’

கடைசியாக ஓர் ஆள் சொன்ன வாசகத்தை இங்கே குறிப்பிட்டால், இந்தக் கட்டுரையின் தாளகதி தப்பிவிடுமோ என்று பயப்படுகிறேன்.

“எவன் தாலியை அறுக்க இப்படி டிக்கெட் விலையை ஏத்துறானுவோ?”

***

பயணத்தின் சிறு இசையின்மீது விழுந்த பேரிடி!

ஓட்டுநர் வண்டியைத் திருப்புகிறபோது அந்த ஸ்டீயரிங் சுழற்றல் ஒரு கவிதை மாதிரிதான் இருக்கிறது.  அந்த லாகவச் சுழற்றலில் இந்த பூமி லேசாக அசைந்து கொடுக்கிறது.  அவ்வளவு நெரிசலிலும், அத்தனைக் குலுங்கலிலும் நடத்துநர் அரைக் கம்பியில் லேசாகத் தன் உடல் பாரத்தைச் சாத்தி, கால்களை அகல விரித்துப் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி, நாக்கில் எச்சில் தொட்டு டிக்கெட்டைக் கிழித்துக் கொடுக்கும் அழகே தனி. பேருந்தில் ஏறிய பயணி இதையெல்லாவற்றையுமா ரசிக்க முடிகிறது?  

வெற்றிலையை அடுக்குகிற மாதிரி அடுக்கி, நெருக்கியடிக்கும் பேருந்துப் பயணம் நமது பயணத்தின் ருசியையே அசூயையாக்கிவிடுகிறது.  பயணக் கட்டண உயர்வு ஒவ்வொரு பயணியின் மீதும் இடியைப்போன்று இறங்கியிருக்கிறது.  நேற்று டிக்கெட் விலையை குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. மக்கள் பயன்பெறவே கட்டண குறைப்பு என்கிறார் தமிழக முதல்வர். ஒரு நடுத்தர வர்க்கத்தின் சராசரி வருவாயில் இந்த டிக்கெட் விலை ஏற்றம் எத்தகைய இடி என்பது எல்லோரும் அறிந்தது. இதில் தமிழக அரசு செய்திருக்கும் கட்டண குறைப்பு என்பது வெறும் சால்ஜாப்பு என்பதே நிதர்சனம். 

இந்த முறைக் கட்டண உயர்வில் மிகப் பாதகமான இன்னோர் அம்சமும் கவலைக்குரியது.  இதுவரை முதல் பத்து நிலைகளுக்கு ஒவ்வொரு நிலைக்கும் (ஸ்டேஜ்) கட்டண உயர்வு இருக்காது.  முதல் பத்து நிலைகளில் ஆறு வகைகளிலேயே உயர்த்தப்படும். அடுத்த நிலைகளில் நான்கு வகைகளில் அமலாகும். இந்த முறை ரூம் போட்டு யோசித்து, கட்டண உயர்வை அமல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது முதல் பத்து நிலைகளில் ஒவ்வொரு நிலைக்கும் உயர்வு. அதன் பிறகான நிலைகளில் ஆறு வகையான உயர்வுக் கட்டணங்கள்.  இன்னொன்று இரண்டு கி.மீ இடைவெளியில் நிலை என்பது பொது விதி. பல நேரங்களில் ஒரு கி.மீ இடைவெளியிலேயே அடுத்த நிலை அமைக்கப்படுகிறது.  இதனால்தான் வேறெப்போதையும்விட இப்போது மிக மோசமான வகையில் மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு பயணியின் மனநிலையும் லக்கேஜைத் தவறவிட்ட உளவியல் சித்தப் பிரமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.   

தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வால் ஒரே நாளில் கூடுதலாக எட்டு கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும், இந்தப் பணம் ஒவ்வொரு குடிமகனின் வயிற்றெரிச்சலிலிருந்து வந்தது என்று அரசு உணருமா? ஒரு போக்குவரத்துத் துறை அதிகாரியின் கண்ணோட்டத்தைப் பார்த்தாலே, புரியாதவர்களுக்கும் ஒரு விஷயம் புரிந்துவிடும்.  அப்படி அவர் என்ன சொன்னார்?

“பொதுமக்களைப் பேருந்தில் பயணம் செய்யவைக்க வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள். இதன் மூலம் இருசக்கர, நான்கு சக்கர வாகன நெரிசல் குறையும்...”

இதையும் ஒரு பொது மனிதர் கிண்டல் அடிக்காமல் விடவில்லை.  ‘`அறிவுக்கொழுந்தைப் பார்த்தீங்களா?”

ஆனால், டெல்லியில் காற்று மாசைக் குறைக்க, வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க, பேருந்துக் கட்டணத்தைக் குறைக்கிறார்கள். ஆனால், தமிழகம் ஏன் தலைகீழாக யோகா செய்கிறது என்பது மக்களுக்கு இன்னும் புரியவில்லை.

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் ஓடுவதால் கட்டணங்களை உயர்த்துகிறார்களாம். அந்தத் துறையை ஊழலில் மூழ்கடித்துத் திணறவைப்பது யார்?  22,000 பேருந்துகளில் எத்தனை லட்சம் பயணிகள் இந்தச் சுமையைச் சுமப்பார்கள்?  அவர்களின் உள்ளம் நொடிந்து இடிந்துபோய் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் பதிலென்ன?

புதிதாக அரசியலில் குதிப்பவர்கள் எப்போது பேருந்துக் கட்டண அரசியல் பற்றிப் பேசுவார்கள் என்று சிலர் கேட்கிற கேள்விகளும் காதில் விழாமல் இல்லை. செவிடாக இருப்போம் என்று கங்கணம் கட்டி வந்தவர்களிடம் பதிலை எதிர்பார்க்க முடியாது என்று மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். பொதுமக்களின் வயிற்றெரிச்சலிலிருந்து வெளிவரும் மௌனத்தின் உளவியல், வாக்குச் சீட்டுகளைப் பாதிக்காது என்று சொல்வதற்கில்லை. நம் இனிய தமிழ் மக்களுக்கு என்று வாய்க்குமோ பயணச் சீட்டே வாங்கத் தேவையற்ற  ஒரு பொன்னுலகப் போக்குவரத்து.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு