Published:Updated:

மண்ணை எதிர்பார்க்காதே... தங்கத்தை எதிர்பார்! ஷிவ்கேராவின் மூன்று நம்பிக்கைக் கதைகள்! #MotivationStory

மண்ணை எதிர்பார்க்காதே... தங்கத்தை எதிர்பார்! ஷிவ்கேராவின் மூன்று நம்பிக்கைக் கதைகள்! #MotivationStory
மண்ணை எதிர்பார்க்காதே... தங்கத்தை எதிர்பார்! ஷிவ்கேராவின் மூன்று நம்பிக்கைக் கதைகள்! #MotivationStory

மண்ணை எதிர்பார்க்காதே... தங்கத்தை எதிர்பார்! ஷிவ்கேராவின் மூன்று நம்பிக்கைக் கதைகள்! #MotivationStory

ஷிவ் கேரா பீகாரில் பிறந்தவர். பல தன்னம்பிக்கை நூல்களை எழுதியவர். இவரது 'உங்களால் வெல்ல முடியும்' எனும் நூல் பல மொழிகளில் வெளியாகி, மில்லியன் கணக்கில் விற்பனையாகி பெரும் சாதனை புரிந்தது. தன்னம்பிக்கை சொற்பொழிவாளராக உலகையே வலம் வருபவர். இவரது நூல்கள் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்குப் பெரும் மனமாற்றத்தைத் தரவல்லவை. அவர் கூறிய மூன்று குட்டிக்கதைகள் உங்களை உற்சாகப்படுத்த..! 

 சிறுவன் டேவிட்டும் அசுரன் கோலியாத்தும் 

 ஒரு கிராமத்தில், ஓர் அரக்கன் இருந்தான். அவன் பெயர் கோலியாத். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான். ஒருநாள், டேவிட் என்ற 17 வயதுச் சிறுவன் தனது சகோதரர்களைப் பார்க்க வந்தான். 

சகோதரர்கள் அரக்கனுக்கு அஞ்சிக் கிடப்பதைக்கண்டு, ''நீங்கள் எல்லோரும் ஏன் கிளர்ந்தெழுந்து அரக்கனோடு போராடக் கூடாது? என்று  கேட்டான். அவனது சகோதரர்கள் திகிலடைந்துப் போய், ''அவன் மிகப் பெரியவனாக இருப்பதால் அவனை அடித்து வீழ்த்துவதென்பது முடியாத காரியம் என்பது உனக்குத் தெரியாதா?'' எனக் கேட்டனர். 

டேவிட்டோ, ''அதுதான் இல்லை! அவன் ஒன்றும் அடிக்க முடியாத அளவுக்குப் பெரியவன் இல்லை. ஆனால், அடித்தால் தவறாமல் அடிபடக்கூடிய அளவுக்குப் பெரியவன்'' என்று கூறினான். சொன்னபடியே அவன் கவண்கல்லைக் கொண்டே கோலியாத்தை வீழ்த்தினான். 

அதே அரக்கன்தான், ஆனால், 'மாத்தியோசி' கண்ணோட்டம். வெற்றிக்கு இந்த மாறுபட்ட கண்ணோட்டம் மிகவும் தேவை.

தங்கத்தைத் தேடி...

ஸ்காட்லாந்து நாட்டுச் சிறுவனாக இருந்தபோதே அமெரிக்கா வந்த ஆண்ட்ரூ கார்னேஜி முதலில் மிகமிகச் சாதாரண வேலைகளைச் செய்யத் தொடங்கினார். இறுதியில், அவர் அமெரிக்காவின் மாபெரும் இரும்புத் தயாரிப்பாளர்களில் ஒருவராக ஆனார்.

ஒரு சமயத்தில், 43 கோடீஸ்வரர்கள் ஒன்றாகச் சேர்ந்து அவருடன் வேலை செய்து வந்தார்கள்.  ஒருவர் கார்னேஜியிடம், ''நீங்கள் எப்படி ஆட்களைத் திறமையாக கையாள்கிறீர்கள்?'' என்று கேட்டார். 

''ஆட்களைக் கையாள்வது என்பது தங்கத்தை வெட்டி எடுப்பதைப்  போன்றது. ஓர் அவுன்ஸ் தங்கத்தைப் பெற டன் டன்னாக மண்ணை அகற்ற வேண்டும். ஆனால், தோண்ட ஆரம்பித்துவிட்டால், நீங்கள் மண்ணை எதிர்பார்த்துத் தோண்ட மாட்டீர்கள்;  மாறாக தங்கத்தை எதிர்பார்த்தே தோண்டுவீர்கள்'' என்று பதிலளித்தார் ஆண்ட்ரூவ் கார்னேஜி.

சிலர் எப்போதும் குறையைத்தான் பார்ப்பார்கள் !

ஒரு சமயம், ஒரு வேட்டைக்காரன் நீர் மேல் நடக்கும் நாயை வாங்கி வந்தான். அந்த நாயின் செயலை அவனால் நம்ப முடியவில்லை. 

தனது நண்பர்களிடம் தனது புதிய நாயைக் காட்டிப் பெருமையடிக்கலாம் என்று எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டான். ஒரு நாள் அவன் தனது நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு வாத்து வேட்டைக்குச் சென்றான்.  அவர்கள் சில வாத்துகளைச் சுட்டனர். 

தாங்கள் சுட்டுக் கொன்ற அந்தப் பறவைகளை ஓடிப்போய் எடுத்து வருமாறு, அந்த வேட்டைக்காரன் தனது நாய்க்கு ஆணையிட்டான். அந்த நாய் நீரின்மேல் ஓடி ஓடிப் பறவைகளைக் கொண்டுவந்த வண்ணம் இருந்தது. 

வேட்டைக்காரன் அந்த அதிசய நாயைப் பற்றி, நண்பன் ஏதாவது சொல்ல மாட்டானா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வந்தவன் வாயையே திறக்கவில்லை. அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவன் தனது நண்பனிடம், ''எனது நாயை கவனித்தாயா?'' என்று கேட்டான். 

அதற்கு அவனது நண்பனோ, ''ஆமாம்,  உன் நாய்க்கு நீந்தத் தெரியவில்லை'' என்று பதிலளித்தான்.

இப்படிப்பட்ட மனிதர்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். பாராட்டுவதற்கு பரந்த மனோபாவம் வேண்டும். அதை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது.

அடுத்த கட்டுரைக்கு