Published:Updated:

குள்ளர் குகை, மத்தி மரம், பீமன் குளித்த அருவி... ஜாலியோ ஜாலி ஜவ்வாது மலை! ஊர் சுற்றலாம் வாங்க பாகம் 10

குள்ளர் குகை, மத்தி மரம், பீமன் குளித்த அருவி... ஜாலியோ ஜாலி ஜவ்வாது மலை! ஊர் சுற்றலாம் வாங்க பாகம் 10

குள்ளர் குகை, மத்தி மரம், பீமன் குளித்த அருவி... ஜாலியோ ஜாலி ஜவ்வாது மலை! ஊர் சுற்றலாம் வாங்க பாகம் 10

குள்ளர் குகை, மத்தி மரம், பீமன் குளித்த அருவி... ஜாலியோ ஜாலி ஜவ்வாது மலை! ஊர் சுற்றலாம் வாங்க பாகம் 10

குள்ளர் குகை, மத்தி மரம், பீமன் குளித்த அருவி... ஜாலியோ ஜாலி ஜவ்வாது மலை! ஊர் சுற்றலாம் வாங்க பாகம் 10

Published:Updated:
குள்ளர் குகை, மத்தி மரம், பீமன் குளித்த அருவி... ஜாலியோ ஜாலி ஜவ்வாது மலை! ஊர் சுற்றலாம் வாங்க பாகம் 10

ஊட்டிபோல் மிகப் பெரிய மலைவாச ஸ்தலம் ஜவ்வாது மலையில் (javvadhu hills) கிடையாது; ஜில்லென்ற குளிரில் காதல் மனைவியுடன் கழிக்கச் சிறந்த ஹனிமூன் ஸ்பாட் கிடையாது; வெரைட்டியாக வெளுத்துக்கட்ட உணவகங்கள் கிடையாது; குடும்பத்தோடு சென்று தங்க வதவதவென காட்டேஜ்கள் இருக்காது; ஆத்திர அவசரத்துக்குப் பேச மொபைல் நெட்வொர்க் இருக்காது; எந்த நேரம் எந்த மிருகம் வருமோ என்கிற த்ரில்லிங் இருக்காது 

ஆனால், வரலாற்றுச் சிறப்பில் விழி விரிய வைத்து, சதா டென்ஷனாகிக்கொண்டே இருக்கும் மென்டல் மனதுகளுக்கு ரிலாக்ஸானதொரு ஜிலீர் அனுபவத்தைத் தரும் ஜவ்வாது மலை. ‘மண் மணக்க மணக்க ஒரு கிராமத்து ட்ரிப் அடிக்க வேண்டும்; ஐடியா ப்ளீஸ்...’ என்று என் ஆசையை ஃபேஸ்புக்கில் பதிவிட்டபோது, ஜவ்வாது மலைக்கு அதிக ஓட்டுகள் விழுந்திருந்தன. 

‘எதையும் ப்ளான் பண்ணாமப் பண்ணக் கூடாது’ என்று ‘போக்கிரி’ வடிவேலு ஸ்டைலை ஃபாலோ செய்பவர்கள், பொறுமையாகவும் ஜவ்வாது மலை டூரிஸத்தை என்ஜாய் பண்ணலாம். ‘பத்து எண்றதுக்குள்ள’ விக்ரம் ஸ்டைலைக் கடைப்பிடிப்பவர்கள், சென்னையிலிருந்து ‘சட் புட்’ எனக் காலையில் கிளம்பி நள்ளிரவுக்குள்ளும் வீடு திரும்பலாம். எல்லாம் உங்கள் சாய்ஸ். நான் வடிவேலு ரசிகன். 

அகோரப் பசியோ இல்லையோ... சோறு சாப்பிடும்போது, ஒவ்வொரு பருக்கையையும் ரசித்து ருசித்து, அதைப் பயிரிடும் விவசாயிகளை நினைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். வயிறு மனது எல்லாமே நிறையும். எனக்கு ஜவ்வாது மலை அப்படி ஒரு திருப்தியைத் தந்தது  என்றுதான் சொல்ல வேண்டும். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையே ‘முல்லைக்கு எதுக்குய்யா தேரு... குச்சி போதாதா?’ என்று விமர்சிப்பவர்கள் இருக்கும்போது, ‘அப்படி என்னத்தை ஜவ்வாது மலையில கண்டுட்டீங்க... போங்கய்யா’ என்று குறும்பாக கமென்ட் போடும் பேர்வழிகள் உண்டு. அவர்களுக்காகத்தான் முதல் பாரா.

இனி ஓவர் டு ஜவ்வாது மலை. 

சென்னையிலிருந்து ஜவ்வாது மலைக்கு மூன்று வழிகள் உண்டு. வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் வழியாக ஜவ்வாது மலைக்குப் போவது ஒரு வழி. திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், ராணிப்பேட்டை வழியாக வேலூர் போய் மறுபடியும் திருப்பத்தூர் ரூட்டைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு வழி. திருவண்ணாமலை, செங்கம் வழியாகப் போவது வேறொரு ரூட். 

நெடுஞ்சாலைகளில் கார்களில் பறப்பது அருமையான, த்ரில்லிங்கான, சுகமான விஷயம். வேலூர் ரூட்டைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு உயிர் காக்கும் டிப்ஸ் ஒன்று தருகிறேன். பூந்தமல்லி தாண்டி சரியாக இரண்டாவது டோல் கழித்து அதாவது வாலாஜா டோலுக்கு முன்பு, கார்களில் 100 கி.மீ வேகத்தில் பறப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். கமர்ஷியல் சினிமாக்களில் எதற்கென்றே தெரியாமல் சில ஹீரோயின்கள் இருப்பதுபோல், இந்த நெடுஞ்சாலைகளில் தண்டமாக சில டோல்கள் உண்டு. ‘ஹைவேஸ்தானே.. பள்ளமெல்லாம்  இருக்காது’ என்கிற நம்பிக்கையில் ஆக்ஸிலரேட்டரை மிதித்துப் பறந்தேன். ஆனால், சிட்டியைவிட மோசமாக இருந்தது சாலை. திடீரென முளைத்த ஒரு பள்ளத்தில் இறங்கி... 'Good Tyre' என்று நல்ல பெயர் பெற்றிருந்த ‘Good Year’ டயரே வெடித்து... கார் கடாமுடாவென கவர்ச்சி நடிகைகள்போல் ஆடி... பொறுமையாக காரை நிறுத்தி... ஸ்டெஃப்னி மாட்டி... மறுபடியும் இந்தக் கட்டுரை எழுதியது... கோடான கோடி நன்றிகள் யேசப்பா! 

நம்மைப் போலவே வேறொரு குடும்பம் ஒன்றும் இதே சிக்கலுக்கு ஆளாகி, ஸ்டெஃப்னி மாட்டிக்கொண்டிருந்தார்கள். 'Why Blood... Same blood' என்று சோகத்திலும் நக்கலடித்துக்கொண்டோம். 

பதற்றத்தோடு டோலில் இறங்கி சண்டை போட்டேன். ‘‘சார், நாங்க என்ன சார் பண்றது. வாலாஜாவுல ஹெட் ஆஃபீஸ்லதான் கம்ப்ளெய்ன்ட் பண்ணணும். வேணும்னா நீங்க பணம்லாம் கட்ட வேண்டாம் சார். கிளம்புங்க!’’ என்று கேட்டைத் திறந்து புத்தாண்டு ஆஃபர் தந்தார்கள். 5,000 ரூபாய் டயருக்கும், விலை மதிப்பில்லாத உயிருக்கும் அரைமணி நேரம் சண்டை பிடித்து 50 ரூபாய் மிச்சம் பிடித்தேன். ஆனால், திரும்பி வரும்போது பணம் கட்டினேன் என்பதை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. 

வேலூரிலிருந்து ஆம்பூர் செல்லாமல், ஆலங்காயம் செல்லும் வழியில் 30 கி.மீ தாண்டி அமிர்தி பூங்கா என்ற மிருகக்காட்சி சாலை இருப்பதாகச் சொன்னார்கள். சாலை, எஸ்யூவிகளுக்கே செம டஃப் கொடுத்தது. நடுநடுவே என் செடான் காரில் ஆஃப்ரோடெல்லாம் பண்ணினேன். ஒரு கட்டத்தில் காருக்கே இது பழகியிருக்க வேண்டும். ஒருவழியாகத் தள்ளாடித் தள்ளாடி அமிர்தி வந்துவிட்டேன். பூங்காவுக்கான என்ட்ரன்ஸே காடுபோல் மிரட்டியது. ஆனால், எதிர்பார்ப்புகளையெல்லாம் பொய்யாக்கித் தூங்கி வழிந்தது அமிர்தி மிருகக் காட்சி சாலை.

விடுமுறை நாள்களில் ஒரு நாளுக்கு 5,000 பேர் வரை வருவதாகப் பூங்கா காப்பாளர் ஒரு சர்வே கொடுத்தார். ஆனால், ஐந்து பேர்கூட என்ஜாய் செய்ய முடியாமல், பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல், குழந்தைகளுக்கான விளையாட்டு ராட்டினங்கள் எல்லாம் நூலகத்தில் பராமரிக்கப்படாத பழைய நாவல் போல் இருந்தது. மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது, இனி சுற்றுலாத் தலங்களையும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கவனத்தில் கொண்டால் நல்லது. 

பெரிய இயக்குநர் படங்களுக்கு எதிர்பார்த்துப் போனால், பெரிய பல்பு கிடைக்குமே... அதுபோல், வண்டலூரை நினைத்துக்கொண்டு டிக்கெட் வாங்கி வலது காலை வைத்தேன். மயில், கோழி, பாம்புகள், மான்கள், நரி, முதலை என்று லோ-பட்ஜெட் விலங்குகளைத்தான் காட்சிக்கு வைத்திருந்தார்கள். தெருவிலேயே பார்க்கும் சாதாரண கொக்கு ஒன்றை, தலை சாய்த்து ரசித்து ரசித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் சிலர். மொத்தமே அரைமணி நேரத்தில் எல்லா விலங்குகளையும் விசிட் அடித்து வெளியே வந்துவிட்டேன். யானை, புலி, சிறுத்தை எல்லாம் காட்டுக்குள்ளேயே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

அமிர்தி பூங்காவின் இறக்கத்தில் கொட்டாறு என்றொரு அருவி இருப்பதாகச் சொன்னார்கள். சந்திர கிரகணம்கூட சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது வரும்; கொட்டாற்றில் தண்ணீர் வருவதற்கு எத்தனை ஆண்டுகள் என்று தெரியவில்லை என்றார்கள். எப்போதோ ஒரு தடவை இந்தப் பக்கம் நான் நண்பர்களுடன் வந்திருந்தபோதும், தண்ணீர் இல்லாமல் கொட்டாறு கொட்டக் கொட்ட விழித்திருந்தது. ஆனால், அடர்ந்த காட்டுக்கு நடுவே அருவி அமைந்திருந்த இடம் ஆஸம்! அமிர்தி காடுகளில் அருமையான ட்ரெக்கிங் ஆப்ஷனும் உண்டு. முன் அனுமதி தேவை.

பஸ்ஸில் அமிர்திக்கு வருபவர்கள், கண்ணமங்கலத்திலிருந்து மினி பஸ்ஸைத் தேர்ந்தெடுக்கலாம். உணவுப் பொட்டலங்களைக் கையோடு எடுத்து வருவது நல்லது. இங்கே ஹோட்டல்கள் மருந்துக்குக்கூட கிடையாது. செவ்வாய்க் கிழமை அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை என்பதையும் கவனத்தில் கொள்க. 

காட்டுப் பாதை திகிலாக இருந்தது. திடீரென வயல் பாதை க்ளிஷேவாக இருந்தது. மறுபடியும் மலைச்சாலை ரம்மியமாக இருந்தது. கார், கிழக்குத் தொடர்ச்சி மலையின் மீது ஏற ஆரம்பித்தது நன்கு தெரிந்தது. அங்கங்கே சில வாகனங்கள் எதிர்பட்டன. எப்போதுமே ஏறும் வாகனங்களுக்குத்தான் வழி விட வேண்டும் என்கிற விதி எந்த டிரைவருக்கும் தெரிந்திருக்காதுபோல! செம அட்வென்ச்சராக இருந்தது. சில ஹேர்பின் பெண்டுகள் வேறு. 

செங்கம் வழியாக வந்திருந்தால், எக்கச்சக்க வியூ பாயின்ட்கள் கிடைத்திருக்கும். இங்கே பெயர் சூட்டப்படாத படத்துக்கு ஷூட்டிங் நடப்பதுபோல், பெயரிடப்படாத ஒரு வியூ பாயின்ட் ரொம்பப் பிரசித்தம். திருவண்ணாமலை தீபத்தை இங்கிருந்தே பார்க்கலாம். நான் 3,000 அடி உயரத்தில் இருந்ததாக கூகுள் சொல்லியது. ஜமுனா மரத்தூர் வந்திருந்தது. இதுதான் ஜவ்வாது மலையின் தலைநகரம். கிழக்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் புள்ளி. ஜமுனா மரத்தூரைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இங்கே 2G இன்டர்நெட் ஸ்பீடு வேண்டுமானால் மெதுவாகக் கிடைக்கலாம். ஆனால், சுவாசிக்க சுத்தமான காற்று 4G ஸ்பீடில் நுரையீரலை நிரப்புகிறது. 

இருந்தாலும், திடீரென சாலையைக் கடக்கும் யானைக் கூட்டம், வாகனச் சத்தம் கேட்டதும் மிரண்டோடும் காட்டெருமைகள், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் மான்கள், மயில்கள் என எந்த உயிரினமும் ஜவ்வாது மலையில் இல்லை என்பது பிறகுதான் எனக்குத் தெரிந்தது. பெண்கள் இல்லா வீடுபோல, கடவுள் இல்லா ஆலயம்போல... விலங்குகள் இல்லாத ஓர் அடர்ந்த காட்டில் மௌனம் மட்டும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. ‘‘திருவண்ணாமலைக் காட்டுல மொத்தம் 30 யானைங்களுக்கு மேல இருந்ததுங்க. பத்து வருஷத்துக்கு முன்னால வெறும் 9 யானைங்க இருந்துச்சு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால மிச்ச யானைகளையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க!’’ என்றார் ஜமுனாமரத்தூர் கிராமவாசி ஒருவர். ஆனால், அதிசயமாக சில பெரிய பெரிய பாம்புகள் லஞ்ச் டைமில் வயிற்றை நிரப்பிவிட்டு, சாலையைக் கடப்பதைப் பார்த்து திகிலாக இருந்தது.

ஜவ்வாது மலையில் விவசாயம்தான் மூச்சு. இங்கு தினை, சாமை, தேன், வரகு, மிளகு என்று விவசாயம் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. 14 கி.மீ தொலைவில் மண்டப்பாறை, பட்டறைக் காடு, மலைக்கொள்ளை, வாளியம்பாறை என்று சில கிராமங்கள் உண்டு. இங்கேதான் குள்ளர் குகைகள் இருக்கின்றன. இவை குள்ள மனிதர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றைச் சொல்கின்றன. வாளியர்கள் எனும் பெயர் கொண்ட அந்த இனத்தவர்களின் மொத்த உயரமே மூன்று அடிதானாம். கட்டடக் கலையும், இன்ஜினீயரிங் படிப்பும் இல்லாத காலத்திலேயே வெறும் பாறைகளைக் கொண்டு ‘ஏழைக்கேற்ற எள்ளுருண்டை’போல், தங்கள் உயரத்துக்கேற்ற கல் வீடுகளைக் கட்டிக் குடியிருந்ததற்கான அடையாளம் அது. பாறையைக் குடைந்தோ, மலையை உடைத்தோ இந்த வீடுகளைக் கட்டவில்லை அந்தக் கால குட்டி இன்ஜினீயர்கள்.

மலையில் இருக்கும் கற்களைப் பொறுக்கி அழகாக அடுக்கி, மேலே கூரை அமைத்து, குகைபோல் வீடு அமைத்துள்ளார்கள். குட்டிக் குட்டி சதுரப் பாறைகளுக்கு நடுவே ஒரு துளை; இதுதான் வாசல். வாசலில் ஒரு பெரிய பாறை. இதுதான் கதவு. அலிபாபா குகைபோல இதை மந்திரமெல்லாம் உச்சரிக்காமல், சும்மாவே திறந்து மூடிக்கொள்ளலாம். இங்கேதான் வாளியர்கள் எனும் குள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். அதற்காகத்தான் வாளியம்பாறை என்று இந்த இடத்துக்குப் பெயரே வந்ததாகவும் வரலாறு சொல்கிறது. இயற்கைச் சீற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள கொத்துக் கொத்தாகக் கற்களை அடுக்கி, பேஸ்மென்ட்டையும் கூரையையும் கெத்தாகக் கட்டியிருக்கிறார்கள் வாளியர்கள். சுதந்திரம் வாங்கிய ஆண்டுகளுக்கு இணையாகச் சரிந்து விழுந்த சென்னை விமான நிலையக் கூரை ஞாபகம் வந்தது. கத்துக்கிடணும்யா!

ஜவ்வாது மலைக்கு இன்னொரு சிறப்பு - காவலூர். ஜமுனா மரத்தூரிலிருந்து மோசமான சாலையைக் கடந்து 11 கி.மீ தாண்டினால் வருகிறது வைனு பாப்பு அப்ஸர்வேட்டரி. வானியல் பற்றிப் படிக்கும் காஸ்மாலஜி மாணவர்களுக்கான வரப்பிரசாதம் இது. வைனு பாப்பு என்பவர், பிரபலமான இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர். அவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. முன்கூட்டியே அனுமதி வாங்கி உள்ளே போனோம். உள்ளே ஃபேன்டஸியான ஹாலிவுட் படங்களில் வருவதுபோல் திடீரெனத் தரையே விலகி, வானம் அப்பட்டமாகத் தெரிந்தது. படா சைஸில் இருந்த ஒரு கருவியைக் காட்டி இதுதான் மெகா சைஸ் டெலஸ்கோப் என்றார்கள். ஆசியாவின் மிகப் பெரிய தொலைநோக்கி இதுதானாம். நட்சத்திரங்கள், வானம், சூரியன், நிலா பற்றி தமிழிலேயே பாடம் எடுத்தார்கள். வியப்பாக இருந்தது. பள்ளி மாணவர்களுக்கு இது உபயோகமான டூராக இருக்கும். 

‘வானத்தில் இருக்கும் நிலாவுக்கு யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால், அதைப் பக்கத்தில் வைத்து அழகு பார்க்க நினைப்பது முட்டாள்தனம்’ என்று ஏதோ ஒரு படத்தில் வசனம் வரும். அதைப் பொய்யாக்குகிறது இந்த டெலஸ்கோப். பக்கத்து வீட்டில் எட்டிப் பார்ப்பதுபோல் நிலவைப் பார்த்து ரசிக்கலாம். குட்டிக் குட்டியாக 6 கோபுரங்கள் இருந்தன. ஜவ்வாது மலைக்குப் புதுசாக வருபவர்கள், ‘என்னாது இது... சிவன் கோயிலா’ என்று நினைக்க வாய்ப்புண்டு. எல்லாமே சைஸ் வாரியாக டெலஸ்கோப்கள். ‘வானம்தான் எல்லை; அது தூரத்தில் இல்லை’ என்கின்றன இந்த டெலஸ்கோப்கள்.

சின்ன டெலஸ்கோப் ஒன்றில், ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் வானத்தில் நட்சத்திரங்களைப் பக்கத்தில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். விவரம் தெரியாமல் சிலர், காலை - மாலை என்று பல மணி நேரங்களுக்கு முன்னரே வந்து, இலவச மானியம் பெறுவதுபோல் தேவுடு காத்துக்கொண்டிருந்தனர். வானியல் பற்றிய மக்களின் ஆர்வம் ஆச்சர்யமாக இருந்தது. பொறுமையில்லாத சிலர், ‘‘வானத்துல ஸ்ட்ரெய்ட்டாவே நட்சத்திரத்தைப் பார்த்துக்க வேண்டியதுதான்’’ என்று வண்டியைக் கிளப்பினர். ஏனென்றால், இருட்டிய பிறகு மலை இறங்கி ஊர் போய்ச் சேருவது, உங்கள் சொந்த ரிஸ்க்.

ஜவ்வாது மலைக்கு இன்னொரு பெருமை உண்டு. மேல்பட்டு கிராமம். செங்கம் செல்லும் வழியில் 25 கி.மீ தாண்டிப் போக வேண்டும். இன்னும் மாடர்னாகாமல், நுங்குவண்டி ஓட்டும் சிறுசுகள், எருமைச் சாணி தட்டும் அப்பத்தாக்கள், ‘செங்கத்துக்குக் கூலி வேலைக்குப் போயிட்டு வந்துடறேன் ஆத்தா’ என்று கிளம்பும் சிக்ஸ்பேக் இளசுகள், பாக்கு இடிக்கும் பாட்டிகள், பனையேறும் தாத்தாக்கள், திண்ணை வீடுகள், பஞ்சாயத்து மேடைகள், குன்றின் மேல் இருக்கும் முருகன் கோயில் மணிச் சத்தம் என்று பாரதிராஜா படங்களை புளூப்ரின்ட் எடுத்ததுபோல் இருக்கிறது. 

இங்குள்ள நீர்மத்தி மரம் செம ஃபேமஸ். மத்தி மீன் தெரியும்; அதென்ன மத்தி மரம்? பல பெருமைகளை உள்ளடக்கிக்கொண்டு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும் நீர்மத்தி மரத்தின் வரலாற்றுக்கும் தோற்றத்துக்கும் ஏகப்பட்ட கதைகள் உண்டு. புராணப் படங்களில் வருவதுபோல், இதற்கு 1000 வயது என்கிறார்கள் ஒரு சிலர். அதாவது, கிட்டத்தட்ட ராஜராஜ சோழர்கள் காலம். இன்னும் சிலர் 650 வருடம் என்கிறார்கள். கிட்டத்தட்ட 15 பேர் கை சேர்த்து சுற்றி நிற்கும் அளவு தடிமன் கொண்டது இந்த மத்தி மரம். சுமார் 20 பெருங்கிளைகளையும், நூற்றுக்கணக்கான சிறுகிளைகளையும் கொண்டிருக்கிறது. மரத்துக்குக் கொஞ்ச தூரம் தள்ளி நிறுத்திக் காரை நிறுத்திவிட்டு செல்ஃபி எடுக்கலாம் என்று நினைத்தபோது, காலில் ஏதோ தட்டியது. நீர்மத்தி மரத்தின் வேர் என்றார்கள். அதாவது இதன் வேர்கள், 80 மீட்டர் வரை பரந்து விரிந்திருக்கின்றன. இதய நோய்க்கு இந்த மத்தி மரத்தின் இலைகள் பெரிதும் பயன்படும் என்றார் வனச்சரக அதிகாரி ஒருவர். 

‘வெறும் படிப்பும் வரலாறுமா இருக்கே.. என்ஜாய் பண்ண இடமில்லையா’ என்று முகம் தொங்கும் பேர்வழிகளுக்கு, ஜவ்வாது மலையில் ‘கோமுட்டேரி’ என்கிற படகுக் குழாம் ‘உள்ளேன் ஐயா’ என்று கை தூக்குகிறது. திருவிழா இல்லாத நேரங்களில் 5 - 10 ரூபாய்க்குத் தெருவில் மேனுவல் ராட்டினங்களில் வசூலிப்பதுபோல், ரொம்பக் கம்மியாக வசூலித்தார்கள். தமிழ்நாட்டின் மிக மலிவான படகுச் சவாரியாக இது இருக்கலாம். ஆனால், விபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை என்று 'கண்டிஷன்ஸ் அப்ளை' போர்டு போட்டிருந்தார்கள். கொஞ்சம் டர் அடித்தது. 5 பேர் கொண்ட படகுச் சவாரிக்கு 75 ரூபாய்தான் கட்டணம் வாங்கினார்கள். லேசான மழைத் தூறலில், இந்த கோமுட்டேரியில் போட்டிங் போனால், அற்புதமாக இருக்கலாம். இந்த மலையிலிருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டல நதி, மிருகண்டா நதி என்று பல நதிகள் உற்பத்தியாகின்றன. அணைகள் கட்டும் பணி நடந்து வருவதாகச் சொன்னார்கள். 

இது தவிர, குளியல் பார்ட்டிகளுக்கு 2 கி.மீ தொலைவில் பீமன் அருவி என்றோர் இடம் வந்தது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன், இந்த அருவியில்தான் முட்டி போட்டுத் தண்ணீர் குடித்தாராம். அதற்காக இதற்கு ‘பீமன் அருவி’ என்று பெயர் வந்ததாம். ஆனால், நான் சென்றபோது தண்ணீர் வரத்தே இல்லை. பட்டினி கிடக்கும் ஏழையின் வயிறுபோல் காய்ந்து கிடந்தது. (படம் பழசு) ‘‘எப்போதான் தண்ணி வரும்?’’ என்று விசாரித்தேன். ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பீமன் அருவிக்கான சீஸன் என்றார்கள். பக்கத்தில் இருக்கும் அமிர்தி அருவிக்கும் இதே கண்டிஷன்ஸ். ஆனால், அடர்ந்து கிடக்கும் காட்டில் பெயர் தெரியாத விதவிதமான மரக்கிளைகளினூடே பரவிவரும் குளுகுளு காற்றும், மலையைச் சுற்றி மூலிகை மணமும் ஜவ்வாது மலையில் எப்போதுமே அடித்துக்கொண்டிருக்கிறது. கூடவே வரலாற்று வாசமும்!