Published:Updated:

``மீனை லபக்குனு புடிச்சுக்கிட்டு போனாதான் வீட்ல சோறு'' - காவிரியும் மீன்பிடிச் சிறுவர்களும்

``மீனை லபக்குனு புடிச்சுக்கிட்டு போனாதான் வீட்ல சோறு'' - காவிரியும் மீன்பிடிச் சிறுவர்களும்
``மீனை லபக்குனு புடிச்சுக்கிட்டு போனாதான் வீட்ல சோறு'' - காவிரியும் மீன்பிடிச் சிறுவர்களும்

``சந்தனக்காட்டு வீரப்பனைப் பிடிக்க போலீஸ் ரொம்ப சிரமப்பட்டுச்சாமே... வீட்டுல சொல்வாங்க. அதைவிட கஷ்டம், காவிரியில் கைகளாலத் துலாவி மீன் பிடிக்கிறதுண்ணே. ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு இடத்துல ஒளிஞ்சு கிடக்கும். அதை வேவு பார்த்து, கையாலத்  துலாவிப் பிடிக்கிறக்குள்ளே பெரும்பாடு பட வேண்டியிருக்கும். ஒரு மீனைப் பிடிக்க மூணு மணி நேரம்கூட ஆகும். டிமிக்கி கொடுத்துட்டு ஓடப்பார்க்கும் மீனை லபக்குனு புடிச்சுட்டு போனாதான் எங்க வூட்டுல சோறு. சமயத்துல இந்த மீனேதான் சோறு" - உடம்பில் படர்ந்து கிடக்கும் சேற்றோடு, சுட்டெரிக்கும் வெயிலில் மீன்பிடிக்கும் மூன்று சிறுவர்கள் இப்படி விவரிக்கிறார்கள்.


 

கரூர் மாவட்டம், கடம்பன்குறிச்சி பகுதிக்கு வேறு வேலையாகப் போன நம் கண்களில்தான், இந்த மூன்று சிறுவர்களும் சிக்கினார்கள். எத்தாம் பெரிய டெல்டா விவசாயத்துக்கு காலம்காலமாகத் தண்ணீர் தந்த காவிரி, 'பண முதலைகளின்' மணல் கொள்ளை வெறி கையில் சிக்கி, அங்கங்கே ராட்சத குழிகளாகி, அதில் குட்டைகளாகத் தண்ணீர் தேங்கி உருக்குலைஞ்சு கிடக்கு. அப்படிப்பட்ட ஒரு காவிரிக் குட்டையில்தான் இந்தச் சிறுவர்கள் மீன் பிடிச்சுட்டு இருந்தாங்க. சூர்யா, கோகுல், தமிழரசன் என்ற அந்த மூன்று சிறுவர்களும் கடம்பங்குறிச்சியைச் சேர்ந்தவங்க.


 

"காலையிலிருந்து மீன் பிடிக்கிறோம்ண்ணே. 11 மணிக்குள்ளே ஆளுக்கு ஒரு கிலோ மீன்களைப் புடிச்சுட்டு போய், மதியச் சாப்பாட்டை மீன் குழம்போடு வெளுத்து வாங்க நினைச்சோம். ஆனால், மணி 3 ஆவுது. மொத்தமா ஒருகிலோகூட தேறலை" என்று சலித்துக்கொள்கிறான் மூவரில் பெரியவனான சூர்யா.


 

"நமக்கு படிப்பு சுத்தமா மண்டையில ஏறலண்ணே. ஏழாவதோட நிறுத்திட்டு,மேஸ்திரி வேலைக்குப் போறேன். எங்க வீடுகள்ல கஷ்டம்னா கஷ்டம். வீட்டுல காய்கறி இல்லாதப்போ அம்மா என்னைய கூப்புட்டு, 'காவிரியில் மீன் பீறாஞ்சுட்டு வாடா'னு சொல்வாங்க. அன்னைக்கு மட்டும் வேலைக்கு லீவு போட்டுட்டு பசங்களோடு வந்துருவேன். பல நாள் வீட்டுல அரிசி, பருப்பு இருக்காது. அன்னைக்கெல்லாம் விடியகாலமே காவிரிக்கு வந்து வெறியோடு மீன்களைப் புடிப்போம். அன்னைக்கு முழுக்க இந்த மீன்கள் மட்டுமே சோறு, தொட்டுக்க, குழம்பு எல்லாம்" என்றான்.


 பாசிகள் நிறைந்து கிடந்த தண்ணீரில் ஏதோதோ வித்தை செய்து, ஒரு மீனைப் பிடித்துவிட்ட கெத்தோடு கரை ஏறினான் கோகுல்.
"நான் பக்கத்தூர் பள்ளிக்கூடத்துல ஏழாவது படிக்கிறேன் அண்ணே. நல்லா படிப்பேன். வீட்டுல வறுமை. அதனால், வயித்துப் பாட்டுக்காக மீன் பிடிக்க வருவேன். ஓடுற தண்ணிக்குள்ளே மீனைப் பிடிக்குறது சுளுவான காரியம் இல்லை. வீரப்பனைப் போலீஸ் பிடிக்க பட்ட கஷ்டத்தைவிட, ரொம்ப கஷ்டம். இங்கே கெண்டை, கெளுத்தி, ஆரா, விலாங்கு, அவ்ரி, ராட்டுனு பல வகை மீன்கள் இருக்கும். ஆனால், ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு முக்குல ஒளிஞ்சுருக்கும். ஆரா சேத்துல கிடக்கும். கெளுத்தியைக் கைவிட்டு புடிக்கும்போது, கொஞ்சம் அசந்தா முள்ளால கிழிச்சுரும். பாறை இடுக்குல சில மீன்கள் மறைஞ்சிருக்கும். ராட்டு, செத்த மீன் மாதிரியே கிடக்கும். இப்படி ஒவ்வொரு மீனின் சூட்சுமம் தெரிஞ்சாதான் வெறுங்கையில் துலாவி பிடிக்க முடியும். அத்தனை வித்தைகளையும் தெரிஞ்சுகிட்டுதான் புடிக்கிறோம். ஆனால், சில விவரமான மீன்கள் ஆட்டம் காட்டிட்டு மறைஞ்சுடும்ங்க. முன்னாடி நாட்டு மீன்கள் அதிகம் வரும். இப்போ, வளர்ப்பு மீன்கள் அதிகம் வருது. எப்படின்னு தெரியலை" என்றான்.

  கடைசியாகப் பேசிய தமிழரசன், "நான் ஒன்பதாவது படிக்கிறேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து பார்த்தீங்கன்னா, மொத்த ஊர் பசங்களும் இங்கேதான் இருப்பாங்க. வெறும் கைகளால் பிடிக்கிறது, வலைபோட்டுப் பிடிக்கிறதுன்னு ஒரே திருவிழாவா இருக்கும். மீன் பிடிச்சாப்புலயும் ஆச்சு. காவிரியில் தாண்டக்கம் போட்டாப்புலயும் ஆச்சு. காவிரியில் தண்ணீர் வராத ஏழெட்டு மாசங்கள்ல மீன்கள் பிடிக்க முடியாம திண்டாடிவோம்" என்றான்.


 

அவர்களை விட்டு, தள்ளி வந்தோம். குட்டையாக, சிறுசிறு ஓடைகளாக மாறியிருந்த காவிரியில், இன்னும் அதிர்ச்சியை அள்ளி கொட்டும்விதமாக ஆங்காங்கே சாலைகள் போடப்பட்டிருந்தது. 'இது காவிரியா பைபாஸ் சாலையா' என்று குழம்பும் அளவுக்கு காவிரியின் அலங்கோலத்தில் பல மணல் மாஃபியாக்களின் பணம் திங்கும் கோர வாய் வியாபித்திருந்தது. வீரப்பனைப் பிடித்த போலீஸ் பட்ட சிரமங்களைவிட இங்கே மீன் பிடிப்பது சிரமம் என்றார்கள் சிறுவர்கள். அதைவிட கஷ்டம், இங்கே மணல் அள்ளிக் கொழுத்தவர்களை வளைத்துப் பிடிப்பது. ஏனென்றால், அவர்கள் ஆள், அம்பு, சேனையோடும் அரசியல் செல்வாக்குடனும் இருக்கும் கழுவுற மீனில் நழுவுற மீன்கள். காவிரியல்லோ பாவம்!