Published:Updated:

'ராஜாவின் ஆட்சியா..? ஆண்டவரின் ஆட்சியா..?' - எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியம்

'ராஜாவின் ஆட்சியா..? ஆண்டவரின் ஆட்சியா..?' - எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியம்
'ராஜாவின் ஆட்சியா..? ஆண்டவரின் ஆட்சியா..?' - எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியம்

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு விழா இன்று நடந்தது. தி.மு.க. இந்த விழாவைப் புறக்கணித்தது. ஸ்டாலின் உள்பட அக்கட்சி எம்.எல்.ஏ-க்கள் யாரும் சட்டமன்றத்துக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்தது. ஏற்கெனவே, திட்டமிடப்பட்டிருந்த தஞ்சை மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருந்ததால், டி.டி.வி.தினகரன், இந்த விழாவுக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள். வழக்கமாக சட்டமன்றம் கூடும் வளாகம் இன்று வழக்கத்துக்கு மாறாக, விழா மண்டபமாக மாறியிருந்தது. நடுநாயகமாக, சபாநாயகர் தனபால் வீற்றிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு புறமும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அரசு தலைமை கொறாடா எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இன்னொரு பக்கத்திலும் இருந்தனர். 'அமைதி, வளம், வளர்ச்சி' என்று 2016 - ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா சொன்ன வாசகம், அவரது படத்துக்குக் கீழே எழுதப்பட்டிருந்தது. ஜெயலலிதா படத்தை கவின் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்திருந்தார்.  நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டி போட்டுக்கொண்டு பலரும் 'செல்ஃபி' எடுத்துக்கொண்டனர். 

இந்த விழாவில், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசுகையில் ஒரு கதை சொன்னார். அது வருமாறு: ''ஒரு சிறு கதை மூலம் தெய்வத்தின் அருள் எவ்வளவு முக்கியமானது எனத் தெரிவிக்க விரும்புகிறேன். காந்தபுர நகரம் என்றொரு நகரம். 'அரசர் இருப்பதால் எல்லாம் சுபிட்சமாக இருக்கிறது. அவர் இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது' என்று சொல்லும் ராஜபக்தன் ஒருவன் இருந்தான். அதே நேரத்தில், 'எல்லாம் ஆண்டவர் அருள். அவன் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது' என்று சொல்லும் இறை பக்தனும் இருந்தான். ராஜாவின் ஆட்சியா, ஆண்டவரின் ஆட்சியா என்பதில் இருவரும் வாக்குவாதம் செய்துகொள்வார்கள். மாறுவேடத்தில் வந்த ராஜா இவர்கள் இருவரையும் கவனித்தார். பின்னர், பூசணிக்காய் ஒன்றை எடுத்துக் குடைந்தார் ராஜா. அதற்குள் சில தங்க நாணயங்களையும், வைரங்களையும் போட்டார். அதனைக் குடைந்து எடுத்த இடம் தெரியாமல் மூடியும்விட்டார். ராஜ பக்தனைக் கூப்பிட்டு அதனைப் பரிசாகக் கொடுத்தார்.

இதனைப் பெற்றுக்கொண்ட ராஜ பக்தன், சிறிய பரிசை ராஜா கொடுத்திருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டே அதனைக் கடையில் விற்றுவிட்டான். அதே வீதி வழியாக ஆண்டவனின் பக்தன் சென்றான். பூசணிக்காயைப் பார்த்தான். கடையிலிருந்து அதனை 2 ரூபாய் விலை கொடுத்து வாங்கி, சிவனடியார்க்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பூசணிக்காயை நறுக்கச் சொன்னான். அவ்வாறு நறுக்கும்போது, அந்தப் பூசணிக்காய்க்கு உள்ளே 20 தங்க நாணயங்கள், சில வைரக் கற்கள் இருந்தன. ஆச்சர்யம் தாங்கவில்லை ஆண்டவ பக்தனுக்கு.'இது யாருடைய பொருள்' என்று ஆண்டவ பக்தனுக்குத் தெரியாததால், ராஜாவிடம் முறையிடச் சென்றான்.

அந்த நேரத்தில், ராஜாவும் அந்த ராஜ பக்தனை அழைத்துவர ஆள் அனுப்பினார். 'உனக்குத் தங்கப் பூசணிக்காய் கொடுத்தேனே! என்ன செய்தாய்?' என்று கேட்டார். 'சாதாரண பூசணிக்காய்! அதை ஒரு ரூபாய்க்கு விற்றுவிட்டேன்' என்றான் ராஜபக்தன். ராஜா வாயை மூடிக் கொண்டார். 'ராஜாவே! நேற்று நான் கடைவீதிக்குப் போனேன். அங்கே ஒரு பூசணிக்காய் வாங்கினேன். அதில் 20 தங்க நாணயங்களும், சில வைரக் கற்களும் இருந்தன. அதைப்பற்றி தங்களிடம் முறையிடவே அவற்றோடு வந்திருக்கிறேன்' என்று கூறி அதனை ராஜா முன்பு வைத்தான் ஆண்டவ பக்தன். 'இதை நீயே வைத்துக்கொள். ஆண்டவர் அருள் மிகப் பெரிது' என்று ராஜா கூறி ஆண்டவ பக்தனை ஆச்சர்யப்பட வைத்தார். 

ராஜ பக்தனுக்கோ ஒன்றும் புரியவில்லை. 'இந்த நாட்டு மக்களை நான் அரசாட்சி செய்யவில்லை. ஆண்டவன் ஆட்சி செய்கிறான்' என்று ராஜா சொல்லிவிட்டு, இருவருக்கும் உணவு படைத்து அனுப்பினான். ஆம்! இந்த நாட்டை, தமிழ்நாட்டை அம்மா என்கின்ற தெய்வம் எங்களை வழிநடத்தி ஆட்சி செய்கின்றது'' என்று பேசினார். 

சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம்... யாரைச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி?