Published:Updated:

“கடைசியா ஒருமுறை மாமியாரைப் பார்க்க விடுங்கன்னு கெஞ்சினோம்!” ’முன்னாள் கொத்தடிமை’ சுகுணா உருக்கம்

“கடைசியா ஒருமுறை மாமியாரைப் பார்க்க விடுங்கன்னு கெஞ்சினோம்!”  ’முன்னாள் கொத்தடிமை’ சுகுணா உருக்கம்
“கடைசியா ஒருமுறை மாமியாரைப் பார்க்க விடுங்கன்னு கெஞ்சினோம்!” ’முன்னாள் கொத்தடிமை’ சுகுணா உருக்கம்

“கடைசியா ஒருமுறை மாமியாரைப் பார்க்க விடுங்கன்னு கெஞ்சினோம்!” ’முன்னாள் கொத்தடிமை’ சுகுணா உருக்கம்

ப்பவுமே பரபரன்னு இயங்கிக்கிட்டே இருக்குற ரைஸ் மில் அது. அங்க நெல்லு அரைக்குற மெஷினுக்குக்கூட ராத்திரி நேரத்துல ஓய்வு கெடைக்கும். ஆனா, நாங்க மட்டும்தான் ராவும் பகலுமா, கஞ்சி தண்ணிகூடக் குடிக்காம ஓடியாடி வேலை பாத்துக்கினு கெடந்தோம். பச்சப் புள்ளைங்களுக்கு, பாலுக்குப் பதிலா அரிசி நொய்யக் காச்சி ஊத்துவோம். பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டிய பிள்ளைங்க நெல்லு காயப் போட வேண்டி வெயில்ல குந்திக்கினு கெடக்குங்க. சாமி.... அந்த நாளையெல்லாம் இன்னொரு முறை நெனச்சிக்கூடப் பாத்துடக்கூடாதுப்பா” பத்து வருடங்களுக்கும் மேலாக தாங்கள் கொத்தடிமையாக இருந்த அந்த நாள்களை விவரிக்கையில் சுகுணாவின் கண்களில் கோபத் தீ மூள்கிறது. 

குடும்ப வறுமை காரணமாக, பெற்றோர் இவருக்குப் பதினைந்து வயதிலேயே திருமணம் செய்துவைக்க, தலையில் சூடிய பூவின் மணம் கமழ்வதற்குள்ளாகவே சுகுணா கொத்தடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்.  

“திருத்தணி பக்கத்துல இருக்குற தாய்வீடுதான் என்னோட சொந்தக் கிராமம். பொறந்த வீட்டுலதான் ஒண்ணுத்துக்கும் வழி இல்லாமப் போயிடுச்சு. வாக்கப்பட்டுப் போற வீட்டுலயாவது நல்ல விதமா வாழலாம்னு ஏகப்பட்ட கனவுகளோட இருந்தேன். என் வீட்டுக்காரருக்கு ஊரு ஆந்திரா பக்கத்துல இருக்கு. என் அப்பா, அம்மா பாத்துத்தான் அவருக்குக் கட்டி வெச்சாங்க. புகுந்த வீட்டுக்குள்ள போன ரெண்டு மூணு நாளைக்குள்ளேயே என் மாமியாருக்கு வயித்துல நீர் கட்டி இருக்கு, உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. ஏற்கெனவே கல்யாணத்துக்கு அங்க இங்கன்னு கடன் வாங்கி சிரமப்பட்டுக்கிட்டு இருந்த நேரத்துல இப்புடி ஒரு குண்டத்தூக்கிப் போடுறாங்களேன்னு கவலைப்பட்டோம். அப்போதான் காளாஸ்திரி பக்கத்துல இருக்குற நெல்லு மண்டி ஓனரு 20 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தாரு. மாமியாரை ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு என் வீட்டுக்காரரு வாங்கின கடனை அடைக்க அவரோட மில்லுக்கு வேலைக்குப் போனாரு. ஒரு ஆளா வேல பாத்தா சீக்கிரமா கடனை அடைக்க முடியாதேன்னு நினைச்சு நானும் அவருகூடவே போயிட்டேன். 

ஆரம்பத்துல வேலைக்குப் போனதும் தினக்கூலியும் அரிசியும் தருவோம்னு சொன்னாங்க. ஆனா, போகப்போகக் கூலியும் சரியா கொடுக்குறதில்ல. அரிசியும் தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அங்க மில்லுல எங்ககூட மூணு குடும்பம் தங்கியிருந்தாங்க. நாங்கதான் ஆளும்பேருமா ஒத்தாசை பண்ணிப்போம். நாளு, கெழமை எதுவுமே தெரியாது. மில்லுலயே நெல்லு மூட்டைய மறைவா அடுக்கிப் போட்டு குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தோம். சாயந்திரம் ஆறு மணிக்கு நெல்ல ஊற வெச்சு இறுத்து எடுக்குறதுக்குப் பதினோறு மணி ஆகிடும். மறுநாள் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சு நாள் முழுக்க மெஷின்ல அரைக்கணும்; கொதிக்க வைக்கணும். சரியான பதம் பாத்து, காச்சி எறக்கணும். இல்லன்னா அரிசி, நொய்யாகிடும்னு ஓனரு அடிப்பார். அவரு எப்போ சிரிப்பாரு; எப்போ கோவப்படுவாருன்னே தெரியாது. திடீர் திடீர்னு அடிப்பாரு; உதைப்பாரு. தெனம் தெனம் அவர்கிட்ட எத்தனை அடி வாங்கியிருக்கோம்னுகூடக் கணக்குல வெச்சிக்கத் தெரியாதுண்ணே. அது மட்டுமில்ல எங்ககூட இருந்தவங்களோட பையனுக்கு வயித்தோட இடது பக்கத்துல ஆபரேஷன் பண்ணி டியூப் வழியா யூரின் போக வெச்சாங்க. அந்த நேரத்துலகூட சின்னப்பையன்தானே இப்ப ஒண்ணும் ஆகாது. வளர்ந்ததும் ட்ரீட்மென்ட் வெச்சிக்கலாம். இப்போ நீங்க போயிட்டா இங்க யாரு வேல பாக்குறதுன்னு ஈவு இரக்கமே இல்லாம சொல்லிட்டாரு. அஞ்சு வருசத்துக்கும் மேல அந்தப் பையன் படாதபாடு பட்டுட்டான்ணே”  சுகுணா சொல்லும்போதே அவர் கண்கள் கலங்குகின்றன. 

தாயின் சிகிச்சைக்காகப் பணம் வாங்கி, அதை அடைப்பதற்காகவே நாகராஜன் தன் மனைவியோடு அந்த மில்லுக்கு வேலைக்குச் சென்றிருந்தாலும் அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அவர் தாய் இறந்துபோக அதற்குக்கூட இருவரையும் வெளியே அனுப்பாமல் மில்லுக்குள்ளேயே வைத்து சித்ரவதை செய்திருக்கிறார். 

“என் அத்தைக்காகத்தான் நானும் அவரும் இங்க வந்து கஷ்டப்பட்டுக்கின்னு கெடந்தோம். ஆனா, யாருக்காகக் கஷ்டப்படுறோமோ அவங்களே இறந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டதும் துடிச்சிட்டோம். என் வீட்டுக்காரரு ஓனரோட கால்ல விழுந்து கெஞ்சினாரு. கடைசியா எம் அம்மாவைப் பாத்துட்டு வந்துடுறேன்னு. ஆனா, ஓனரு, 'உம் அம்மாவோட பொணத்த வெச்சு என்ன பண்ணப்போறாங்க. நீ போகலைனாலும் புதைச்சிடுவாங்க. அதனால, உன் அம்மாவை நெனைச்சுக் கவலைப்படாம இங்க இருக்குற வேலையப்பாரு'னு சொல்லிட்டாரு. நாங்களும் போராடிப் போராடிச் சோர்ந்து போயிட்டோம். 

கொஞ்ச நாள்ல எங்களுக்குனு ஆறுதலா ஒரு பையனும் பொண்ணும் பொறந்துச்சுங்க. அதுங்களைப் பொத்திப் பொத்தி வளர்க்க ஆரம்பிச்சோம். என் பெரிய பையன் சந்திரன் பொறந்து ஏழு பொங்கல் கழிச்சதும் ஒருநாள் அரசாங்கத்திலிருந்து வந்து எங்களை மீட்டாங்க. அப்போ எங்களுக்கு இந்த ஒலகமே புதுசா இருந்துச்சு. எங்க ஆளுங்களோட சேர்ந்து குச்சி போட்டுத் தங்க ஆரம்பிச்சோம். குடிசைக்குள்ள இருந்தாலும் எங்களுக்குன்னு ஒரு வீடு, சுதந்திரமா இருக்க ஆரம்பிச்சோம். இப்போ என் பெரிய பையன் சந்திரன் ஏழாவது படிக்குறான், பொண்ணு மகேஸ்வரி ஆறாவது படிக்குது, கடைக்குட்டி அனிதா மூணாவது படிக்குது. அவரு வாட்ச்மேன் வேலைக்குப் போறாரு. ஏழாயிரம் ரூபாய் சம்பளம். நான் துணிக்கடைக்குப் போறேன். நாலாயிரம் ரூபாய் கொடுக்குறாங்க. கிடைக்குறதை வெச்சி நிம்மதியா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்” 

கொத்தடிமையாக இருந்து மீண்ட சுகுணா, தன் கணவரோடு அரசின் உதவி மூலமாக ஐந்து குடும்பங்களைக் கொத்தடிமை வாழ்விலிருந்து மீட்டிருக்கிறார். அதோடு, தங்கள் பகுதிக்கு அங்கன்வாடி மையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதோடு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வீட்டு மனை பட்டா போன்றவற்றையும் அரசிடம் கோரிக்கை வைத்து வாங்கிக் கொடுக்கிறார். கொத்தடிமை வாழ்விலிருந்து வெளியே வருபவர்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் சுகுணா மாற்றத்திற்கான நம்பிக்கை மனுஷி!

அடுத்த கட்டுரைக்கு