Published:Updated:

‘அவள் பிரகாசிக்கட்டும்..!’ சரோஜினி நாயுடு பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு!

‘அவள் பிரகாசிக்கட்டும்..!’ சரோஜினி நாயுடு பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு!
‘அவள் பிரகாசிக்கட்டும்..!’ சரோஜினி நாயுடு பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு!

ணக்குப் பாடம் என்றாலே, இன்றும் சில குழந்தைகளுக்குப் பாகற்காயைவிடக் கசப்பாகவும் வெறுப்பாகவும்தான் இருக்கிறது. அதேநேரத்தில், குறுகிய காலத்துக்குள் விரைவாய்க் ‘கணக்கு’ப் போட்டு கோடீஸ்வரர்களாகிவிடுவதில் இன்றைய அரசியல்வாதிகள் மிகத் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இன்றைய குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காததாலும், அதிகமான அழுத்தத்தால் பந்தாடப்படுவதாலுமே இப்படியான வெறுப்புக்கு ஆளாகிறார்களே தவிர, மற்றபடி அரசியல்வாதிகளைவிட நம்மூர் குழந்தைகள் அதிகத் திறமையுள்ளவர்கள். அப்படியான அதிகத் திறமைகளுடன் விளங்கியவர்தான் நாம் பார்க்கப்போகும் இந்தக் கட்டுரையின் சிறுமி. 

ஆம், அந்தச் சிறுமி ஒருநாள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். எவ்வளவு முயற்சி செய்தும் அவருக்கு விடை சரியாக வரவில்லை. ஒருகட்டத்தில், அந்தக் கணக்கின்மீது வெறுப்பு வந்து புத்தகத்தையே மூடிவைத்துவிட்டார். பிறகு, வேறொரு நோட்டை எடுத்து... தன் மனதில் தோன்றிய எண்ணங்களைக் கவிதையாக எழுதிக்கொண்டிருக்கும்போது... அவருடைய தந்தை அருகில் வந்து, “என்னம்மா... கணக்குப் போட்டுவிட்டாயா” என்றார் மிகவும் கனிவுடன். பதில் சொல்லாது பயத்தில் இருந்தார் சிறுமி. உடனே அவர் எழுதிய நோட்டை எடுத்துப் பார்த்த தந்தை, ஆச்சர்யமடைந்தார். ‘மாஹர் முன்னீர்’ எனும் தலைப்பில் அந்த நோட்டின் 60 பக்கங்களுக்குப் பெர்சிய மொழியில் கவிதை நாடகம் வடித்திருந்தார் அந்தச் சிறுமி. அதில் நாட்டுப்பற்று, வரிக்குவரி மிளிர்ந்தது. அவருடைய கவிதை நடையைக் கண்டு பிரமித்துப்போனார்; பெருமிதமடைந்தார். 

பிறகு மகளிடம், “உனக்கு கணக்குப் பிடிக்கவில்லை என்றால், என்னிடம் கூறியிருக்கலாமே” என்றவர், “இனிமேல் உனக்குத் தோன்றும் கவிதைகளை இந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி வா” என்று ஒரு புதிய நோட்டைக் கொடுத்து அவரை மேலும் எழுத ஊக்குவித்தார். பின் அந்தச் சிறுமியின் தந்தை, தன் மகள் எழுதிய அந்தப் பெர்சியக் கவிதை நாடகத்தை ஹைதராபாத் நவாப்புக்கு அனுப்பிவைத்தார். படித்துப் பார்த்த நவாப்... அந்தச் சிறுமியை அழைத்து, “இதை, நீதான் எழுதினாயா” என்று அவர் சந்தேகத்தோடு கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி, தன்னிடமிருந்த ஆங்கிலக் கவிதை நோட்டை எடுத்து நீட்டினார். 1,300 வரிகள் கொண்ட ‘தி லேடி ஆஃப் தி லேக்’ என்ற கவிதையைப் படித்த நவாப், அந்தச் சிறுமியைப் பாராட்டித் தன்னுடைய செலவிலேயே அவரை இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பினார். இன்றும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள், இந்தச் சிறுமியின் தந்தையைப் போன்று அல்ல... தாம் ஆசைப்படும் எண்ணத்தைப் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்ற நினைப்பில். 

அதனால்தான் இன்று பல குழந்தைகள் பெற்றோரின் கண்டிப்புக்கு ஆளாகி, தாம் விரும்பும் துறையில் சாதிக்க முடியாமலும், எதிர்த்துக் குரல்கொடுக்க முடியாமலும் அமுங்கிவிடுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளின் ஆசைகளைப் பெற்றோர்கள் தீர்த்துவைப்பதுதானே முறை? அதைத்தானே அந்தச் சிறுமியின் அப்பா செய்தார். அதேபோல், அந்தச் சிறுமியுடைய தாயாரும் இருந்தார். வங்காள மொழியில் பாடல்கள் புனைந்து பாடுவதில் வல்லவரான அந்தச் சிறுமியின் தாயார், ஒரு டைரி வைத்திருந்தார். அவர், ஒரு நவராத்திரி சமயம்... தனது டைரியைத் திறந்த பார்த்தபோது... அதில், தன்னுடைய மகளின் கையெழுத்தில் இரண்டு புதிய பாடல்கள் இருப்பதைக் கண்டு வியந்துபோனார். பின், தன் மகளைப் பாராட்டி அவரும் ஊக்கமளித்தார். அந்தச் சிறுமியின் பெற்றோர், மற்றவர்களைப்போல் இல்லாமல் தன் மகள் விரும்பும் துறையில், ‘அவள் பிரகாசிக்கட்டும்’ என முழுமையாக அவரை விட்டனர். இதனால்தான் பின்னாளில் அவர் உருது, தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம், பெர்சியம் என ஆறு மொழிகளில் இலக்கியங்களைச் சரளமாக எழுதியும் பொதுமேடைகளில் பேசியும் பாராட்டுப் பெற்றார். 

பின்னாளில் புகழ்பெற்ற புரட்சி மங்கையாக வலம்வந்த அந்தச் சிறுமி,“குடிமக்களைக் கொடிய விலங்குகள்போல் வேட்டையாடலாமா; நிரபராதிகளையும், நிராயுதபாணிகளையும் ‘சுட்டேன்... சுட்டேன்... தோட்டா தீரும்வரை சுட்டேன்’ என்ற ஜெனரல் டயர், குண்டுமாரி பெய்தது நியாயமா; ஆங்கிலேயரின் வீரம் இதுதானா; ஆங்கிலேய ஜனநாயகத்தின் நீதி இதுதானா; மகளிருக்கு மரியாதை செய்வதாய்க் கூறிக்கொள்ளும் ஆங்கிலேயர்கள் இந்தியப் பெண்மணிகளை நிர்வாணமாக நிறுத்தலாமா; கசையடி கொடுத்து அபலைகளைக் கதறியழச் செய்யலாமா; பாலியல் வன்புணர்வு செய்யலாமா; என் சகோதரிகளை மானபங்கம் செய்த சண்டாளர்களை நியாயத்திலும் நாகரிகத்திலும் மேலானவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் ஆங்கிலேயர்கள் ஏன் தண்டிக்கவில்லை; பயங்கரமான காட்டுமிராண்டி ஆட்சி நடத்திய முரடர்களை ஆங்கிலேயப் பாராளுமன்றம் பாராட்டியதே... நீதியா அது” என்று ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து லண்டனில் உள்ள கிங்ஸ்லீ ஹாலில் அனல்வீசும் உரையாற்றினார். 

ஒருகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தின் புரட்சிப் பெண்ணாக மாறிய அந்தச் சிறுமி, ஒருமுறை லாகூர் கல்லூரியில் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். அவரை வரவேற்றுப் பேசிய அந்தக் கல்லூரி மாணவர் மன்றத்தின் செயலாளர் ஒருவர், “I have great pleasure in welcoming in our midst India's most public woman” என்றார். அதாவது, “இந்தியாவின் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பெண்” என்ற அர்த்தத்தில், “India's most public woman” என்று பேசினார். ஆனால், இதன் பொருள் தவறானது. இதைக் கேட்ட அந்தப் புரட்சிப் பெண் (சிறுமி), அந்த மாணவர் மன்றத்தின் செயலாளர் தவறாகச் சொன்னதைக் கேட்டு கோபமோ, வருத்தமோ அடையவில்லை. மாறாக, அவர் தன் பதிலுரையில் இப்படிச் சொன்னார். “அந்த மாணவர் சொன்னதுபோல என்னால் செல்வாக்குப் பெற இயலாது. ஆங்கிலம் மிகவும் ஆபத்தான மொழி. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால்கூடத் தவறான அர்த்தங்களையும் விபரீத விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். எனவேதான், அந்த ஆங்கில மொழிக்குரியவர்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சாதுர்யமாக. அவருடைய பேச்சைக் கேட்டு, கூட்டத்தில் உள்ள அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். 

இப்படித் தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் புகழ்பெற்ற அந்தச் சிறுமி வேறுயாருமல்ல... ‘கவிக்குயில்’ என்று போற்றப்பட்ட சரோஜினி நாயுடு. அவருடைய பிறந்த தினம் இன்று.