Published:Updated:

பங்க் குமார்... முட்டை ரவி....சூளைமேடு பினு... தமிழகத்தை அச்சுறுத்திய A பிளஸ் ரவுடிகள்!

பங்க் குமார்... முட்டை ரவி....சூளைமேடு பினு... தமிழகத்தை அச்சுறுத்திய A பிளஸ் ரவுடிகள்!
பங்க் குமார்... முட்டை ரவி....சூளைமேடு பினு... தமிழகத்தை அச்சுறுத்திய A பிளஸ் ரவுடிகள்!


டைமொழியோடு சினிமாக்களில் வரும் ரவுடிகளைப் பார்த்திருப்போம். நிஜத்தில் இப்படியெல்லாம்தான் ரவுடிகள் இருப்பார்களா என்றால், ஆம்... சென்னையைக் கலங்கச் செய்த ரவுடிகளைக் குற்றங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி பட்டியலிட்டது காவல்துறை. பள்ளிக்கூட ரேங்க் கார்டில் உள்ளது போல A பிளஸ், A, B,C என ரேங்கிங் வெளியிட்டது. அந்த ரேங்கிங் எதனடிப்படையில் அமைந்தது என்றும், தமிழகத்தை அச்சுறுத்திய சில A பிளஸ் ரவுடிகளின் பின்னணியும் இதோ...


அதென்ன 'A பிளஸ்'னு  கேட்கிறீங்களா ? 

காவல்துறை ரவுடிகளை 'A பிளஸ்' , 'A','B','C' என  4 கிரேடாக பிரித்திருக்கிறார்கள்.'A பிளஸ்' என்பது மோசமான ரவுடிகளைக் கொண்ட பிரிவு.சென்னையில் மட்டும்  சுமார் 3000 ரவுடிகள் இருக்கிறார்கள் என்கிறது காவல்துறை வட்டாரம்.

'தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். அதில், தலைநகர் சென்னை முதலிடத்தில் இருக்கிறது'என்ற அதிர்ச்சி தகவலை 2012-ம் ஆண்டில் டி.ஜி.பியாக இருந்த ராமானுஜம் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.இரண்டாவது இடத்தில் நெல்லையும் மூன்றாவது இடத்தில் மதுரையும் கடைசி வரிசையில் நீலகிரியும் இருக்கிறது என்று அப்போதைய டிஜிபி வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.2001 முதல் 2011- வரை  17 ஆயிரத்து 32 கொலைகள், 3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சிகள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் நடந்துள்ளன என்று மேலும் அதிர்ச்சியுட்டியது ராமனுஜத்தின் தகவல் அறிக்கை.

நம்மில் அனேகம் பேர் சினிமாவில் மட்டுமே ரவுடிகளைப் பார்த்திருப்போம்.ஆனால், நிஜ ரவுடிகளின் கதையைக் கேட்டால் படங்களில் வரும் திரைக்கதையைவிட சுவாரஸ்யமானதாக இருக்கிறது.ஆசைத்தம்பி,கபிலன்,வெங்கடேச பண்ணையார்,அயோத்தியாகுப்பம் வீரமணி,பங்க் குமார்,திண்டுக்கல் பாண்டி,கேட் ராஜேந்திரன்,சேரா,வெள்ளை ரவி எனத் தமிழகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திய ரவுடிகளின் லிஸ்ட் மிகப் பெரியது.

 தமிழகத்தை அச்சுறுத்திய சில ரவுடிகள்....

 அயோத்தியாகுப்பம் வீரமணி
சென்னையை அச்சுறுத்திய பிரபல ரவுடி.5 கொலைகள், 11 கொலை முயற்சிகள்,அதுபோக அடிதடி, ஆள் கடத்தல், கஞ்சா, ஹெராயின் கடத்தல்,மாமூல் வசூலித்தல் என மொத்தம் 31 வழக்குகளில் முக்கியக் குற்றவாளியான அயோத்தியாகுப்பம் வீரமணியைக் கடந்த 2003-ம் ஆண்டில் மெரினா கடற்கரையில் என்கவுன்ட்டர் செய்தது காவல்துறை.சென்னை திருவல்லிக்கேணி அருகே உள்ள மீனவர் குப்பமான அயோத்திக் குப்பத்தைச் சேர்ந்தவன் வீரமணி. சென்னையில் பல விசைப் படகுகளை வைத்து மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவனுக்கு கள்ளச் சாராய தொழிலும் இருந்தது.கொலை, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, கொள்ளை, கடத்தல் எனப் பணத்துக்காக எதையும் செய்யும் வீரமணிக்கு லோக்கல் அரசியல் செல்வாக்கும் இருந்தது எனச் சொல்லப்படுகிறது.

பங்க் குமார்
நந்தனம் கலைக் கல்லூரியில் பி.ஏ. படித்த குமார் 'பங்க்' குமாராக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ரவுடிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தான் குமார். இவனின் நெருங்கிய நண்பரான பிரபல ரவுடி உமர் ஒரு கும்பலால் கொல்லப்பட்டான்.பாட்ஷா படத்தில் வருவதுபோல நண்பனைக் கொன்றவர்களைப் பலி வாங்க ரவுடி அவதாரம் எடுத்தான் குமார். உமரைக் கொலை செய்த பரமேஸ்வரன் உள்ளிட்ட கும்பலை அடுத்தடுத்து போட்டுத் தள்ளியது பங்க் குமார் கும்பல். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் குமார்.சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு உமரைக் கொலை செய்த மேலும் சிலரை கோர்ட் வளாகத்திலேயே சரமாரியாக வெட்டிக் கொன்றதுதான் குமார் செய்த மிகப்பெரிய சம்பவம்.நீளமான முடி வைத்திருந்ததால் பங்க் குமார் எனத் தன் கூட்டத்தால் அழைக்கப்பட்ட குமார் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 40 கிரிமினல் வழக்குகள் இருந்தன.7 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த 2006-ம் ஆண்டு பங்க் குமாரையும்  என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளியது காவல்துறை. 

முட்டை ரவி

12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்ட 'ரவி'க்கு கபடி விளையாட்டின் மீது கொள்ளை ஆர்வம்.ஊர் ஊராகச் சென்று கபடி விளையாடும்போது சின்னச் சின்ன அடிதடி சண்டைகளில் ஈடுபட ஆரம்பித்தான் ரவி.அவன் வசித்த பகுதியில் இருந்த மற்றோரு ரவுடியான  ரோக் என்பவனைக் கொன்று திருச்சியை கலங்கடித்தான் 'முட்டை ரவி'.அவனுடைய அப்பா முட்டை வியாபாரம் செய்ததால் 'முட்டை'யை அடைமொழியாக்கிக் கொண்டான் ரவி.இவன் மீது 12 கொலை வழக்குகள் உட்பட பல கிரிமினல் வழக்குகள் இருந்தது.2006-ம் ஆண்டு நாவல்பட்டு என்ற ஊரில் வைத்து ரவியை என்கவுன்ட்டர் செய்தனர் காவல்துறையினர்.


பினு

இதேபோல 1990-களில் சூளைமேட்டைக் கலக்கிக்கொண்டிருந்தவன் ரவுடி பினு.கேரளாவிலிருந்து வந்த பினுவின் குடும்பம் சென்னை சூளைமேட்டில் செட்டிலானது.அங்கே டீ கடை வைத்து தன் பிழைப்பைத் தொடங்கிய பினு,பின்பு ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து சூளைமேடு மார்கெட்டில் மாமூல் வசூல் செய்து ரவுடி வாழ்க்கையைத் தொடங்கினான் பினு. சென்னை காஞ்சிபுரம்,திருவள்ளூர் என மூன்று மாவட்டக் காவல்நிலையங்களிலும் ஆட்கடத்தல்,கொலை எனக் கிட்டத்தட்ட 15 வழக்குகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.கடந்த சில வருடங்களாக அடங்கி இருந்த பினு,கடந்த வாரம் சென்னை மாங்காடு பகுதியில் கேக் வெட்டி  பிறந்தநாள் கொண்டாடினான்.அங்கே சுமார் 70 ரவுடிகள் போலீஸாரிடம் பிடிபட்டபோதும்,பினு பிடிபடவில்லை.பினுவைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்லை நேற்று காலை அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தான் பினு.