Published:Updated:

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit
கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தனது 24-வது,  மஹா சிவராத்திரி விழாவைக் கோலாகலமாக நேற்று கொண்டாடி  முடித்திருக்கிறது ஈஷா.  தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக  துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் வேலுமணி மற்றும் திரைப்பட நடிகை தமன்னா உள்ளிட்ட  பிரபலங்கள் கலந்துகொள்ள ஜக்கிவாசுதேவ் முன்னிலையில்   ‘ஈஷனுடன் ஓர் இரவு’ நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும்  லட்சக்கணக்கான மக்கள் ‘ஈஷனுடன் ஓர் இரவு’ விழாவைக் கண்டுகளிக்க வந்திருந்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நல்வாழ்வு வழங்கவல்ல யோகக் கலையை  உலக மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்வதை குறிக்கும் விதமாக மஹா யோக யக்ஞாவை யோகேஸ்வர லிங்கம் முன்பு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஜக்கிவாசுதேவ்.  இரவு முழுவதும்  மக்கள் விழித்திருக்கும் வண்ணம் துள்ளலான இசை நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தது  ஈஷா.   புகழ்பெற்ற பாடகர்களான, சோனு நிகாம், தலெர் மெஹந்தி, மோஹித் சவுஹான்,  ஷான் ரோல்டன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன. நடன நிகழ்ச்சிகளும் , நள்ளிரவு தியானமும் மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. ஆனால்... இவ்வளவு வசதிகளும் நன்கொடை செலுத்தி வந்த பக்தர்களுக்கு மட்டுமே. நன்கொடை இல்லாமல் விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு வேறு விதமாக இருந்தது. விழாவில் கலந்துகொள்ள இவ்வளவு நன்கொடை என்று  விளம்பரங்களில் பிரதானமாகப் பார்த்த நினைவில்லை. எனவே, ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு வந்த பக்தர்களுக்கு மேற்குறிப்பிட்ட சேவைகள் வழங்கப்படவில்லை!  
 

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit

நுழைவாயிலில் இருந்து ஆரம்பிப்போம். வழிநெடுக நின்றுகொண்டிருந்த ஈஷா யோகா மையத்தினர் சிரித்த  முகத்தோடும், கூப்பிய கைகளோடும் திரண்டுவந்த மக்களை சளைக்காமல் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். எண்ணற்ற  ஜோசியக்காரர்கள் நடைபாதைகளை ஆக்கிரமித்து பக்தர்களின் எதிர்காலம் கணித்துக்கொண்டிருந்தார்கள். கண்படும் இடமெல்லாம் தென்படுவதுபோல பொருத்தப்பட்டிருந்த ஜியோ விம்பரங்கள் எதற்கோ சாட்சியாக மின்னின.  ஈசனுடன் ஓர் இரவைக் கொண்டாடும் பேரார்வத்தில் எல்லாவற்றையும் கடந்து உள்ளே நுழைந்தோம்.  அமைக்கப்பட்டிருந்த  செக் பாயிண்ட்களில் நம் கையை உற்றுப் பார்த்துவிட்டு, ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன்  செய்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்றார்கள். அதன் பிறகுதான் உள்ளே நுழையத் தயாராக இருந்த மக்களைக் கவனித்தோம்.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வண்ணத்திலான காகிதப் பட்டைகளை, ‘வாட்ச் போல’ கையில் ஒட்டியிருந்தார்கள். ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷனில் பெயர், ஊர், போன் நம்பர் போன்ற விஷயங்களைக் கேட்பார்கள்.. எழுதிக்கொடுத்துவிட்டு, நாமும் ஓர் காகிதப்பட்டையை வாங்கி ஒட்டிக்கொண்டு உள்ளே நுழையலாம் என்று நினைத்து ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் பகுதிக்கு வேகமெடுத்தோம். எங்களைப்போலவே அங்கு பலர் வந்திருந்தார்கள். ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் டெஸ்க்கில் ஒவ்வொரு மொழிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  நமக்கு முன்பு விசாரித்துக்கொண்டிருந்த ஒரு டி-ஷர்ட் பெண்மணி,  ‘ஆதியோகி சிலைக்கு அருகில் அமர்வதற்கு  50,000 ரூபாயாம்!' என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வெளியேறினார். 

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit

(டொனேஷன் செலுத்தாத மக்கள்)


நன்கொடை செலுத்த வாய்ப்பில்லா பக்தர்கள்!

ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் டெஸ்கில் அமர்ந்திருந்த ஓர் பெண்ணிடம் விசாரிக்க ஆரம்பித்தோம், நிறைய கேட்டகிரி இருக்குண்ணா என்றபடி மென்குரலில் ஆரம்பித்த அந்தப் பெண். “கங்கா 50,000 ரூபாய், யமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி 500 ரூபாய்!’’ என்று நதிகளின் பெயரில் பேக்கேஜ் விவரித்தார். நாம் நம் பர்ஸை கவலையுடன் பார்த்தபடி, ’50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம்?’ என்று கேட்டோம். ’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால். 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால். 5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்!’’ என்று சினிமா தியேட்டர் விதவித க்ளாஸ் போல விவரித்தார். 

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit


    மிகவும் கவலையுடன், ’’ஆதியோகி சிவராத்திரியில் தரிசிக்க வேண்டுமென்று கிளம்பி வந்துவிட்டோமே... ஃப்ரீ என்ட்ரி இல்லீங்களா?’’ என்று கேட்டோம். ’’ஓ... எஸ் இருக்கே... தடுப்புக் கட்டைகளுக்கு வெளியே அமர வேண்டும்.  சேர் கிடையாது.  தரையில் அமர வேண்டும்! என்றவர், நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘இட்ஸ் ஓ.கே... நீங்கள் அங்கே செல்லுங்கள்!’ என்று திசையைச் சுட்டிக்காட்டி நம்மை இலவச பகுதிக்கு அனுப்பினார். அங்கே சென்றால், எங்கெங்கிருந்தோ வந்திருந்த பல்லாயிரக்கணக்காண மக்கள் கட்டாந்தரையில் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்து அவ்வளவு பிரமாண்டமான ஆதியோகி சிலைகூட மசமசப்பாகத்தான் தெரிந்தது. இலவசப் பகுதியில் ஒரு எல்.சி.டி ஸ்க்ரீன்கூட இல்லை.  எக்கி எக்கிப் பார்த்ததில் சோர்ந்துபோன பலர் அசதியில் சிவராத்திரி என்றுகூட பார்க்காமல் படுத்துத் தூங்கிவிட்டார்கள். 
 

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit

 
’’எங்க ஊர்ல இருக்குற ஈஷா யோகா சென்ட்டர்ல  சொல்லும்போது,  என்ட்ரியும், ருத்ராட்சையும் ஃப்ரீனுதான் சொன்னாங்க, வீடியோவில் பேசின சத்குருவும் அதான் சொன்னாரு. ஆனால், இங்க வந்து கேட்டால், 500 ரூபா இருந்தாதான் உள்ளேயே விடுவேங்குறாங்க. இல்லைன்னா வெளில தரையில் உட்கார்ந்துக்கோங்கனு சொல்றாங்க.  எங்க ஊர்ல  இருக்கும் சென்ட்டர்ல இருந்து ஈஷா யோகா மையம் ஏற்பாடு செஞ்ச பஸ்ல வந்திருந்த ஆளுங்களை உள்ள விட்டுட்டாங்க.  அவங்களையும்  கட்ட கடைசியிலதான்  உட்கார வெச்சிருக்காங்க. சாமியைப் பார்க்கிறதைக்கூட காசாக்கிட்டாங்க!’’ என்று புலம்பிய ஓர் திருப்பூர் குடும்பத்தைப் போலவே பல குடும்பங்கள் புலம்பின. “போன வருஷமெல்லாம் இப்படி காசு வாங்கலப்பா..!’’  என்ற ரீதியில்  ஏராளமான புலம்பல்களைக் கேட்க முடிந்தது. `டொனேஷன்தானே கேட்கிறாங்க அதனால் தப்பேதுமில்லை.  விருப்பப்பட்டுதான் கொடுக்குறோம்' என்று சொல்லிச் சென்றவர்களும் உண்டு. 

கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்... ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருந்தது? #SpotVisit

நல்லவேளையாக சிறிது நேரம் கழித்து எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாக்கு மட்டையில் அன்னம் வழங்கியவர்கள், பன்னாட்டு நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெட்டியை ஆங்காங்கே வைத்து மக்களின் தாகம் தீர்த்தார்கள். ஹ்ம்... பலப்பல பிரச்னைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் கங்கா, யமுனா, காவிரி நதிகள் வாழ்க என்று மனதில் ஒரு குரல் ஒலித்தது!

பின்குறிப்பு :

இது தொடர்பாக ஈஷா யோகா மையத்தினரிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். மின்னஞ்சல் மூலமாக ஈஷா யோகா மையத்தினரிடம் கீழ்கண்ட கேள்விகளை அனுப்பினோம். 

1. ’இறைவன் முன் அனைவரும் சமம்’ என முழங்கும் ஈஷா, நன்கொடை என்கிற பெயரில் அதிக நன்கொடை கட்டியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்தது. ஆர்வத்தோடு மட்டும் வந்த ஏழைகளுக்கு அளித்த ட்ரீட்மென்ட் சரியா?
 
2. இருக்கையில் அமர்ந்து ஈசனுடன் ஓர் இரவு நிகழ்வை கொண்டாடுவதற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் நன்கொடை. அதைக் கூட செலுத்த முடியாதவர்கள் என்ன செய்வது? 

3. எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்படும் என ஈஷாவால் அறிவிக்கப்பட்ட ருத்திராட்சை கூட நன்கொடை அளித்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறதே... ஏன்? 

4. 'நதிகளை மீட்போம்' என்ற திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ஈஷா. ஆனால், புட்டியில் தண்ணீர் விற்பனை செய்யும் பன்னாட்டு தண்ணீர் நிறுவனத்தின் தயாரிப்புகளை நிகழ்வில் வழங்கியது, ‘நதிகளை மீட்போம்’ திட்டத்துக்கே முரணாக இருக்கிறதே! இது தொடர்பாக மேலதிக தகவகளைப் பெற விரும்புகிறோம்! 

இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் அது தொடர்பான விவாதத்தையும் ஈஷா யோகா மையத்தினரிடம் மேற்கொள்ள முயன்றோம். இது தொடர்பாக ஈஷா யோகா மைய மக்கள் தொடர்பு அதிகாரிகளிடமும் பேசினோம். 'பதில் அனுப்புவார்கள்' என்று மட்டும் சொன்னார்கள். ஆனால், இந்தக் கட்டுரைப் பதிப்பிக்கப்படும் வரை பதில் அளிக்கவில்லை. தொலைபேசி உரையாடலிலும் மதிப்பான பதில் கிடைக்கவில்லை. எத்தரப்பு குறித்த செய்தியின்போதும், சம்பந்தப்பட்டவர்களின் விளக்கம் பெற்றுச் செய்தி வெளியிடுவதே விகடன் பாணி. இப்போதும் அதையே கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஈஷா யோகா மையத்தினர் உரிய விளக்கம் அளித்தால், பரிசீலனைக்குப் பின் அதை வெளியிடவும் தயாராகவே இருக்கிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு