Published:Updated:

மாடர்ன் அனுமன்கள்!

மாடர்ன் அனுமன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மாடர்ன் அனுமன்கள்!

கார்க்கிபவா, ஓவியம்: ஹாசிப்கான்

மாடர்ன் அனுமன்கள்!

கார்க்கிபவா, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
மாடர்ன் அனுமன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மாடர்ன் அனுமன்கள்!

லையைச் சுமந்துசெல்லும் அனுமனைப்போல, ஒரு பெரிய பையை முதுகில் மாட்டி, பைக்கில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவர்களை எல்லா அலுவலக வாசல்களிலும், அப்பார்ட்மென்ட் வாசல்களிலும் பார்க்கலாம். ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை, உங்கள் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் இவர்களைக் கடக்காமல், மாநகரங்களில் யாராலும் வீடு சென்றுசேர முடியாது.

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டெலிவரி பாய்ஸ் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் இந்த லாஜிஸ்டிக்ஸ் துறையில் புழங்குகிறது. வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் இன்னும் சில லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்போகிறது.

தினமும் காலை 7 மணிக்கு குடோனுக்கு வந்துவிடுகிறார்கள். டெலிவரி செய்யவேண்டிய பொருட்களின் லிஸ்ட் வைத்து ஒரு ரூட் மேப் போடுகிறார்கள். பின்னர், எந்த ரூட்டுக்கு யார் என்பதை முடிவுசெய்து அவர்கள் இடத்தில் பொருட்களும், டெலிவரி செலானும் ஒப்படைக்கப்படுகின்றன. அங்கு இருந்து கிளம்பி 80 முதல் 100 கி.மீ வரை பயணிக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது 30 வாடிக்கை யாளர்களையாவது சந்தித்து, பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும். சில இடங்களில் பொருட்கள் திரும்பக் கொடுக்கப்படுவது உண்டு. அதையும் குடோனுக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். டெலிவரி செய்யப்போகும் இடத்தில் வாடிக்கையாளர் இல்லாமல் போனால், மீண்டும் அதைச் சுமந்துவந்தாக வேண்டும்.

மாடர்ன் அனுமன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

100 ரூபாய் பொருள் முதல் லட்ச ரூபாய் லேப்டாப், கம்ப்யூட்டர் வரை சுமந்துகொண்டு வருகிறார்கள் டெலிவரி பாய்ஸ். இப்போது காய்கறிகள், மளிகைப்பொருட்கள் விற்பனையும் இவர்கள் மூலமே நடக்கிறது. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இருக்கும் இந்தத் துறையில் 18 - 28 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் பணிபுரிகிறார்கள். மாத வருமானம் 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கிடைக்கிறது. பெட்ரோல் கம்பெனி தந்தாலும், மோட்டார் சைக்கிள் சொந்தமாக இருந்தால்தான் வேலையில் சேர முடியும். அதற்கான பராமரிப்புச் செலவை சம்பளத்தில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவும் டெலிவரி பாய்ஸின் சொந்தச் செலவுதான். ESI, PF போன்ற அடிப்படை நலன்களை நிறுவனங்கள் பார்த்துக்கொள்கின்றன.

ஆன்லைன் ஷாப்பிங் முறையில் எல்லாமே விர்ச்சுவலாக நடக்கின்றன. வாடிக்கையாளர் யாரிடமும் பேசுவதோ, விசாரிப்பதோ இல்லை. ஏதேனும் தகவல் தேவைப்பட்டாலும் கால் சென்டருக்குத்தான் அழைக்க வேண்டும். இந்த மொத்தச் சுழற்சியில் வாடிக்கையாளர் சந்திக்கும் மனித முகம், டெலிவரி பாய் மட்டும்தான். தனது பாராட்டுக்களையும் திட்டுக்களையும் நேரில் சொல்லக் கிடைத்த ஒரே ஆள் இவர்கள்தான். பொருளைக் கொடுத்து முடித்து கையெழுத்தை வாங்கிய உடனேயே டிப்ஸையோ, நன்றியையோ எதிர்பாராமல் அடுத்த டெலிவரிக்காக பைக்கில் பறப்பார்கள்.

“சின்னச் சின்ன வெப்சைட்டுக்கும் நாங்க டெலிவரி செய்றது உண்டு. அப்படி ஒரு நிறுவனத்துல ஒரு கஸ்டமர், மொபைல் ஆர்டர் பண்ணியிருந்தார். டெலிவரி செஞ்ச பார்சலின் உள்ளே மொபைலே இல்லை. அவர் பிரிச்சுப் பாக்குறதுக்குள்ள நான் தெருமுனைக்குப் போயிட்டேன். என்னைத் துரத்திட்டு வந்தவர், வண்டியைத் தள்ளி என்னை அடிக்க வந்துட்டார். அவர் வீட்டுக்குப் பக்கத்துல காலேஜ் ஸ்டூடன்ட் ஒருத்தர் இருந்தார். அவராலதான் தப்பிச்சேன். இல்லைனா அடி பின்னியிருப்பாங்க’’ - சிரித்துக் கொண்டே சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டெலிவரி பாய் ரமேஷ். இதுபோன்ற பல எதிர்பாராத பிரச்னைகளையும் இவர்கள் சந்தித்தாக வேண்டும்.

சில ஆண்டுகளில் லட்சம் பேர் இந்த வேலையில் சேர்ந்திருந்தாலும் இவர்களால் எந்தச் சட்ட ஒழுங்கு பிரச்னையும் பெரிதாக வந்தது இல்லை. பெரும்பாலும் படித்த இளைஞர்கள் இந்த வேலைக்கு வருவதே இதற்குக் காரணம்.

`கேஷ் ஆன் டெலிவரி'யில் பொருளை ஆர்டர் செய்துவிட்டு, பொருள் வந்ததும் பணம் கொடுக்காமல் டெலிவரி பையனை அடித்து துரத்திய சம்பவங்களும் உண்டு. சில இடங்களில் டெலிவரி பாய்ஸால் அலைக் கழிக்கப்பட்ட, அல்லல்பட்ட வாடிக்கையாளர்களும் உண்டு.

ஆன்லைன் வர்த்தகத்தின் அடிப்படைகள் இன்னும் பலருக்குப் புரிவதில்லை. டெலிவரி செய்யும் நபரின் மொபைல் எண்ணை நிறுவனத்தின் எண்ணாகவே பதிந்துகொள்கிறார்கள். அடுத்த ஆர்டர் வரத் தாமதமானால் அந்த டெலிவரி பாய்க்கு அழைத்து `ஏன் இன்னும் வரலை?' எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். ரிட்டர்ன் பாலிசி இருப்பதால், அதற்கும் டெலிவரி செய்தவரையே அழைப்பது உண்டு.

மாடர்ன் அனுமன்கள்!

டெலிவரி வேலைக்குச் சேரும் அனைவருக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. லட்சக் கணக்கில் பணம் கையாளும் வேலை என்பதால், அது பற்றிய பயிற்சிகள் உண்டு. அடிப்படை ஆங்கிலம் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதும் பயிற்சியில் உண்டு. ஆனாலும், டிராஃபிக் நெருக்கடி நிறைந்த சாலையில் அந்த மெகா சைஸ் பையைக் கொண்டுசெல்ல எந்த பயிற்சிகளும் உதவுவது இல்லை.

சாதாரணமாக, ஒருவர் தன் உடல் எடையில் 15 முதல் 20 சதவிகித எடையைத்தான் முதுகில் சுமக்கலாம். அதாவது, 80 கிலோ எடை உள்ளவர் அதிகபட்சமாக 20 கிலோ எடையைச் சுமக்கலாம். அதையும் நாள் முழுவதும் சுமந்துகொண்டே இருப்பது சிக்கல்தான். ரமேஷிடம் பைகளின் எடை பற்றிக் கேட்டபோது “பெரிய கம்பெனிங்க 15-ல் இருந்து 20 கிலோ எடை தருவாங்க. சின்ன கம்பெனின்னா, 25 கிலோ. நிறைய சின்ன பசங்கதான் வேலைசெய்றாங்க. அதனால இப்போ முதுகுவலி தெரியறது இல்லை” என்கிறார். அதாவது இப்போது வலி தெரியாது; சில வருடங்கள் கழித்துத் தெரியும் என்பது அவர் சொல்வதன் அர்த்தம்.

மாடர்ன் அனுமன்கள்!

இந்த வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பெரிய வாய்ப்பு இல்லை. 10 வருட அனுபவம் இருந்தாலும் டெலிவரி பாயாகவோ அல்லது டெலிவரி கோ-ஆர்டினேட்டராகவோதான் இருக்க முடியும். 50 முதல் 100 டெலிவரி பாய்களுக்கு ஒரு கோ-ஆர்டினேட்டர் இருப்பார். சினிமா, காதல், ஊரில் சண்டை எனப் பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வருபவர்களுக்கு இந்த வேலை உதவலாம். தற்காலிகமாக பணம் கொடுக்கும் வேலையாக இதைப் பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். ஆனால், தினம் 12 மணி நேரம் வேலை பார்க்காமல், இதில் சர்வைவ் செய்ய முடியாது. எனவே, இந்த வேலையிலேயே வாழ்க்கையைத் தொலைத்துவிடும் வாய்ப்புகளும் உண்டு.

ஆண்டுதோறும் கிடைக்கும் சம்பள உயர்வும் இங்கே சாத்தியம் இல்லை. பழைய ஆட்களை நிறுத்திவிட்டு, புதிய ஆட்களை குறைந்த சம்பளத்துக்குச் சேர்த்துக்கொள்கின்றன ஒப்பந்த நிறுவனங்கள். சென்னை போன்ற மாநகரத்துக்கு தினமும் ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் குடிபெயரும்போது ஆட்கள் கிடைப்பதில் சிக்கலே இல்லை.

“நிறையப் பொருட்களை டெலிவரி பண்ணாதான் டார்கெட் அச்சீவ் பண்ண முடியும். அப்பதான் இன்சென்டிவ் கிடைக்கும். பேக் சைஸ் பெருசு. போற வேகமும் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். இந்த சைஸ் பையோட நம்ம ஊரு டிராஃபிக்ல போறது ஈஸியான விஷயமா... சொல்லுங்க. அதனால் விபத்து நடக்க நிறைய சான்ஸ் இருக்கு. கையில இருக்கிற பொருட்கள் மற்றும் பணம் எப்பவும் ஆபத்துதான். அதனால் எங்களுக்கு இன்ஷூரன்ஸ் அவசியம் எடுத்துத் தரணும்” எனக் கேட்கிறார்கள் டெலிவரி பாய்ஸ்.

புதுப் பொருட்கள் என்பது எல்லோருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயம்தான். நமக்காக அதைக் கொண்டுவரும் இந்த நண்பர்கள் நம்மிடம் எதையும் கேட்பது இல்லை. எப்போதாவது குடிக்க கொஞ்சம் தண்ணீர், எப்போதும் முகத்தில் சிறு புன்னகை. அதையேனும் தருவோம்!

பெண்கள் மட்டும்...

மாடர்ன் அனுமன்கள்!

அமேசான் நிறுவனம் பெண்களை மட்டுமே கொண்டு இயங்கும் டெலிவரி மையங்களைத் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. அந்த மையத்தில் இருந்து மூன்று கி.மீ சுற்றுவட்டாரத்தில் இருக்கும் வீடுகளுக்கு பெண்களே டெலிவரி செய்வார்கள். இந்தத் திட்டம் விரைவில் சென்னையிலும் தொடங்கப்பட இருக்கிறது.