Published:Updated:

ஆளுநர் ஆட்சிக்குத் தயாராகிறதா தமிழகம்..? - ராஜ்பவனை ரவுண்ட் கட்டும் ஹேஷ்யங்கள்

ஆளுநர் ஆட்சிக்குத் தயாராகிறதா தமிழகம்..? - ராஜ்பவனை ரவுண்ட் கட்டும் ஹேஷ்யங்கள்
ஆளுநர் ஆட்சிக்குத் தயாராகிறதா தமிழகம்..? - ராஜ்பவனை ரவுண்ட் கட்டும் ஹேஷ்யங்கள்

ஆளுநர் ஆட்சிக்குத் தயாராகிறதா தமிழகம்..? - ராஜ்பவனை ரவுண்ட் கட்டும் ஹேஷ்யங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் 18 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 'தமிழகத்தை ஆட்சி செய்ய அவர் தயாராகி வருகிறார். தீர்ப்பின் முடிவைப் பொறுத்து அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்' என்கின்றனர் ராஜ்பவன் ஊழியர்கள். 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும் இடத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருந்தார். ஒரேநேரத்தில் மகாராஷ்ட்ராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆளுநராக இருந்ததால், 'முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது. சசிகலாவை முதல்வராகப் பதவியேற்கவிடாமல் தடுத்ததில் வித்யாசாகர் ராவுக்குப் பெரும் பங்கு உண்டு. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசிய வித்யாசாகர் ராவ், 'நான் வெறும் பார்வையாளன் மட்டுமே. டெல்லி சொல்வதை நான் செய்துகொண்டிருக்கிறேன்' எனப் பதில் அளித்தார். முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் விலகிய பிறகு, எடப்பாடி பழனிசாமியைப் புதிய முதல்வராக அமர வைத்தார். 

இதன்பின்னர், முழுநேர ஆளுநராகக் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி பதவியேற்றார் நாக்பூரைப் பூர்வீகமாகக்கொண்ட பன்வாரிலால் புரோஹித். 'தமிழகத்தை நேரடியாக ஆட்சி செய்ய, ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தைக்கொண்ட புரோஹித் நியமிக்கப்பட்டிருக்கிறார்' என்ற தகவல் வெளியானது. ஆளுநராகப் பதவியேற்ற 30 நாள்கள் வரையில் எந்தவித விளைவையும் காட்டாத பன்வாரிலால், நவம்பர் மாதத்தில் அரசு அலுவல்களை ஆய்வு செய்யக் கிளம்பினார். கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர் ஆகியோருக்கு ராஜ்பவன் மாளிகையில் இருந்து சென்ற ஓலை ஒன்று, அரசியல் ரீதியாக அதிர வைத்தது. அந்தச் சுற்றறிக்கையில், 'மாவட்டத்தில் நடக்கும் அரசுப் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்ய வருகிறார். இதில் ஒவ்வொரு துறைக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. அரசியல் கட்சிப் பிரமுகர்களிடமும் பேச இருக்கிறார்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 'மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் ஆய்வு நடத்துகிறார். அவருடைய அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்' என எதிர்க்கட்சிகள் கொந்தளித்தபோதும், ஆளுநர் அலுவலகம் எதுவும் பேசவில்லை. தொடர்ச்சியாக விவாதம் கிளம்பியபோது, 'விதிமுறைகளை மீறிச் செயல்படவில்லை' என விளக்கம் அளித்தது ஆளுநர் மாளிகை. 

இந்நிலையில், 'தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு ஆளுநர் தயாராகி வருகிறார். அதற்கேற்ப சில நடவடிக்கைகளையும் தொடங்கி இருக்கிறார்' என்றொரு விவாதம் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் பேசினோம். "கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து அரசு நிர்வாகத்தை முழுமையாகக் கவனித்து வருகிறார் ஆளுநர். சட்டமன்றத்தில் நடக்கும் காட்சிகளையும் கவனித்து வருகிறார். குறிப்பாக, 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்புக்காக இந்த வழக்கு காத்திருக்கிறது. இதில் தினகரன் தரப்புக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரலாம் என்றொரு கருத்து நிலவுகிறது. அப்படியொரு சூழல் ஏற்பட்டால், 18 எம்.எல்.ஏ-க்கள் எந்தப் பக்கம் நிற்பார்கள் என்ற கேள்வி மிக முக்கியமானது. எதிர்க்கட்சிகளும் வளைப்பு முயற்சியில் இறங்கலாம். ஆட்சியின் நிலைப்புத்தன்மை கேள்விக்குள்ளாகலாம். ஆட்சிக் கலைப்பை நோக்கிச் சென்றால், ஆளுநர் நேரடியாகக் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படியொரு சூழல் உருவானால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். 

'இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நான் தமிழகத்தை ஆட்சி செய்வேன்' என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசி வருகிறார். தமிழகம் முழுக்கவே அரசுப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார் ஆளுநர். இந்த நடவடிக்கைகளை ஆட்சியில் உள்ளவர்கள் ரசிக்கவில்லை. ஆளுநரின் ஆய்வை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆளுநர் கைகளில் அதிகாரம் சென்றுவிட வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்துதான், பா.ஜ.க-வுக்கு எதிராக முதல்வரும் துணை முதல்வரும் பேசி வருகிறார்கள். நேற்று சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இன்றைக்குத் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. உத்தரப்பிரதேசத்தைவிட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது' எனச் சுட்டிக் காட்டியதை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சும் முடிவுக்கு ஆளுநர் வந்துவிட்டார். 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அரசியல் காட்சிகள் மாறலாம்" என்கிறார் ஆளுநர் அலுலக அதிகாரி ஒருவர்.

தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். "அரசியல் ரீதியாக இதைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநர் சுற்றுப்பயணம் செல்வதால் இவ்வாறு பேசுகின்றனர். அரசு நிர்வாகத்தை முழுமையாகக் கண்காணித்து வருகிறார். இதற்கு முன்னால் நடந்த விஷயங்கள் எல்லாம் அவருடைய கவனத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. மிகவும் நேர்மையான மனிதர். ஒரு முழுமையான அக்கறையோடு, அவருடைய வரம்புக்குள் இருந்து தூய்மையான நிர்வாகத்தைக் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். துணைவேந்தர் நியமனமாக இருந்தாலும் பழைய துணைவேந்தர்கள் மீதான புகார்களை விசாரிப்பதாக இருக்கட்டும். கல்வித்துறைமீது அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது. சீரழிந்துகிடக்கும் உயர் கல்வித்துறையைச் சீர்படுத்துகிறார். இன்றுள்ள அரசியல்சூழல்களோடு இதை முடிச்சுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநரின் வரம்புக்குட்பட்டு தன்னுடைய பணிகளைச் செய்து வருகிறார்" என்றார் விரிவாக. 

'தூய்மையான நிர்வாகத்தைக் கொடுக்க விரும்புகிறார் ஆளுநர் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அனைத்தும் அடக்கம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
 

அடுத்த கட்டுரைக்கு