Published:Updated:

"குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடான்னு அடிச்சார்!” - கோவை பணியாளருக்கு நேர்ந்த சோகம்

"குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடான்னு அடிச்சார்!” - கோவை பணியாளருக்கு நேர்ந்த சோகம்
"குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடான்னு அடிச்சார்!” - கோவை பணியாளருக்கு நேர்ந்த சோகம்

“இந்த நிமிஷம் என் உடம்புல உசுரு ஒட்டியிருக்கிறதுக்குக் காரணம், என் பொண்டாட்டி, புள்ளைங்கதான். நான் போயிட்டேன்னா அதுங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும். என்னைய நம்பி யாரும் இல்லைன்னா இந்நேரம் நான் செத்திருப்பேன் சார். 'தூக்குல தொங்கிடலாமா’னு இருக்கு. ஒரு மனுஷனை சக மனுஷங்க மனுஷனாவே மதிக்கலைங்கிறதைவிட, இந்த உலகத்துல பெரிய அவமானம் என்ன இருக்கப்போவுது? சொல்லுங்க!”  - கோவை,  பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் நின்றபடி சிறுபிள்ளையைப்போல அழும் மணியின் கண்களிலிருந்து உருகி வழிகிறது ஆண்டாண்டுகால அவமானம்.

கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். `சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில்,  ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக(!?) மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்' என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, உடனடியாக கைதுசெய்ய வேண்டும்' என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

நடந்தது என்ன? மணியிடம்  பேசினோம்...

"1-ம் தேதி காலையில ஜீவா நகர் டீச்சர்ஸ் காலனியில குப்பை அள்ளிக்கிட்டிருந்தோம். என்னோடு சேர்ந்து மொத்தம் எட்டுத் துப்புரவுப் பணியாளர்கள் அங்கே இருந்தாங்க. நான் லாரிக்குள்ள உட்கார்ந்திருந்தேன். மத்த எல்லாரும் குப்பை அள்ளிக்கிட்டிருந்தாங்க. அப்போ விறுவிறுனு லாரியை நோக்கி வந்த ஒரு லேடி, `இங்கெல்லாம்  குப்பையைக் கொட்டாதீங்கனு எத்தனைமுறை சொன்னாலும், நீங்க கேட்க மாட்டீங்களா?'னு என்கிட்ட சத்தம்போட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. `நாங்க இங்கே குப்பை போடுறதுக்கு வரலம்மா… நீங்களெல்லாம் போடும் குப்பைகளை அள்ளிக்கிட்டுப் போறதுக்கு வந்திருக்கோம்'னு சொன்னேன். அந்த  ஏரியாவோட குப்பைகளை எல்லாம் அந்த அம்மா வீட்டுக்குப் பக்கத்துல உள்ள காலி இடத்துல ஒண்ணுசேர்க்கவே கூடாதுனுதான் அவங்க பஞ்சாயத்துப் பண்றாங்கனு எனக்குக் கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்சது. 

`இப்படி ஒவ்வொருத்தரும் பிரச்னை பண்ணினா, எங்களால எந்த இடத்துலயுமே குப்பைகளை ஒண்ணுசேர்த்து அள்ள முடியாதும்மா'னு அவங்ககிட்ட சொன்னேன். அந்த நேரம் பார்த்து வந்த அந்த அம்மாவோட மகன் என்ன நினைச்சாரோ தெரியலை, `குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடா? எறங்கி வந்து பேச மாட்டியா?'னு சாதிப்பேரைச் சொல்லி கேவலமா பேசினார். 

எனக்கு ஆத்திரம் பொத்துக்கிட்டு வந்திருச்சு. `எதுக்கு இப்ப சாதியை இழுத்துப் பேசுறீங்க?'னு இறங்கி வந்து கேட்டேன். அதுக்கு, `குப்பை அள்ளி வயித்தைக் கழுவுற உனக்கு இவ்வளவு திமிரு ***** ஆ!'னு  சொல்ல முடியாத வார்த்தைகளால ரொம்ப கேவலமா திட்டினார். நானும் பதிலுக்கு நாலு வார்த்தை பேசினேன். மறுபடியும் சாதிப் பெயரைச் சொல்லி `என்னையே எதிர்த்துப் பேசுறியா?'னு செருப்பைக் கழட்டி படார்னு அடிச்சுப்புட்டார். நான் அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. அந்த நிமிஷமே நான் செத்துப்போயிட்டேன். இப்போ இருக்கிறது வெறும்கூடுதான். நாங்களெல்லாம் சொரணையே இல்லாம வாழணும்னு எங்களை படைச்சிருக்கானா அந்த ஆண்டவன்? சொல்லுங்க சார்!'' என்று கோபம் பொங்க கேட்ட மணி, ``அந்த ஆளை அரெஸ்ட் பண்ணணும் சார். நாங்க என்ன நாதியத்தவங்களா? நாங்களும் மனுஷங்கதான் சார்!'' ஆற்றாமையில் மீண்டும் பொங்குகிறது மணியின் கண்கள்.

``நீ எதுக்கும் கவலைப்படாதண்ணே… நாங்க இருக்கோம் உனக்கு. மனசை தளரவிட்ராதண்ணே!'' என்று மணிக்கு ஆறுதல் சொல்லிய சக துப்புரவுப் பணியாளரான மஞ்சுளா, தனது ஆத்திரத்தைக் கொட்ட ஆரம்பித்தார், ``என்ன பாவம் செஞ்சோமோ… எங்களுக்கு இப்படி ஒரு ஈனப்பொறப்பு. பொறந்துட்டோம். பொழைக்கிறதுக்கு எங்க முன்னாடி குப்பைதான் இருக்கு. குப்பை அள்ளுறதை ஒருபோதும் நாங்க கேவலமா நினைச்சதே இல்லை. குப்பையை நாங்க தங்கம் மாதிரிதான் பார்ப்போம். நீங்க போடுற குப்பைகளை ரெண்டு கைகளையும் ஏந்தி நாங்க வாங்கும்போது அது எங்களுக்குத் தங்கமாத்தான் தெரியும். ஆனா, எங்களை மத்தவங்க நடத்துற விதம்தான் எங்களால ஜீரணிக்கவே முடியலை.

காலையில எழுந்து குளிச்சு, சாமி கும்பிட்டுட்டுத்தான் நாங்களும் வேலைக்கு வர்றோம். ஆனா, குப்பை வண்டியைப் பிடிச்சுக்கிட்டு தெருவுல நடக்க ஆரம்பிச்சதும் `ஏ… குப்பை இங்க வா!' `குப்பைவண்டி... கொஞ்ச நேரம் நில்லேன்' இப்படித்தான் எல்லாரும் எங்களைக் கூப்பிடுவாங்க. அந்த நிமிஷம் எங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? `அந்தக் குப்பை மாதிரிதான் நம்மளையும் நினைக்கிறாங்க'னு தோணும். தோணுறதென்ன அப்படித்தான் நினைக்கிறாங்க. 

வனிதா

பெரும்பாலான வீடுகள்ல மாடியில நின்னுக்கிட்டு குப்பையைத் தூக்கிப் போட்டு  `கேட்ச்'  பிடிச்சுக்கச் சொல்வாங்க பாருங்க, அதைவிட வேதனை எதுவும் இல்லை. அப்படித் தூக்கிப் போடுறவங்க சிலபேருக்கு எங்க மேல கரிசனம் இருக்கும். அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா? `நீ தள்ளி நின்னுக்கோ, நான் ஓரமா போடுறேன். விழுந்ததும் எடுத்துக்கோ'ம்பாங்க. பலபேர் அவங்க வீட்டு குப்பையே தொட மாட்டாங்க. அய்யோ… எங்க கொடுமையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா இந்த நாள் பத்தாது சார். நாங்க காலையில வண்டி தள்ளிக்கிட்டு வரும்போது, `வணக்கம் மேடம்! வந்து குப்பை வாங்கிக்கோங்க’னு சொல்லணும்னு சொல்லலை. எங்க தகுதி என்னன்னு எங்களுக்குத் தெரியும். எங்களையும் சக மனுஷங்களா நினைங்கன்னுதான் சொல்றோம்'' என்றவர், ``காலங்காத்தால  நாங்க குப்பை வாங்கப் போகும்போது,  சில வீடுகள்ல நாய்குட்டியை மடியில தூக்கிவெச்சு கொஞ்சிக்கிட்டு இருப்பாங்க. நாங்க போனதும் குப்பையைக் கையிலகூடத் தொடாம முகத்தை ஒருமாதிரி சுளிச்சுக்கிட்டு குப்பை வெச்சிருக்கும் இடத்தைக் காட்டி… `சீக்கிரம் எடுத்துட்டுப் போ'னு சொல்லி மூக்கைப் பொத்துவாங்க பாருங்க சார். அங்கேயே நாண்டுக்கலாம்னு தோணும். ஏன் சார், நாங்க நாய்ங்களைவிட கேவலமானவங்களா சார்?'' மஞ்சுளாவின் கேள்விக்கு ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்துதான் பதில் சொல்ல வேண்டும்.

மணியை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாகவும் செருப்பால் அடித்ததாகவும் சொல்லப்படுபவரின் வீட்டுக்குச் சென்றோம். அந்த வீட்டில் இருந்த பெண்மணி, தன் பெயர் வனிதா என்று அறிமுகம் செய்துகொண்டார். நடந்த சம்பவத்தைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ``அதெல்லாம் சுத்தப் பொய்யுங்க. எங்க ஏரியாவுல குப்பை அள்ளும் கலாங்கிற பொண்ணுகிட்ட நான் ஃப்ரெண்ட் மாதிரிதான்  பழகுவேன். குப்பை லாரி டிரைவரை `சார்'னுதான் கூப்பிட்டேன். என் மகன் சஞ்சய்,  ரொம்ப  சாதுவானவன். அவன் எந்த வம்புக்கும் போக மாட்டான். அவன்மேல வீண்பழி சுமத்துறாங்க.  `குப்பையை இங்கே கொட்டாதீங்க'னு சொன்னதுக்கு லாரி டிரைவர்தான் வீணா பிரச்னை பண்ணார். வீட்டுவாசல் முன்னாடி வந்து நின்னுக்கிட்டு கெட்டவார்த்தைகள்ல பேசினார். நாங்க படிச்ச ஃபேமிலி சார். நாங்க சாதியெல்லாம் பார்க்கிறதில்லை. அவங்க சொல்றதெல்லாமே பொய்'' என்று மறுத்தார்.

போலீஸ் தரப்பில் விசாரித்தோம், ``வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். உரிய நடவடிக்கை எடுப்போம்'' என்றார்கள்.