Published:Updated:

''சாட்டை சுழற்றும் கவர்னர்... அடுத்த குறி அமைச்சர்களா..?''

''சாட்டை சுழற்றும் கவர்னர்... அடுத்த குறி அமைச்சர்களா..?''
''சாட்டை சுழற்றும் கவர்னர்... அடுத்த குறி அமைச்சர்களா..?''

''சாட்டை சுழற்றும் கவர்னர்... அடுத்த குறி அமைச்சர்களா..?''

தமிழகக் கவர்னராக பன்வாரிலால் புரோகித்  கடந்த ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து, 'கள ஆய்வு' என்று ஒவ்வோர் ஊராகச் சென்று வருகிறார். கோவையில் தொடங்கிய அவரது ஆய்வுப் பயணம், இப்போது ஒவ்வொரு நகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ஆளும்கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன. ஒவ்வோர் ஊருக்கும் பன்வாரிலால் புரோகித் வரும்போது அவருக்கு தி.மு.க சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படுகிறது. சமீபத்தில் திருச்சி வந்த கவர்னருக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டனம் தெரிவித்தனர்.  ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தனது ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்.

 இப்படி ஆய்வு என்று தனது அதிகாரத்தைக் கோலோச்சும் நிலையில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் முன்பிருந்த கவர்னர்களைவிட மிகவும் எளிய மனிதராக பன்வாரிலால் புரோகித் நடந்துகொள்வதாக அங்குள்ள அதிகாரிகள் சொல்கிறார்கள். கவர்னரின் அலுவலகம் சைவை உணவுக்கு மாறிவிட்டது என்றும் அவர் தமிழ் கற்று வருவதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில், கவர்னர் மாளிகையின் ஒவ்வோர் அசைவையும் அவர் கவனித்து வருவதோடு, தன்னைப் பார்க்கவரும் மக்களுக்கும், பணியாளர்களுக்கும் நேரம் ஒதுக்கி அவர்களிடம் பேசுகிறார். அதிலும், கவர்னர் மாளிகையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகளும் சில புகார்களும் அவரது காதுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அதைத் தனது செயலாளர்  ராஜகோபால் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். 

இந்நிலையில், பா.ம.க. இளைரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த ஆண்டு டிசம்பரில் கவர்னரைச் சந்தித்து தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மீது 24 ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்தார். அதில், '' 7.10 லட்சம் கோடி ஆற்று மணல் ஊழல், உயர் கல்வித்துறையில் உள்ள 13 பல்கலைக் கழகங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 800 ஆசிரியர் பணி இடம் நிரப்பியதில் 320 கோடி ரூபாய் ஊழல், தனியாரிடம் மின் கொள்முதல் செய்ததில் 52,000 கோடி இழப்பு, மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் 303 கோடி ரூபாய் ஊழல்' என்று பல ஊழல் பட்டியல் கொடுத்தார். இப்போது, வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் மீது ஊழல் பட்டியல் வாசித்துள்ளனர். இப்படி, கவர்னர் மாளிகைக்குப் புகார்கள் சென்றுகொண்டு இருக்கின்றன. 

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நடந்த ஊழல் புகார் குறித்து ஆய்வு நடத்தி அதில், தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்குப் புகார் போனது. அந்தப் புகாரின் அடிப்படையில் கவர்னர் மாளிகைக்கு சோபா, சேர், பர்னிச்சர் பொருள்கள் வாங்கியதாகக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செய்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 10 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சமீபத்தில் சென்னை அடையாறு பகுதியில் உள்ள கடை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேடுகளைச் செய்த, கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

இதற்கிடையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட நிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் பிப்ரவரி 16-ம் தேதி சென்னையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் என்ற முறையில் அனைத்துத் துணைவேந்தர்களையும் பதிவாளர்களையும் கடந்த 3-ம் தேதி கிண்டி கவர்னர் மாளிகைக்கு அழைத்தார் பன்வாரிலால் புரோகித். அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு அழைப்பு இல்லை. ஆனால், உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் அழைக்கப்பட்டு இருந்தார். கவர்னரின் செயலாளர் ராஜகோபால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மத்தியில் பன்வாரிலால் புரோகித், ''கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள். பல்கலைக்கழங்கள் மட்டுமல்ல, உங்களது உறுப்புக் கல்லூரிகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். பாடத்திட்டம், ஆராய்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய மனிதவளத் துறையின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அகில இந்திய தர வரிசையில் தமிழகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. அதில், ஒன்று அரசுப் பல்கலைக்கழகம். மற்ற இரண்டு பல்கலைக்கழகங்களும் தனியாருக்குச் சொந்தமானவை. மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கித் தரும்போது அதற்கு ஏற்றாற்போல நீங்கள் வேலை செய்ய வேண்டாமா? பணி நியமனம், டெண்டர் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை தேவை'' என்று பேசினார்.

இப்படித் தமிழக அரசின் நிர்வாகத்தில் தனக்குள்ள அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள கவர்னருக்குத் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழல் குறித்தும் புகார்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. எனவே, ஊழல் புகார்களுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்ற கவர்னர் மாளிகை தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை அவரது நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன. அடுத்த குறி, தமிழக அமைச்சர்கள்தான் என்ற பேச்சு இப்போது கோட்டையில் உலாவுகிறது. கோட்டையில் கவர்னருக்கு என்று தனி அறை உள்ளது. அங்கு வந்தமர்ந்து அவர் அதிகாரம் பண்ணப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதுபோலவே கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்பாடுகள் இருப்பதாகப் பேச்சுகள் கிளம்பி இருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு