Published:Updated:

ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதல் திருவெறும்பூர் சம்பவம் வரை..சட்டத்தைச் சிதைக்கிறதா காவல்துறை!

ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதல் திருவெறும்பூர் சம்பவம் வரை..சட்டத்தைச் சிதைக்கிறதா காவல்துறை!
ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதல் திருவெறும்பூர் சம்பவம் வரை..சட்டத்தைச் சிதைக்கிறதா காவல்துறை!

“தமிழ்நாட்டில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம் - ஒழுங்கு, அமைதி ஆகியன சிறப்பாக இருக்கின்றன’’ என்று தன் ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை அவ்வப்போது உறுதிபடத் தெரிவித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரைப் பொறுத்தவரை, தான் முதல்வராக இருந்த காலத்தில் தனக்குக்கீழ் செயல்படும் துறை என்பதால், காவல் துறையை மிகுந்தக் கட்டுக்கோப்போடு வைத்திருந்தார் என்பதுடன், அவரின் தலைமைக்குக் கட்டுப்பட்டு, அந்தத் துறை அதிகாரிகளும் திறம்படச் செயலாற்றினர்.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழகத்தில் அவர் வளர்த்த அ.தி.மு.க-வும், மாநிலத்தில் ஜெயலலிதா வழியில் செயல்படுவதாகக் கூறப்படும் இந்த ஆட்சியும் சாதனைகள் என்று சொல்லிக்கொண்டு, பொதுமக்களுக்கு எண்ணற்ற சோதனைகளைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறது. ‘ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி நடத்துகிறோம்’ என்று வாய்க்குவாய் மேடைகளில் முழங்கும் அ.தி.மு.க-வின் ரத்தத்தின் ரத்தங்கள்தான், இன்று நாட்டில் நடக்கும் பெரும்பாலான மக்கள் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றனர். 

குறிப்பாக, ‘தமிழ்நாட்டில் தற்போது சட்டம் - ஒழுங்கு சரியில்லை’ என்பதுதான் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு கடந்த ஓர் ஆண்டாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏராளமான சம்பவங்களே உதாரணம். 

மாறிய முதல்வர்கள்.. மாறாத சட்டம் - ஒழுங்கு!

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போரில்... வெற்றிபெற்ற தமிழக இளைஞர்களுக்கு எதிராகக் கடைசி நேரத்தில், காவல் துறையைக் கட்டவிழ்த்துவிட்டது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அப்போதைய தமிழக அரசு. முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவிடம் விசுவாசி எனப் பெயர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். மாற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். ஆனாலும் தொடர்வது என்னவோ, ஜெயலலிதாவின் ஆட்சிதான் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், எடப்பாடி ஆட்சியிலும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை தீரவில்லை என்பதுதான் நிஜம். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் பெண்கள் சிலர், மதுக்கடைகளை அடைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடிய அந்தப் பெண்கள் கூட்டத்தில் புகுந்து காவல் துறையினர் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணை, அப்போது பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. இதுதொடர்பாகக் கண்டனக் குரல்களும் அப்போது எழுந்தன. இதையடுத்து, ‘தாக்குதல் நடத்திய அதிகாரிமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு அறிவித்தது. ஆனால், நாள்கள் பல கடந்த நிலையில், அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்தது அரசு. 

அதேபோல், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வடலூரில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், போலீஸார் அத்துமீறித் தொழிலாளர்கள்மீது தடியடித் தாக்குதல் நடத்தினர். இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில், டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவரை டிராஃபிக் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அவர் நிற்காமல் போனதால், மறைந்து நின்று போலீஸ்காரர் ஒருவர், கட்டையைக் கொண்டு அவர் தலையில் கடுமையாகத் தாக்கினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. 

ஏவப்பட்ட குண்டர் சட்டம்!

இந்த நிலையில், மூன்று தினங்களுக்கு முன் திருச்சி திருவெறும்பூர் அருகே ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்ற தம்பதியைப் போலீஸார் தடுத்து நிறுத்தி, எட்டி உதைத்ததில் மூன்று மாத கர்ப்பிணிப் பெண், வாகனத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுதவிர, கடந்த ஆண்டு ஈழத்துக்கு ஆதரவாக மே 17 இயக்கம் சார்பில் மெரினாவில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தின்போது, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டுக் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மிகுந்த எதிர்ப்புக்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், சேலத்தில் கல்லூரி ஒன்றின் வாசலில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்களை வழங்கியதாக வளர்மதி என்ற மாணவியும் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். 

மேலும், காவல் துறையில் பணியாற்றுபவர்கள், பணிச்சுமை மற்றும் மேலதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, பணியில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழலில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், மூன்று ஆண்டுகள் கழித்து, தற்போதுதான் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசின் திட்டங்கள், காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவு நாளன்று உரையாற்றிய முதல்வரும், காவல் துறைக்குப் பொறுப்பு வகிப்பவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. மத பயங்கரவாதத்தைத் தூண்டுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்குச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது’’ என்றார்.

தனி மனிதச் சுதந்திரத்தில் தலையீடு!

முதல்வரின் பேச்சு குறித்தும், மாநிலத்தில் நிலவும் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும் பிரபலங்களிடம் பேசினோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பில்லை. அவர்கள், பகலில்கூட நடமாட முடியவில்லை. போலீஸின் செயல்பாடுகள் பல தருணங்களில் அத்துமீறியதாகவே இருக்கின்றன. திருச்சியில் கர்ப்பிணிப் பெண் இறந்திருப்பதே இதற்கு சமீபத்திய உதாரணம். மாவட்ட ஆட்சியர் - காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தை முதல்வர் நடத்தியிருக்கிறார். அதில், ‘சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படும்’ என்று கூறியிருக்கிறார். ஆனால், அவருடைய பேச்சுக்கும், செயல்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை’’ என்றார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “பொதுவாகக் காவல்துறையினர் தாங்களே சட்டத்தைக் கையிலெடுக்கும் சூழல்தான் பல இடங்களிலும் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மக்களையும் குற்றவாளிகளாகவே பார்க்கும் மனநிலை அவர்களிடையே வளர்ந்து வருகிறது. தனி மனிதச் சுதந்திரத்துக்குள் தலையிட வேண்டிய அளவுக்கு காவல் துறையை அரசாங்கம் கொண்டுவந்து விட்டது. இது, இத்துடன் நிற்கப்போவதில்லை. இதனால்தான் அவர்கள், ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் வழக்கு, விசாரணை போன்றவற்றில் தலையிடுகின்றனர். பொதுவாகக் காவலர்கள், சாலையோரத்தில் நின்றுகொண்டு ஏதோ திருடனைப் பிடிக்க வருவதுபோலக் குறுக்கேவந்து நிற்பது, வாகன ஓட்டிகளின் பின்னே ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.  ஒருவர், ஹெல்மெட் போடவில்லை என்றால், அவரைக் கேமராவில் படம் எடுங்கள். வாகனத்தின் பதிவு எண்ணைவைத்து, முகவரி அறிந்து அவர்மீது வழக்குப் பதிவு செய்யுங்கள். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் பின்னே ஓடிச்சென்று பிடிப்பது என்பது எல்லாம் சமூக விரோதிகள், குற்றவாளிகளைப் பிடிப்பது போன்ற செயல்களாகவே உள்ளன.

கையாலாகாத அரசு!

போராடும் மக்களைத் தாக்குவது, கலைந்துபோகச் செய்வது, வழக்குப்பதிவு செய்வது என்பனவற்றையெல்லாம் காவல் துறையினர் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மாற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். குறிப்பாக, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையில் போலீஸாரே ஆட்டோவுக்கு தீவைத்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டனர். இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு அவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? இதுபோன்று காவல் துறையினர் செய்யும் தவறுகளுக்குத் தண்டனையே கிடையாது என்பதால்தான், இந்த மனநிலை அதிகரிக்கிறது. அதாவது, அதிகபட்சமாக அவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும். இந்தத் துறைசார்ந்த நடவடிக்கைகள் என்பது தண்டனையாக எப்படி மாறும்? இதுவே போதும் என்கிறபோது குற்றவியல் நடவடிக்கைகள், தண்டனைகள் போன்றவற்றை அவர்கள் எதற்கு வைத்திருக்க வேண்டும்? குற்றவியல் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் கலைத்துவிட்டு அந்த நிர்வாகம் எடுக்கும்  நடவடிக்கைகளை மட்டுமே வைத்துக்கொள்ளலாமே? 

பெரியார் சிலை விவகாரத்தில், பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஹெச்.ராஜா மீது இதுவரை மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களைப் போன்றவர்களுக்கு வசதி ஏற்படுத்துவதாகக் காவல் துறையினர் நினைத்துக்கொண்டு சாமான்யர்களை மிக மோசமாக நடத்துகிறார்கள். சமூக விரோதிகள் போன்றோரை இந்த அரசு பாதுகாக்கிறது. காவல் துறை கட்டற்றுப் போவதற்குக் கையாலாகாத அரசுதான் காரணம்’’ என்றார் மிகத் தெளிவாக.

ஜெ. வழியில் தமிழகத்தில் நல்லாட்சியை அளித்து வருவதாகக் கூறிக் கொள்ளும், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ். கூட்டணி, திருச்சி கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுப்பதுடன், மாநிலம் முழுவதும் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் இனிமேலாவது கவனம் செலுத்துவார்களா?