Published:Updated:

”பெட்ரோல் தீயைவிட காட்டுத்தீக்கு வேகம் அதிகம்!’’ -அனுபவம் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள் #KuranganiForestFire

”பெட்ரோல் தீயைவிட காட்டுத்தீக்கு வேகம் அதிகம்!’’ -அனுபவம் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள் #KuranganiForestFire
”பெட்ரோல் தீயைவிட காட்டுத்தீக்கு வேகம் அதிகம்!’’ -அனுபவம் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள் #KuranganiForestFire

”பெட்ரோல் தீயைவிட காட்டுத்தீக்கு வேகம் அதிகம்!’’ -அனுபவம் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள் #KuranganiForestFire

'காடு பார்த்தல்... மலையேறுதல்' என்பது தற்போது இளைஞர்கள் வார இறுதி நாள்களைக் கொண்டாட உருவாக்கியுள்ள புது 'ட்ரெண்டாக' மாறிவருகிறது. "எந்த மலைக்குப் போகலாம், எங்கு ட்ராவல் பண்ணலாம்" என்பதைப் பகிர்ந்து கொள்ளவே வாட்ஸ்அப்பில் வாரம் ஒரு குழு தொடங்குகிறார்கள். இந்தப் பயணங்கள் ஒருபுறம் சுவாரஸ்யமாக இருந்தாலும், இன்னொருபுறம் அந்தப் பயணத்தின்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிக்க போதிய ஏற்பாடுகள் இல்லாமலும் சிலநேரங்களில் போய்விடுகிறது.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. கொழுக்குமலை செல்லும் வழியில் ஒற்றைமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டுள்ளனர். அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரக் காலமாகவே காட்டுத்தீ பரவி வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயில் சிக்கியவர்களை மீட்க உள்ளூர் மக்கள், வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ட்ரெக்கிங் சென்ற 39 மாணவ, மாணவிகளில் 27 பேர் சென்னையில் இருந்தும், 12 பேர் ஈரோட்டிலிருந்தும் சென்றுள்ளனர். இவர்களில் 9 பேர் அதிகளவு காயம் ஏற்பட்டதால் உயிரிழந்தனர். மேலும், மற்றவர்கள் மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குரங்கணி மலை, தேனி மாவட்டத்திலிருந்து மிகவும் அருகில் இருப்பதால், சென்னை மற்றும் தேனியைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், இங்கு வார இறுதியில் நடைப்பயிற்சிக்காகவும், சுற்றிப்பார்க்கவும் இந்த இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். குரங்கணி மலையில் இருந்து அடர்ந்த வனப் பகுதியில் நடந்தே சென்றால், கேரளாவில் உள்ள மூணாறு பகுதிக்குச் சென்றுவிடலாம்.

குரங்கணி மலையில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் 150-க்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதிக்கு ஒரு பள்ளிக் கூடமும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் 20-க்கும் அதிகமான மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே குரங்கணிமலைக்கு நான், என்னுடன் பணியாற்றும் இன்னும் இரண்டு தோழிகளுடன் சென்றிருந்தேன். தேனியைச் சொந்த ஊராகக் கொண்ட சரவணகுமார் என்கிறவர் வார இறுதி நாள்களில், குழு அமைத்து 'ட்ரெக்கிங்' அழைத்துச் செல்வது வழக்கம். அப்படித்தான் எங்களையும் சேர்த்து 15 பேரை குரங்கணி மலைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் நாங்கள் மலையேறச் சென்றிருந்தோம். மலை அடிவாரம் வரைக்கும், ஒரு வாகனத்தில் பயணம் செய்தோம். அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். எங்களுடன் ஒரு ஜீப் வந்துகொண்டிருந்தது. குழந்தைகள், வயதானவர்கள், உடல் முடியாதவர்கள் போன்றோர் அதில் பயணம் செய்தனர். அந்தப் பயணத்தின்போது,  சுற்றுசூழலைப் பாதிக்காத அளவில், உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டுசென்றோம். மலைவாழ் மக்கள் வசிக்கும் குறிப்பிட்ட பகுதிவரை மட்டுமே நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். அதைத்தாண்டி செல்ல வனத்துறை விதிமுறைகள் நிறைய இருந்ததால், அங்கிருந்து திரும்ப வேண்டியதாயிற்று. குறிப்பிட்ட பகுதியைத் தாண்டி செல்லவேண்டியிருந்தால், வனத்துறையினரோ அல்லது அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களோ உடன் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

இந்த நிகழ்வு பற்றி ட்ரெக்கிங் குழுவான வொயில்டு டூரிசம் (Wild tourism) ஒருங்கிணைப்பாளர் சரவண குமாரிடம் பேசினோம்.

"மலைப்பகுதிகளுக்கு செல்லும்போது, அதற்கான முன்னேற்பாடுகள் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். ட்ரெக்கிங் செல்வதற்கு ஒரு வாரம் முன்பே வனத்துறைக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். வனச் சரகருக்கும் தகவல் அளிக்கப்படும். பின்பு, அந்தப் பகுதியைச் சேர்ந்த வனக் காவளர் துணையுடன் மலையேறத் தொடங்கலாம். குரங்கணி மலைக்குச் செல்லும் பாதையில் வனத்துறையினர் இருப்பார்கள். அவர்களிடம், யாரெல்லாம் செல்கிறோம் என்ற தகவல்களைக் கொடுத்துவிட்டு, நுழைவுக் கட்டணம் செலுத்தி தொடர்ந்து பயணிக்க வேண்டும். ட்ரெக்கிங் அழைத்துச் செல்லும் குழுவின் தலைவர், செல்லும் இடத்தைப் பற்றி நன்கு அறிந்தவராக இருக்க வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட இடம் வரை மலைவாழ் மக்களின் நடமாட்டம் இருக்கும். ஆரம்ப நிலையில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த இடம்வரை மட்டுமே அனுமதியுண்டு. குறிப்பிட்ட இடத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுடனோ அல்லது, வனத்துறையினருடனோ மட்டுமே செல்ல வேண்டும் என்பது  கட்டாயம். குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி, வனத்துறையினருக்கு தெரியாமல் முன்னறிவிப்பின்றி சென்றால் பிரச்னை அவர்களுக்குதான். குரங்கணி மலைப்பகுதியானது அடர்ந்த காட்டுப் பகுதியாகும். அங்கு கஞ்சா செடிகள் அதிகம் வளரும். திடீரென காட்டுத் தீ பரவினால், செடிகளின் அடியில் மிக வேகமாக அந்தத் தீ பரவுவதுடன், பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்படும் தீயைக் காட்டிலும் அதிவேகமாக பல்வேறு செடிகளுக்கும் பரவக்கூடிய திறன்கொண்டது. ஒருவாரம் முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வந்த நிலையிலும், தற்போது சுற்றுலாப் பயணிகள் அந்த மலையில் ஏறியது தவறான செயல். காட்டுத் தீயில் இருந்து தப்பிப்பது அவளவு எளிதானதல்ல. செல்லும் இடத்தைப் பற்றி முன்பே அறிந்து, அதற்கேற்றவாறு திட்டமிடுவதே ஒரே வழி" என்றார்.

சுற்றுலா செல்வதும், மலையேறுவதும் இப்போது சாதனையுடன் கூடிய ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்ட வேளையில், அதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் செய்த பின்னரே, நம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பயணங்களின்போது, நமக்கான பாதுகாப்பு நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்பதை உணர வேண்டும். மலையேற்றம் என்ற பெயரில் விலைமதிப்பு மிக்க நம் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதும் நம் கடமையே..!

அடுத்த கட்டுரைக்கு