Published:Updated:

காணாமல்போன பாரம்பர்ய இட்டேரி... பல்கிப்பெருகிய மயில்களால் அவதியுறும் விவசாயிகள்!

காணாமல்போன பாரம்பர்ய இட்டேரி... பல்கிப்பெருகிய மயில்களால் அவதியுறும் விவசாயிகள்!
காணாமல்போன பாரம்பர்ய இட்டேரி... பல்கிப்பெருகிய மயில்களால் அவதியுறும் விவசாயிகள்!

காணாமல்போன பாரம்பர்ய இட்டேரி... பல்கிப்பெருகிய மயில்களால் அவதியுறும் விவசாயிகள்!

"வழக்கத்திற்கு மாறாக மயில்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்கிறது. இது இயற்கை சமநிலையின்மையை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் நாம் அழித்த உயிர்வேலிகள்தான். இதே நிலை தொடர்ந்தால், பெரும் இயற்கை பிரச்னைகள் ஏற்படும்" என்று எச்சரிக்கிறார் ஆசிரியர் ராஜசேகரன். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் இவர், மாணவர்களைக் கொண்டு மயில்களின் பெருக்கத்திற்கான காரணம் குறித்து இவர் செய்த ஆய்வு மாநில, தேசிய விருதுகளைப் பெற்று வந்திருக்கிறது. மயில்களின் பெருக்கம் விவசாயிகளுக்கும் தலையிடியாக இருக்கும் சூழலில், இதுபற்றி ஆசிரியர் ராஜசேகரனிடம் பேசினோம்.

"ஓர் உயிரினத்தின் அழிவு எவ்வளவு ஆபத்தோ, அதே அளவு ஆபத்து ஓர் உயிரினம் அதிக எண்ணிக்கையில் பெருகுவதிலும் இருக்கிறது. சமீபகாலமாக மயில்களின் எண்ணிக்கை பல பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாக இந்த மயில்களின் பெருக்கம் இருக்கிறது. இதனால், விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள வெள்ளாமையை மயில்களிடம் இருந்து பாதுகாக்க முடியாமல் திணறி வருகின்றனர். எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பக்கம் உள்ள உப்புப்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள நடேசன் என்ற விவசாயியின் தோட்டத்தில் ஆய்வை மேற்கொண்டோம்.

 அதோடு, அங்குள்ள இன்னும் சில விவசாயிகளையும் சந்தித்துப் பேசினோம். மயில்களால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும், அதனால் விவசாயத்தையே கைவிடும் கொடிய சூழலுக்கு ஆளாகி இருப்பதும் தெரிந்தது. அதோடு, சில மூத்த விவசாயிகளைச் சந்தித்துப் பேசியதில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான நம்பிகையைப் பெற்றோம். மயில்கள் இப்படிக் கணக்கற்றுப் பெருகுவதற்குக் காரணம் இட்டேரி என்கிற உயிர்வேலிகளை நாம் அழித்ததுதான். கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வரை இந்த இட்டேரி என்கிற உயிர்வேலிகள் நம் வயல்கள், தோட்டங்களைச் சுற்றி இருந்தன. இட்டேரி என்பது கொங்குநாட்டுச் சொல். இட்டேரி என்கிற உயிர்வேலி என்பது இருபுறமும் அடர்ந்த வேலி, நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித்தடம் உள்ளிட்ட அமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த இட்டேரி என்கிற உயிர்வேலியில் கள்ளி வகைகள்,முள்ளுச்செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி,ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடி வகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகளும் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாக விவசாய நிலங்களைக் காத்து வந்தன. அதோடு, இந்த உயிர்வேலியில் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள், எலி வலைகள் நிறைய காணப்படும். நிழலும், ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் இந்தப் பகுதியில் காணப்படுவதால், இந்தப் பகுதியில் எண்ணற்ற பூச்சியினங்களும் வாழ்ந்து வந்தன. இவற்றை உணவாக உட்கொண்டு வண்டுகள், நண்டுகள், பாம்புகள், பாப்பிராணிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள் என்று பல உயிர்கள் வாழ்ந்தன. இந்த உயிர்களை உண்ண பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்ற உயிர்கள் இருந்தன. அதேபோல்,மனிதர்களுக்குக் கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம் போன்ற கனி வகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக் கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருள்களும், மூலிகைகளும் கிடைத்தன. இந்த உயிர்வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை சேர்ந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் பல்வேறு வகை பூச்சிகளை அழித்தன. பாம்புகள்,ஆந்தைகள் போன்ற உயிரினங்கள் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தின.

பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின. அவற்றில் முக்கியமானவை குள்ளநரிகள். இந்த குள்ளநரிகள், மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்போது, மயில்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தன. ஆனால், மயில்களின் எதிரிகளான குள்ளநரிகளையும், காட்டுப்பூனைகளையும் இப்போது காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. அதனால் மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

எங்கள் ஆய்வில் இவற்றைக் கண்டறிந்த நாங்கள் ,உயிர்வேலிகளை அழித்து, கம்பிவேலிகளை, சுற்றுச்சுவர்களை அமைக்கும் மனிதர்களின் சுயநலத்தால்தான் இந்த நிலை உருவானது என்ற உண்மையைக் கண்டறிந்தோம். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறத்தொடங்கியதிலும் உயிர்வேலிகள் அழிக்கப்பட்டன. கொஞ்சநஞ்சம் மிஞ்சி இருக்கும் விவசாய நிலங்களிலும் உயிர்வேலிகளை அழித்து காக்கா குருவிகூட கூடுகட்ட முடியாத அளவிற்குக் கம்பிவேலிகளை அமைத்துவிட்டோம். உயிர்வேலியை அழித்து கம்பிவேலிகள் அமைப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு ஆணிவேராக இருக்கிறது. இப்பிரச்னையை ஒரு மாவட்டத்தின் பிரச்னையாக மட்டும் கருதிவிடக் கூடாது. கரூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் இந்த மயில்கள் பெருக்கம் பிரச்னை தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. தஞ்சை மாவட்டம் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே, இப்பிரச்னை ஒரு மாநிலப் பிரச்னையாக உருவெடுத்துக்கொண்டிருப்பதுதான் கசப்பான உண்மை. மயில் நமது நாட்டின் தேசியப் பறவைதான். ஆனால், அதன் அபரிதமான பெருக்கம் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பையே ஏற்படுத்தும். இயற்கையாக மயில்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும். 

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்கான கங்காரு அந்த நாட்டின் மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக பி.பி.சி செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது. இந்நிலை தொடர்ந்தால் அந்நாட்டில் விரைவில் மிகப்பெரிய வறட்சி ஏற்படும் என்று அந்த நாட்டு சூழலியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த கங்காரு பிரச்னையை நாமும் நம் மாநிலத்தின் மயில் பெருக்கம் பிரச்னையோடு ஒப்பிட்டு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழத்தகுந்த வாழிடம் என்பது மிகமிக முக்கியம் ஆகும். இதில் தாவரங்களும், விலங்குகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஒரு இயற்கை சமநிலையை உருவாக்கி, இந்தப் பூமியைக் காத்து வருகின்றன.

ஆகையால் இயற்கையாக உருவான உணவுச் சங்கிலிகளும், அதனால் உருவான உணவு வலையும் சுற்றுச்சூழலில் எந்த மாதிரியான உயிர் சமநிலையை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த ஆய்வில் நாங்கள் உணர்ந்துகொண்டோம். இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்துகொண்டிருக்கிறது. இயற்கை சமநிலையாக இருக்க அரும்பாடுபடுகிறது. ஆனால், மனிதர்களாகிய நாம் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு எதிராக எதிரியாகி நிற்கிறோம். இந்த நிலை தொடர்ந்தால், நாம் பல்வேறு சிக்கல்களையும், இயற்கை பேராபத்துகளையும் எதிர்நோக்க நேரிடும். அதனால் நம்மால் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சமநிலையின்மையை சரிசெய்ய நாம் உடனே முற்பட வேண்டும். இல்லை என்றால், மயில்களின் எண்ணிக்கை பிரச்னைபோல் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, நமக்கு பேராபத்தைப் பெற்றுத் தரும்" என்று எச்சரித்து முடித்தார். 

அடுத்த கட்டுரைக்கு