Published:Updated:

``நானும் சசிகலாவும் பேசிக்கொண்டது எங்க பர்சனல்!” - விகடனுக்கு நடராசனின் கடைசி பேட்டி

``நானும் சசிகலாவும் பேசிக்கொண்டது எங்க பர்சனல்!” - விகடனுக்கு நடராசனின் கடைசி பேட்டி
``நானும் சசிகலாவும் பேசிக்கொண்டது எங்க பர்சனல்!” - விகடனுக்கு நடராசனின் கடைசி பேட்டி

புதிய பார்வை பத்திரிகை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராசன், கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை முடித்துவிட்டு, அவரது தம்பி ராமச்சந்திரன் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது, அவரைச் சந்தித்துப் பேட்டி கேட்டோம். “பேட்டியாக நான் எதுவும் கொடுக்கவில்லை; சில விஷயங்களைப் பேசலாம்; அதை நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள்” என்றார். அந்த நேரம், மன்னார்குடி குடும்பத்துக்கு மிகவும் இக்கட்டான காலகட்டம்! எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் வியூகங்களைத் தீர்மானித்ததில் நடராசனின் பங்கு மிகப்பெரியது. ஆனால், அந்தக் கட்சியும், அதன் தலைமையில் அமைந்த ஆட்சியும் நடராசன் மற்றும் மன்னார்குடி குடும்பத்தின் கையை விட்டு நழுவிக் கொண்டிருந்த நேரம் அது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவில் இதுவரை நடக்காத வகையில், மன்னார்குடி குடும்பத்தைச் சுற்றி வளைத்து 1800 இடங்களில் ஐ.டி ரெய்டு சூறாவளியைப்போல் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது. இக்கட்டான இந்தச் சூழலில், நடராசனும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை முடித்து முழுமையான ஓய்வில் இருந்தார். உடலில் தளர்வும், சோர்வும் தெரிந்தது. ஆனால், முகத்தில் அதைக் காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாகப் பேசினார். மனதளவிலும் அப்போது அவர் உற்சாகமாக இருந்ததை அவருடைய  வார்த்தைகளிலிருந்து உணர முடிந்தது. அவருடன் பேசியதிலிருந்து...  

(குளோபல் மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த படம் )

“வாங்க.. வாங்க... வெளில என்ன பேசிக்கிறாங்க?” என்று நம்மை வரவேற்றவரின் கைகளில் அன்றைய நாளிதழ்கள். “இந்த முட்டை விலையை 6 ரூபாயா ஆக்கிட்டானுவோ! என்ன காரணமாம்? உற்பத்தியில எந்தப் பிரச்னையும் இல்லயே! அப்புறம் ஏன் விலைய கூட்டிருக்கானுவோ...  ஜி.எஸ்.டியா?’’ என என்னிடம் கேட்டவர், பிறகு, ‘சாதாரண டீயா? கிரீன் டீயா... எதுன்னு சொல்லுங்க? என்று கேட்டுக்கொண்டே, அவர் அருகில் இருந்த மக்ரூன், கடலை மிட்டாய்களை ஒரு தட்டில் எடுத்து வைத்து, நம்மை உபசரித்தார். ‘சாப்பிட்டுக்கிட்டே பேசுங்க!’ என்றவர், ஒரு இளைஞரைச் சுட்டிக்காட்டி, ‘இவர் பெயர் தாமஸ். இவர் ஹாஸ்பிட்டல் ஸ்டாஃப். என்னைக் கவனிச்சுக்கிறதுக்காக ஹாஸ்பிட்டல்ல இருந்து அவங்களே அனுப்பி வெச்சுருக்காங்க.! இவர் சொல்றபடிதான் நான் கேக்கணும்’ என ஒருவரை நமக்கும் அறிமுகம் செய்தார். அவரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்..

உடல்நிலை எப்படி இருக்கிறது? பெசன்ட் நகர் வீட்டில் தங்காமல் இங்கு தங்கி இருக்கிறீர்கள்... என்ன காரணம்?

நீங்களே சொல்லுங்க... நான் எப்படி இருக்கேன்? நல்லாத்தான இருக்கேன். பெசன்ட் நகர் வீட்ல இருந்தா, நம்மள பாக்க நிறைய ஆட்கள் வருவாங்க. அவங்கள சந்திச்சுப் பேச எனக்கும் ஆசைதான். ஆனா, இந்தா இவர் அனுமதிக்க மாட்டார் (தாமஸை சுட்டிக்காட்டி). அதான், அங்க தங்கல. ஆனா, அந்த வீடா இருந்தா என்ன? இந்த வீடா இருந்தா என்ன? எல்லாம் நமக்கு ஒரே இடம்தான். அதோட, தினமும் மதியம் 2 மணிக்கு செக்கப் போகணும். அப்டி போனா, திரும்பி வர 6 மணி ஆய்டுது. பெசன்ட் நகர் வீட்ல இருந்து அப்டி போய்ட்டு வர்றது கஷ்டம். அதான், இங்கேயே இருக்கேன். இப்போலாம் ரொம்பப் பசிக்குது. முன்னால, ரெண்டு இட்லி மட்டும் சாப்பிட்டு, தண்ணிய குடிச்சிட்டு படுத்துருவேன். அது போதும்!  இப்போ அப்படி முடியல. நிறைய பசிக்குது. அதுனாலதான் இதெல்லாம் வச்சிருக்கேன். (பக்கத்தில் இருக்கும் மக்ரூன், கடலை மிட்டாய் டப்பாக்களைக் காட்டுகிறார்). மத்தபடி எந்தப் பிரச்னையும் இல்ல!’

பரபரப்பான ஆளாக இருந்துவிட்டு, முழுமையான ஓய்வில் இருப்பது, முடங்கி இருப்பதுபோலத் தோன்றவில்லையா?

ஓய்வு உடம்புக்குதான்! காலையில் இந்த அப்பார்ட்மென்ட்க்கு வெளிய வாக்கிங் போறேன். அப்புறம் செய்திகளப் பாக்குறது, படிக்கிறது, ‘செக்கப்’க்குப் போறதுன்னு நேரம் சரியா இருக்கு. காலையில வாக்கிங் போறப்ப, நம்மள அடையாளம் கண்டுபிடிச்சுடுறாங்க. எல்லா ஃபிளாட்ல இருந்தும், ஆச்சர்யமா எட்டிப் பாத்தாங்க. மறுநாளே வந்து நம்மளோட அறிமுகப்படுத்திகிட்டு சகஜமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. நிறைய பெண்கள் வந்து, ‘எப்டி இருக்கீங்கன்னு’ விசாரிக்கிறாங்க; ஆட்டோகிராப்லாம்கூட கேட்குறாங்க; அப்டி கேக்குறவங்ககிட்ட,  ‘என்கிட்ட ஏன் ஆட்டோகிராப் கேட்குறீங்க.ன்னு’ கேட்டா, நாங்கள்லாம் உங்க ரசிகைன்னு சொல்றாங்க.(சிரிக்கிறார்). இந்த லெட்சுமி சுப்பிரமணியம்கூட அப்டிதான் சொன்னாங்க! ஒரு பிரியத்துல அப்டி பேசுறாங்க. இதவெச்சு ‘நடராசன் பெண்களோடு ஜாலி’ன்னு எழுதிடாதீங்க.  இந்த அக்கப்போரு பத்திரிகைகள் பண்ற வேலை இருக்கே! இப்டி எதையாவது எழுதி, எங்க குடும்பத்துக்குச் சிக்கல உண்டு பண்றதவே வேலையா வெச்சுருக்காங்க!  

மருத்துவமனையில் உங்கள் மனைவி சசிகலா வந்து பார்த்தபோது, உங்களுக்கு சுயநினைவு இருந்ததா? பேசினீர்களா? என்ன பேசினீர்கள்? 

கணவன்-மனைவி பாத்துக்கிட்டா பேசாம இருப்பாங்களா? அந்த நேரத்துல ரெண்டு பேரும் சந்திச்சது ஒரு சந்தோஷம். அது ஒரு ஆறுதலா, தெம்பா இருக்கும்ல! என்ன பேசுனீங்கன்னுலாம் நீங்க கேக்கக் கூடாது. அது பெர்சனல்; கணவன்-மனைவிக்கு இடையில பேச ஆயிரம் இருக்கும்! அதுனால, அதப்பத்தி கேக்காதீங்க. ஆனா, உங்களுக்கு ஒரு போட்டோ காட்டுறேன் பாருங்க... (மொபைலிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். அந்த போட்டோவில், நடராசன் சிசிச்சைப் பெற்ற, பெட்டுக்கு அருகில் அவருடைய காலடியில் சசிகலா உட்காந்து இருக்கிறார். சசிகலாவைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட அழகழகான குழந்தைகள் சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களை அணைத்தபடி சசிகலா போஸ் கொடுத்துள்ள காட்சி அதில் பதிவாகியிருந்தது. அந்த போட்டோவில் ஜெயலலிதாவைப் போல் நெற்றியில் திலகம் வைத்து, பிரகாசமாகத் தெரிகிறார் சசிகலா) இந்தப் பசங்கள்லாம் பேரப் பசங்க. இது பழனிவேல் பேத்தி, இது ராமச்சந்திரனோட பேரன் என்று ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டினார் நடராசன். அந்த போட்டோவை நான் கேட்டும் தர மறுத்துவிட்டார். இது ‘ஃபேமிலி பெர்சனல்’ போட்டோ. இதையெல்லாம் கேட்கக் கூடாது’ என்றார் சிரித்துக்கொண்டே. 

உங்கள் குடும்பத்தில் அனைவருடைய வீடுகள், நிறுவனங்களில் மிகப்பெரிய ரெய்டை வருமானவரித்துறை நடத்தி உள்ளதே?’’ 

நடத்தட்டும்! ரெய்டு இன்னைக்கு மட்டுமா நடக்குது? இதுக்கு முன்னால, சிதம்பரம் சென்ட்ரல் மினிஸ்டரா இருந்தப்பவும்தான் நடந்துச்சு!

அதுனால என்ன ஆகப்போகுது? நாங்க யாரும் இதுக்கெல்லாம் பயப்படமாட்டோம்.  ரெய்டுல என்ன கிடைச்சது?  ரெய்டு பண்ற அதிகாரிகள், அங்க தஞ்சாவூர்ல இருக்க வீட்டுக்குப் போய் இருக்காங்க. அங்க இருந்த பையன் பிரபு, “என்ன சார்? யார் நீங்க?” ன்னு கேட்ருக்கான். வந்த அதிகாரிகள் ‘ரெய்டு பண்ண வந்திருக்கோம்னு’ சொல்லிருக்காங்க.. ‘ஆர்டர் இருக்கான்னு’ பிரபு திரும்பக் கேட்டதுக்கு, திவாகரன் பேருக்கு வந்த ஆர்டர அந்த அதிகாரிகள் காமிச்சுருக்காங்க. அதப்பாத்துட்டு பிரபு, “இது நடராசன் சாரோட வீடு’ன்னு சொல்லவும்... ‘அய்யோ! மாத்தி வந்துட்டோம்’ன்னு அந்த அதிகாரிகள் சொல்லிருக்காங்க.. அதன்பிறகு, ‘வந்ததுக்கு வேணும்னா... சோதனை பண்ணிக்கோங்க.’ன்னு சொல்லி அந்தப் பையனும் எல்லா ரூமுக்கும் அழைச்சுட்டுப் போயிருக்கான். 

என்ன கிடைச்சுச்சு அங்க? ஒன்னும் இல்ல. எங்க அம்மா வெத்தலைப் பெட்டியில இருந்த 180 ரூபாயை பிடிச்சு, அத திவாகரன் கணக்குல வரவு வெச்சுட்டுப் போய் இருக்காங்க. வீட்டு மாடியில இருக்க ஒரு அறையில இருந்த அலமாரிக்கு சாவி தொலைஞ்சு போச்சு போல! அதுனால, அதத் திறக்க முடியாம, அதுக்கு மட்டும் சீல் வெச்சுட்டுப் போய் இருக்காங்க. அந்தக் காப்பிய வேணும்னா, நீங்க உங்க தஞ்சாவூர் நிருபர்கிட்ட சொல்லி வாங்கிப் பாருங்க... அப்புறம், நான் சொல்றது உண்மையா... இல்லையானு... தெரியும்! (நாம் தஞ்சையில் தொடர்பு கொண்டு அந்த நகலை வாங்கிப் பார்த்தோம். அதில் நடராசன் சொன்னதுபோல, 180 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அது திவாகரன் பேரில் பஞ்சநாமாவில் குறிக்கப்பட்டிருந்தது)

இந்த ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என நினைக்கிறீர்களா? 

சென்ட்ரல் மினிஸ்டரா சிதம்பரம் இருந்தப்போ... என்னோட தமிழரசி பத்திரிகைல புகுந்து ரெய்டு பண்ணாங்க. அப்பவும் ஒண்ணும் கிடைக்கல; அதுவேற பிரச்னை. அத இப்ப நான் ஏன் சொல்றேன்னா, அதே சிதம்பரம் வீட்லயும்... இப்போ சமீபத்துல ரெய்டு நடந்துச்சு. அப்டி நடந்தப்போ, சிதம்பரம் என்ன சொன்னார்...? ‘என்னைத் தாக்க என் குடும்பத்தை மோடி குறிவைக்கிறார்னு’ சொன்னார். சிதம்பரம் அப்டி சொன்னப்போ, நான் ஒரு அறிக்கை விட்டேன். அதுல, ‘உங்க வீட்ல நடந்தா பழிவாங்கும் நடவடிக்கை... நீங்க எங்க வீட்ல ரெய்டு நடத்துனா... அது நேர்மையான நடவடிக்கையா?’ அப்டினு கேள்வி கேட்ருந்தேன். நான் ஒருத்தன்தான் அவர அப்டி கேள்வி கேட்டு அறிக்கைவிட்டேன். இத நான் ஏன் இங்க, சொல்றேன்னா... சிதம்பரம் என்ன சாதாரண ஆளா? சென்டிரல் மினிஸ்டரா இருந்தவர். அங்க உள்ள நடைமுறைகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. அப்டி இருந்தும், அவர் வீட்ல ரெய்டு நடந்ததும், ‘அது பழிவாங்கல் நடவடிக்கைன்னு’ அவரே சொல்றார்னா... அதுக்கும் வாய்ப்பு இருக்குன்னுதான அர்த்தம். நடக்கட்டும்... பாப்போம்!  

கவர்னர் இப்போது ஆய்வுக்குப் போகிறார். தலைமைச் செயலகத்தில் வந்து பணிகளைச் செய்யப்போகிறேன் என்கிறாரே? 

அவங்கள நல்லவங்களா காட்டிக்க இந்த மாதிரி ஏதாவது பண்றாங்க; பண்ணட்டும். இப்படி நல்லவங்க மாதிரி காமிச்சா மக்கள் நம்பிருவாங்களா... எல்லாத்தையும் பாத்துட்டுத்தானே இருக்காங்க. கவர்னர் தலைமைச் செயலகத்துக்குப் போகலாம். அங்க அவருக்கு ரூம்களே இருக்கே! ஆனா, தினமும் போக முடியாது. அதுக்கு நிறைய ரூல்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன். அது நீங்க செக் பண்ணிக்கோங்க! மகாபாரத்துல துரியோதனன் கதை ஒன்று வரும். துரியோதனன்கிட்ட, ‘சபையில இருக்கவங்கள்ல, நல்லவங்க யார்னு கேப்பாங்க. ஆனா, துரியோதனன் கண்ணுக்கு அந்தச் சபையில இருக்க யாரும் நல்லவங்களா தெரியமாட்டாங்க. எல்லாரும் கெட்டவங்களாத்தான் தெரிவாங்க. அதுனால, ‘எல்லாரும் கெட்டவங்கதான்’னு துரியோதனர் சொல்லுவான். அதே வேலைய தர்மர்கிட்ட கொடுப்பாங்க. அவர் கண்ணுக்கு எல்லாருமே நல்லவங்களாத்தான் தெரிவாங்க. நாம பாக்குறவிதத்துல தான இருக்கு. நல்ல கண்ல பாத்தா... எல்லாம் நல்லதாத் தெரியும். கெட்ட கண்ணால பாத்தா... எல்லாம் கெட்டதாத்தான தெரியும். 

கவர்னர் ஆய்வுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் எந்தவிதக் கருத்தையும் இதுவரை பதிவு செய்யவில்லை. ஆனால், அமைச்சர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவிக்கிறார்களே? 

வேற அவங்க என்ன செய்வாங்க? அதத்தான செய்ய முடியும். அவங்களுக்குச் சொந்தப் பிரச்னைகளும் இருக்கு; மாநிலப் பிரச்னைகளும் இருக்கு. எல்லாத்துலயும் இருந்து அவங்கள காப்பாத்திக்கணும்னா, அதத்தானே செஞ்சாகணும். நீட் பிரச்னை இன்னும் ஓயல; போலீஸ் ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க; டீச்சர்ஸ் போராட்டம், நர்ஸ் போராட்டம், பி.டபுள்யூ.டி ஊழியர்கள் போராட்டம்னு ஒவ்வொரு நாளும் ஒண்ணொண்ணா பிரச்னை கிளம்பிட்டே இருக்கு. இதுல இருந்தும் தப்பிக்கணும், தங்களோட சொந்தப் பிரச்னைகளையும் சமாளிக்கணும்னா, அவங்க அப்டித்தான் சொல்லியாகணும்; சொல்லுவாங்க. வேற என்ன அவங்ககிட்ட இருந்து எதிர் பார்க்க முடியும். 

நீங்கள் சிகிச்சை முடிந்து வந்த பிறகு, உங்களிடம் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா? 

யார்கிட்டயும் பேசணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல; பேசி என்ன ஆகப்போகுது! ஆனா, ‘எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்.ஸுக்கும் பிரச்னைன்ணே! இப்போ கூப்டா ஓ.பி.எஸ் நம்ம பக்கம் ஓடி வந்துடுவார்ணே’ன்னு பசங்க சொன்னானுவோ! ‘நாம பண்ற வேலையாடா இது! அவராத்தான போனார்; அவரைப்போய் நாம ஏன் கூப்பிடணும்’னு சொல்லிட்டேன். அவ்வளவுதான். மத்த யார்கிட்டவும் பேசணும்னு எனக்கு என்ன அவசியம் இருக்கு?

தினகரன் நிதானமாக எல்லாப் பிரச்னைகளையும் எதிர் கொள்கிறார். அதில் உங்களுக்குத் திருப்தியா? 

(மௌனமாக இருக்கிறார்).பிறகு, ‘இப்போ அதப்பண்ணிதான ஆகணும்! ஆனா, ஒண்ணு புரிஞ்சுக்கணும்! எல்லாருக்கும் ஒரு சுயமரியாதை உணர்வு, தனி மனித உரிமை எல்லாம் இருக்கு. உச்ச நீதிமன்றம் அத பல ஜட்ஜ்மென்ட்ல உறுதிப்படுத்தி காட்டிருக்கு. அதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கணும். அப்டி இருந்தா, யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது; வந்திருக்கவும் செய்யாது! 

நீங்கள் சொல்வதைப் பார்த்தல், தினகரன்-எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ் ஆகிய மூன்று பேரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்வதைப் போல தோன்றுகிறதே? 

ஒற்றுமையா... வேற்றுமையில் ஒற்றுமையா... ஒற்றுமையில் வேற்றுமையா... எப்டி சொல்றீங்க? (நம்மைக் கூர்மையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்). பிறகு, மூணு பேருக்கு மட்டும் என்ன... எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்னுதான் நான் சொல்றேன். சின்னச் சின்ன வேற்றுமை, மனஸ்தாபம் இருந்தாலும் அதையும் ஒற்றுமையா இருந்துதான் எதிர் கொள்ளணும். ஆங்கிலத்தில சொல்லுவாங்களே, Unity in Diversity வேற்றுமையில் ஒற்றுமைன்னு... அப்டி இருந்தா, அவங்களுக்கும் நல்லது; கட்சிக்கும் நல்லது; எல்லாருக்கும் நல்லது. அப்பத்தான், எதிர்காலம்நல்லாருக்கும். நாம மகிழ்ச்சியா, மரியாதையா நடந்துக்கிட்டா பக்கத்து வீட்டுக்காரனும் அப்டியே இருப்பான். பக்கத்துவீட்டுக்காரன் வருத்தத்துல இருக்கும்போது, நாமளும் அவன முறைச்சிக்கிட்டு இருந்தா என்ன ஆகும்? சந்தோஷமா இருக்க முடியுமா? அதுபோல, நீங்க தனியா இருக்கீங்கன்னு நினைச்சு நான் உங்கள எதாவது பண்ணிட முடியுமா? ரெண்டுமே சிக்கல்தான்!  

வருமானவரித் துறை சோதனையால், குடும்ப உறவுகள் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறார்களா? 

அப்டிலாம் யாரும் சோர்ந்து போகல! ஆனா, நாமளும் சில விஷயங்கள்ல தெளிவா இருக்கணும். ஒவ்வொருத்தரும் ஒரு எல்லைய நிர்ணயிச்சுக்கணும். நமக்கு எவ்வளவு அவசியத் தேவையோ... அதையே எல்லையா வெச்சுக்கணும். நிம்மதியா தூங்குறதுக்கு ஒரு பாய், தலையணை இருந்தா போதும். அத ரோட்ல, ரயில்வே ஸ்டேசன்லன்னு எங்கனாலும் விரிச்சு படுத்துவிடலாம்ல! நான் அப்டி படுத்துருவேன்; உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா? வசதி வந்தா, அது பெட், மெத்தைன்னு ‘கம்பர்ட் லெவல்’ கூடும்! அது வேற; ஆனா, நமக்கு என்ன தேவை... எவ்வளவு தேவைன்னு... அளவ சரியா நிர்ணயிச்சுகிட்டு வாழ்ந்தா, இந்த ரெய்டுலாம் நம்ம பக்கத்துல கூட வர முடியாது. வந்தாலும் ஒண்ணும் நிரூபிக்க முடியாது. இப்போ என் பக்கத்துலயே வர முடியலயே! ஏன் வர முடியல? நான் அளவ தீர்மானிச்சுக்கிட்டு, அதுக்குள்ள வாழ்றேன். அத மத்தவங்களும் புரிஞ்சுக்கணும். 

ஜெயலலிதா வீடியோவைத் தேடத்தான் இந்த ரெய்டுன்னு சொல்றாங்களே? 

பத்திரிகைகள்ல அப்டி செய்தி வருது. ஆனா... அது உண்மையானு எனக்குத் தெரியல. அந்த அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, கவர்னர் வந்தார்; சென்ட்ரல் மினிஸ்டர்லாம் வந்துட்டுப் போனாங்க; அந்த நேரத்துல, இங்க சர்வீஸ்ல இருந்த பெரிய பெரிய அதிகாரிகள்லாம், அந்த அம்மாகூட  ஹாஸ்பிட்டல்ல வெச்சு போட்டோலாம் எடுத்தாங்களே! செல்பி எடுத்தாங்க. அந்த விவகாரம்லாம் டெல்லிக்குப் போகாமலா இருக்கும்? ஆனா, அதையும் தேடுறதா செய்தி வருது; தேடட்டும். அத யாருக்கு, எப்போ கொடுக்கணுமோ அவங்களுக்குக் கொடுப்போம். முறையா விசாரணைக் கமிஷன், நீதிமன்றங்கள் கேட்டா காமிப்போம். அதக் கொடுக்கவேமாட்டோம்ன்னு என் மனைவி சொன்னாங்களா? இல்ல, எங்க குடும்பத்துல யாராவது சொன்னாங்களா... அப்புறம் அதத் தேட வேண்டிய அவசியம் என்ன... பொதுவுல அது கொடுக்கக் கூடாது. ஏன்னா, அந்த அம்மா அத எப்பவும் விரும்பல; அவங்க இமேஜ் விசயத்துல எவ்ளோ கவனமா இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியாததா? நீங்க அவங்க பிரஸ்மீட்லாம் அட்டெண்ட் பண்ணிருப்பீங்கள்ல... உங்களுக்குத் தெரியும்ல. அதுபுரியாம, இந்த அக்கப்போரு பத்திரிகைகள் எழுதுறது இருக்கே! 

ஜெயலலிதாவோடு உயர் அதிகாரிகள் சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டார்களா? யார் அந்த அதிகாரிகள்? 

அத நான் சொல்லமாட்டேன்; நீங்க விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க. “நீங்க செல்ஃபிலாம் எடுத்தீங்களே... இப்போ அந்த அம்மா மரணம் பத்தி இவ்ளோ சர்ச்சை கிளம்புதே? ஏன் அதுபத்தி வாயே தொறக்கமாட்டிக்கிறீங்கன்னு நீங்களே அந்த அதிகாரிகள்கிட்ட கேளுங்க. 

இரட்டை இலைச் சின்னம்? 

எல்லாரும் ஒற்றுமையா ஆயிட்டா, அதுல என்ன பிரச்னை. 1988-ல அந்தச் சின்னத்த மீட்டுக் கொடுத்தது யாரு? இந்த நடராசன்தான்! டெல்லியில அப்போ எல்லா அ.தி.மு.க தலைவர்களும் இருந்தாங்க. வேறு ஒரு வேலைய முடிச்சுட்டு கிளம்புற அவசரத்துல இருந்த அந்தத் தலைவர்கள்கிட்ட, “எல்லாரும் வெயிட் பண்ணுங்க. இன்னொரு சஸ்பென்ஸ் செய்தி இருக்குன்னு” சொல்லி இருக்கச் சொன்னேன். கொஞ்ச நேரத்துல இரட்டை இலை திரும்பக் கிடைச்ச செய்தி வந்தது. அத உறுதி செஞ்சுக்கிட்டு, அதை அந்தத் தலைவர்கள்கிட்ட சொன்னேன். அப்போ ராகவானந்தம் இருந்தார். இந்த லெட்டர நானே போய் மேடத்துகிட்ட கொடுக்கிறேன்னு ஆர்வமா இருந்தார். நான்தான் அவர் கையில அத கொடுத்து அனுப்புனேன். இப்போ திரும்பவும் அந்தச் சின்னத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுருக்கு. அது யாரால வந்துச்சு? வெளியில இருந்து யாரோவா அதுக்கு சிக்கல உண்டு பண்ணாங்க? இங்க இருந்தவங்க செஞ்ச வேலைகளாலதான அதுக்கு சிக்கல் வந்துச்சு. எங்க சுத்துனாலும் இங்கதான வரணும்; வரட்டும். அது பெரிய பிரச்னை இல்ல!

விடைபெறும்போது, ’இருங்கள்’ என்றவர், பிளாக் வாசல் வரை வந்து வழியனுப்பினார். அப்போது, அடுத்தவாரம் எட்டயபுரத்தில் பாரதியார் விழா இருக்கிறது. எல்லா வருடமும் அதில் கலந்துகொள்வேன். இந்த வருடம் நான் அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும், அதற்காக பல ஏற்பாடுகளை முடிக்க வேண்டும்!’’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.