Published:Updated:

காட்டு யானையை கும்கி நேருக்கு நேர் சந்தித்தபோது..! - ஒரு கும்கி உருவாகும் கதை- அத்தியாயம் 3

காட்டு யானையை கும்கி நேருக்கு நேர் சந்தித்தபோது..! - ஒரு கும்கி உருவாகும் கதை- அத்தியாயம் 3

காட்டு யானையை கும்கி நேருக்கு நேர் சந்தித்தபோது..! - ஒரு கும்கி உருவாகும் கதை- அத்தியாயம் 3

காட்டு யானையை கும்கி நேருக்கு நேர் சந்தித்தபோது..! - ஒரு கும்கி உருவாகும் கதை- அத்தியாயம் 3

காட்டு யானையை கும்கி நேருக்கு நேர் சந்தித்தபோது..! - ஒரு கும்கி உருவாகும் கதை- அத்தியாயம் 3

Published:Updated:
காட்டு யானையை கும்கி நேருக்கு நேர் சந்தித்தபோது..! - ஒரு கும்கி உருவாகும் கதை- அத்தியாயம் 3

'வட்டியும் முதலும்' புத்தகத்தில் இப்படி ஒரு வரி வரும். “நண்பன் ஒருவனைப் பார்க்க அவன் வேலை செய்த தோல் தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். ஒரு நிமிடம்கூட அங்கே  நிற்க முடியவில்லை. அவ்வளவு நாற்றம்  “எப்பிடிடா இங்க வேலை பார்க்கிற” என்றேன். “மச்சான் பழகிட்டா பூ மார்க்கெட்ல வேல பார்க்கிற மாதிரி ஆகிரும்டா” என்றான். செய்கிற வேலையில் தன்னை முழுதாய் அர்ப்பணித்துக் கொள்கிற ஒவ்வொரு ஜீவனுக்கும் பொருந்திப் போகிற வரிகள்.  எப்படி யானை மாவூத்தாக மாறினீர்கள் என்ற கேள்விக்கு "யானை உருவத்தில் மட்டும்தான் பெருசு. ஆனால், இதயம் சின்னது" தான் என்கிறார் கிருமாறன்.

பள்ளிப் படிப்பை தாண்டாதவர் கிருமாறன். பழங்குடி இனமான குறும்பர் இனத்தைச் சார்ந்தவர். அவரது அப்பா யானை மாவூத்தாக பணிபுரிகிற காலத்தில் அவரோடு சேர்ந்து பயணித்ததில் யானைகள் மீது ஈடுபாடு கொள்கிறார். சிறு வயதில் அப்பாவின் யானை மீது ஏறுவது குளிப்பாட்டுவது என குதூதகலமாக இருக்கிறார். யானையும்  யானை சார்ந்த இடமென்பதால் தானும் ஒரு நாள் யானையை வழிநடத்துவது போல கனவு காண ஆரம்பிக்கிறார். அந்தக் கனவை நோக்கியே பயணிக்கிறார். அப்பா, அவரது யானை எனச் சுற்றி வருகிறார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்களே; அப்படி  இவருடைய நடவடிக்கைகளைக் கவனித்த டாக்டர் கே, கிருமாறனை 1986-ம் ஆண்டில் முதுமலை யானைகள் முகாமில் மாவூத்தாக பணி நியமனம் செய்கிறார். "சிறந்த மாவூத்தாக வருவாய்" என ஆசிர்வதிக்கிறார். 17-வது வயதில் மாவூத்தாக பணியைத் தொடர்கிறார்.

1991-ம் வருடம் மார்ச் 7-ம் தேதி சுப்பிரமணி என்கிற யானை மாவூத் ஒருவரைத் தாக்கியிருக்கிறது. அதில் அவர் இறந்துவிடுகிறார். யாரையும் பக்கத்தில் நெருங்கவிடாமல் இருந்தது. சுப்பிரமணியை வழிக்குக் கொண்டு வர அதன் மாவூத்தாக கிருமாறன் நியமிக்கப்படுகிறார். சுப்பிரமணி பலம் வாய்ந்த புத்திசாலி கும்கி யானை. சுப்பிரமணி ஆறு வயதில் 1958-ம் ஆண்டு ஆனைமலையில் பிடிக்கப்பட்டு, 1960-ம் ஆண்டு முதுமலைக்குக் கொண்டுவரப்பட்டு கும்கியாகப் பயன்படுத்தப்பட்டது. பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் சுப்பிரமணியைத் தன்னுடைய முழு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருகிறார். கிருமாறன் அதைக் குளிப்பாட்டுவது, உணவளிப்பதென ஒரு குழந்தையைப் போலவே சுப்பிரமணியை வளர்க்கிறார். கிருமாறனுக்குத் திருமணமாகி மகன் பிறக்கிறான். மொத்த குடும்பமும் சுப்பிரமணியைக் கொண்டாடுகிறார்கள்.

கிருமாறனுக்கு அப்பொழுது இளம் வயதென்பதால் அந்த வயதிற்குரிய ஆர்வத்தில் பல சாகசங்களைச் சுப்பிரமணியை வைத்து நிகழ்த்தியிருக்கிறார். ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிற காட்டு யானைகளை விரட்ட முதுமலையிலிருந்து களத்துக்குப் போகிற இரண்டு கும்கி யானைகளில் ஒன்றாகச் சுப்பிரமணி இருக்கிறது. காட்டு யானைகளைப் பிடிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. காட்டில் அலைந்து திரிந்து ஆக்ரோஷமான உடலமைப்போடு இருக்கிற காட்டு யானைகளை அதனுடைய இடத்தில் வைத்து நேருக்கு நேர் சந்திப்பதற்கு முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் தேவை. பயத்தை உள்ளே வைத்துக் கொண்டு பதற்றப்படாமல் காட்டு யானைகளை நகர்த்துவதற்கு அசாத்திய திறமை வேண்டும். இந்த இரண்டு குணங்களுமே கிருமாறனுக்கும் சுப்பிரமணிக்கும் இருந்தது.

ஒருமுறை கேரள மாநிலம் கண்ணணூர் அருகே அட்டகாசம் செய்த ஆண் காட்டு யானையைப் பிடிக்க கேரள வனத்துறை சுப்பிரமணி மற்றும் முதுமலை இரண்டு கும்கிகளையும் அழைத்துச் செல்கிறார்கள். காட்டு யானைக்கு இன்னொரு பெயர் டஸ்கர். நீண்ட தந்தமுடைய ஆண் யானைகளை இப்படியும் அழைப்பார்கள். ஊசி செலுத்தப்பட்ட டஸ்கரை  சுற்றி வளைத்துவிட்டார்கள். ஆனால், டஸ்கர் கட்டுப்படாமல் அதிக முரண்டு பிடித்திருக்கிறது. காட்டு யானை பிளிறிய சத்தம் ஒட்டு மொத்த காட்டையும் உலுக்கியிருக்கிறது. முதுமலையும் சுப்பிரமணியும் எவ்வளவோ முயன்றும் அவற்றால் காட்டு யானையை  கட்டுப்படுத்த முடியாமல் திணறியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோபத்தில் கிருமாறன் பல்லை கடித்துக் கொண்டு கோபத்தில் சுப்பிரமணிக்கு கட்டளையிட்டிருக்கிறார். அவரது கோபத்தை உள்வாங்கிக் கொண்ட சுப்பிரமணி டஸ்கரின் முகத்துக்கு நேராகத் தாக்கியிருக்கிறது. ஏற்கெனவே ஊசி செலுத்தியிருந்ததால் லேசான மயக்க நிலையில் இருந்த காட்டு யானை தடுமாற, அந்தச் சந்தர்ப்பத்தில் காட்டு யானையின் மீது ஏறி அமர்ந்து கழுத்தில் செயினை மாட்டியிருக்கிறார் கிருமாறன். அப்போது சுப்பிரமணி பிளிறிய சத்தத்தில் கேரள வனத்துறை வேடிக்கை பார்த்தவர்கள் என எல்லோருமே ஒரு நொடி மிரண்டு போயிருக்கிறார்கள். உச்சகட்ட கோபத்திலிருந்த சுப்பிரமணியை சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார். கிருமாறனின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கிக் கொள்ளுமளவுக்கு நெருக்கமாய் இருந்திருக்கிறது சுப்பிரமணி.

1990-ம் வருடம் இரண்டு மாதம் கூண்டு வேலையாக வெளி இடத்துக்கு அனுப்பப்படுகிறார். இரண்டு மாதங்களாகச் சுப்பிரமணி வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. வேலை முடிந்து முதுமலை திரும்பிய கிருமாறனின் வாசனையை ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே உணர்ந்த சுப்பிரமணி முகாம் அதிரும் அளவுக்கு பிளிறியிருக்கிறது. கிருமாறன் சுப்பிரமணியை கட்டிக் கொண்டு அழுத நாடள்களில் அதுவும் ஒன்று. கும்கி யானைகளை இரவில் அவிழ்த்து விடுவார்கள். காலையில் காட்டுக்குள் சென்று அழைத்து வருவார்கள். காட்டில் எங்கு இருந்தாலும் அழைத்த குரலுக்கு சுப்பிரமணி திரும்பி வந்துவிடும். அவ்வளவு எளிதில் வார்த்தைகளைக் கொண்டு விவரிக்க முடியாத பந்தம் அவர்கள் இருவருக்குமானது. தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கமெனப் பல மாநிலங்களுக்கும் யானையை விரட்ட அதனோடு பயணித்திருக்கிறார். குறிப்பாக கேரளாவில் காட்டு யானையைப் பிடிக்க வேண்டுமானால் அப்போது அவர்களிடம் அனுபவம் வாய்ந்த மாவூத்துகளோ கும்கிகளோ இல்லாத காலகட்டம். ஊசி மூலம் யானையைப் பிடிக்கிற கேரள வனத்துறைக்கு அவற்றை எப்படி செயினில் கட்டுவது, கூண்டு கட்டுவது, எப்படி கூண்டில் அடைப்பது பற்றிய அனுபவமில்லாததால், கேரள வனத்துறையிடமிருந்து அழைப்பு வந்தால் உடனடியாக தமிழக வனத்துறை சுப்பிரமணியையும் முதுமலை யானையையும் மாவூத்துதளோடு லாரியில் அனுப்பி விடுவார்கள். அப்படிப் போகிற யானைகளுக்கு தினசரி வாடகையையும், போக்குவரத்து செலவுகளையும் கேரள வனத்துறை தமிழக வனத்துறைக்குச் செலுத்திவிடும். யானை பிடிப்பதில் தொடங்கி கூண்டு கட்டிக் கொடுப்பது வரை அனைத்தையும் உடனிருந்து  செய்து கொடுத்துவிட்டுத்தான் முதுமலை திரும்புவார் கிருமாறன். எந்த யானையாக இருந்தாலும் அவற்றை எளிதில் பழக்கப்படுத்திவிடும் திறமை கிருமாறனிடமிருந்தது. அந்தத் திறமையே சுப்பிரமணியை கிருமாறனிடமிருந்து பிரித்தது.

பதினேழு ஆண்டுகள் தனக்கு  எல்லாமுமாக இருந்த கிருமாறனை 2006-ம் ஆண்டு  பிரிய வேண்டிய சூழல் சுப்பிரமணிக்கு  உருவாகிறது.  யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே அது இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. அடங்க மறுக்கிற பல யானைகளை கிருமாறன் பழக்கப்படுத்திவிடுவதால் வேறு யானைக்கு கிருமாறன் மாற்றப்படுகிறார். வேறு ஒரு மாவூத்தின் கட்டுப்பாட்டிலிருந்த யானையை அவ்வப்பொழுது பார்த்து வந்திருக்கிறார். 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் காட்டு யானைகளால் சுப்பிரமணி தாக்கப்படுகிறது. காயங்களிலிருந்து காப்பாற்ற டாக்டர் கலைவாணன் சுப்பிரமணிக்கு சிகிச்சையளிக்கிறார்.  அனைத்து மருத்துவ  முயற்சிகளும் தோல்வியில் முடிகிறது. முதுமலையில் சிறந்த கும்கியாக இருந்த சுப்பிரமணி இறுதியாக மார்ச் மாதம் 14-ம் தேதி  உயிரை விடுகிறது. கிருமாறனின் மொத்த குடும்பமும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார்கள். ஒன்பது முதுமலை வளர்ப்பு யானைகள்,  ஊர் மக்கள், வன ஊழியர்கள் எனக் கலந்துகொண்ட சுப்பிரமணியின் இறுதி  நிகழ்வில் கிருமாறன் கலந்து கொள்ளவில்லை.

அடுத்த அத்தியாயம்....
கும்கியாக மாறும் யானை ஒரு  கண்ணீர் சரித்திரம்....

தொடரும்....