Published:Updated:

வன்கொடுமை தடுப்புச் சட்டம் - மத்திய அரசின் சீராய்வு மனுவில் என்ன இருக்கிறது?

வன்கொடுமை தடுப்புச் சட்டம் - மத்திய அரசின் சீராய்வு மனுவில் என்ன இருக்கிறது?
வன்கொடுமை தடுப்புச் சட்டம் - மத்திய அரசின் சீராய்வு மனுவில் என்ன இருக்கிறது?

வன்கொடுமை தடுப்புச் சட்டம் - மத்திய அரசின் சீராய்வு மனுவில் என்ன இருக்கிறது?

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விவகாரத்தில்  நேற்று மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல்செய்தது. இன்று பிற்பகலில் இம்மனு விசாரணைக்கு வருகிறது. 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், கடந்த மாதம் 20 ம் தேதியன்று நீதிபதி அ.கு. கோயல், லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பானது நாடு முழுவதும் கடும் அதிருப்தியையும் சர்ச்சையையும் உண்டாக்கியது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது சட்டத்தின் அடிப்படையையே நீர்த்துப்போகச் செய்துவிடும் என வட மாநிலங்களில் தலித் அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு நடத்தப்பட்டது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் தீவிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

மத்தியப்பிரதேச மாநிலம், பிண்ட் எனும் பகுதியில் பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட பீம்சேனா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தினர். இங்கும் மொரினா பகுதியிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தூர், ஜபல்பூர் ஆகிய இடங்களில் தடியடி நடத்தப்பட்டது. 

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரிலும் போராட்டக்காரர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்கினர். பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நடந்தது. முசாபர்நகர், ஆஜம்கட் உள்பட பல இடங்களில் கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஆக்ராவில் போராட்டம் நடத்திய தலித் அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். 

ம.பி.யில் ஆறு பேரும் உ.பி.யில் இரண்டு பேரும் ராஜஸ்தானில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் போராட்டம், வன்முறைகளைக் குறிப்பிட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அ.கு. கோயல் தலைமையிலான அமர்வு முன்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், நேற்றைய மனுவை அவசரமாக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். நீதிபதி கோயலோ, தலைமை நீதிபதி முன்பு முன்னிலையாகி தனி அமர்வைக் கோருமாறு கூறினார். உடனடியாக தலைமை நீதிபதி முன்பாக அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்த நீதிபதிகளின் அமர்விடமே இதை விசாரணைக்கு அனுப்புவதாக தலைமை நீதிபதி மிஸ்ரா உத்தரவிட்டார். பிற்பகல் 2 மணிக்கு இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

மனுவில், ``நீதிபதிகள் அ.கு.கோயல், லலித் ஆகியோர் அளித்த தீர்ப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18 ஆவது பிரிவானது, பட்டியல் சமூகத்தினருக்குக் காயத்தையோ அவமதிப்பையோ இழைத்த குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், முன் ஜாமின் தாக்கல்செய்ய முடியாது என்பது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதுநிலை டிஎஸ்பி ஒருவர் விசாரித்தபின்னரே ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யமுடியும் என்றும் புதிதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இதைச் செயல்படுத்தாவிட்டால் உச்ச நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் கூறியுள்ளது. முன் ஜாமீன் கோருவதைத் தடுப்பது, அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அந்தப் பிரிவைப் பாதுகாக்கும் அதேவேளையில் அரசியல் சாசனத்தின் 17ஆவது பிரிவு கூறும் தீண்டாமை ஒழிப்பு அம்சத்தையும் பேணவேண்டியிருக்கிறது.

பட்டியல் சமூகத்தினர் மீது அளவிடமுடியாத வலியையும் காயத்தையும் இழைப்பதானது, தனிநபர் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகளுக்கான 21ஆவது பிரிவை மிக மோசமாக அத்துமீறுவதாகும். குற்றம்சாட்டப்படுபவரை பிணையில் வெளியில்விட்டால், அதைப் பயன்படுத்தி அவர் உரிய விசாரணையைத் தடுக்கவோ சாட்சிகளை பயமுறுத்தவோ செய்யக்கூடும். எனவே, சமூகத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு இச்சட்டத்தின் 18 ம் பிரிவானது முதுகெலும்பைப் போன்றதாகும். அதைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் எனும் வாதத்தை ஏற்றுக்கொண்டால், ஒட்டுமொத்த குற்றவியல் சட்டமே பல்பிடுங்கப்பட்டதாகிவிடும். நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவத்தை எட்டும் இலக்கை அடையவேண்டுமென்றால்,பட்டியல் சமூகத்தினர் பாதுகாக்கப்படும்போதுதான் சாத்தியம்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு