Published:Updated:

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி..? சித்தராமையா முன் உள்ள சவால்

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி..? சித்தராமையா முன் உள்ள சவால்
கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி..? சித்தராமையா முன் உள்ள சவால்

ர்நாடக மாநிலத்தில் வரும் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், பி.ஜே.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி விட்டன. பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் தேவேகவுடா, ஹெச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே, சித்தராமையாவுக்கு இந்தத் தேர்தல் மிகுந்த சவால் நிறைந்ததாகவே அமைந்துள்ளது.

2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பரமேஸ்வர், அவர் சார்ந்துள்ள சமூகத்தினராலேயே தோற்கடிக்கப்பட்ட நிலையில், மேலவை உறுப்பினராகி பின்னர் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். 2005-ம் ஆண்டு வரை மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்த சித்தராமையா, அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, முதல்வராகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பரமேஸ்வரின் பல்வேறு அதிருப்தி மற்றும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு மாநில மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளார். அதிரடி அறிவிப்பாக லிங்காயத் இனத்தவரை சிறுபான்மையினர் என அறிவித்து, அந்த மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளார். 
 

சித்தராமையா தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாத நிலையில், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை வைத்தே காய் நகர்த்தி, இந்தத் தேர்தலில் எப்படியும் கர்நாடகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பி.ஜே.பி. தீவிரமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல்களில் பி.ஜே.பி-யின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக கர்நாடக மாநிலத் தேர்தல் அமையுமானால், அது காங்கிரஸ் கட்சிக்கான வெற்றி என்பதைத் தாண்டி, முதல்வர் சித்தராமையாவுக்கான வெற்றி என்றே எடுத்துக் கொள்ள முடியும். அதுபோன்ற சூழல் அமையுமா என்பதை காங்கிரஸ் கட்சியும், அதன் தொண்டர்களும் இப்போதே தீவிரமாக யோசித்து செயலாற்றத் தொடங்கியுள்ளனர். 

ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம், பால் உற்பத்தியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு கூடுதல் மானியம் வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்கள் சித்தராமையாவுக்கு கைகொடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பி.ஜே.பி. பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. 

பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றிபெற்றதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்த அவர், பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு கர்நாடகம்தான் என்றார். அதன்படி கர்நாடக மாநிலத்திற்கு ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடியும் வந்து பிரசாரத்தைத் தொடங்கினார். தேர்தலுக்கு முன் மோடி மீண்டும் மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று மக்களிடம் ஆதரவு திரட்ட பிரதமர் முடிவு செய்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தென் மாநிலம் ஒன்றில் பி.ஜே.பி-யின் செல்வாக்கைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்தத் தேர்தல் முடிவு அமையவுள்ளது. சித்தராமையாவுக்கும் இந்தத் தேர்தல் மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது.

மீண்டும் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இப்போதே கர்நாடகாவில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்கி விட்டார்.

எப்படி இருப்பினும், கர்நாடகத் தேர்தல் தேதி நெருங்கும் சமயத்தில்தான் மக்களின் மனோநிலை எப்படி உள்ளது; அவர்கள் யாரை ஆதரிக்கப்போகிறார்கள் என்பது தெரிய வரும். அதுவரை பொறுத்திருப்போம்...