Published:Updated:

''எனக்கே இந்த ஆட்சியைக் கண்டா வெறுப்பா இருக்கு...'' - ஓடந்துறை முன்னாள் பஞ்சாயத்து தலைவி

''எனக்கே இந்த ஆட்சியைக் கண்டா வெறுப்பா இருக்கு...'' - ஓடந்துறை முன்னாள் பஞ்சாயத்து தலைவி
''எனக்கே இந்த ஆட்சியைக் கண்டா வெறுப்பா இருக்கு...'' - ஓடந்துறை முன்னாள் பஞ்சாயத்து தலைவி

எனக்கே இந்த ஆட்சி மீது வெறுப்பாக உள்ளது. இதெல்லாம் ஒரு ஆட்சியா ச்சீ...” என முகம் சுளிக்கும் சண்முகம், ''அதெல்லாம் எம்.ஜி.ஆரோடு முடிந்துவிட்டது. ஜெயலலிதா போல்டான லீடராக இருந்தார் அவ்வளவே.

“ரஜினி, கமல் என்று உச்ச நட்சத்திரங்களால் சுழன்றுகொண்டிருக்கும் பரபரப்பான அரசியல் சூழலில்,  கடந்த வாரம் யூடியூபில்  ட்ரெண்ட் ஆகியிருக்கிறார், கோவை, ஓடந்துறை பஞ்சாயத்தின் முன்னாள்  தலைவியான  லிங்கம்மாள். அவரும் அவருக்கு முன்பு கணவர் சண்முகமும் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த காலக்கட்டங்களில்,  ஓடந்துறை பஞ்சாயத்தில்  நிகழ்த்திய சாதனைகள்தான்  ட்ரெண்டுக்குக் காரணம்.

அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? தட்டுப்பாடு இல்லாத குடிநீர்,  100 சதவிகித வரிவசூல், அனைவருக்கும் சொந்த வீடு, மகளிர் சுயஉதவி குழுக்களின் திறன்மிகு செயல்பாடு, பஞ்சாயத்தின் அத்தியாவசிய தேவைக்கான மின்சாரத்தை தாங்களே தயாரித்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல  அதிரடி செயல்பாடுகளால் இந்தியாவை மட்டுமின்றி, உலக நாடுகளையே ஓடந்துறை பஞ்சாயத்தைத் திரும்பிப் பார்க்கவைத்தவர்கள் இந்தத் ‘தலைவர்’ தம்பதியர். இவர்களைப் பற்றி 2008-ம் ஆண்டிலேயே ஜூனியர் விகடன்’ இதழில் எழுதியிருக்கிறோம். கடந்த   ஒன்றரை ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப்போயிருக்கும் சூழலில், சிறந்த பஞ்சாயத்தாக ஜொலித்த ஓடந்துறை பஞ்சாயத்து எப்படி இருக்கிறது? என்ன சொல்கிறார்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள்? ஒரு மதிய வேளையில்  புறப்பட்டோம் ஓடந்துறைக்கு...

கனடாவில் உள்ள டொரண்ட்டோ யுனிவர்சிட்டியில் ‘ஸ்மார்ட் வில்லேஜ்’ குறித்து உரை நிகழ்த்துவதற்காக, கனடா செல்வதற்கான முன்னேற்பாடுகளில் இருந்தார் ஓடந்துறை பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர்  சண்முகம். ஓடந்துறை  பஞ்சாயத்தின் இன்றைய நிலைமையைப் பற்றிக் கேட்ட அடுத்த நொடியே அவர் முகம் வாடிப்போனது. “ஒன்றரை வருஷமா பஞ்சாயத்துல எந்த வேலையும் நடக்கல தம்பி. யார் மேலே  குற்றம் சொல்றதுனு தெரியல. 21 யூனியன் கவுன்சிலர்கள், 17 பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 175 மக்கள் பிரதிநிதிகள் செய்யவேண்டிய வேலையை,  ஒரு பி.டி.ஒ-வால் எப்படிச் செய்யமுடியும்? தண்ணி சரியா வருதா... லைட் சரியா எரியுதானு.. ஒரே ஒரு அதிகாரியால் ஓடிப்போய் பார்த்துட்டிருக்க முடியுமா? டெவலப்மென்ட் இப்போ ஜீரோ'' என்கிறார்.

அவரும் அவர் மனைவியும் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருந்தபோது, பஞ்சாயத்துக்குச் செய்த திட்டங்களையும், இப்போது அந்தத் திட்டங்களின் நிலையைப் பற்றியும் விசாரித்தோம்,  “மேடமும் வந்திறட்டும்' என்றவர், வீட்டுக்குள் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்த லிங்கம்மாள் வந்ததும், அருகில் உட்காரவைத்துத் தொடர்ந்தார்.

“நான் 10 வருஷமும், என் மனைவி 10 வருஷமும் இந்த ஓடந்துறை பஞ்சாயத்துக்குத் தலைவரா இருந்திருக்கோம். என் அப்பாவும் ஊர் தலைவரா இருந்தவருதான். 1996-ம் வருஷம் நான் பதவிக்கு வந்ததுமே, இந்தப் பஞ்சாயத்துக்குப் பண்ணனும்னு நெனைச்ச முதல் விஷயம், தடையில்லா குடிநீர். ஏன்னா, இந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏழெட்டு கிராமங்களில் தாய் கிராமமான ஊமப்பாளையத்தில் மட்டும்தான்  குடிநீர் வசதி  இருந்துச்சு. மற்ற கிராமங்களில் ரெண்டு மூணு கிலோமீட்டர் மக்கள் அலைஞ்சு தண்ணி கொண்டுவருவாங்க. எட்டு கிராமத்துக்கும் எட்டு போர்வெல், எட்டு வாட்டர் டேங்க் என ஒரே வருஷத்துல அமைச்சுக் கொடுத்தேன். ஆனாலும், சம்மர் சீசன்ல நிலத்தடி நீர் குறைஞ்சு போர்வெல் தண்ணி வரலை. வருடம் முழுக்க வற்றாமல் ஓடும் அருகில் இருக்கும் பாவானி ஆற்றிலிருந்து இந்தப் பஞ்சாயத்துக்கான குடிநீரைச் சுத்திகரித்து வழங்கலாம்’னு அடுத்தப் பிளானை பண்ணினோம்.  அந்தத் திட்டத்துக்காக 30 லட்சம் ரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு அரசுக்கு அனுப்பினோம்.

ஆனால், ஒரேயொரு பஞ்சாயத்துக்கு 30 லட்சம்  கொடுக்கமுடியாதுனு சொல்லிட்டாங்க. 1999-ம் வருஷம் மத்திய அரசு (Rajiv Gandhi National Drinking Water Mission) ஒரு ஸ்கீம் அறிவிச்சாங்க. 10 சதவிகிதம் மக்கள் பங்களிப்பு கொடுத்தால், 90 சதவிகித தொகையை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் அந்தத் திட்டம். உடனடியாக கிராம சபையைக் கூட்டி, மக்களிடம் விவரத்தைச் சொன்னோம். 10 சதவிகித தொகை 4,80,000  ரூபாய் தேவைப்பட்டுச்சு. மக்கள்கிட்ட வசூலிச்சிக் கொடுத்தோம். பவானி ஆற்றிலிருந்து எங்க பஞ்சாயத்துக்குக் குடிநீர் வந்து சேர்ந்துச்சு. அதில் ஒரு சிக்கல் அரம்பிச்சது. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வெச்சிருந்ததால், பஞ்சயத்துக்கான மின்சாரக் கட்டணம் லட்சக்கணக்கில் வந்துருச்சி. அதைக் குறைக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சு, வாட்டர் ட்ரீட்மென்ட் பிளான்டுக்குத் தேவையான மின்சாரத்தை 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' (Biomass Gasifier Gas) மூலம் தயாரிக்க முடிவுபண்ணி செயல்படுத்தினோம்.

அதோடு, சோலார் சிஸ்டத்தையும் கொண்டுவந்தோம். அப்போதும் மின்சாரப் பற்றாக்குறை தீரலை. இன்னொரு ஐடியா தோணுச்சு. எங்க பஞ்சாயத்துக்குனு சொந்தமா  காற்றாலை அமைக்க முடிவுபண்ணினோம்.  அதுக்காக, பஞ்சாயத்து சேமிப்பிலிருந்து 40 லட்சமும், பேங்கில் ஒரு கோடியே 15 லட்சம் கடனும் வாங்கினோம். திட்டம் செயலாகி, வருஷத்துக்கு ஏழே முக்கால் லட்சம் யூனிட் கரன்ட் கிடைக்குது. இப்போ, 90 சதவிகித கடன் முடிஞ்சிருச்சு. கடன் முடிஞ்சதும் எங்க பஞ்சாயத்துக்கான கரன்ட் எங்களுக்கு இலவசமாவே கிடைக்கும்'' என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி அசரவைக்கிறார் சண்முகம்.

லிங்கம்மாள் ஆரம்பித்தார், “எல்லோருக்கும் சொந்த  வீடு மிகப்பெரிய கனவு இல்லீங்களா? வீடு கட்ட அரசாங்க உதவி செஞ்சாலும், பலருக்குச் சொந்த இடமில்லை. அதனால், ஆக்கிரமிப்பிலிருந்த 6 ஏக்கர் நிலத்தை மீட்டு 250 வீடுகளும், பசுமை வீடு திட்டத்தின்  கீழ் 101 வீடுகளும் கட்டிக்கொடுத்தோம். எங்கள் இருவரின் பதவிக் காலத்தில் மட்டும், 850 வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளோம். கிராமம் பிடிக்காமல் டவுனுக்கு குடிபெயர்ந்தவங்ககூட சொந்த வீடு கட்டித்தரும் விஷயம் தெரிஞ்சு ஊருக்குத் திரும்பினாங்க. எங்களது செயல்பாட்டைப் பார்த்த அப்போதைய முதல்வர், புதுவாழ்வு திட்டத்தை முதன்முதலில் எங்கள் பஞ்சாயத்தில் செயல்படுத்தச் சொன்னார். சுயதொழில் பயிற்சி, வங்கிக் கடன், மைக்ரோ பைனான்ஸ் எனப் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தோம். தவிர, 100 சதவிகித கல்வியை உறுதி செய்தோம். இப்படித்தான் சிறந்த பஞ்சாயத்து என்ற அங்கீகாரம், ஓடந்துறை பெற்றது'' என்கிறார் புன்னகையுடன்.

இப்படி எல்லாவற்றிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்த ஓடந்துறையின் இப்போதைய நிலைமை கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. விநோபாஜி நகரில் மூன்று மாதமாக குடிநீர் பிரச்னை. பலமுறை தெரிவித்தும் ஓர்  அதிகாரியும் எட்டிப் பார்க்கவில்லையாம்.
''நம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய முதல் தகுதி. அது இருந்தால் மற்றவை தானாக வந்துவிடும். நான் அ.தி.மு.வைச் சேர்ந்தவன்தான். ஆனால், எனக்கே இந்த ஆட்சி மீது வெறுப்பாக உள்ளது (லிங்கம்மாளும் ஆமோதிக்கிறார்). இதெல்லாம் ஒரு ஆட்சியா ச்சீ...” என முகம் சுளிக்கும் சண்முகம் , ''அதெல்லாம் எம்.ஜி.ஆரோடு முடிந்துவிட்டது. ஜெயலலிதா போல்டான லீடராக இருந்தார் அவ்வளவே. நாங்கள் எப்போதுமே அரசியல்வாதியாக நடந்துகொண்டதில்லை. அரசியல்வாதியாக இருந்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. கமிஷன் அடிப்பதற்காக நல்லது செய்வதுபோல நடிக்கவேண்டியிருக்கும். அடுத்த பஞ்சாயத்து தேர்தலிலும் நிற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். நமக்கும் வயசாகிருச்சு. அடுத்த ஆளை உருவாக்கணும்ல. ஊர்ல நல்ல பசங்களா பார்த்து களத்துல இறக்கிவிட இருக்கோம்'' என்கிறார். 
அதை ஆமோதித்து லிங்கம்மாளும் வெள்ளந்தி புன்னகை உதிர்க்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு