Published:Updated:

அ.தி.மு.க-வின் `பச்சை சால்வை' பாசம்... 5 மணிநேர தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் மோடி!

அ.தி.மு.க-வின் `பச்சை சால்வை' பாசம்... 5 மணிநேர தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் மோடி!
அ.தி.மு.க-வின் `பச்சை சால்வை' பாசம்... 5 மணிநேர தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் மோடி!

ராணுவக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு அலை வீசியது. குறிப்பாக, சென்னை போராட்டக்களமாக மாறியிருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 15 நாள்களுக்கு மேலாகத் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கெடு மார்ச் 29-ஆம் தேதி முடிந்த பிறகு, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி  பழனிசாமி அரசு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில், `ஸ்கீம்' என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த நிலையில், சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்து, காவிரி மீட்புப் பயணத்தில் இறங்கினார். பி.ஜே.பி., அ.தி.மு.க-வைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நடிகர் சங்கமும் அரைநாள் அறவழிப் போராட்டத்தை நடத்தியது. இதுதவிர, விவசாயிகளும், மாணவர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகின்றனர். 

இந்த நிலையில், ஒருநாள் உண்ணாநிலை போராட்டத்தோடு தன்னுடைய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டத்தை முடித்துக்கொண்ட அ.தி.மு.க., அதற்குப் பிறகு அதுபற்றி வாய்திறக்காமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக, பிப்ரவரி 24-ம் தேதி, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு சார்பில் சென்னையில் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நேரில் கோரிக்கை வைத்தார். அதற்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இதையடுத்துதான் அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்றத்தில் தீர்மானம், எதிர்க்கட்சிகளின் சார்பில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. 

ராணுவக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க, சென்னை வந்த பிரதமர் மோடியுடன் இரண்டு விழாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டனர். இந்த விழாக்களில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வாய் திறக்கவில்லை. சென்னை வந்த பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை கிண்டி கவர்னர் மாளிகைமுதல் விமான நிலையம்வரை போராட்டக்களமாக மாறி இருந்தது. இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கெளதமன் உள்ளிட்டோர் விமான நிலைய வளாகத்துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்குள்ள விளம்பரப் பலகைமீது ஏறிச் சிலர் கண்டனக் கோஷம் எழுப்பினர். அவர்களை, பாரதிராஜா கண்டித்ததுடன், ``ஆபத்தான முறையில் ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டாம்'' என்று சொல்லி, கீழே இறங்கச் சொன்னார். 

விமான நிலையத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி போன்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கட்சித் தொண்டர்கள், கறுப்புப் பலூன்களைப் பறக்கவிட்டுத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். கத்திப்பாரா அருகே, உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சின்னமலை அருகே கறுப்புப் பலூன்களைப் பறக்கவிட்டு மோடியை கண்டித்துப் பேசினார். 

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, கறுப்புச் சட்டை அணிந்திருந்தார். அவருடைய கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. நகர் வீடுகளிலும், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடைய ஆழ்வார்பேட்டை வீட்டிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. சென்னை அண்ணா நகர் வீடு, எழும்பூர் கட்சித் தலைமை அலுவலகம், கலிங்கப்பட்டி வீடு உள்ளிட்டவற்றிலும் கறுப்புக் கொடியை ஏற்றி இருந்தார் வைகோ. விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காவிரி மீட்புப் பயணத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் கறுப்புப் பேன்ட், சட்டை அணிந்து பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், காவிரி மீட்புச் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இப்படி, தமிழக அரசியல் கட்சிகள், அமைப்பு போராட்டக்களத்தில் இருக்கும்போது ஆளும் அ.தி.மு.க., அமைதி காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கனிமொழி எம்.பி கூறுகையில்,``விவசாயிகள் நலனைவிட, இப்போது ராணுவக் கண்காட்சி முக்கியமா. தமிழகத்தில் மோடி காலடி வைக்க முடியாத அளவுக்கு எதிர்ப்புக் காட்டப்பட்டுள்ளது. இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில், பிரதமர் மோடிக்கு பச்சைக் கலரில் துணை முதல்வர் சால்வை அணிவிக்கிறார். முதல்வரும் துணை முதல்வரும் பச்சை வண்ணத்தில் பேக் செய்யப்பட்ட பரிசுகளைப் பிரதமர் மோடிக்குக் கொடுக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டம், உச்சகட்டத்தில் இருக்கும்போது விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் இவர்களின் செயல்பாடு உள்ளது. அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பி.ஜே.பி-க்குப் பயந்துகொண்டு தமிழக மக்களின் உரிமைகளை அ.தி.மு.க. அரசு காவு கொடுக்கிறது. அதையெல்லாம் இனிமேலும் தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்'' என்று எச்சரித்தார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``அறவழிப் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பைத் தெரிவிப்பதில் தவறு இல்லை. வன்முறைகள் மூலம் எதற்கும் தீர்வு காண முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் அழுத்தம் கொடுத்தனர். அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் இருந்தோம். தமிழக அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். அதாவது, அ.தி.மு.க சார்பில் முத்தரப்பு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல, நாங்கள் அரசியல் லாபம் கருதிச் செயல்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, மத்திய அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குத் தேவையான அழுத்தங்களைத் தமிழக அரசு கொடுத்துக்கொண்டு இருக்கிறது'' என்று பதில் அளித்தார்.

இந்த நிலையில், சென்னைக்கு காலை 9.30 மணிக்கு வந்த பிரதமர் மோடி, பழைய விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் சென்றார். பின்னர், அங்கிருந்து ராணுவக் கண்காட்சி நடைபெற்ற திருவிடந்தை மைதானத்துக்குச் சென்று ராணுவக் கண்காட்சியைத் தொடக்கிவைத்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் கிண்டி ஐ.ஐ.டி-க்கு வந்தார். அங்கிருந்து இடிக்கப்பட்டிருந்த காம்பவுண்டு சுவர் வழியாகக் கார் மூலம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் பழைய விமானம் வழியாக 2.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது, பிரதமரை வழியனுப்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மோடி சென்னையில் இருந்த 5 மணி நேரமும் தென் சென்னை பகுதி போராட்டக்களமாகவே இருந்தது.