Published:Updated:

"பா.ஜ.க நடத்தியது 'மத' யாத்திரை; இது மதசார்பின்மைக்கான யாத்திரை!" - சமூக ஆர்வலர்கள்

நா.சிபிச்சக்கரவர்த்தி

பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் செல்லும் அதே வழியில், நாங்கள் `மதச்சார்பின்மைக்கான ஒரு யாத்திரை நடத்தலாம்' என முடிவுசெய்தோம்.

"பா.ஜ.க நடத்தியது 'மத' யாத்திரை; இது மதசார்பின்மைக்கான யாத்திரை!" - சமூக ஆர்வலர்கள்
"பா.ஜ.க நடத்தியது 'மத' யாத்திரை; இது மதசார்பின்மைக்கான யாத்திரை!" - சமூக ஆர்வலர்கள்

பாசிசத்துக்கு எதிரான மக்கள் மேடையின் `மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பு’ சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் மாதம் முதல் வாரம் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்று, கன்னியாகுமரி அமைதி இல்லத்தில் முடிவடைந்தது. பாசிசத்துக்கு எதிரான மக்கள் மேடையின்  ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா கஜேந்திரன் மற்றும் லீனஸ் நம்மிடம் பேசும்போது...


``நீதித்துறை முதல் கல்வி நிலையங்கள் வரை அனைத்து இடங்களிலும் பா.ஜ.க-வின் ஆக்டோபஸ் கரங்கள் நீண்டுகொண்டேபோகின்றன. எங்கும் எதிலும் காவிமயமாக்க முயல்கிறது பா.ஜ.க அரசு. இந்த ஆண்டு ஜனவரி மாதம் `நீதித்துறை காவிமயமாக்கப்பட்டுவருகிறது. மக்கள் விழிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நால்வரும் மக்கள் மன்றத்தின் முன் வந்து அரைகூவல் விடுத்தார்கள். அதன் பிறகு சென்னை கல்லூரி ஒன்றில் `இந்துமத கலைநிகழ்ச்சிகள்' 10 நாள்கள் நடந்தன. அதில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வலுகட்டாயத்தின்பேரில் கலந்துகொண்டனர். சாதிவாரியாக ஸ்டால் போட்டு, அந்த நிகழ்ச்சியை சத்தமே இல்லாமல் நடத்தி முடித்தார்கள். இப்படிப் பல துறைகளிலும் காவி ஊடுறுவிவருகிறது. இந்தச் சமயத்தில்தான், அயோத்தியிலிருந்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. ஐந்து மாநிலங்களைக் கடந்து மார்ச் 20-ம் தேதி தமிழகத்துக்குள் நுழைந்தது. 

பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் செல்லும் அதே வழியில், நாங்கள் `மதச்சார்பின்மைக்கான ஒரு யாத்திரை நடத்தலாம்' என முடிவுசெய்தோம். அதற்காகதான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். 21-ம் தேதி மார்ச் மாதம் தொடங்கப்படவேண்டிய எங்கள் அணிவகுப்பு, காவல் துறை அனுமதி தர மறுத்ததால் காலதாமதம் ஆனது. அதன் பிறகு நீதிமன்றத்தை அணுகினோம். பல  சட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் அனுமதி கிடைத்தது. 


`பாசிசத்தை வேரறுப்போம்...  ஜனநாயகம் சமூகநீதிக்காக ஒன்றிணைவோம்' என்ற முழக்கத்துடன் ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை பெரியார் திடலிலிருந்து எங்கள் யாத்திரை தொடங்கியது. 30 கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ஆரம்பித்த யாத்திரைக்கு, மக்களின் ஆதரவு பெருகியது. சென்னை, கோவை, திருச்சி என 21 மாவட்டங்களில், கிட்டத்தட்ட 152 இடங்களில் 70,000  பேரைச் சந்தித்துப் பேசினோம். இறுதியாக, கன்னியாகுமரியில் எங்கள் பயணத்தை நிறைவுசெய்தோம். 

இந்த யாத்திரையின் வெற்றியே, இயக்கக் கட்சிகளின் வேறுபாடின்றி பல அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து எங்களுடன் பயணித்தார்கள் என்பதுதான். ஒவ்வொரு மாவட்ட நுழைவாயிலிலும் பல கட்சிகள், இடதுசாரி அமைப்புகள், திராவிட அமைப்புகள்,  அம்பேத்கரிய இயக்கங்கள், பல ஜனநாயக அமைப்புகள், இஸ்லாமிய-கிறிஸ்தவ அமைப்புகள் என அனைவரும் வரவேற்றார்கள். கோவையில், பகத் சிங் தங்கை மகன் மோகன் சிங் மற்றும் ஜே.என்.யூ தலித் ஆக்டிவிஸ்ட் பிரதிப் நர்வல் போன்ற பலரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

 ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றிணைத்து, பாசிசத்துக்கு எதிராக ஒருமித்த குரலெழுப்பும் நிகழ்வாக இருந்தது. இந்தப் பிரசாரத்தின் மூலம், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் நமது மதச்சார்பின்மை மரபை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளோம். `பாசிசம்' என்ற சொல்லாடலை, மிக ஆழமாகப் பதியவைத்துள்ளோம்.


ராமராஜ்ய யாத்திரை நடைபெற்றதன்  நோக்கம், காவிரிப் பிரச்னை, நீட் பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம் என, வழியெங்கும் தமிழகப் பிரச்னைகளைப் பேசிக்கொண்டே, துண்டுப் பிரசுரம் கொடுத்துக்கொண்டே சென்றோம். 

வட தமிழகத்தில் 15 மாவட்டங்களை எந்த இடையூறுமின்றி திட்டமிட்டபடியே கடந்த நாங்கள், தென் தமிழகத்தில் காவல் துறையினரின் பல தடங்கல்களையும் பல மிரட்டல்களையும் தொடர்ச்சியாகச் சந்தித்தோம். 144 தடை உத்தரவு போட்டு, ராமராஜ்ய யாத்திரையை அனுமதிக்கும் தென் தமிழகக் காவல்துறையும் அரசாங்கமும், மதச்சார்பின்மையைப் பறைசாற்றும் எங்கள் அணிவகுப்புக்கோ அனுமதியில்லை எனப் பல இடங்களில் தடுக்க முயன்று மிரட்டின.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பாசிச சக்திகளை இங்கிருந்து விரட்டுவதுதான் நம்முடைய முக்கிய நோக்கமாகவும் கடமையாகவும் இருக்க முடியும்" என்றார்.