Published:Updated:

சென்னையில் திரண்ட தலித் அமைப்பினர் - தலைவர்கள் பேசியது என்ன?

சென்னையில் திரண்ட தலித் அமைப்பினர் - தலைவர்கள் பேசியது என்ன?
சென்னையில் திரண்ட தலித் அமைப்பினர் - தலைவர்கள் பேசியது என்ன?

சென்னையில் திரண்ட தலித் அமைப்பினர் - தலைவர்கள் பேசியது என்ன?

தலைநகர் சென்னையில் நீண்ட காலத்துக்குப் பிறகு பல்வேறு தலித்திய அமைப்புகளும் சேர்ந்து பெரியதொரு கூட்டுப் போராட்டத்தை நடத்திக்காட்டியுள்ளன. இந்த முறை காரணமாக அமைந்திருப்பது, வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில், கடந்த மாதம் 20-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் சில மாற்றங்களை அறிவித்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தில் ஒரு மேல்முறையீட்டு மனு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அ.கு.கோயல், லலித் இருவரும் தந்த அந்தத் தீர்ப்பை, நீதித்துறையிலேயே அசாதாரணமானதாகப் பார்க்கிறார்கள். இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் மத்திய அரசை சீராய்வுமனு தாக்கல்செய்யுமாறு கோரியும் வடமாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஏப்.2-ம் தேதியன்று தலித்திய அமைப்புகளால் வடமாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 

போராட்டம் நடத்தியதற்காக 11 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகவைக்கும் தீர்ப்பைச் சரிசெய்யவும் வலியுறுத்தி, புதியதாகப் போராட்டங்கள் தொடங்கின. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து மார்க்ஸிய லெனினிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பழையபடியே நீட்டிக்க வேண்டும் எனக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. 

வி.சி.க-வின் ஒருங்கிணைப்பில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட்ட பல கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது. அதையடுத்து கடந்த 18-ம் தேதியன்று ஆறு தலித்திய அமைப்புகள் சேர்ந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில், ஆளுநர் தொடர்பாக பிரச்னை பெரிதானநிலையில், பேரணி தள்ளிவைக்கப்பட்டு, 24.4.18 அன்று நடத்தப்பட்டது. 

அறிவிக்கப்பட்ட மதியம் 1 மணிக்கு முன்னதாகவே சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்னர் நீலவண்ணக் கொடிகளுடன் போராட்டக்காரர்கள் வரத் தொடங்கினர். வி.சி.க., பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம், இந்தியக் குடியரசுக் கட்சி, ஆதித்தமிழர் மக்கள் கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். வழக்கத்தைப் போல அல்லாமல், அந்த இடத்தில் போலீஸ் கூறிய நிபந்தனைகளின்படி மேடையின் அமைப்பானது அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் அந்த இடத்தில் அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நோக்கிய சாலையிலும் அண்ணா சாலையிலும் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் திரண்டுவந்து மேடைப்பக்கம் போகமுடியாமல், ஆங்காங்கே நின்றனர். ராஜீவ்காந்தி சிலை வரைக்கும் கூட்டம் நெருக்கியடித்தது. 

தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் பேசுகையில், ``தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பாகக் கொடுக்கப்படும் தீர்ப்புகள் சரியாக இருக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் யாரையும் எதையும் எதிர்ப்போம். எதிரடி கொடுப்பதே எம் வேலை” என்று குறிப்பிட்டார். 

இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் பேசுகையில், `` 1949 முதல் 1955, 1989, 2012 என ஏறத்தாழ 60 ஆண்டுகள் மாறிமாறி வலுச்சேர்க்க வேண்டும் என வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட, 1989 வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை, தனிநபரின் வழக்கிலே உச்ச நீதிமன்றத்தில் இதை நீர்த்துப்போகச் செய்யும் அளவுக்கு தீர்ப்பு வழங்கியிருப்பதும், வன்கொடுமை” என்று குறிப்பிட்டார். 

நிறைவாகப் பேசிய வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், `` வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் தீர்ப்பைச் செல்லாததாக்க வேண்டும் என்றால், மோடி அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். எந்தக் காலத்திலும் இந்தச் சட்டத்தைச் சீண்டிப்பார்க்காத அளவுக்கு, இதை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்” என்றார்.

மேலும் பேசுகையில், ``பிரதமர் மோடியோ இந்தத் தீர்ப்பை ஆதரிக்கமுடியாது என்கிறார். ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்த முயற்சி நடந்தது. வேறு மாநிலங்களில் எதுவும் நடக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அப்பட்டமான அநீதி; இது ஓர் வன்கொடுமை. இதை எதிர்த்து 500 மாவட்டங்களில் ராகுல்காந்தி போராட்டம் நடத்துகிறார். ஐதராபாத் மாநாட்டில் மார்க்ஸியக் கட்சியின் மாநாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை 9-வது அட்டவணையில் இணைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர்களைக் கேள்விகேட்காத பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸ், தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் கேள்வி எழுப்புகிறார். அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பேசுகிறார்கள். முலாயமோ லாலுவோ மம்தாவோ வடமாநிலத் தலைவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதாகச் சொல்கிறார், மோடி. இன்னொரு புறம், வடமாநிலங்களில் தலித் மக்கள் எந்தத் தலைவரின் அழைப்புமில்லாமல் லட்சக்கணக்கில் திரண்டார்கள். துப்பாக்கி சூட்டில் 13 பேரைக் கொன்றீர்கள். முன்னர், எத்தனையோ மறியல், ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இளைஞன் ஒருவன் பட்டேல் சமூகத்தினரை லட்சக்கணக்கானவர்களைத் திரட்டி குஜராத்தில் போராட்டம் நடத்தினார். முதியவர் ஒருவர் குஜ்ஜார் இன மக்களைத் திரட்டி நான்கு நாள்கள் ரயில்கள் நிறுத்தப்பட்டன. ஒட்டுமொத்த இந்தியாவே துண்டாடப்பட்டது. அப்போதெல்லாம் தடியடி, துப்பாக்கி சூடு நடந்ததா? அப்பாவி ஏழை, எளிய மக்கள் போராடினால் துப்பாக்கி சூடு நடத்தி, 13 பேரைப் படுகொலை செய்திருக்கிறீர்கள். ஒரு சதவிகிதம் பேர்கூட இந்தச் சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை. உண்மையில் இன்னும் நடைமுறைக்கே வராத சட்டத்தால் பாதிப்பு பாதிப்பு என அலறுகிறார்கள். எந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை? வருமானவரிச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லையா? அமலாக்கப்பிரிவுச் சட்டம், ஐ.பி.சி. சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் ஆகியன தவறாகப் பயன்படுத்தப்படவில்லையா? எந்தச் சட்டத்தை காவல்துறை முறையாகப் பயன்படுத்தியிருக்கிறது? நாங்கள் எந்தக் குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிரானவர்கள். சாதிவெறிக்கு எதிரானவர்கள். மதவெறிக்கு எதிரானவர்கள்” என்று திருமாவளவன் கூறினார். 

முன்னதாக, குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் சக்திதாசன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோரும் பேசினர். காஞ்சி மக்கள் மன்றம் அமைப்பின் மகேஷ், நீலம் பண்பாட்டு அமைப்பின் நிறுவனர் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட பலரும் மேடையில் முழக்கமிட்டனர். 

பனகல் மாளிகை முன்னர் நடந்த கூட்டத்தில் தலைவர்கள் பேசியதை அடுத்து, பேரணியாகச் செல்லும் திட்டம் சாத்தியம் இல்லை என்பதால் கைவிடப்பட்டது. ஆறு அமைப்புகளின் தலைவர்கள் மட்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்திப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். செல்லும் வழியில் சாலைத் தடையால் மேடைக்கு வரமுடியாத மக்கள் தொகுதியினர் முன்பாகவும் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் சிறிது நேரம் தனியாகவும் உரை நிகழ்த்தினார். 

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க ஆட்சியின்போது, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில், தேவேந்திரகுலவேளாளர் ஆதிதிராவிடர் அருந்ததியர் கூட்டமைப்பின் சார்பில், அரசுப் பணியிடங்களில் பின்னடைவு காலியிடங்களை நிரப்பக்கோரி பேரணி நடத்தப்பட்டது. அதையடுத்து, தலித் மக்களின் பொதுப் பிரச்னை ஒன்றுக்காக, ஆறு தலித் கட்சிகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டம், பேரணி நடப்புகால வரலாறு என்பதை மறுப்பதற்கில்லை! 

அடுத்த கட்டுரைக்கு