Published:Updated:

மம்தாவின் அழைப்புக்கு பச்சைக்கொடி காட்டும் திமுக - நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு என்ன?

மம்தாவின் அழைப்புக்கு பச்சைக்கொடி காட்டும் திமுக - நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு என்ன?
மம்தாவின் அழைப்புக்கு பச்சைக்கொடி காட்டும் திமுக - நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு என்ன?

மம்தாவின் அழைப்புக்கு பச்சைக்கொடி காட்டும் திமுக - நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு என்ன?

'அகில இந்திய அளவிலான மாநிலக் கட்சிகளின் அணியில் தி.மு.கவும் இணையுமா?' எனும் கேள்விக்கு உயிர் கொடுத்திருக்கிறது, அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் சமீபத்திய டுவிட்டர் பதிவு. 

காந்தி கலைக்கச்சொன்ன காங்கிரஸ் இயக்கத்தைக் கட்சியாக்கிய நேருவும் அவருக்குப் பின்னர் இந்திரா, ராஜீவ் என ஒரே குடும்பத்தின் வாரிசுகளை பிரதமர்களாகப் பார்த்து அலுத்துப்போனது, இந்த நாடு. இந்திராவின் ஆட்சிக்காலத்திலேயே அவரை அரசியலில் வீழ்த்தி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், மாற்று அணியின் பலம் நீடிக்கவில்லை. அவ்வப்போது நடக்கும் மாற்று அணி முயற்சி, இப்போது காங்கிரஸ் அல்லாத - பா.ஜ.க அல்லாத - மாநிலக் கட்சிகளின் இணைவாக ஒரு பக்கமும், காங்கிரஸ் தலைமையல்லாத அதே நேரத்தில் காங்கிரஸை உறுப்பினராக மட்டும் ஏற்றுக்கொள்ளும் அணியாக இன்னொரு பக்கமும் கூறப்படுகிறது. 

இந்த முறை, மாற்று அணியின் மையமாக இருப்பவர், மேற்குவங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. மேற்குவங்க மாநிலத்தில் சி.பி.எம் கட்சிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இவரின் ஆவல், டெல்லியை நோக்கியதாக மாறியிருக்கிறது. 

முதலில் இந்த யோசனைக்கு வித்திட்டவர், தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ்தான். அவர் முன்வைத்தது, காங். அல்லாத- பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளின் அணி. இதில் சந்திரசேகர ராவைவிட மாற்று அணியைக் கட்டும் வேலையில் மம்தா பானர்ஜி ஆர்வத்தோடு இறங்கிவிட்டார். அதன் முதல் கட்டமாக, சந்திரசேகர ராவ்- மம்தா சந்திப்பு கொல்கத்தாவில் நிகழ்ந்தது. அதையடுத்து, தெலுங்குதேசம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சிவசேனா, திமுக ஆகிய கட்சிகளின் தலைவர்களிடம் தொலைபேசியில் பேசினார். 

தொடர்ந்து, கடந்த மாதம் 27ஆம் தேதியன்று டெல்லிக்குச் சென்று நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் மம்தா சந்தித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். முன்னதாக, சோனியாவை நாடாளுமன்றத்தில் சந்திக்கச் செல்வதற்குள், அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். 

நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் எம்.பி. கவிதா, தெலுங்குதேசம் எம்.பி.கள், பிஜூ ஜனதாதளம் எம்.பி.கள் பத்ருஹரி மஹ்தாப், பினாக்கி மிஸ்ரா, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், திமுகவின் கனிமொழி, லாலுவின் மகளும் ராஷ்டிரிய ஜனதாதளம் எம்பியுமான மிசா பாரதி, ஜே.எம்.எம். எம்.பி. சஞ்சீவ்குமார் ஆகியோரை மம்தா சந்தித்துப் பேசியது, மாற்று அணியின் ஆதரவாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

அதன் தொடர்ச்சியாக, மம்தா பல்வேறு பிரச்னைகளிலும் மாற்று அணிக்கான இடத்தை உருவாக்க நினைக்கிறார். ஆனால், பாஜக அல்லாத அணிக்கு காங்கிரஸ் தலைமைவகிக்க முடியாது என்பதையும் அவர் தெளிவுபடுத்திவருகிறார். அண்மையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான பதவிநீக்கத் தீர்மான விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் நிலையை ஆதரிக்கமுடியாது என்றது குறிப்பிடத்தக்கது. 

சந்திரசேகரராவின் தொடக்க கால நிலையான காங். அல்லாத அணி என்பதில் மம்தாவுக்கு விருப்பம் இல்லை; காங்கிரஸ் கட்சியை எப்படியாவது உள்ளே இழுத்துவிடவேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால், தலைமையில் காங்கிரஸ் இருக்கும் என்பதை இப்போதே ஏற்கமுடியாது; சூழலைப் பொறுத்து அதைப் பிறகு முடிவுசெய்துகொள்வோம் என்றும் மம்தா சொல்கிறார். 

மாநிலங்களில் பாஜகவைத் தோற்கடிக்க எந்தெந்தப் பகுதிகளில் எந்தக் கட்சி பலமாக இருக்கிறதோ அவர்கள் அங்கு நிற்கட்டும் என்பதே மம்தாவின் கணக்கு. தமிழ்நாட்டில் ஏற்கெனவே திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் கூட்டணி இருந்துவரும் நிலையில், மம்தாவின் முயற்சிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாகவே கனிமொழியின் மூலம் இதற்கு பச்சைக்கொடி காட்டியிருந்த ஸ்டாலின், ” மாநிலக் கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் வலிமையான கூட்டாட்சிக்காகவும் திமுக துணைநிற்கும்; பாஜகவின் சர்வாதிகார, ஜனநாயகவிரோத ஆட்சிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை ஆதரிக்கிறேன்” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பதிலுக்கு மம்தாவும் நன்றி தெரிவித்துள்ளார். 

மாற்று அணியில் காங்கிரஸின் நிலைப்பாடு கறாராக அறிவிக்கப்படாதநிலையில், திமுகவின் 'மம்தா ஆதரவு' முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மாநிலக் கட்சிகளின் கூட்டணியில், சந்திரசேகரராவ் விரும்புவதைப் போல காங்கிரஸ் இடம்பெறவில்லை என்றால் திமுகவின் மாற்று அணி ஆதரவு தொடருமா என்பது பெரும் கேள்வியாக நிற்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு