Published:Updated:

பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும்.. ’பாவப்பட்ட’ நீட் தேர்வு மாணவர்களும்!

பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும்.. ’பாவப்பட்ட’ நீட் தேர்வு மாணவர்களும்!
பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும்.. ’பாவப்பட்ட’ நீட் தேர்வு மாணவர்களும்!

பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும்.. ’பாவப்பட்ட’ நீட் தேர்வு மாணவர்களும்!

எர்ணாகுளம் சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளியில் நீட் தீர்வு எழுதவிருக்கும் மாணவர்கள்

வெளிமாநிலத்துக்குச் சென்றுதான் நீட் தேர்வு எழுதவேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்குத் தனி நபர்களாக ஆங்காங்கே பொதுமக்களே களமிறங்கி உதவிவருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் பணியும் அந்த மட்டத்திலேயே இருப்பதா? தமிழக மாணவர்கள் மட்டும் எதிர்கொண்டுள்ள இப்பிரச்னையை முன்னரே மாநில அரசு அறிந்து தடுத்திருக்க வேண்டாமா எனும் கொந்தளிப்பு பரவலாகக் காணப்படுகிறது. 

கடந்த 2016 ம் ஆண்டில் கல்வியமைச்சராக மாஃபா பாண்டியராஜன் இருந்தபோதே இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, விவகாரமாகவே இருந்துவருகிறது. சட்டரீதியாக நீட் தேர்வை ரத்துசெய்யவைப்போம் என்று போகிற இடங்களிலெல்லாம் புன்னகையோடு உறுதிமொழியைத் தந்தவருக்கு, கட்சியில் ஏற்பட்ட கோலத்தால் அமைச்சர் பதவியே பறிபோய்விட்டது. அதன்பிறகு, மருத்துவக் கல்வி துறைக்குப் பொறுப்பான சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தேர்வு தொடர்பான உறுதிமொழிகளை வழங்கத் தொடங்கினார். தமிழகச் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவானது, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுவரை அதற்கு எந்தப் பதிலும் இல்லை. அதன் நிலை என்னவென்று அறியவே விசாரணை ஆணையங்களை நியமிக்கவேண்டியதைப்போல அவ்வளவு கமுக்கமாக, டெல்லியில் மேல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன! 

எதிர்க்கட்சிகள், மாணவர்கள், சமூகநீதி அமைப்புகளின் தொடர் போராட்டத்தை அடுத்தே, தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவானது, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படாமல் உள்துறை அமைச்சகத்திடமே தேங்கிநிற்பது தெரியவந்தது. அதன் நிலையில் மாற்றமில்லாமல் இருந்துவந்தநிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வேலைகள் இன்னொரு பக்கம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. மே 6 ம் தேதியன்று நடக்கும் நீட் தேர்வுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டன. அதில்தான், தமிழக மாணவர்களுக்கு மட்டும் சம்பந்தமில்லாமல் கேரளம் மட்டுமல்லாமல், ராஜஸ்தான், சிக்கிம் போன்ற வெளி மாநிலங்களில் உள்ள தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. 

தேர்வுக்குக் குறுகிய காலமே இருக்கும்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் குடும்பத்தினர், பிரச்னையைச் சமூக, அரசியல் அமைப்புகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவரவர் ஊர்களுக்கு அருகிலிருக்கும் தேர்வுமையங்களில் இடத்தை ஒதுக்கவேண்டும்; மாநிலத்துக்கு உள்ளேயே அவர்களைத் தேர்வு எழுதவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதை எதிர்த்து, நீட் தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மேல்முறையீடு செய்தது. அதில் கடந்த 3-ம் தேதி தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. மேலும், தமிழக மாணவர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்டுள்ள வெளி மாநிலத் தேர்வு மையங்களில்தாம் நீட் தேர்வை எழுதியாக வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. 

தமிழகத்தையே கொந்தளிக்கவைத்த இந்தத் தீர்ப்புக்கு முன்னரும் பின்னரும் தமிழக அரசு என்ன செய்துவருகிறது என்பதுதான், ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் இருக்கும் மனக்குமைச்சலின் உச்சகட்டக் கேள்வி! ஏனென்றால் 5 ம் தேதி மாலைவரை, நீட் தேர்வை வெளிமாநிலத்தில் எழுதும் தமிழக மாணவர்களைப் பற்றிய விவரங்களைக்கூட மாநில அரசால் அணுகமுடியவில்லை. அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொண்டதாகத் தகவல் இல்லை. 

செய்தி ஊடகத்தினர் சென்னை, அண்ணா நகரிலுள்ள மத்திய இடைநிலைக் கல்விவாரிய- சி.பி.எஸ்.இ. இயக்குநரிடம் கேட்டால், தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதால் டெல்லி அதிகாரிகளே பதிலளிக்கமுடியும் என்கிறார். உண்மைதான்! நீட் தேர்வை நடத்துவதற்காக சி.பி.எஸ்.இ. இயக்குநர் ஒருவர் தனியாக அமர்த்தப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர, நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்க பொறுப்பான எவரும் இல்லை. கவனிக்க... இவையெல்லாம் நீட் குளறுபடிகள் தொடர்பாக அறிவதற்காக, செய்தி ஊடகத்தினர் மேற்கொண்ட முயற்சிகளே தவிர, எட்டுக் கோடி மக்கள்தொகைக்குப் பொறுப்புடைமை கொண்ட தமிழக அரசு ஒரு கேள்வியைக்கூட கேட்டுச் சொல்லவில்லை. 

அரசாங்கம் தொடர்பாக நடந்துவரும் அத்தனை சங்கதிகளைப் பற்றியும் சொல் விளையாட்டு நடத்தாதகுறையாக விளக்கம் தரும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்கூட மாணவர்களின் பிரச்னை குறித்து சாதகமான எந்தத் தகவலையும் கூறவில்லை. 

தமிழகத்தின் வருங்கால மருத்துவர்களான ஆயிரக்கணக்கான இளம் பிள்ளைகளும் பெற்றோரும் செய்வதறியாமல் திகைத்துப்போனார்கள். முழுக்கைச் சட்டையைக் கத்திரித்த கடந்த ஆண்டு நீட் தேர்வுக் கூத்துகள் இன்னும் மறந்துபோகாதநிலையில், மாணவர்களும் பெற்றோரும் உறவினர்களும், ஆம், அவர்களும்தாம் பதற்றமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கவேண்டிய தேர்வுக்காக இரண்டரை மணி நேரத்துக்கு முன்னரே தேர்வு மையத்துக்கு வரச்சொன்னால், மாவட்டத்தைவிட்டுத் தாண்டாத மாணவரும் பெற்றோரும் எவ்வளவு பதற்றப்படவேண்டியிருக்கும்?

பொறியியல் படிப்புச் சேர்க்கைக் கலந்தாய்வுக்காக தலைநகர் சென்னைக்கு வரவே தமிழக மாணவர்கள் திணறுவது நின்றபாடில்லை; இதில் வேறு மாநிலம், அதுவும் கோடைவெயில் புழுதிப்புயல் அடிக்கும் ராஜஸ்தான், போக்குவரத்து வசதிகள் குறைந்த, மலைப் பகுதியான சிக்கிம் போன்ற மாநிலங்களுக்குச் சென்று, நீட் தேர்வு மையத்தைத் தேடிப் பிடிப்பது, தங்கும் இடத்தைக் கண்டறிவது, பிறகு தேர்வுக்குத் தயாராவது என சராசரி பொதுசனம் யோசித்தால்கூட, பதற்றத்தைத் தரக்கூடிய காட்சிகள் மனக்கண் முன் வந்து நிற்கும்! 

போர்க்கால நடவடிக்கையாக தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்துக்கு உள்ளேயே நீட் தேர்வை எழுதச்செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் பலவும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தன. இடதுசாரிகளும் சமூகநீதி அமைப்புகளும், சில திரைக்கலைஞர்களும் தனிநபர்களும் எப்பாடுபட்டாவது வெளிமாநிலத்துக்கு அனுப்பப்பட்ட மாணவர்களைத் தேர்வெழுதவைக்க அவர்களாலான உதவியைச் செய்வதில் தீவிரம் காட்டினர். 
ஆனால், மாநில அரசாங்கம்? 

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இன்னொரு முக்கியமான காரியத்தில் இருந்தார்கள். வரும் கல்வியாண்டுக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சிதான், அந்தக் `காரியம்’ என்பது தெரிந்ததே! புதிய புத்தக உருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கும் எத்தனையோ பேரின் உழைப்பும் திறனும் தனித்து அங்கீகரிக்கப்பட்டு வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுவதற்குப் பதிலாக, நீட் பதற்றத்தைத் தணிக்கும் நிகழ்வாகவே அது காட்சியளித்தது. 

அதன் பிறகாவது இரண்டு ஆட்சிமணியாளர்களும் அசைந்தார்களா, அசைத்தார்களா என்றால் இல்லவே இல்லை! 

சமூக ஊடகங்களில் புழங்கும் சிறுபிள்ளை முதல் முதியவர்வரை  உலுப்பி எடுத்துவிட்டார்கள். அசரவேண்டுமே... ஊகூம்.. இரண்டு முதல்வர்களும் ஒரு சொல் உதிர்க்கவில்லை!

என்னதான் செய்தார்(கள்)? 

இந்தியாவிலேயே முதல் முறையாக இப்படியொரு முதலமைச்சர் அறிவிப்பை இப்போதுதான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. நீட் தேர்வெழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி தரப்படும் எனும் முதலமைச்சர் பழனிசாமியின் அறிக்கையின் தொடக்கமே, பல அர்த்தங்களையும் அதிர்ச்சியையும் தருகிறது. 

அந்த வாசகம் இதுதான்: 

``எதிர்வரும் நீட் தேர்வுக்காக ஒரு சில தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிரமங்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் இந்த மாணவர்களுக்கு உதவுவதற்காகக் கீழ்க்கண்டவாறு நான் ஆணையிட்டுள்ளேன்:.......”.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரலும் தொனியும் ஏகமாக ஒலிக்கும் இந்த அறிக்கையில், குருவை விஞ்சும் வேகம் இருந்தாலும், ``பொறுப்பு” உணர்வைக் காணவில்லை. சாமானிய தமிழக மக்களும் பாதிக்கப்படும் நீட் தேர்வர் பிள்ளைகளுக்காக உதவமுயன்றுகொண்டிருக்க, எட்டுக் கோடி மக்களுக்குத் தலைமைதாங்கும் அரசாங்கம், சம்பந்தப்பட்ட விவரங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறமுடியாதா? எப்படி முடியும் என எதிர்க்கேள்வி போடுகிறார்கள், எதிர்க்கட்சிகள் தரப்பில். 

``நெடுஞ்சாலைகளில் அரசு மதுக்கடைகளுக்குத் தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணையில் அன்றாடம் வழக்கறிஞர்களை அமர்த்திய தமிழக அரசு, நீட் வழக்கில் வழக்கறிஞரைக்கூட அனுப்பவில்லை எனும் பெரும் குற்றச்சாட்டைச் சம்பாதித்திருக்கிறார்கள், பழனியும் பன்னீரும்..” என அவர்கள் முடிக்கும்முன்பே, விளங்கிவிடுகிறது!   

``யாரும் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொண்டே இருங்கள்; அவை எதையும் நாங்கள் பொருட்படுத்தாமல் நினைத்ததைச் செய்துகொண்டே இருப்போம்” என்பதே அரசின் பதிலாக இருக்கும் என்றால், இந்த அரசாங்கம் இருப்பதன் அர்த்தம்தான் என்ன? 

அடுத்த கட்டுரைக்கு