Published:Updated:

"ஒருமுறை எழுத நாற்பதாயிரம் ரூபாய், ஐ.ஐ.டி.க்கு 12 லட்சம்" - வணிகமயமாகும் நுழைவுத்தேர்வுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"ஒருமுறை எழுத நாற்பதாயிரம் ரூபாய், ஐ.ஐ.டி.க்கு 12 லட்சம்" - வணிகமயமாகும் நுழைவுத்தேர்வுகள்
"ஒருமுறை எழுத நாற்பதாயிரம் ரூபாய், ஐ.ஐ.டி.க்கு 12 லட்சம்" - வணிகமயமாகும் நுழைவுத்தேர்வுகள்

"ஒருமுறை எழுத நாற்பதாயிரம் ரூபாய், ஐ.ஐ.டி.க்கு 12 லட்சம்" - வணிகமயமாகும் நுழைவுத்தேர்வுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு நுழைவுத்தேர்வு மூன்று உயிர்களை பலியாக்கியிருக்கிறது...சிறுமி அனிதாவையும் சேர்த்து. எண்ணிக்கையில் அடங்காத பல மாணவர்களை மன உளைச்சலுக்கும் உடல் உளைச்சலுக்கும் ஆளாக்கியிருக்கிறது. நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்கிற விவாதத்தில் கூட அவ்வளவாகக் கொதித்து எழாத தமிழக மக்கள், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலத்துக்கு அவசரம் அவசரமாகச் சென்று தேர்வு எழுத வேண்டியிருக்கும் சூழலை வலுவாகக் கண்டித்து வருகிறார்கள். இப்படியான நுழைவுத்தேர்வு அலைக்கழிப்புக்குப் பின்னணியில் மிகப்பெரும் சந்தை இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற வாதத்தை முன்வைக்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

``நீட் தேர்வு அறிவிக்கப்பட்டபோதே `அது வேண்டாம்' என்கிற குரலை வலுவாக்காமல், தேர்வு மையச் சிக்கல்களை உணர்ந்தபிறகு பெருவாரியான மக்கள் கொதித்தெழுந்திருக்கிறார்களே?''

``நீட் தேர்வு இருந்தாலும் அல்லது வேறு எந்தத் தேர்வு முறை இருந்தாலும் பணம் படைத்தவர்களின் பிள்ளைகள்தாம் அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்ள முடியும். அவர்கள் மட்டுமே அந்தத் தேர்வுகளை எழுத முடியும்.பெரும்பாலானவர்களில் அவர்கள்தாம்  தேர்வு எழுதவும் வந்தார்கள். `சரி.. நுழைவுத்தேர்வு முறை வேண்டாம்; அது, அரசுப் பள்ளி மாணவர்கள் இதுபோன்ற துறைகளில் சேர்வதைப் பாதிக்கிறது' என்று சில அமைப்புகள் வாதம் வைத்தாலும் கணக்கீட்டின் அடிப்படையில் வெறும் 30 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே இதுபோன்ற படிப்பில் சேருகிறார்கள். ஆக, அதுவும் ஒரு மேம்போக்கான வாதம். நுழைவுத்தேர்வுகளின் பின்னணியில் இருக்கும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும். அரசு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு முன்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சேர்க்கையில் 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில்தாம் ஏழை எளிய மாணவர்களில் அதிக சதவிகிதம் பேர் படிக்கிறார்கள். இப்படியான இட ஒதுக்கீட்டுமுறை அவர்கள் சேருவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்''.

``நுழைவுத் தேர்வு நடத்துவதில் பெரும் வணிகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று எப்படிக் கூறுகிறீர்கள்?''

``உலகமயமாக்கலுக்குப் பிறகு இங்கு அனைத்துமே வணிகமாகிவிட்டது. பெரும் முதலாளிகள் தங்களது பணத்தைத் தொழிற்சாலைகளில் முதலீடு செய்யாமல் மருத்துவம் போன்ற சேவைத் துறைகளில்தாம் அதிகம் முதலீடு செய்கிறார்கள். தண்ணீர் தொடங்கி போக்குவரத்துக் கழிவுநீர் சுத்திகரிப்பு வரை அத்தனையிலும் தற்போது சர்வதேச நிதி மூலதனம் இருக்கிறது. ரிலையன்ஸ் போன்ற இந்தியப் பெருநிறுவனங்கள் தற்போது கல்விப் பயிற்சிகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். நாளை அவர்களே தனித்தேர்வும்

நடத்தலாம். `ஒற்றைத் தேசம், ஒற்றைத் தகுதித் தேர்வு' என்று மத்திய அரசு அறிவித்ததன் பின்னணியில் இப்படியான அரசியலையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாணவர்களைத் தேர்வு எழுத அனுப்புவதே ஒருவகையில் லாபநோக்கத்தில்தான். டிஜிட்டல் இந்தியா பற்றி மூச்சுக்கு முந்நூறு முறை பேசுகிறது மத்திய அரசு. ஆனால், ஆன்லைனில் எத்தனை மாணவர்கள் விண்ணப்பித்தார்கள் என்கிற பட்டியல் விவரத்தைப் பார்க்க முடியவில்லை என்று காரணம் கூறுகிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். 

அதனால்தான் இடப்பற்றாக்குறையால் வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுத அனுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாணவர்கள் அடையாளம் அறியமுடியாத இடத்துக்கெல்லாம் தேர்வு எழுத அனுப்பப்பட்டார்கள். குறைந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய கேரளாவிலும் கர்நாடகாவிலும் அதிக தேர்வு மையங்கள் இருந்தன. ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய தமிழகத்தில் குறைவான மையங்களே இருந்தன. ஒவ்வொரு வருடமும் சுமார் எட்டு லட்சம் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வை இதே மாநிலத்தில்தான் எழுதுகிறார்கள். அவர்களுக்கு இடம் இருக்கும்போது வெறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கான தேர்வு மையங்களை அரசால் உருவாக்க முடியாதா? மாவட்டவாரியாகத் தேர்வு மையங்களைக் கொண்டு வந்திருக்கலாமே? அப்படிச் செய்யவில்லையே?!

திருத்துறைப்பூண்டியைச் (விளக்குடி) சேர்ந்த மாணவர் எதற்காக எர்ணாகுளம் சென்று தேர்வு எழுத வேண்டும்... தேசியத் தகுதித் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆவண வசதிகளைச் செய்ய வேண்டியது அரசின் கடமையில்லையா? அதற்கான நிதியைப் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கலாமே.... அதற்கான சிந்தனைகூடவா டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி யோசிப்பவர்களுக்கு இல்லாமல் போனது?''

``வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவது மாணவர்களைப் பாதிக்குமா?'' 

``எந்தத் தேர்வும் மாணவர்களை உளவியலாகப் பாதிக்கும், அதுவும் தகுதியின் அடிப்படையில் நடத்தப்படுவதால் நுழைவுத் தேர்வுகள் மாணவர்களைக் கூடுதலாகவே பாதிக்கும். உதாரணத்துக்கு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் வெறும் 600 சீட்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடுகிறார்கள். அதனால், நுழைவுத்தேர்வு வைத்தே தீர வேண்டிய கட்டாயம். தவிர்க்க முடியாதது. அதேசமயம், அதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அவர்களை உளவியலாக அழுத்தும். இது, ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கும் பொருந்தும். இதில், மொழிப்பிரச்னை இருக்கும்; வேறு மாநிலங்களுக்கு அவர்களைத் தேர்வு எழுத அனுப்புவது கூடுதல் சுமை''. 

``மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளுக்கு வேறு எப்படித்தான் தகுதியை நிர்ணயிப்பது?''

``இந்தப் படிப்புகளுக்குத் தகுதி நிர்ணயம் இல்லாமல் இல்லை. மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது கோட்டாவில் இருப்பவர்களுக்கு 50 சதவிகிதம் தேர்ச்சி விகிதம். இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு 40 சதவிகிதம் தேர்ச்சி விகிதம், கட்டாய ஆங்கில மொழி்த் தேர்ச்சி என அடுக்கடுக்காகப் பல தகுதிகள் இருக்கின்றன. இதனைக் கடந்துதான் அவர்கள் தேர்வு எழுத வேண்டும். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் வெளியாவதற்கு முன்பே தகுதித் தேர்வை வைக்கிறார்கள். கூடவே, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சிக்கான செலவு 40,000 ரூபாய். அந்தப் பணத்தைச் செலுத்தினால் படிக்கவேண்டிய மெட்டீரியல்களை ஒரு டேப்பில் பதிவேற்றித் தருகிறார்கள். அதை, ஆறுமாதம் வரைக்கும்தான் படிக்க முடியும். அதன்பிறகு மீண்டும் பணம் செலுத்தவேண்டும். இதேபோல ஐ.ஐ.டி-யில் சேருவதற்கு மாணவர்கள் பன்னிரண்டு லட்சம் ரூபாய் வரை தற்போது செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தான் வணிகம் என்கிறேன். இது, களையப்படவேண்டும். கல்வி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கவேண்டும்''.

`நீட் தேர்வு தேவையா?' என்கிற வாதத்துக்கே இன்னும் பதில் கிடைக்காத சூழலில், சிக்கலை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டிருக்கும் மத்திய அரசு, மாணவர்களுக்கான கல்வியில் லாபம் பார்க்காமல் இதையெல்லாம் யோசித்துச் செயல்படட்டும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு