Published:Updated:

``பாடாம இந்த உசுருதான் இருந்திட முடியுமா?” - மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி

``பாடாம இந்த உசுருதான் இருந்திட முடியுமா?” - மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி
``பாடாம இந்த உசுருதான் இருந்திட முடியுமா?” - மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி

``பாடாம இந்த உசுருதான் இருந்திட முடியுமா?” - மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி

”ஆத்தா உன் பாட்டெல்லாம் கேசட்டுல கேட்டதோட சரி... மேடையில பெர்ஃபார்ம் பண்ணுறத முதல்வாட்டி இப்பதான் பாத்தேன்...” என்று  சொன்னதும் கன்னங்கள் இரண்டையும் தனது இரண்டு கரங்களால் பிடித்துக்கொண்டு `அப்படியா கண்ணு...!’ என்று, வெற்றிலைக்கரை பற்களில் தெரிய இரண்டு கண்களிலும் மகிழ்ச்சி தெரியச் சிரிக்கிறார் `கொல்லங்குடி’ கருப்பாயி. `ஆண்பாவம்’ படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்திய மண்ணிசைப் பாடகி. கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். சொந்த ஊர் சிவகங்கை அடுத்துள்ள கொல்லங்குடி. தலைக்குமேல் தூக்கி முடியப்பட்டு விசிறி போல விரிந்திருக்கும் கொண்டை... நெற்றியில் திருநீறு...கிராமத்து சுங்கடிக் கட்டுச் சீலை என 33 வருடங்களுக்கு முன்பு அந்தத் திரைப்படத்தில் பார்த்த அதே முகம்.  சென்னை லயோலா கல்லூரி அண்மையில் நாட்டுப்புறக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக `வீதி விருது விழா’ என்னும் நிகழ்வை நடத்தியது. விழாவில் முக்கிய விருந்தினராக கருப்பாயியை மேடையேற்றி மரியாதை செய்தனர். ஆயிரம் பேருக்கு மேல் குழுமியிருந்த அந்த நிகழ்வில் நையாண்டி மேளக் குழுவினர் வாசிக்க அநாயசமாக மீனாட்சி சொக்கன் திருமணம் பற்றிய குறவஞ்சி மெட்டுப் பாடலைப் பாடினார். இத்தனை முதிர்ந்த வயதிலும் சற்றும் பிசிறாமல் ஒலித்த அந்தக் குரலை அரங்கமே தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தது. பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கியவரிடம்தான் நாம் பேச்சு கொடுத்தோம். 

``இந்தக் கொண்டை அம்சமா இருக்கு ஆத்தா. `ஆண் பாவம்’ படத்துலேர்ந்து இந்த கொண்டை ஸ்டைல் மட்டும் மாறவே இல்லையே?”

``அடப்போ கண்ணு!... அழகாவா இருக்கு?, வயசானதுல தலையிலருந்து பாதி முடிகொட்டிப் போச்சு. இதுக்கு பேரு மயில் கொண்டை!” 

``சிறுவயசுல  ஆத்தா ரொம்ப அழகா இருப்பிகளோ?”

``(வெட்கச் சிரிப்புடன்) அதை நான் எப்படிச் சொல்ல. ஊரு பக்கம் வந்து கேட்டுப்பாரு. சொல்லுவாக”

``இப்போ எத்தனை வயசு?”

``90 வயசு இருக்குஞ்சாமி. என்ன பெத்த ஆத்தாளத் தவிர என்னையும் சேர்த்து வேற யாருக்கும் என் வயசு தெரியாது”

``எத்தனை வயசுலேர்ந்து ஆத்தா பாட ஆரம்பிச்சிங்க?”

``ஏழு வயசுலேர்ந்து பாடிக்கிட்டு கிடக்கேன்.. கழனிக்குப் போனாலும் வரப்புக்குப் போனாலும் பாடிக்கிட்டே கிடப்பேன். வீட்டுல இருக்குறவங்களாம் திட்டுவாக. ‘பாருய்யா உம்புள்ள இந்த வயசுலயே பாடிக்கிட்டு திரியுது’னு எங்க அப்பன்கிட்ட வந்து சொல்லுவாக. அவருக்கு நான் பாடுறது இஷ்டம். அதனால  அவங்களை திட்டி  அனுப்பிருவாரு. வயசு வந்தப்புறம் அயித்த மகனுக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்தாக. அவரு எனக்கு புருசன்னும் நான் அவருக்கு பொஞ்சாதின்னும் ஊரே சொல்லறது கணக்கா வாழ்ந்தோம். ஆனா, சாவு வந்து அவர தூக்கிட்டுப் போயிருச்சு".

``ஓ! எப்படி இறந்தாங்க?”

`` `ஆயுசு நூறு’ படத்துல நடிச்சு முடிச்சுட்டு ஊருக்கு வந்தோம். ஆல் இந்தியா ரேடியோ ஆபிஸ்லேர்ந்து எங்களை வரச்சொல்லி கடுதாசி மேலக் கடுதாசியா வந்திருந்தது. அங்கப் போகறவழியில ஆக்ஸிடண்டு நடந்து என் கண்ணு முன்னாடியேப் போய்ச் சேர்ந்துட்டாரு. அவருக்கு அப்புறம் எம் வயித்துல பொறந்ததும் போய் சேர்ந்துருச்சு".

``ஆத்தா... ஏன் மொத்தமா சினிமாலேர்ந்து காணாம போயிட்டீக?"

``அவுக உசுரு போனதுக்கு அப்புறமே வெளியே போய் பாடுறதும் குறைஞ்சிடுச்சு.  படத்துல நடிக்கவும் யாரும் கூப்பிடுறது இல்லை. கடைசியா, போன வருஷம் `விழா'ன்னு ஒரு படத்துல நடிச்சேன். சினிமாவுல நடிக்கறதுக்கும் சம்பளம் சரியா தரமாட்டாக. நானும் அதிகமா கொடுங்கனு கேட்டுக்கிட்டதில்ல. 'ஆண்பாவம்' படத்துல நடிச்சதுக்குக் கூட ஆயிரம் ரூபாய்தான் கொடுத்தாக. சினிமா பிடிக்காம போயிருச்சு. திருவிழா நிகழ்ச்சியில எல்லாம் பாடிக்கிட்டு இருந்தேன். இப்போ அதுவும் குறைஞ்சிடுச்சு.யாரும் பாட அழைக்கறது இல்லை. நான் எனக்கு மட்டும் இப்போ பாடிக்கிடுதேன். பாடாம இந்த உசுரு இருந்திட முடியுமா?".

``அப்புறம் வீட்டுச் செலவெல்லாம் எப்படிச் சமாளிக்கறிங்க?”

``அரசாங்கத்துல இந்த `நலிந்த கலைஞர்களுக்கு பணம்’னு எதோ தராக, அப்புறம் என் நிலைமையைப் பார்த்துட்டு இந்த விஷாலு (நடிகர் விஷால்) தம்பி இருக்குல்ல..அது மாசாமாசம் பணம் அனுப்பி உதவுது. அது போதுமானதா இருக்கு. ஆனா தங்கியிருக்கற வீடுதான் இடிஞ்சு விழுகற நிலைமையில இருக்கு. அதைக் கட்டிமுடிக்கனும். பேரன் பேத்திக்கு நல்லது நடக்குறதைப் பாக்குற வரைக்குமாவது வீடு இடிஞ்சு என் மேல விழாம இருக்கணும்!. ஆனா கட்டுறதுக்கு கையில் காசு இல்லை. யாராவது உதவினா நல்லாருக்கும்'.

``இப்போ உங்களை யாரு பாத்துக்கறாக?"

 "உறவுன்னு சொல்லிக்க தம்பி, தம்பி புள்ளைகல்லாம் இருக்காக. ஆனா, அவங்கக் கூடவே இருந்துற முடியுமா?. தனியாத்தான் இருக்கேன்.

ஆனா என் கூடவே எம் பாட்டு இருக்கு..(சிறிது இடைவெளிவிட்டு) குளிக்கும்போது, எனக்கு சோறாக்கிக்குறபோது, வூடு கூட்டி சுத்தம் செய்யும்போதுனு பாடிக்கிட்டே இருப்பேன். மதியம் கொஞ்சம் கண்ணு அசரத் தூங்குவேன். சாயுங்காலம் ஆனா ஊர்ப் பிள்ளைக வருவாக அவங்கக் கூட பேசிக்கிட்டு இருப்பேன், பாடுவேன். இப்படியே பொழுதும் போயிரும்'".

``அப்படி என்ன பாட்டுப் பாடுவீக?"

(நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் வானுயர்ந்து வளர்ந்திருந்த மரங்களை ஒருமுறை நோக்கிவிட்டுப் பாடத் தொடங்குகிறார்..)

”மரங்களின் மீது 

குரங்குகள் போலே

தாவித் தாவி திரிந்தோமே...

மரங்களின் மீது 

குரங்குகள் போலே

தாவித் தாவி திரிந்தோமே...

வயசுயர்ந்த பின்பும் நாமே

பருவம் வந்த பிள்ளைகள் போலே
வாழ்க்கை தொடர்ந்தோமே
என் தெய்வமே....

வாழ்க்கை தொடர்ந்தோமே...
 

மரங்களின் மீது 

குரங்குகள் போலே

தாவித் தாவி திரிந்தோமே...

வாழ்க்கை தொடர்ந்து 

ஆண் பெண்ணை ஈன்றெடுத்து 

அமோகமா வாழ்ந்தோமே...

என் தெய்வமே
ஆசையக் கண்டோமே
வாழ்க்கை தொடர்ந்தோமே

என்னைப் பிரிந்து போக

என்னை விட்டு மறந்து ஓட 

என்ன எண்ணம் வந்ததோ?

வாழ்ந்து முடித்த பின்புதான் 

என்னை பிரிந்து சென்றீரோ...?

என் தெய்வமே

ஒளிந்துகொண்டீரோ?.... ”


(பாடலின் முடிவில் இருவரது கண்களிலும் கண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது)

``இவ்ளோ பாசத்தோட இருக்கியே ஆத்தா, வூட்டுகாரரு போனப் பிறகு எப்படித் தனியாச் சமாளிச்ச?”

``இதோ இப்படித்தான்..வெளிய நாம அழறது காண்பிச்சுக்க முடியுமா?. அவர நினைக்காத நாளில்லை. அழுகை வரும். ஆனா வெளிய ‘ஏன் அழுகுற?’னு கேட்பாங்களே. பதில் சொல்லமுடியாது. அதனால வீட்டுக்குள்ள இருந்தா அழுதுகிட்டு பாடிக்கிட்டு இருப்பேன். வெளியே போனா பாடிக்கிட்டு மட்டும் இருப்பேன்”.

யானையின் தோலில் உள்ள சுருக்கங்கள்  வெயில், மழை என அது தனது சூழலுடன் போராடியதற்கான சாட்சி என்பார்கள். அத்தனைச் சுருக்கங்களும் கருப்பாயி முகத்திலும் படர்ந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு