Published:Updated:

ஜெ. - அவர் அப்படித்தான்!

ஜெ. - அவர் அப்படித்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ஜெ. - அவர் அப்படித்தான்!

ஆளுமைப.திருமாவேலன், படங்கள்: ஸ்டில்ஸ் ரவி

ஜெ. - அவர் அப்படித்தான்!

ஆளுமைப.திருமாவேலன், படங்கள்: ஸ்டில்ஸ் ரவி

Published:Updated:
ஜெ. - அவர் அப்படித்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ஜெ. - அவர் அப்படித்தான்!

பல பெண்களுக்கு ரகசிய ரோல் மாடல், தனித்துவாழும் பெண்களுக்கான நம்பிக்கை விளக்கு என்று ஜெயலலிதா பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய கடந்த கால தருணங்கள் இதோ...

மிகச் சிறுவயதில் அப்பாவை இழந்தவர். இளம் பருவத்தில் அம்மாவை இழந்தவர். நல்லது கெட்டது புரியத் தொடங்கும் நேரத்தில் தனது குரு எம்.ஜி.ஆரை இழந்தவர். இந்த இழப்பே அவரை சுயம்புவாக வார்ப்பித்தது. நடனம், இசை, ஓவியம், நடிப்பு என தன்னைச் செதுக்கிக் கொண்டார். ஓய்வு நேரங்கள் அனைத்திலும் உள்ளூர் இலக்கியம் முதல் உலக வரலாறு வரை படித்தார். படப்பிடிப்பில் சிறிதளவு இடைவேளை கிடைத்தாலும் புத்தகத்துடன் உட்கார்ந்திருப்பார். வீட்டில் பெரிய நூலகமே வைத்திருந்தார். யாரைப் பார்த்தாலும் புத்தகங்கள் பற்றி பேசுவார். ஆங்கிலத்தில் கவிதை எழுதினார், தமிழில் கதைகள் எழுதினார். அந்தத் தனிமையை, தனது அறிவு, ஆளுமைச் செழுமையாக மாற்றினார். அவர்தான் ஜெயலலிதா.

ஜெ. - அவர் அப்படித்தான்!

``அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்து வைத்திருந்தால் நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்க வெச்சு, 18, 19 வயசுல நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்து, நாலு குழந்தைகளுக்கு தாயாகி இருப்பேன். வாழ்க்கையில் இவ்வளவு மேடு பள்ளங்கள் இருந்திருக்காது. வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தாக போயிருக்கும்” என்று தனது சினிமா வாழ்க்கையின்போது வருத்தப்பட்டுச் சொன்னார் ஜெயலலிதா.

ஒரு ரசிகர், ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார். ‘உங்கள் மீது நான் உயிரையே வைத்துள்ளேன்.  இன்ன தேதிக்குள் நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்”, என்று எழுதினார். இவருக்கு ஜெயலலிதா பதில் போடவில்லை. அந்த தேதி  கடந்த பிறகு அதே ரசிகர் மீண்டும் ஒரு கடிதம் ஜெயலலிதாவுக்கு போட்டார். புதிதாக இன்னொரு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று எழுதி இருந்தார். இதற்கும் ஜெயலலிதா பதில் போடவில்லை. மூன்றாவதாகவும் இப்படி ஒரு கடிதம் வந்தது. இதற்கு ஜெயலலிதா எழுதிய பதில்தான் அவரையே அடையாளப்படுத்தியது.
 
‘`எனக்கு கணவராக வரவேண்டியவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். மற்ற கொள்கைகளைவிட இதுதான் முக்கியம். சொன்ன வாக்கை மூன்று தடவை மாற்றிய உங்களை எப்படி நான் மணக்க முடியும்? மன்னிக்கவும்” என்று எழுதினார் ஜெயலலிதா. அதன் பிறகு கல்யாணக் கடிதம் வரவில்லை. அவர்தான் ஜெயலலிதா.

பாலா என்ற நிருபர், தனது திருமணப் பத்திரிகையை ஜெயலலிதாவிடம் தருகிறார். ‘`நீங்க எல்லாம் லக்கி பாலா... கல்யாணம், குடும்பம்னு செட்டில் ஆகுறீங்க!” என்று சொன்ன தொனியில் ஜெயலலிதாவின் வலி தெரிகிறது. ‘`எப்ப உங்க கல்யாணம்? என்று கேட்கிறார்கள்... இதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு?” என்று விரக்தி காட்டி இருக்கிறார்.

அரசியல் வெற்றிகளுக்குப் பிறகும் இதே போன்ற கேள்வி கேட்கப்பட்டது. ‘`உங்களது அரசியல் வெற்றிகளை அருகில் இருந்து பார்க்க உங்கள் தாய் இல்லையே?” என்று வருத்தப்படுகிறீர்களா?” என்றபோது, ‘`அம்மா இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித் திருக்க மாட்டார்” என்று பதில் அளித்தார்.

கவர்ச்சிகரமான சினிமா உலகமும், அதிகாரமயமான அரசியல் களமும் தனது மனதுக்குப் பிடித்தது இல்லை என்பதை எப்போதும் வெளிக்காட்டியே வந்தார் ஜெயலலிதா. அவர் சினிமாவிலும் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஆனால், மனதளவில் ஒதுங்கியே இருந்தார். அவர்தான் ஜெயலலிதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெ. - அவர் அப்படித்தான்!

கோவையில் நடந்த திருமணம் அது. முன்னாள் சபாநாயகர் கே.ஏ.மதியழகனின் மகள் அருணா - சேரலாதன் ஆகியோர்தான் மணமக்கள். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். திருமணத்தை நடத்தி வைத்தார். அன்றைய அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரான செல்வி ஜெயலலிதாவை மண மக்களை வாழ்த்திப்பேச அழைத் தார்கள்.  தான் மனதில் நினைத்ததை பட்டவர்த்தனமாகப் பேசியே பழக்கப்பட்ட ஜெயலலிதா, மேடையில் உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆர்.

உள்பட அரங்கில் இருந்த அத்தனை ஆண்களுக்கும் அறிவுரை சொன்னார். ``ஜனநாயகத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், நமது நாட்டில் பெண்களுக்கு வீட்டில் ஜனநாயக உரிமை இல்லை. பெண்ணுக்கு திருமணமாகும் வரை தான் சுதந்திரம். திருமணமாகி விட்டால் சுதந்திரத்தை இழந்து விடுகிறார். இந்திய அரசியல் சட்டத்தில் பல்வேறு சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் வீட்டில் ஆண்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியிருக்கிறது” என்று பேசினார் ஜெயலலிதா.

சும்மா இருக்க முடியுமா எம்.ஜி.ஆரால்? ‘`ஜெயலலிதா பேசியது மணமகள் அருணாவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், நான் மணமகன் சேரலாதன் பக்கம் நின்று பேச விரும்புகிறேன். திருமணத்தில் ஜனநாயகத்தை பார்க்கக் கூடாது. மணமகனையும் மணமகளையும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதில்லை. வீட்டில் ஜனநாயகம் அர்த்தமற்றது. ஜனநாயகம் வேறு. சமத்துவம் வேறு. மண மக்கள் மனம் உணர்ந்து பழக வேண்டும்” என்று வளைத்து வளைத்து ஜெயலலிதாவுக்கு பதில் சொன்னார். தலைவர் சொல்கிறார் என்று தலையசைத்திருப்பாரே தவிர, அதை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர்தான் ஜெயலலிதா.

தனக்குப் பிடிக்காததை எம்.ஜி.ஆரே சொன்னாலும், ஏன்... தன் அம்மாவே செய்தாலும் அதனை துணிச்சலாக எதிர்த்தவர் ஜெயலலிதா. ‘`புரட்சித் தலைவர் என் மீது மிகவும் அன்பு காட்டுபவர். என் தாயார் மறைந்த பிறகு எனக்கு எல்லாமே அவர்தான். தாய், தந்தை, நண்பர், தத்துவவாதி, வழிகாட்டி எல்லாம் அவர்தான். எனது வாழ்க்கையில் மிகவும் செல்வாக்குச் செலுத்தியவரும் அவர்தான். நான் அவருடைய புத்திக் கூர்மையை அதிகமாக மதித்தேன். என் மீது அவருக்கு கரிசனம் இருந்தது. அவர் மீது எனக்கு அனுதாபம் இருந்தது. ஏனென்றால், அவரும் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு முன்னேறியவர். ஒரு காலகட்டத்தில் நானே அவர் படங்களைத் தவிர மற்றவற்றில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன். என் வாழ்க்கையில் எனது தாயாரும், புரட்சித் தலைவரும் பெரும் செல்வாக்குச் செலுத்தியவர்கள்” என்று சொன்னவர் ஜெயலலிதா. தனது வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகள் தாய் சந்தியாவின் கட்டுப் பாட்டில் வளர்ந்தார். அடுத்த 20 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் இருந்தார். அடுத்த 28 ஆண்டுகள் தனது வாழ்க்கையை ஜெயலலிதா வாழ்ந்தார்; வாழ்ந்து வருகிறார். ஒரு வகையில் தனித்துவிடப்பட்ட வாழ்க்கைதான் அவருடையது. தனித்துவிடப்பட்டவர்கள் மகா கோழைகளாக இருப்பார்கள். அல்லது அதீத தைரியசாலிகளாக இருப்பார்கள். ஜெயலலிதா இரண்டாவது ரகம்.

சினிமாவிலும் அரசியலிலும் ஆண்கள் படும் துன்பத்துக்கும் பெண்கள் படும் துன்பத்துக்கும் மலையளவு வேறுபாடு உண்டு. இரண்டிலும் ஆண் வளர நிறைய உழைக்க வேண்டும். இரண்டிலும் பெண் வளர நிறைய அவமானப்பட வேண்டும். இரண்டிலும் ஆண் வளர உறுதியான நெஞ்சம் வேண் டும். இரண்டிலும் பெண் வளர கல் நெஞ்சம் வேண்டும். இதற்கு ஜெயலலிதா வாழ்க்கை யிலேயே ஏராளமான உதாரணங்கள் உண்டு.

சொந்தக் குடும்பத்தில், உறவுகளில், நட்புகளில், எதிர்க்கட்சிகளில், சொந்தக் கட்சிகளில், அவரால் வளர்க்கப்பட்டவர்களில், அவரால் பணம் சம்பாதித்தவர்களில் - இருந்து வந்த பழிச் சொற்களே, ‘பல்லியைக் கண்டாலே எனக்குப் பயம்’ என்று பேட்டி அளித்த ஜெயலலிதாவை சீறும் சிங்கமாக மாற்றியது.

ஜெ. - அவர் அப்படித்தான்!

‘தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் எது? என்று கேட்டபோது, ‘ஒன்றா இரண்டா வார்த்தை களில் சொல்ல...?' என்று திருப்பிக் கேட்டவர் அவர். பெண்ணாக இருந்ததாலேயே இத்தனை துரோகங்கள் அடுத்தடுத்து அவருக்கு செய்யப் பட்டன. ‘`பெண்ணாக பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது ‘`இல்லை... இல்லவே இல்லை” என்றும் துணிச்ச லாகச் சொன்னவர் அவர்.

ஜெயலலிதாவை நேருக்கு நேர் நின்று வெற்றிபெற முடியாதவர்கள், அவரை அவமானப் படுத்துவதன் மூலமாக விரட்டிவிட நினைத் தார்கள். ‘`என்னை எப்படியும் அரசியலை விட்டு அப்புறப்படுத்துவதே எனது அரசியல் எதிரி களின் நோக்கம். தீராத மனஉளைச்சல் தரும் போது நான் ஹைதராபாத் ஓடிவிடுவேன் அல்லது அமெரிக்கா ஓடிவிடுவேன் என்று கனவு காண்கிறார்கள். நான் எங்கும் போக மாட்டேன்.

இங்கேதான் இருப்பேன்” என்று சொன்ன துணிச்சல்காரர். அவர்தான் ஜெயலலிதா.

‘’தங்களுக்குப் பிடித்த பொன்மொழி எது?” என்று ஒரு முறை கேட்கப்பட்டபோது அப்பர் வாக்கைச் சொன்னார் ஜெயலலிதா. அது இதுதான்:

‘`அஞ்சுவது யாதொன்றுமில்லை
அஞ்ச வருவதுமில்லை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism