Published:Updated:

“கடைசியில் இப்படியா சந்திக்க வேண்டும்?” - `வெண்ணிற ஆடை' நிர்மலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கடைசியில் இப்படியா சந்திக்க வேண்டும்?” - `வெண்ணிற ஆடை' நிர்மலா
“கடைசியில் இப்படியா சந்திக்க வேண்டும்?” - `வெண்ணிற ஆடை' நிர்மலா

அஞ்சலிபொன்.விமலா, படங்கள் உதவி: ஞானம்

பிரீமியம் ஸ்டோரி

``இதெல்லாம் நடக்கும்னு நான் எப்படி நினைச்சுப் பார்க்கலையோ, அன்னிக்கும் அதெல்லாம் நடந்ததை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு அ.தி.மு.க ரெண்டா உடைஞ்சது. ஜானகி அம்மாவும் ஜெயலலிதா அம்மாவும் ரெண்டு அணிகளா பிரிஞ்சாங்க. 1989-ல முதன்முதலா ஜெயலலிதா அம்மா போடி சட்டமன்றத் தொகுதியில போட்டியிட்டாங்க. அவங்களை எதிர்த்து ஜானகி அம்மா என்னை போட்டியிட வெச்சாங்க. வெற்றி ஜெயா அம்மாவுக்குதான். என்னதான் நான் அன்னிக்கு ஜெயா அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டாலும், எப்பவும் அவங்க எனக்கு நல்ல தோழிதான்’’ - பேசும்போதே  வெண்ணிற ஆடை நிர்மலாவின் குரல் கனக்கிறது.

“கடைசியில் இப்படியா சந்திக்க வேண்டும்?” - `வெண்ணிற ஆடை' நிர்மலா

1965-ல் வெளியான ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில்தான் ஜெயலலிதா, நிர்மலா இருவருமே அறிமுகம் ஆனார்கள். எம்.ஜி.ஆரின் ‘ரகசிய போலீஸ் 115’ உள்ளிட்ட 5 படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர்  இருந்த காலகட்டத்தில்,  அவருடன் கட்சியில் உறுப்பினராக இருந்த நிர்மலா, பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். 2014-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தார். திரைத்துறையில் ஆரம்பித்து அரசியல் களம் வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை இணைத்துக்கொண்டிருந்தவரிடம், அவரைப் பற்றி பகிர்ந்துகொள்ள பல நினைவுகள் இருக்கின்றன.

``ஒரே திரைப்படத்தில் அறிமுகம் ஆன நாட்கள் முதல், அவர் மறையும் நாள் வரை அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. எங்கள் ரெண்டு பேருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையில நிறைய ஒற்றுமைகள் இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராம இருக்கிற போர்க்குணத்தை அவங்க மூலமாதான் கத்துக்கிட்டேன். தனி ஒரு பெண்ணா இருந்துகொண்டு அரசியலில் சாதித்த ஜெயா அம்மா மீதான அன்பாலும் மரியாதையாலும்தான், திரும்பவும் அவங்க முன்னிலையில அ.தி.மு.க-வுல இணைஞ்சேன். எனக்கு அவங்க நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பைக் கொடுத்தாங்க. மறைந்த தலைவர் எம்.ஜி.ஆரும் எனக்கு அதே பொறுப்பைக் கொடுத்திருந்தார்.

“கடைசியில் இப்படியா சந்திக்க வேண்டும்?” - `வெண்ணிற ஆடை' நிர்மலா

ஒருமுறை தேர்தல் நடந்து முடிஞ்ச நேரத்துல அவங்களுக்கு ஒரு விபத்து நடந்துச்சு. வேகமா வந்த லாரி அவங்க வாகனத்தில் மோதி, கால்ல அடிபட்டுருச்சு. ஆனாலும், மனம் தளராம அதுல இருந்து குணமாகி மீண்டு வந்தாங்க. அந்த தைரியமும் தன்னம்பிக்கையும்தான் பல சோதனைகளையும் தாண்டி அவங்களை முதல்வராக்கி அழகு பார்த்துச்சு.

அம்மாவோட பழகிய நாட்களை இப்ப நினைச்சாலும் சந்தோஷம்தான். எங்க ரெண்டு பேருக்குமே முதல் ஷூட்டிங் நேரத்துல சேலை கட்டிக்கத் தெரியாது. ஒருத்தருக்கு கட்டி முடிக்குற வரை, இன்னொருத்தர் காத்திருப்போம். ஹேர்ஸ்டைல், மேக்கப் பத்தியெல்லாம் நிறையப் பேசுவோம். எங்க ரெண்டு பேருக்குமே பரதநாட்டியத்துல ஈடுபாடு இருந்ததால நாட்டியம் பத்தியும், எங்க குருநாதர்களைப் பத்தியும் நிறையப் பேசுவோம். என்னதான் நெருங்கிப் பழகினாலும் ‘வாங்க’, ‘போங்க’னு மரியாதையாதான் பழகுவாங்க. தேவையில்லாம பெர்சனல் விஷயங்களைப் பேச மாட்டாங்க. நாகரிகமா பழகுற பக்குவத்தை அவங்ககிட்ட இருந்து கத்துக்கணும்.

ஜெயா அம்மாவுக்கும் எனக்கும் தயிர்சாதம் ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் டைம்ல பெரும்பாலும் அதுதான் எங்களுக்கு லன்ச். எடை கூடாம இருக்க என்ன பண் ணணும்னு நாங்க ரெண்டு பேரும் பேசிட்டிருப்போம். அவங்களுக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிகம். பல மொழிகள் பேசக்கூடியவங்க.

ஒரு பெண் வாழும் காலத்தில் அவளைப் பற்றி அவதூறு பேசறதுதான் உலக வழக்கமா இருக்கு. அதிலும் ஒரு பெண், ஆண் துணையில்லாமல் தனிச்சு வாழும்போது நிறைய பிரச்னைகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கு. நம்மைச் சுத்தி இருக்குறவங்களுக்கு அன்பு காட்டுறதுல ஆரம்பிச்சு, தற்காத்துக்கொள்வதுவரை இங்க எல்லாமே சவாலானதுதான். அந்தச் சவால்களை அவங்க சரியாவே எதிர் கொண் டாங்கனு நான் நம்புறேன்.

கடைசியா அவங்களை நான் ஒரு தருணத் துல சந்திச்சப்போ, ‘உங்ககிட்ட நான் நிறையப் பேசணும், நேர்ல வந்து பாருங்க’னு சொல்லி இருந்தாங்க. ஆனா, அவங்களைச் சந்திக்க முடியாமலே போய், கடைசில இந்தக் கோலத்துல பார்ப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல...” - கண்ணீர் பெருக நிறுத்துகிறார் நிர்மலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு